இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெரும்பாலான துறைகளில் பெண்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்தாலும், சில துறைகளில் மிகக் குறைந்த அளவாகவே உள்ளது. அதிலும், குறிப்பாக திரைத்துறையின் ஒளிப்பதிவுத் துறையில் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களே இருந்து வருகிறார்கள்.

இயக்குநர்களின் உணர்வோட்டமான கதைகளுக்கு உயிர் கொடுக்கும் கருவியாகவே ஒளிப்பதிவு பார்க்கப்படுகிறது. தமிழ் திரைத்துறையை உற்று நோக்கினால் ஆண் ஒளிப்பதிவாளர்களை விட பெண் ஒளிப்பதிவாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. எனினும் கூட, இத்துறையில் வெற்றிகண்டு உச்சம் தொட்ட பெண்களும், உச்சத்தை எட்டிப்பிடிக்க போராடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய சில தகவல்களை இங்கு காணலாம்.

பி.ஆர்.விஜயலட்சுமி

ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த இயக்குநர் என்றப் பெருமைக்கு சொந்தக்காரர் பி.ஆர்.விஜயலட்சுமி. இவர் தென்னிந்திய திரைத்துறையில், முக்கியமாக, தமிழ் சினிமாவுக்காக அதிகம் பணியாற்றியுள்ளார். இவரது தந்தை கருப்பு-வெள்ளை காலத்தின் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான பி.ஆர்.பந்தலு. சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர் பி.ஆர்.பந்தலு. இவரது மகளான விஜயலட்சுமி திரைத்துறைக்குள் நுழையும் முன்பாகவே ஒளிப்பதிவுப் படிப்பை மேற்கொள்ள விரும்பினாலும் படிப்பை விட அனுபவம்தான் தம்மை முன்னேற்றும் என்பதை நன்கு உணர்ந்ததால் அசோக்குமாரிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றத் தொடங்கினார். 1980-ஆம் ஆண்டு வெளிவந்த `நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் அசோக்குமாரோடு இணைந்து செயல்பட்டார். அடுத்தகட்டமாக தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுமார் முப்பது திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். 1984-ஆம் ஆண்டு வெளியான ‘கை கொடுக்கும் கை’ மற்றும் 1985-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிள்ளை நிலா’ போன்ற திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

1985-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான கே.பாக்யராஜின் ‘சின்ன வீடு’ திரைப்படத்தின் மூலம் பி.ஆர்.விஜயலட்சுமி ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இப்படத்திற்கு அவர் ஒளிப்பதிவு செய்ததால் புதியதொரு வரலாற்று சாதனை நிகழ்ந்தது. ஆம், ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் என்ற பெருமையோடு அனைவருக்கும் அறிமுகமான விஜயலட்சுமி, 1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டு காலத்தில் சுமார் 22 படங்களில் பணியாற்றியுள்ளார். ‘அறுவடை நாள்’, ‘சிறைப்பறவை’ போன்ற திரைப்படங்கள் இவரின் மிகச்சிறந்த ஒளிப்பதிவுத் திறனுக்கான சான்று.


சின்ன வீடு மற்றும் ஒரு கன்னட திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் பி.ஆர்.விஜயலட்சுமி

விஜயலட்சுமி ஒரு ஒளிப்பதிவாளராக மட்டும் இல்லாமல் திரைத்துறையில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கியுள்ளார். 1992-ஆம் ஆண்டு வெளிவந்த சங்கீத சிவனின் ‘டாடி’ என்ற மலையாள திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அடுத்து இவர் எடுத்த இயக்குநர் அவதாரம் பலரது பாராட்டையும், வரவேற்பையும் பெற்றது. விஜயலட்சுமியின் இயக்கம், திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவில் கடந்த 1995-இல் வெளிவந்த ‘பாட்டு பாட வா’ திரைப்படம், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மை டியர் பூதம்’, ‘வேலன்’, ‘ராஜ ராஜேஸ்வரி’ ‘வள்ளி’, ‘அத்திப்பூக்கள்’ போன்ற தொடர்களிலும் ஒளிப்பதிவாளராக அவர் பணியாற்றியுள்ளார். இத்தொடர்களில் அவர் முதன்முதலில் கணினி வரைகலையை அறிமுகப்படுத்தினார். இதுபோன்று பிற தென்னிந்திய நாடகத் தொடர்களிலும் வேலை செய்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுனில்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட விஜயலட்சுமி, திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களை விட்டு விலகி முழுமையாக தொலைக்காட்சித் தொடர்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மாயா மச்சீந்தீரா’, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வேலன்’ ஆகிய தொலைக்காட்சித் தொடர்களில் இவர் பணியாற்றியிருக்கிறார். இவரது உச்சம் தொட்ட தன்னம்பிக்கை நிறைந்த இந்த சினிமா பயணம் பெண்களுக்கு இன்றும் ஒரு உத்வேகமாக இருந்து வருகிறது.

ப்ரீத்தா ஜெயராமன்

தற்போதைய திரைத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் பெண் ஒளிப்பதிவாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் ப்ரீத்தா ஜெயராமன். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர். இவரது இந்த ஆர்வமே இவரைத் திரைத்துறையின் ஒளிப்பதிவாளர் என்ற பாதைக்கு அழைத்துச் சென்றது.

சென்னையில் உள்ள திரைப்பட பயிற்சி நிறுவனம் ஒன்றில் ஒளிப்பதிவுத் துறையில் தனது பட்டப்படிப்பை முடித்து அதில் தங்கப்பதக்கமும் பெற்றார். அதன்பிறகு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் ஒளிப்பதிவு நுணுக்கங்களையும், யுத்திகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ப்ரீத்தாவிற்குள் உண்டானது. அதனால் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் துணை ஒளிப்பதிவாளராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். துணை ஒளிப்பதிவாளராக அவர் ‘குருதிப்புனல்’ மற்றும் ‘மே மாதம்’ போன்ற படங்களில் பணியாற்றினார். அதுதவிர ஏராளமான குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களையும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளராக தன்னை மெருகேற்றிக் கொண்டார். இவர் தனியாக ஒளிப்பதிவு செய்த முதல் படமான ‘நாக் நாக்’, ‘ஐ அம் லுக்கிங் டு மேரி’ என்ற ஆங்கிலத் திரைப்படம் 2003-ஆம் ஆண்டு வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து இவரது முதல் தமிழ் திரைப்படமாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த ‘கண்ணாமூச்சி ஏனடா’ அமைந்தது. ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்து 2008-ஆம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ‘அபியும் நானும்’ திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளுக்கும் வழிவகுத்தது.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் இவரது ஒளிப்பதிவு திரையில் மிளிர்ந்தது. இவர் தெலுங்கில் ‘ஆகாசமன்தா’, ‘உலவுச் சாறு பிரியாணி’ ஆகிய திரைப்படங்களிலும், கன்னடத்தில் ‘ஒக்கரணே’, ‘பாக்சர்’, ‘ஆதிலட்சுமி பூரணா’, ‘படவா ராஸ்கல்’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். தமிழ் சினிமா துறையில் இவரது ஒளிப்பதிவுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. இவர் ஒளிப்பதிவு செய்த ‘உன் சமையல் அறையில்’ மற்றும் ‘வானம் கொட்டட்டும்’ ஆகிய திரைப்படங்கள் பலராலும் பாராட்டிப் பேசப்பட்டது. சமீபத்தில் 2021-ஆம் ஆண்டு பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் வெளியான ‘ஹே சினாமிகா’ திரைப்படத்திற்கும் ப்ரீத்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.


‘படவா ராஸ்கல்’ மற்றும் இந்தி திரைப்படப் படப்பிடிப்பில் ப்ரீத்தா ஜெயராமன்

இந்திய பெண் ஒளிப்பதிவாளர்கள் கூட்டமைப்பில் (IWCC) ஒரு உறுப்பினராக இடம்பெற்றுள்ளார் ப்ரீத்தா ஜெயராமன். அதுமட்டுமின்றி இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில் ஊக்கத்துக்குரிய முதல் 4 பெண்களுள் ஒருவராக இருக்கிறார். 2019-ஆம் ஆண்டில் ஒண்டர் உமன் அவார்ட்ஸ் நிகழ்வில் சிறந்த ஒளிப்பதிவாளர் விருது பெற்றுள்ளார். 2020-இல் ஒளிப்பதிவுத் துறையில் ‘தி இன்ஸ்பிரேஷன் குளோபல் உமன் விருது’, 2021-ஆம் ஆண்டு மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த ‘வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படத்துக்காக ஜே.எஃப்.டபிள்யூ. திரைப்பட விருதும் ப்ரீத்தாவுக்கு வழங்கப்பட்டது.

யாமினி

தற்போது அறிமுகமாகி வரும் பெண் ஒளிப்பதிவாளர்களுள் அதிகம் பாராட்டப்படும் நபராகக் கருதப்படுபவர் யாமினி. 1988-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் கல்லூரிப் படிப்பில் விஷுவல் கம்யூனிகேசன் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் நிறைந்த யாமினி, தனது கல்லூரிப் படிப்பை முடித்ததும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற பல மொழிகளில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்களிடமிருந்து சினிமாத் துறையின் ஒளிப்பதிவு நுணுக்கங்களையும், பணி அனுபவங்களையும் நன்கு கற்றுத்தேர்ந்தார். முதலில் விளம்பரப்படங்களில் பணியாற்றத் தொடங்கிய இவர், 2019-ஆம் ஆண்டு ‘சில்லுக் கருப்பட்டி’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதற்கடுத்து 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மைக்கேல்’ என்ற குறும்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 2022-ஆம் ஆண்டில் வெற்றிப்படமாக அமைந்த ‘சாணிக் காயிதம்’ திரைப்படத்திலும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார் யாமினி. இந்த திரைப்படம் யாமினிக்கு புகழையும், நல்ல அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தது. இவரது அடுத்த படைப்பான ‘ரகு தாத்தா’ விரைவில் வெளிவர இருக்கிறது. தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவுத்துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் யாமினி.


‘சாணிக் காயிதம்’ படப்பிடிப்பில் யாமினி

Updated On 14 Aug 2023 6:41 PM GMT
ராணி

ராணி

Next Story