இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கேக்கில் கிரீம் கேக், பட்டர் கேக், கப் கேக், சாக்லேட் கேக் என பல வகைகள் உள்ளன. கொண்டாட்டங்களை இனிப்புகளுடன் இணைப்பதால், ஒவ்வொரு கொண்டாட்ட நிகழ்வுகளிலும் கேக்குகள் பிரதானமாக மாறிவிட்டன. பிறந்தநாள், திருமணங்கள், ஆண்டு விழாக்கள், பதவி உயர்வுகள், நிச்சயதார்த்த விழாக்கள் என கேக் கட்டிங் கொண்டாட்ட பட்டியல் நீள்கிறது.

'கேக்' என்ற வார்த்தை ஸ்வீடிஷ் வார்த்தையான 'காக்கா' என்பதிலிருந்து வந்தது. எகிப்தில்தான் முதன் முதலில் பேக்கிங் செய்யும் முறையை கண்டுபிடித்தனர். நாளடைவில் ரோமானியர்கள் பழங்களை வைத்து பலவிதமாக கேக் செய்ய ஆரம்பித்தனர். அந்தவகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஸ்பான்ஜ் கேக்கை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக எப்படி செய்யலாம் என சொல்லிக் கொடுத்து விளக்குகிறார் சமையல் கலைஞர் தாமரை செல்வி.


செய்முறை:

* முதலில் வாய் அகன்ற கண்ணாடி பாத்திரத்தில் 250 கிராம் உப்பு சேர்க்காத பட்டர் எடுத்து, அடிக்கும் கருவி (Beater) வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

* அடுத்ததாக வெள்ளை சர்க்கரை பொடியை 250 கிராம் எடுத்து, அடித்து வைத்துள்ள பட்டரில் சேர்த்து நல்ல கிரீம் பதத்தில் மீண்டும் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஸ்பான்ஜ் கேக் செய்ய தேவையான முட்டைகளை உடைத்து ஊற்றும் காட்சி

* இந்த கலவையுடன், ஐந்து முட்டைகளில் முதல் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை, அடிக்கும் கருவி (Beater) வைத்து சற்று கலந்து கொடுக்க வேண்டும். பிறகு மீதமுள்ள இரண்டு முட்டைகளை சேர்த்து நல்ல கிரீம் பதத்தில் அடிக்க வேண்டும்.

* இந்த முட்டை கலவையுடன், சலித்து எடுத்து வைத்துள்ள 250 கிராம் மைதாவை சேர்த்து அடிப்பதுடன், காய்ச்சி ஆற வைத்துள்ள பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இரண்டு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் போட வேண்டும். இதனுடன் ஒரு பின்ச் உப்பு சேர்த்து மீண்டும் ஒரு முறை அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு உப்பு சேர்க்கும்போது டேஸ்ட் இன்னும் கூடுதலாக இருக்கும்.


டூட்டி ஃப்ரூட்டி சேர்க்கப்பட்ட கேக் கலவை காட்சி

* அடுத்ததாக கப் கேக் செய்யக்கூடிய ட்ரேயில் கப்களை வைத்து, தயாரித்து வைத்துள்ள இந்த கேக் கலவையை 2 ½ தேக்கரண்டி ஊற்றி, மேலே டூட்டி ஃப்ரூட்டி வைத்து, 180 டிகிரி ப்ரீ ஹீட் செய்யப்பட்ட மைக்ரோவேவ் ஓவனில் 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுத்தால் டூட்டி ஃப்ரூட்டி கப் கேக் ரெடி!


டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து பேக் செய்த கேக்

* அடுத்ததாக ஒரு சிறிய பாத்திரத்தில் பட்டர் மைதா கலவையை எடுத்து சாக்கோ சிப்ஸ் 2 தேக்கரண்டி சேர்த்து அதேபோல் கப் ட்ரேயில் வைத்து பேக் செய்தால் சாக்கோ கப் கேக் ரெடி!


ட்ரேயில் அடுக்கப்பட்டுள்ள ஸ்பான்ஜ் கேக், சாக்கோ கப் கேக் மற்றும் டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்

* சிறிய கேக் ட்ரேயில் மீதமுள்ள கலவையை சேர்த்து 10 நிமிடங்களுக்கு பேக் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டினால் ஸ்லைஸ் ஸ்பான்ஜ் கேக் ரெடி!

Updated On 8 July 2024 6:12 PM GMT
ராணி

ராணி

Next Story