இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகிக்கொண்டே போகிறது. வெளியே செல்லும்போதும், பேருந்துகளில் பயணிக்கும்போதும்தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்று கூறப்பட்டுவந்த நிலையில், இப்போது பள்ளி, கல்லூரிகளில்கூட பாதுகாப்புத் தரவேண்டிய ஆசிரியர்களே சில நேரங்களில் அவர்களுக்கு எமனாக மாறிவிடுகின்றனர். படிக்கச் செல்லும் இடத்தில் தங்களது பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர் அவர்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக குஜராத்தில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை தனது காரில் ஏற்றிச்சென்ற பள்ளி முதல்வர், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, சிறுமி கூச்சலிட்டதால் கழுத்தை நெரித்து கொலைசெய்து பள்ளி வளாகத்திலேயே உடலை வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பள்ளி முடிந்தும் வீடு திரும்பாத சிறுமியைத் தேடி பெற்றோர் பள்ளிக்குச் சென்றபோது, அங்கு தங்களது குழந்தை காம்பவுண்ட் சுவர் அருகே சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்ததுடன், அதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தனர். புகாரின்பேரில் நடைபெற்ற விசாரணையில் சிறுமியை கொலைசெய்ததை பள்ளி முதல்வரே ஒப்புக்கொண்டதையடுத்து போக்சோவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். குஜராத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காணாமல் போன சிறுமி

குஜராத் மாநிலம், தாஹோத் மாவட்டத்திலுள்ள பிபாலியா பகுதியின் டோரனி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் கடந்த 18 ஆண்டுகளாக முதல்வராக இருந்து வருகிறார் கோவிந்த் நாத். இவரது வீட்டிற்கு அருகிலிருக்கும் ஒரு குடும்பம் தங்களது 6 வயது பெண் குழந்தையை அதே பள்ளியில் சேர்க்க, தினமும் தனது காரிலேயே அந்த சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதையும், மாலை கொண்டுவந்து வீட்டில் விடுவதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார் கோவிந்த் நாத். இந்நிலையில் செப்டம்பர் 19ஆம் தேதி, காலை 10.20 மணியளவில் கோவிந்துடன் தனது மகளை காரில் ஏற்றி அனுப்பியிருக்கிறார் சிறுமியின் தாய். ஆனால் மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் பயந்துபோன பெற்றோர், இதுகுறித்து பள்ளியின் முதல்வரான கோவிந்திடம் கேட்டிருக்கின்றனர்.


6 வயது சிறுமியை கொலைசெய்த பள்ளி முதல்வர் கோவிந்த் நாத்

ஆனால், காலையில் பள்ளிக்கு சென்று சிறுமியை அங்கு விட்டுவிட்டு, தான் வேறு வேலையாக வெளியே சென்றுவிட்டு, நேராக வீட்டிற்கு வந்துவிட்டதாக கூறியிருக்கிறார். பல இடங்களில் சிறுமியை தேடியும் கிடைக்காததால் பள்ளிக்கு விரைந்துசென்ற பெற்றோர், அங்கு தேடியதில் பள்ளி மைதானத்தின் காம்பவுண்ட் சுவர் அருகே சிறுமி சடலமாக கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சத்தம் போட்டதால் கொலை

பள்ளி முதல்வர் கோவிந்த் நாத்துடன்தான் தங்களது மகளை தினமும் பள்ளிக்கு அனுப்புவதாக காவல்துறையில் பெற்றோர் தெரிவித்த நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், காலையில் மாணவியை பள்ளியில் விட்டுவிட்டு தான் வெளியே சென்றுவிட்டதாகவும், மீண்டும் பள்ளிக்குச் சென்று, அங்கிருந்து மாலை 5 மணிக்கெல்லாம் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதாகவும் முதல்வர் கோவிந்த் நாத் கூறினார். ஆனால் மாலை 6.10 மணிவரை அவர் பள்ளியில் இருந்ததை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவர் காலையில் பள்ளிக்குச் சென்றுவிட்டு இடையே எங்கும் செல்லவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. சிறுமியை வகுப்பில் விட்டுவிட்டதாக கூறிய நிலையில், சிறுமியின் ஸ்கூல் பேக் மட்டும் வகுப்பறையின் வெளியே கிடந்ததை போலீசார் கண்டெடுத்தனர். ஆனால், சக மாணவர்களிடம் விசாரித்ததில் அன்று காலையிலிருந்தே அந்த சிறுமி வகுப்பிற்கு வரவில்லை என்பதும், கோவிந்த் நாத் சிறுமியை காரிலிருந்து இறக்கிவிட்டதை யாரும் பார்க்கவில்லை என்பதும் தெரியவரவே போலீசாரின் சந்தேகம் வலுத்தது.


போலீசாரால் கைதுசெய்யப்பட்ட குற்றவாளி கோவிந்த் நாத்

இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்தது. அதில் சிறுமி கழுத்தை நெரித்து கொலைசெய்யப்பட்டிருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து கோவிந்த் நாத்திடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை கொலைசெய்ததை அவர் ஒப்புக்கொண்டார். காரில் சிறுமியை அழைத்து வரும்போது அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். ஆனால் சிறுமி கத்தி கூச்சலிட்டதால், மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கழுத்தை நெரிக்க, மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் சிறுமி. சிறுமியின் உடலை கார் டிக்கியில் வைத்து மறைத்துவிட்டு, எப்போதும்போல காலை பள்ளிக்குச் சென்றிருக்கிறார். மாலை 5 மணிக்கு பள்ளி முடிந்து அனைவரும் வீடு திரும்பியதும், மாணவியின் ஸ்கூல் பேக் மற்றும் காலணிகளை வகுப்பறை முன்பு வீசிவிட்டு, உடலை மைதானத்தின் காம்பவுண்ட் சுவர் அருகே போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாததுபோல் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று கொலைசெய்த குற்றத்திற்காக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் கோவிந்த் நாத். இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அரசின் நடவடிக்கை என்ன?

பள்ளி முதல்வரே 6 வயது சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி கொலைசெய்த சம்பவம் நாடு முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், குஜராத் கல்வித்துறை அமைச்சர் குபேர் திண்டோர் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இது மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவம் தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார். விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்ததாகவும், போலீசாரின் தீவிர முயற்சியால்தான் மூன்றே நாட்களில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் திரும்பவும் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றும் உறுதியளித்திருக்கிறார்.


பாஜகவை குற்றஞ்சாட்டும் குஜராத் காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில்

இதற்கிடையே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டு கொலைசெய்த குற்றவாளியான பள்ளி முதல்வர் கோவிந்த் நாத், பாஜக ஆதரவாளர் என்று குஜராத் காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில் குற்றஞ்சாட்டியிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “குற்றவாளி கோவிந்த் நாத், தன்னை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும், சமூக சீர்திருத்தவாதி என்றும் கூறியிருக்கிறார். மேலும் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பாஜக வாய்திறக்கும். அதுவே, பாஜக ஆட்சி செய்யும் மாநிலமான குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் எதுவும் பேசாமல் மௌனம் காக்கிறார் பிரதமர் மோடி” என்று கடுமையாக சாடியுள்ளார்.

Updated On 1 Oct 2024 4:22 AM GMT
ராணி

ராணி

Next Story