தவறு செய்பவர்கள் எப்படியும் அதற்கான தண்டனை பெறுவார்கள் என்பது இயற்கையின் நியதி. ஒரு தவறு செய்துவிட்டு அதை மறைத்துவிட்டால் அப்படியே மறைந்துவிடும் என்றோ அல்லது யாருக்கும் தெரியாமல் தவறு செய்துகொண்டே இருக்கலாம் என்றோ நினைத்தால் கட்டாயம் ஒருநாள் அது வெளிச்சத்திற்கு வந்துவிடும். அதற்கு உதாரணமாகத்தான் சமீபத்தில் சென்னையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. யாருக்கும் தெரியாமல் தனது சுய இன்பத்தை பூர்த்தி செய்துகொள்ள நினைத்த இளைஞன் ஒருபுறம், பண ஆசையால் உயிரை இழந்த பெண் மறுபுறம் என போலீசாரையே திடுக்கிட வைத்திருக்கிறது இந்த சம்பவம். பாலியல் தொழில் செய்யும் பெண்ணை குறிப்பிட்ட தொகை பேசி, யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு அழைத்துவந்த இளைஞனின் சூழ்நிலையை புரிந்துகொண்டு மிரட்டிய பெண்ணை, கோபத்தில் கொலைசெய்திருக்கிறான் அந்த இளைஞன். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்வதற்கு முந்தைய இரவு நடந்தது என்ன? அந்த பெண் என்ன செய்தார்? எதனால் கொலை நடந்தது? என்பது குறித்து விளக்கியிருக்கிறான் அந்த இளைஞன். தற்போது போலீசாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் இளைஞனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்தது என்ன?
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் மேட்டுகுப்பத்திலிருக்கும் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் கட்டுமான பணி நடந்துகொண்டிருக்கிறது. அந்த இடத்தில் செப்டம்பர் 19ஆம் தேதியன்று காலை ஒரு பெரிய ட்ராலி சூட்கேஸ் கிடந்திருக்கிறது. காலையில் கட்டுமான வேலைக்கு வந்த மாரி என்பவர் அங்கு இடையூறாக கிடந்த சூட்கேஸை தள்ளியிருக்கிறார். அப்போது சூட்கேஸிலிருந்து ரத்தம் வழிவதை பார்த்து பயந்த மாரி, அந்த வழியாக சென்ற துரைப்பாக்கம் காவலரை அழைத்து காட்டியுள்ளார். உடனடியாக அதுகுறித்து தகவலறிந்த துரைப்பாக்கம் போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, உள்ளே ஒரு பெண்ணின் உடல் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க, அங்கு விரைந்துசென்ற சென்னை இணை ஆணையர் சி.பி. சக்கரவர்த்தி, அடையாறு துணை கமிஷ்னர் பொன் கார்த்திக்குமார் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழு, கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்கினர்.
கொலைசெய்யப்பட்ட தீபா - உடலை சூட்கேஸில் அடைத்து தள்ளிச்சென்ற கொலையாளியின் சிசிடிவி காட்சி
முதலில் உடல்பாகங்களையும் அதிலுள்ள அடையாளங்களையும் வைத்து போலீசார் விசாரிக்கையில், கொலைசெய்யப்பட்ட பெண் மணலி பகுதியைச் சேர்ந்த தீபா என்பது தெரியவந்தது. 32 வயதான அந்த பெண் திருமணம் செய்துகொள்ளாமல் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த பெண்ணை கொலை செய்தது யார்? என்ற விசாரணையில் இறங்கிய போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட கட்டுமான பணி நடந்துவந்த பகுதியில் சிசிடிவி எதுவும் இல்லாததால், அந்த பகுதியின் சுற்றுவட்டார பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திற்கு குடியிருப்புகளில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது ஒரு தனி நபர் சூட்கேஸை தள்ளிச்சென்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த நபர் யார் என விசாரித்தபோது, அவர் பார்த்தசாரதி 4வது தெருவிலிருக்கும் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்துவரும் குடும்பத்தின் உறவினர் என தெரியவர, போலீசார் அந்த வீட்டிற்குச் சென்றனர்.
விசாரணையில் வெளிவந்த உண்மைகள்
கதவை திறந்ததும் அங்கு போலீசார் நிற்பதை பார்த்து பதறிய அந்த நபரை விசாரித்தபோது, அவர் பெயர் மணிகண்டன் என்பதும், வயது 25 என்பதும் தெரியவந்திருக்கிறது. மேலும் சிவகங்கையைச் சேர்ந்த அவர் 15 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்ததாகவும், அங்கு தனது சகோதரர் வீட்டில் தங்கி வேலை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறியதுடன், வீட்டு படிக்கெட்டுகளில் படிந்திருந்த ரத்தக்கறை குறித்து கேட்டபோது, தீபாவை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். தீபாவை எப்படி தெரியும்? என்றும், கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்தது? என்று கேட்டதற்கு, முந்தைய நாள் தனது சகோதரரும் அவருடைய மனைவியும் அடுத்த நாள் காலையில்தான் வருவோம் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றிருக்கின்றனர்.
கைதான கொலையாளி மணிகண்டன் - கட்டுமான பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ்
இந்த சூழலை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு உல்லாசமாக இருக்க நினைத்த மணிகண்டன், தனது செல்போனுக்கு வந்த மெசேஜ் ஒன்றில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்புகொண்டதில் ஒரு பெண் ஏஜென்ட்டிம் பேசியிருக்கிறார். அந்த ஏஜென்ட் பல பெண்களின் போட்டோக்களை அனுப்பியதில், தீபாவை செலக்ட் செய்திருக்கிறார் மணிகண்டன். இரவு 8.30 மணிக்கு தீபா வந்துவிடுவார் என அந்த ஏஜென்ட், மணிகண்டனிடம் கூற, அவரும் தயாராக காத்திருந்திருக்கிறார். ஆனால் இரவு 11.30 மணிக்குத்தான் தீபா அங்கு சென்றிருக்கிறார். இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் பகிர்ந்துகொண்டதுடன், தீபா, தான் மாதவரத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒரு இரவுக்கு ரூ. 2000 என ஏஜென்டிடம் பேசி வந்திருப்பதாகவும் மணிகண்டனிடம் கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, பதிலுக்கு மணிகண்டனும், தான் அண்ணன் வீட்டில் வசித்து வருவதையும், காலையில் அவர்கள் வருவதற்குள் தீபாவை யாருக்கும் தெரியாமல் அனுப்பிவிட திட்டமிட்டிருப்பதையும் கூறியிருக்கிறார். அதன்பிறகு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், அண்ணனும் அண்ணியும் வந்துவிடுவார்கள் என்றும், அக்கம்பக்கத்தினர் பார்ப்பதற்குள் கிளம்பிவிடுமாறும் அதிகாலை 3 மணியளவில் தீபாவை அவசரப்படுத்த, மணிகண்டனின் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட தீபா, ரூ.12,000 கொடுத்தால்தான் அந்த இடத்தைவிட்டு நகர்வேன் என்று கராறாகக் கூற இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. அதில் தீபா மணிகண்டனின் கன்னத்தில் அறைந்துவிட, ஆத்திரமடைந்த அவர் அருகில் கிடந்த சுத்தியலை எடுத்து தீபாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். சம்பவ இடத்திலேயே தீபா இறந்துவிட, என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த மணிகண்டன், வீட்டிலிருந்த பெரிய சூட்கேஸை எடுத்து கத்தியால் தீபாவின் உடலை துண்டுதுண்டாக வெட்டி சூட்கேஸுக்குள் அடைத்து, அந்த சூட்கேஸை கட்டுமான பணி நடந்துகொண்டிருந்த குமரன் குடில் பகுதியின் பிரதான சாலையில் போட்டுவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
குற்றவாளியை போலீசார் கூட்டிச்சென்றபோது... - மெசேஜ் மூலம் தீபாவை செலக்ட் செய்த மணிகண்டன்
போலீசாரின் விசாரணையில் மணிகண்டன் கொடுத்த வாக்குமூலம் என்று இப்படியாக செய்திகள் வெளியானாலும், மணிகண்டன் ஒரு வருடத்திற்கு முன்பே தனது அம்மா மற்றும் தங்கையுடன் சென்னைக்கு வந்து துரைப்பாக்கம் பகுதியில் தங்கி வசித்து வருவதாகவும், அருகிலிருக்கும் கார் சர்வீஸ் கம்பெனி ஒன்றில் அவர் வேலை செய்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அம்மா, தங்கை இருவரும் ஊருக்குச் சென்றுவிட ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் தொடர்புகொண்டு தீபா என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்ணை வீட்டிற்கு வரவழைத்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பேசிய பணத்தில் மணிகண்டன் பாதியை மட்டும் கொடுக்க இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும், தீபா மணிகண்டனை அடித்து தாக்கியதுடன், அவருடைய போட்டோவை போஸ்டராக அடித்து ஒட்டிவிடுவதாகவும் மிரட்டியதால் அங்கிருந்த சுத்தியலை எடுத்து தீபாவின் தலையில் ஓங்கி அடித்த மணிகண்டன் அவரை கொலைசெய்ததுடன், அருகிலிருந்த ஒரு கடைக்குச் சென்று ரூ.3000 கொடுத்து சூட்கேஸ் வாங்கிவந்து அதில் சுத்தியலால் சிதைக்கப்பட்டு, துண்டு துண்டாக வெட்டப்பட்ட தீபாவின் உடலை அடைத்து கட்டுமான பணி நடைபெற்ற இடத்தில் போட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி இரண்டுவிதமாக காரணங்கள் சொல்லப்பட்டாலும் தீபாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்ட மணிகண்டனை கைதுசெய்த போலீசார், இந்த கொலையில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டிருக்கிறார்களா? கொலைக்கு பின்னால் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கின்றதா? என்பது போன்ற கோணங்களில் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதனிடையே, தீபாவை துண்டு துண்டாக வெட்டியபோது, அவருடைய மண்டையை பிளந்த மணிகண்டன், மூளையை எடுத்து வறுத்து சாப்பிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், இதனை கேட்டு போலீசாரே அதிர்ந்து போனதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.