இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நாளுக்குநாள் விலைவாசி ஏறிக்கொண்டே போகிற இன்றைய காலகட்டத்தில் பணம் மற்றும் சொத்துக்களின்மீதான ஆசை யாருக்குத்தான் இருப்பதில்லை? நிறையப்பேர் சீக்கிரத்தில் செட்டில் ஆகிவிடவேண்டும், சொத்து சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனாலேயே சட்டத்தின் கண்ணை மறைத்து சட்டவிரோதமாக சொத்து சேர்ப்பதில் பலர் முனைப்பு காட்டுகிறார்கள். இதுபோன்ற குற்றங்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், சாமானியர்கள் என அனைவருமே ஈடுபடுகிறார்கள் என்பதை சமீபகாலமாக வெளிவருகிற செய்திகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. அதுபோல ஒரு சம்பவம்தான் சமீபத்தில் வைரலாக பேசப்படுகிறது. திருச்சியைச் சேர்ந்த சார்பதிவாளர் ஒருவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து சட்டத்தின்பிடியில் சிக்கியிருக்கிறார். அவருக்கு சிறைதண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற குற்றங்கள் சமீபகாலமாக அதிகளவில் பேசப்பட்டாலும் இந்த குற்றம் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ஏன்? அப்படி எவ்வளவு சொத்து அவர் சேர்த்தார்? இதற்கு முன்பு இதுபோன்ற குற்றங்களில் சிக்கி மாட்டிய அரசியல் பிரபலங்கள் யார் யார்? என்பது குறித்தெல்லாம் இக்கட்டுரையில் காணலாம்.

யார் இந்த சார்பதிவாளர்?

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியிலிருக்கும் பில்லாதுரை என்ற கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் மகன் ஜானகிராமன். 79 வயதான இவர் 1989 - 1993க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் துறையூர், உறையூர், முசிறி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, கொடைக்கானல் போன்ற முக்கிய இடங்களில் சார்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார். பணியில் இருந்த சமயத்தில் இவர் பெயரிலும் இவருடைய மனைவி வசந்தி(65) என்பவரின் பெயரிலும் அப்போதைய மதிப்புபடி ரூ. 32,25,532 அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார். அப்போதே வருமானத்திற்கு அதிகமாக ஜானகிராமன் சொத்து சேர்த்திருப்பதாக எழுந்த புகாரின்பேரில் 2001ஆம் ஆண்டு திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அம்பிகாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். புலன் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் 20 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது.


முன்னாள் சார்பதிவாளர் ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி

2001ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கின் தொடர் விசாரணையானது தற்போதைய காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் சேவியர் ராணி, உதவி ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் சுரேஷ்குமார் ஆகியோரால் நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கின் விசாரணையானது 25ஆம் தேதி முடிவுற்ற நிலையில், ஜானகிராமன் குற்றம்புரிந்தது உறுதியானது. இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், குற்றம்சாட்டப்பட்ட ஜானகிராமன் மற்றும் அவரது மனைவி வசந்தி இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து அரசிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு வில்பட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் ஜானகிராமன் பெயரிலும், அவரது மனைவி வசந்தி பெயரிலும் இருக்கும் சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ. 100 கோடி என்பது தெரியவந்திருக்கிறது. அவர் தனது வருமானத்திற்கு அதிகமாக 98% சொத்து சேர்த்திருக்கிறார் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சொத்துக்குவிப்பு வழக்கு என்றால் என்ன?

ஒரு தனிநபர் தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால் அது சட்டப்படி தவறு. அப்படி வருமானத்திற்கு அதிகமாக ஒரு நபருக்கு சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரலாம். இந்த சட்டத்தின்கீழ் அதிக வருமானம் அல்லது குறைந்த வருமானம்கொண்ட எவர் வேண்டுமானாலும் சிக்கலாம். இந்த வழக்கின்கீழ் குற்றம் உறுதியாகும்பட்சத்தில் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். வருமானத்தை மீறி சேர்க்கப்பட்ட சொத்துக்களின் அளவானது கணக்கிடப்பட்டு 6 மாதங்கள் முதல் குறைந்தது 5 ஆண்டுகள்வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். இதன்படி, ஜானகிராமனுக்கும் அவரது மனைவி வசந்திக்கும் 5 ஆண்டுகள் சிறைதண்டனையும், தலா 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற சொத்துக்குவிப்பு வழக்குகளில் இதற்குமுன்பே பல பிரபலங்கள் சிக்கியதுடன் தண்டனையும் பெற்றிருக்கின்றனர்.


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதியாகும்பட்சத்தில் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முக்கிய அரசியல் தலைவர்கள்

சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடர்ந்தது. விசாரணையில் குற்றம் உறுதியானதையடுத்து 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த வழக்கில் கடைசியாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவுறும் சமயத்தில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதில் அடுத்தடுத்த குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு செல்ல நேர்ந்தது. ஜெயலலிதாவைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான கே.சி வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, காமராஜ் மற்றும் கே.பி அன்பழகன் உட்பட பல அமைச்சர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி பணம், நகைகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் மாட்டிய சம்பவம் பரவலாக பேசப்பட்டது.


சொத்துக்குவிப்பு வழக்கில் மாட்டிய அரசியல்வாதிகளாக ஆ.ராசா - பொன்முடி - ஜெயலலிதா

2006-11ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர்மீதும் அவருடைய மனைவி விசாலாட்சி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. 2011ஆம் ஆண்டு பதியப்பட்ட இவ்வழக்கில் 2016ஆம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது சிறப்பு நீதிமன்றம். ஆனால் மீண்டும் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை. விசாரணையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதியான நிலையில் அவரது பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல் முறையீடு செய்யவே, உயர்நீதிமன்ற தண்டனைமீது இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.

ஜெயலலிதாவுக்கு முன்பே திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஆ. ராசா இதேபோன்று சொத்துக்குவிப்பு வழக்கில் மாட்டினார். வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி சொத்து சேர்த்ததாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. அதற்குமுன்பே 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கும் ஆ. ராசா மீது இருந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ராசாவின் மனைவி உட்பட 18 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆ.ராசா தனது வருமானத்திற்கு அதிகமாக 579% சொத்து சேர்த்திருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டியது. அரசியல்தலைவர்கள் பலர் இதுபோன்ற சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து தப்பினாலும் பெரும்பாலான அரசு அதிகாரிகள் இந்த வழக்குகளில் அதிகம் சிக்கிக்கொள்கின்றனர் என்கின்றன தரவுகள். குறிப்பாக, சார்பதிவு அலுவலகங்களில் சொத்துக்களை வாங்குவது மற்றும் விற்றலில் பதிவு செய்யும்போது சட்டத்திற்கு புறம்பாக நிறைய முறைகேடுகள் நடப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. தண்டனைகள் கடுமையாக்கப்படும்வரை இதுபோன்ற குற்றங்களை தடுப்பது சற்று சிரமம்தான்.

Updated On 6 May 2024 6:16 PM GMT
ராணி

ராணி

Next Story