இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

டெக்னாலஜி வளர வளர நூதன கொள்ளைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. குறிப்பாக, ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடக்கும் கொள்ளைச் சம்பவங்கள் சமீப காலமாக கணிசமாக அதிகரித்திருக்கின்றன. அதிலும் கார்டுகளை திருடுவதற்காகவே ஏடிஎம் மெஷின்களில் கார்டு ரீடரை பொருத்தி கார்டை சிக்க வைத்தல், வை-ஃபை கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் பணத்தை எடுத்தல் என நூதனமாக திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக, ஏடிஎம் மெஷின்களை பயன்படுத்த தெரியாத நபர்களை நோட்டமிட்டு, அவர்களுக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்க உதவுவதை போன்று PIN நம்பரை கேட்டு தெரிந்துகொண்டு அந்த நம்பரை பயன்படுத்தி பணத்தை திருடுகின்றனர். நிறையப்பேருக்கு தங்களது வங்கிக்கணக்கிலிருந்து பணம் திருட்டு போனதுகூட தெரியாத அளவிற்கு மோசடியில் ஈடுபடுகின்றனர். என்னதான் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாலும் மோசடிக்காரர்கள் புதிய வழியை கண்டுபிடித்து திருடுகின்றனர். இதுபோன்ற குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என காவல்துறையும் வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் சென்னையில் இதுபோன்ற ஒரு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை காவல்துறை கைதுசெய்து அவரிடமிருந்து ஏடிஎம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்தது. கொள்ளை சம்பவம் நடந்தது எப்படி? இதுபோன்று நூதன கொள்ளையர்களிடம் சிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? ஒருவேளை ஏடிஎம் கார்டு, மெஷினில் சிக்கிக்கொண்டால் முதலில் யாரை அணுகுவது? கார்டு தொலைந்துவிட்டால் முதலில் செய்யவேண்டியது என்ன? என்பது குறித்தெல்லாம் சற்று விரிவாக காணலாம்.


சூளைமேட்டில் நடந்த ஏடிஎம் கார்டு கொள்ளையில் ஈடுபட்ட தல்லா சீனிவாசலு

கொள்ளை சம்பவம் எங்கு நடந்தது?

சென்னை, சூளைமேட்டில் வசித்து வருபவர் கார்த்திக் வேந்தன். மார்ச் 31ஆம் தேதி இவருடைய ஏடிஎம் கார்டு தொலைந்து போயுள்ளது. இந்நிலையில் கார்த்திக் வேந்தனின் கார்டை பயன்படுத்தி யாரோ ரூ.11,870ஐ 3 தவணைகளில் எடுத்திருப்பதாக மெசேஜ் வந்திருக்கிறது. உடனே இதுகுறித்து சூளைமேடு F-5 காவல்நிலையத்தில் புகாரளித்தார் கார்த்திக். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். சூளைமேடு F-5 காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழு தீவிர விசாரணை மேற்கொண்டபோது, அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகேயிருக்கிற தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் ஏடிஎம் பக்கத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் நிற்பதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தல்லா சீனிவாசலு என்னும் அந்த நபர், பி.டெக் படித்துவிட்டு வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது டெபிட் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்ற தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்ட அவர், டெபிட் கார்டுகளை திருடுவதையே முழுநேர தொழிலாக மாற்றிக்கொண்டார். அதன்பின்பு வை-ஃபை வசதி கார்டுகள், பொதுமக்கள் தவறவிடும் ஏடிஎம் கார்டுகளை திருடி கொஞ்சம் கொஞ்சமாக சிறு சிறு தவணைகளில் பணத்தை எடுத்து அதை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடுதல் மற்றும் சொகுசு வாழ்க்கை என ஜாலியாக சுற்றிவந்துள்ளார். சீனிவாசலு தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், திருப்பதி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற நூதன திருட்டில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து 64 ஏடிஎம் கார்டுகள், பேடிஎம் ஸ்வைப்பிங் மெஷின், லேப்டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்ததுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர். மேலும் இவருடன் தொடர்புடைய மற்றொரு நபரையும் தேடிவருகின்றனர். இதுபோன்று கொள்ளைகளில் இருந்து தப்பிக்க முடிந்தவரை ஏடிஎம் கார்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுமாறும், ஒருவேளை கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக பேங்கை அணுகி கார்டை ரத்து செய்யுமாறும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


ஏடிஎம் மெஷின்கள் மற்றும் கார்டுகள் மூலம் நடக்கும் கொள்ளைகள்

ஏடிஎம் கார்டு தொலைந்தால் என்ன செய்வது?

நாமே ஏடிஎம் கார்டுகளை தொலைப்பது ஒருபுறம் நடந்தாலும் மற்றொரு புறம் நம் கண்முன்னே கொள்ளைகள் நடைபெறுகின்றன என்பது பலருக்கும் தெரிந்திருப்பதில்லை. இப்போது வங்கிக்கணக்கு வைத்திருக்கும் அனைவரிடமும் டெபிட் கார்டுகள் இருக்கின்றன. ஆனால் அந்த கார்டுகளை ஏடிஎம் மெஷின்களில் எப்படி செலுத்தி பணத்தை எடுப்பது என்பது நிறையப்பேருக்கு தெரிவதில்லை. இதனை சில கொள்ளையர்கள் சாதமாக பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பற்ற ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். ஏனென்றால் பெரும்பாலான கொள்ளை கும்பல் அதுபோன்ற ஏடிஎம் மெஷின்களில் கார்டு ரீடர்களை பொருத்திவிட்டு பணம் எடுக்க வருபவர்களைப் போல அருகிலேயே காத்திருக்கின்றனர். யாராவது பணம் எடுக்க போகும்போது, அடுத்து பணம் எடுப்பதைப்போல வரிசையில் நிற்கின்றனர். கார்டு ரீடர் பொருத்தப்பட்டிருப்பதால் இயந்திரத்தில் கார்டு சிக்கிக்கொள்ளும்போது, பாதிக்கப்பட்டவருக்கு உதவுவதைப் போல நடித்து உள்ளே செல்கின்றனர். அவர்களிடம் பின் நம்பரைக் கேட்டு தெரிந்துகொண்டு கார்டை வெளியே எடுக்க முயற்சித்து பார்ப்பர். ஆனால் கார்டு வெளியே வராது. உடனே பேங்கை அணுகுமாறு கூறி அவர்களை அனுப்பிவிட்டு, பணத்தை திருடிச் செல்கின்றனர். இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் சமீபகாலமாக மிகவும் அதிகரித்திருக்கின்றன.


மெஷினிலேயே ஏடிஎம் கார்டு லாக் ஆகிவிட்டால், உடனடியாக கார்டை ப்ளாக் செய்வது நல்லது

இதனாலேயே ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக அதனை ப்ளாக் செய்ய பல்வேறு வசதிகள் வந்துவிட்டன. முடிந்தால் வங்கிக்கு சென்று அறிவித்தால் அவர்கள் உடனே கார்டை ப்ளாக் செய்துவிடுவார்கள். அதுபோக எஸ்.எம்.எஸ் அல்லது போன் மூலமே ப்ளாக் செய்யும் வசதிகளும் வந்துவிட்டன. பெரும்பாலான பேங்க்குகள் இதுபோன்ற சேவைகளுக்கு குறிப்பிட்ட எண்ணை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கின்றன. தங்கள் வங்கியின் ஏடிஎம் கார்டை ஆன்லைன் மூலம் ப்ளாக் செய்ய வாடிக்கையாளர்களுக்கு வெப்சைட் லிங்க்கும் கொடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, எஸ்பிஐ வங்கி கார்டு தொலைந்துவிட்டால் SMS மூலம் ப்ளாக் செய்ய 1800 11 2211 என்ற எண்ணுக்கும் அதேபோல், 1800 425 3800 என்ற எண்ணுக்கும் கால் செய்யலாம் அல்லது https://onlinesbi.com/ என்ற இணையதளத்தில் சென்றும் ப்ளாக் செய்யலாம்.

எஸ்பிஐ ஆன்லைன் இணையதளத்தில் கார்டை ப்ளாக் செய்ய e-Services பிரிவில் ATM Card Services வசதிக்குள் செல்ல வேண்டும். அதில் Block ATM Card-ஐ செலக்ட் செய்து வங்கிக்கணக்குடன் தொடர்புடைய ஏடிஎம் கார்டு எண்ணை செலக்ட் செய்யவேண்டும். அதில் Active மற்றும் Inactive விவரங்கள் தெரியும். இணைக்கப்பட்டிருக்கும் கார்டுகளின் முதல் மற்றும் நான்கு கடைசி எண்கள் தெரியும். ப்ளாக் செய்யவேண்டிய கார்டை செலக்ட் செய்து Submit கொடுத்தால் வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். ஓடிபியை பதிவிட்டு Confirm கொடுத்தால் உடனே கார்டு ப்ளாக் ஆகிவிடும். இதேபோல் ஒவ்வொரு வங்கியும் அதன் இணையதளத்தில் இந்த வசதியை வைத்திருக்கின்றன. ஒருவேளை ஏடிஎம் கார்டு திருடப்பட்டு விட்டதாக தெரிந்தால் அருகிலிருக்கும் காவல்நிலையத்தில் FIR பதிவு செய்யலாம். அதன்மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

Updated On 13 May 2024 6:02 PM GMT
ராணி

ராணி

Next Story