இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தல அஜித்தை வைத்து ‘மங்காத்தா’ என்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் என்ற அடையாளமும், அப்படத்தின் மீதான கிரேஸும் 12 ஆண்டுகளை கடந்தும் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த அளவிற்கு இந்த ஒரு படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த வெங்கட் பிரபு, தற்போது தளபதியுடன் ‘விஜய் 68’ படத்தில் இணைந்துள்ளார். என்றோ இணையப் போவதாக பேசப்பட்ட இந்த கூட்டணி 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் இணைந்துள்ளது. அன்று தல அஜித்திற்கு கிடைத்த அதே வெற்றி இன்று தளபதிக்கும் கிடைக்குமா? என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்துள்ளது. இது குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்..

வெங்கட் பிரபுவின் ஆரம்பகால வாழ்க்கை

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெங்கட் பிரபு. இளையராஜா, கங்கை அமரன் என்கிற பெரிய ஆளுமைகள் உள்ள இசைக் குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தன் திறமையால் மட்டுமே தமிழ் திரையுலகிற்குள் வந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர். இவர் இன்று தொட்டிருக்கும் உயரம் என்பது அவ்வளவு எளிதாக அவருக்கு அமைந்துவிடவில்லை. குழந்தைப்பருவத்தில் இருந்து எப்போதும் அப்பா, பெரியப்பாவின் நிழலை சுற்றியே வளர்ந்ததால், இளம் வயதிலேயே அவர்களைப் போல் நாமும் பெரிய ஆளாக வர வேண்டும் என்று சினிமாவும், இசையுமாக வளர்ந்தவருக்கு அதன் மீதான காதல் என்பது அளவு கடந்ததாகவே இருந்துள்ளது. இதனால் கார்த்திக் ராஜா இசையமைத்து எடுத்த நிறைய குறும்படங்களில் நடித்தாராம் வெங்கட் பிரபு. அதை வைத்து சினிமாவில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று நினைத்தவருக்கு எதுவும் சரியாக அமையவில்லையாம். தொடர்ந்து பாடகர், பின்னணி குரல் கொடுப்பவர் என்று 90களில் வெங்கட் எடுத்த முதல் முயற்சிகள் அனைத்தும் வெளிவராமல் தோல்வியில் தான் முடிந்துள்ளது. இதனால் வெங்கட்டின் நண்பர்களே ‘என்னடா, நீ பண்ற எதுவுமே வெளி வரமாட்டேங்குது? பயங்கரமான ராசிக்காரன்டா நீ’ என சொல்லி அவரை கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி, பேசாமல் சினிமா முயற்சியை விட்டு விட்டு தொடர்ந்து வெளிநாட்டிற்கு படிப்பதற்கு சென்று விடலாம் என்றிருந்த நேரத்தில்தான் 2002 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.ஸ்டான்லி என்பவரின் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சினேகா நடித்து வெளிவந்த ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி வந்து நடித்தார். இப்படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் வெங்கட்டிற்கு என்று ஒரு அடையாளம் கிடைத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ‘விகடன்’, ‘உன்னைச் சரணடைந்தேன்’, அஜித்துடன் ‘ஜி’,விஜய்யுடன் ‘சிவகாசி’, ‘மழை’, ‘வசந்தம் வந்தாச்சு’ என நடிகர், துணை நடிகர் போன்ற பல கதாப்பாத்திரங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்தார்.


குழந்தைப் பருவம், இளமை மற்றும் ஆரம்பகால படங்களில் தோன்றிய காட்சிகள்

வெங்கட் பிரபு தந்த வெற்றிகள்

தனித்துவமாக தெரிய வேண்டும் என்று ஆசைப்பட்ட வெங்கட் பிரபு, நடிகராக இருந்தால் போதாது, ஒரு இயக்குனராகவும் நாம் பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்று இயக்கத்தில் குதித்தார். அப்படி 2007 ஆம் ஆண்டு புதுமுகங்களை கொண்டு ‘சென்னை 28’ என்ற படத்தை இயக்கினார். வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பரும், எஸ்.பி.பி-யின் மகனுமான எஸ்.பி.பி.சரண் தயாரித்து வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்தது. எந்த நண்பர்கள் “உனக்கு பயங்கரமான ராசி டா” என்று கலாய்த்தார்களோ, அவர்கள் அனைவரும் கொண்டாடும் ஒருவராகவும் முதல் முயற்சியிலேயே தனது வெற்றியை பதிவு செய்தார். மேலும் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற வெங்கட் பிரபு, தொடர்ந்து சரோஜா, கோவா ஆகிய படங்ளையும் இயக்கினார். முதல் படம் அளவிற்கு இவ்விரு படங்களும் வெற்றி பெறாவிட்டாலும், மற்றுமொரு பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்த படம் என்றால் அது அஜித்தை வைத்து எடுத்த ‘மங்காத்தா’ திரைப்படம் தான். கடந்த 2011-ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் அஜித், அர்ஜூன், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம், அந்த சமயம் சிறிது சறுக்கலை சந்தித்து வந்த அஜித்திற்கும் சரி, சென்னை 28 என்ற ஒற்றை அடையாளத்துடன் வலம் வந்த வெங்கட் பிரபுவிற்கும் சரி மிகப்பெரிய ‘கம்பேக்’ காக அமைத்து ஹிட்டானது மட்டுமின்றி, அவரவர் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க மிகப்பெரிய உந்துதலாகவும் இருந்தது என்று கூட சொல்லலாம்.


வெங்கட் பிரபு ஆரம்பகாலங்களில் இயக்கி வெற்றி கண்ட திரைப்படங்கள்

அதற்கு காரணம் அஜித்தின் கதாபாத்திரமும், படத்தில் யுவன் கைவண்ணத்தில் இடம்பெற்றிருந்த பின்னணி இசையும் தான். இப்படத்தில் தொழிலதிபரின் கணக்கில் வராத பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் காவல் ஆய்வாளர் விநாயக் மகாதேவனாக கலக்கிய அஜித்தை, அதுவரை கதாநாயகனாக மட்டுமே கொண்டாடிய ரசிகர்கள் அனைவரும் வில்லனாக கொண்டாட ஆரம்பித்ததும் இந்த படத்தில்தான். இப்படி வெங்கட் பிரபு, அஜித் இருவருக்கும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த இப்படத்தின் படப்பிடிப்பின் போதே விஜய் - அஜித்தின் சந்திப்பும் நிகழ்ந்து சமூக வலைதளங்களில் வைரலானது மட்டுமின்றி அஜித்தை தொடர்ந்து வெங்கட் பிரபு விஜய்யுடன் இணைந்து பணியாற்றப் போகிறார் என்ற பேச்சும் பரவலாக எழுந்தது. இருப்பினும் இருவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் வெங்கட் பிரபு, விஜய் கூட்டணி அமையாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இருவரும் தங்களது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

'மாநாடு' கொடுத்த நம்பிக்கை

‘மங்காத்தா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, வெங்கட் பிரபு கார்த்தியை வைத்து ‘பிரியாணி’ படத்தினையும், சூர்யாவை வைத்து ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தினையும் எடுத்தார். ஆனால் இவ்விரு படங்களும் சுமாரான வெற்றியை பெறவே, பின்னர் மீண்டும் தனது பழைய கூட்டணியை வைத்து ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கினார். இப்படமும் முதல் பாகம் அளவிற்கு கை கொடுக்காமல் போகவே 2016க்கு பிறகு திரைத்துறையில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். பின்னர் 4 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2021 ஆம் ஆண்டு எஸ்.டி.ஆரை வைத்து ‘மாநாடு’ என்ற படத்தினை எடுத்து திரைத்துறையில் மீண்டும் என்ட்ரி ஆனார் வெங்கட் பிரபு. டைம் லூப் கதையை மையமாக வைத்து வெளிவந்த இதில் சிம்புவுடன் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். ஒரே காட்சிகள் ஒரு முறை, இரண்டு முறை வரலாம். ஆனால், பத்து முறைக்கு மேல் வந்தால் பார்ப்பவர்களுக்கு சலிப்புத் தட்டிவிடும். ஆனால் 'மாநாடு' படத்திலோ, அப்படி எந்த சலிப்பும் தட்டி விடாதபடி, பார்ப்பவர்கள் ரசித்து, சிரித்து, கைத்தட்டும்படி வெங்கட் பிரபு காட்சிகளை அமைத்திருந்த விதம் பாராட்டும்படியாக இருந்தது. மேலும் எஸ்.ஜே.சூர்யா பேசியிருந்த ‘வந்தா... சுட்டா... போனா.. ரிப்பீட்டு’ வசனம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது மட்டுமின்றி மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் படம் வெளியாவதற்கு முன்பே ஏற்படுத்தியிருந்தது . இதனால் பல போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றது.


'மாநாடு' படத்தின் போஸ்டர் மற்றும் சிம்புவுடன் வெங்கட் பிரபு

இதன் மூலம் நீண்ட நாட்களாக பெரிய அளவில் வெற்றி பெறாமல், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த எஸ்.டி.ஆர் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து 'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வெங்கட் பிரபு இயக்கிய 'மன்மத லீலை', 'கஸ்டடி' ஆகிய படங்கள் தோல்வியாக அமைந்தன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்படங்களுக்கெல்லாம் முன்னமே தொடங்கப்பட்ட ‘பார்ட்டி’ திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நட்சத்திரங்கள் நடித்து, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் என்னவென்றால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிஜி தீவில் தான் படமாக்கப்பட்டுள்ளன. இங்கு படப்பிடிப்பு நடத்தினால், அதற்காக செலுத்தப்படும் கட்டணத்தில் 47 சதவிகிதத்தை நமக்கு திருப்பி கொடுத்து விடுவார்களாம். ஆனால் கொரோனா காரணமாக அந்த சலுகைகள் எல்லாம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த சூழல் மாறி இருப்பதால், மிக விரைவிலேயே ‘பார்ட்டி’ திரைப்படம் வெளியிடப்பட இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டி.சிவாவே தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

'விஜய் 68' அறிவிப்பு

‘மாஸ்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்திருந்த படம் ‘லியோ’. கடந்த 19 ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெளியான 4 நாட்களிலேயே 400 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதற்கிடையில், விஜய்யின் 68 வது படத்தினை யார் இயக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த நேரத்தில் தான், கடந்த மே 21 அன்று நடிகர் விஜய்யே அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் வெங்கட் பிரபு தான் இயக்குகிறார் என்பது உறுதியானவுடன் அவர் தன் பங்கிற்கு புதிய புதிய அப்டேட்களை ஒவ்வொரு நாளும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். தற்போது ‘லியோ’ படத்தின் வெளியீட்டுக்கு பிறகு ‘விஜய் 68’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் யார் யார் நடிக்கப்போகிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜை நடைபெற்ற வீடியோவுடன் வெளியிட்டனர்.


'விஜய் 68' பட பூஜையில் விஜய்யுடன் வெங்கட் பிரபு

அந்த வீடியோவில் நடிகர்கள் பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் அமீர், நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்திரி என பலர் இடம்பெற்றிருந்தனர். இதில் விஜய்யை வைத்து 'போக்கிரி', 'வில்லு', ஆகிய படங்களை இயக்கியும், சில படங்களுக்கு நடனம் அமைத்தும், இருந்த பிரபு தேவா, முதல் முறையாக விஜய்யுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதேபோன்று 90களில் பலரின் இதயங்களை கொள்ளை கொண்ட, அதே நேரம் சாக்லேட் பாய் என்று அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் பிரசாந்தும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். மேலும் இவர்களுடன் மைக் மோகன் என அறியப்படும் சீனியர் நடிகரான மோகன் வில்லன் கதாபாத்திரத்திலும், மலையாளத்தில் தற்போதும் முன்னணி நடிகராக உள்ள ஜெயராமும் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய் இரட்டை வேடம் ஏற்று நடிக்க உள்ளதாகவும், அதில் ஒரு வேடத்திற்கு ஜோடியாக சினேகாவும், இன்னொரு வேடத்திற்கு மீனாட்சி சவுதிரியும் நடிக்கும் நிலையில், இவர்களுடன் லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இவர்களை தவிர வெங்கட் பிரபுவின் பேவரைட் லிஸ்டில் இருக்கும் அவரது தம்பி பிரேம்ஜி அமரன், வைபவ் மற்றும் அரவிந்த் உள்ளிட்டோரும் நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். அதற்குப் பிறகு விஜய்யின் வேறு எந்த திரைப்படத்திற்கும் அவர் இசையமைக்கவில்லை. இந்த நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார்.


'விஜய் 68' படத்தில் நடிக்க உள்ள பிரபலங்கள்

தொடர் சர்ச்சையில் 'விஜய்'

விஜய் தனது திரைவாழ்க்கையில் ‘பூவே உனக்காக’ ஆரம்பித்து எத்தனையோ வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், அண்மைக்காலமாக அவர் கொடுத்து வந்த ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘மெர்சல்’, ‘தெறி’, ஆகிய படங்கள் அளவிற்கு வேறு எந்த படங்களும் வெற்றி அடைந்ததா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு விஜய் நடித்த ஒன்றிரண்டு படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற அத்தனை படங்களும் வணிகரீதியாக வசூல் சாதனை நிகழ்த்திய போதிலும், விமர்சன ரீதியாக தோல்வியையும், நிறைய சர்ச்சைகளையும் தான் கடந்து வந்துள்ளது.‘துப்பாக்கி ‘படத்தில் ஆரம்பித்த அந்த சர்ச்சைகள் ‘தலைவா’, ‘புலி’, ‘சர்க்கார்’, என தொடங்கி அண்மையில் வெளிவந்த ‘பீஸ்ட்’, ‘வாரிசு’ வரை அத்தனை படங்களும் ஒவ்வொரு காரணங்களுக்காக சர்ச்சைகளையும், நெகட்டிவான விமர்சனங்களையும் சந்தித்தது.


விஜய் மற்றும் லோகேஷ் காப்புடன் மோதிக்கொள்ளும் படக்காட்சி

அதேபோன்றுதான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘லியோ’ திரைப்படமும் நிறைய சர்ச்சைகளையும், நெகட்டிவான விமர்சனங்களையும் கடந்து திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் ‘லியோ’ திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களில் 400 கோடி வசூல் செய்து ஒட்டுமொத்த தமிழ் திரை உலகையே ஆச்சர்யப்படுத்தி இருந்தாலும், படம் வெளிவருவதற்கு முன்பே ஆடியோ லான்ச் ரத்து, படம் வெளிவருவதில் சிக்கல் என பல்வேறு வகையான சர்ச்சைகளில் சிக்கியது. இவை எல்லாவற்றையும் சரி செய்து படம் திரைக்கு வந்த பிறகும் கூட, படம் குறித்து நெகட்டிவான கருத்துகளும் பதிவிடப்பட்டு சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இது அவரின் அண்மைக்கால வளர்ச்சியை பார்த்து அரசியலுக்கு வந்து விடுவாரோ என்ற அச்சத்தில் சிலர் செய்யும் மோசமான செயல் என்றும் கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் விஜய் ரசிகர்கள் படம் பார்ப்பதை நிறுத்தவில்லை. இன்றும் விஜய்க்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள்; வரை திரையரங்குகளை நோக்கி படையெடுத்து திரும்ப திரும்ப ‘லியோ’ படத்தினை பார்த்து ரசித்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சாதிப்பாரா வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு தனது திரை வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்று மாறி மாறித்தான் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில், ஒரு படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது என்றால், அடுத்தடுத்து வரும் படங்கள் சுமாரான வெற்றியையோ அல்லது தோல்வியையோதான் சந்தித்து வருகின்றன. இவ்வாறாகத்தான் இதுவரை அவரது திரைப்பயணம் அமைந்துள்ளது. அதேபோன்றுதான் சமீபகாலமாக விஜய் நடித்து வெளிவரும் படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெளிவருகின்றன. இவ்விருவரும் இப்படியிருக்க தற்போது ‘விஜய் 68’ படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனமும் கடந்த சில வருடங்களாக வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள்தான் தயாரித்துள்ளது. அவற்றில் ‘அனேகன்’, ‘தனி ஒருவன்’, ‘கவண்’, ‘பிகில்’ போன்ற படங்களைத் தவிர மற்றவை சுமாரான படங்களாக அமைந்தன. இருப்பினும் சமீபத்தில் லோ பட்ஜெட்டில் தயாரித்த 'லவ் டுடே' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.


'விஜய் 68' போஸ்டர் மற்றும் விஜய்யுடன் வெங்கட் பிரபு

இப்படிப்பட்ட நிலையில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மாபெரும் வெற்றியை கொடுத்து வெங்கட் பிரபு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய 'மங்காத்தா' படத்தினை போலவே விஜய்க்கும், வெங்கட் பிரபுவுக்கும் ‘விஜய் 68’ படமும் அமையுமா? இந்த படம் இவ்விருவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு இருவரது ரசிகர்களிடையேயும் எழுந்துள்ளது. ஏற்கனவே அஜித், சிம்புவிற்கு முக்கியமான கட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்த வெங்கட் பிரபு இம்முறை விஜய்க்கும் அதையே சாத்தியப்படுத்துவார் என நம்புவோம்.

Updated On 6 Nov 2023 7:02 PM GMT
ராணி

ராணி

Next Story