இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சுவைமிகு டிஷ்களுள் ஒன்றுதான் “பிஸி பேலா பாத்”. கர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரபலமான இந்த உணவானது காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று நேர உணவாகவுமே உட்கொள்ள சிறந்ததொரு உணவுப்பொருளாகும். காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் சேர்வதால் இது மிகவும் சத்தான ஒன்றும் கூட. கம கம நெய் மணம் வீசும் 'பிஸிபேலாபாத்' செய்யத் தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை குறித்து விளக்கியுள்ளார் சமையல் கலை நிபுணர் மீனா கண்ணன்.


பிஸிபேலாபாத்திற்கு தேவையான சாம்பார் பொடியை தனியாக தயார் செய்யவேண்டும்


செய்முறை:

• முதலில் கடாயை அடுப்பில் வைத்து பின்பு கடாய் சூடான பிறகு எடுத்து வைத்த கடலைப் பருப்பு, தனியா மற்றும் உளுந்து மூன்றையும் சேர்த்து நன்றாக உலர்ந்த நிலையில் பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும். அடுத்ததாக கொஞ்சம் கசகசா, கிராம்பு, பட்டை உள்ளிட்டவற்றை கடாயில் சேர்த்து தனியாக வறுத்தெடுக்க வேண்டும். பிறகு வெறும் கடாயில் வெந்தயத்தையும் உலர வறுத்து அதோடு சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கடாயில் ஒன்று அல்லது இரண்டு கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடான பிறகு அதில் மிளகாய் வத்தல் சேர்த்து, நன்றாக கிண்டி வறுத்தெடுத்து, அதே கடாயில் கொப்பரைத் தேங்காயையும் வறுத்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

• இவ்வாறு ஒவ்வொரு முறையும் தனித்தனியாக வறுத்தெடுத்த பொருட்களை ஒரே தட்டில் தனியாக ஆற வைத்து, பின்பு பொடியாக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

• மீண்டும் தனியாக அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் தாராளமான அளவில் அதாவது ஐந்து முதல் ஆறு கரண்டி அளவில் சேர்த்துக்கொள்ளலாம், பிறகு எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு சிறிதளவு கடுகு, வெந்தயம் சேர்த்து நன்றாக கிண்ட வேண்டும்.

• அதன் பின்னர், கடுகு நன்றாக வெடித்தவுடன் அடுத்ததாக எடுத்து வைத்திருக்கும் காய்கறிகளில் முதலில் வெங்காயத்தை சேர்த்து, அந்த வெங்காயத்தோடு கொஞ்சமாக உப்பு சேர்த்து கடாயில் நன்றாக வறுக்க வேண்டும். அதன் பின்னர் கேரட், உருளைக் கிழங்கு, முருங்கைக்காய், பீன்ஸ் அனைத்தையும் ஒன்றாக கடாயில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

• கடாயில் இருக்கும் காய்கறிகள் நன்றாக வதங்கியப் பிறகு புளித்தண்ணீர் சேர்த்து சிறிதளவு மிளகாய்த்தூள், சாம்பார்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி மிதமான சூட்டில் வேகவைக்க வேண்டும்.

• கடாயில் வேகும் காய்கறிக் குழம்பில் ஒரு சிறிய துண்டு வெள்ளம், இனிப்பு சுவைக்காக சேர்ப்பது நல்லதொரு சுவையை நமக்குத் தரும்.

• ஒருபுறம் அடுப்பில் காய்கறிக் குழம்பு வெந்து கொண்டிருக்க, தனித்தனியாக வறுத்தெடுத்து வைத்த பொடி, மற்றொருபுறம் நன்றாக குழையவிட்டு வடித்த சாதம் மற்றும் பருப்பு என இம்மூன்றையும் தயார் நிலையில் எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

• அதன்பிறகு கடாயில் நன்றாக வெந்து கொண்டிருக்கும் குழம்பில், அரைத்து வைத்துள்ள பொடியை 4 முதல் 5 கரண்டி அளவில் சேர்த்து அதோடு எண்ணெய் 1 கரண்டி மற்றும் நெய் 2 கரண்டி அளவில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

• அடுத்ததாக மிதமான சூட்டில் அடுப்பை வைத்து சாதம் மற்றும் பருப்பு இரண்டையும் சேர்ந்தவாறு வடித்து தயாராகி இருக்கும் சாதத்தை, கடாயில் வெந்து கொண்டிருக்கும் காய்கறிக் குழம்போடு சரியான பதத்தில் சேர்த்து கிளற வேண்டும்.

• இறுதியாக சரியான பதத்தோடு இருக்கும் சாதத்தை நன்றாக கிளறி, அதோடு சிறிதளவு கறிவேப்பிலையை கில்லி சேர்த்துக்கொள்ள வேண்டும், பிறகு நெய் 5 முதல் 6 கரண்டி அளவில் சேர்த்தால் சுவையான நெய் மணம் வீசும் கம கம பிஸிபேலாபாத் தயார்.

Updated On 27 Nov 2023 6:35 PM GMT
ராணி

ராணி

Next Story