இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

அசைவ பிரியர்களின் உணவுப் பட்டியலில் எப்போதும் முதலிடம் வகிப்பது சிக்கன்தான். எல்லா உணவுகளுடனும் சிக்கனை சைடு டிஷ்ஷாகவோ அல்லது மெய்ன் டிஷ்ஷாகவோ வைத்து சாப்பிடலாம். சாதாரணமாக குழம்பு வைப்பதிலிருந்து, ட்ரை சிக்கன் அல்லது மசாலா என பல வகைகளில் இதனை சமைக்கலாம். பொதுவாக அசைவம் சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பார்கள். ஆனால் சில சிக்கன் வகைகளை சுலபமாகவே சமைத்துவிடலாம். அப்படி அரை மணிநேரத்திலேயே சமைக்கக்கூடிய ஒரு டிஷ்தான் சிக்கன் கீமா மசாலா. இதனை சாதத்தில் பிசைந்தோ அல்லது தோசை, சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷாகவோ அல்லது தனியாகவோ கூட சாப்பிடலாம். சிக்கன் கீமா மசாலா ரெசிபியை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் சசி ரேகா.


செய்முறை

முதலில் அடுப்பை ஆன் செய்து, பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

எண்ணெய் காயந்ததும் பட்டை, கிராம்பு, கடற்பாசி, ஏலக்காயை சேர்த்து 2 நிமிடங்கள் பொரிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சீக்கிரம் வதங்க சிறிது உப்பு சேர்க்கலாம். இரண்டு நிமிடங்கள் மூடிவைத்து பொன்னிறமானதும், அதில் வெட்டி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவேண்டும். அதை கரண்டியால் நன்றாக நசுக்கிவிடவும். பச்சை வாசனை போகும்வரை மூடிபோட்டு நன்றாக வேகவிடவும்.

அதில் இஞ்சி -பூண்டு விழுதை சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் நன்கு வதங்கியதும், அதில் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து வதக்கவும். பாத்திரத்திற்கு மூடி போட்டு அடுப்பை இரண்டு நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

வெங்காயம் - தக்காளி கலவையில் எண்ணெய் பிரிந்து வாசனை வரும். இப்போது அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, அதில் நிறத்திற்காக காஷ்மீர் மிளகாய்த்தூள் மற்றும் தனி மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு அதில் மஞ்சள்தூள் சேர்த்து கிளறி, கரம் மசாலாத்தூள் போட்டு நன்றாக கிளறவும்.

மசாலாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தோல் நீக்கிய கீமா சிக்கனை சேர்த்து மசாலாக்களுடன் சேரும்வரை நன்றாக கிளறவும். வேண்டுமானால் சிறிது எண்ணெய் சேர்க்கலாம்.

கடைசியாக தனியாத்தூள் சேர்த்து அனைத்தும் சேருமாறு கிளறி, சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறிவிடவும். தண்ணீர் நன்கு சுண்டி கெட்டியானதும் அதன்மீது கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான கீமா சிக்கன் மசாலா ரெடி!

சிக்கன் செய்யும்போது மண் பாத்திரத்தை பயன்படுத்தினால் சுவை அதிகரிக்கும். எவர்சில்வர் பாத்திரங்களைவிட மண் பாத்திரம் சூடாக சற்று அதிக நேரமாகும்.

Updated On 11 March 2024 6:12 PM GMT
ராணி

ராணி

Next Story