இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இப்போது பல மருத்துவமுறைகள் இருந்தாலும் அலோபதி மருத்துவத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற சிகிச்சைமுறைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. அலோபதியானது அவசர உயிர்காக்கும் சிகிச்சைமுறையாக பார்க்கப்பட்டாலும் மற்ற சிகிச்சைமுறைகளும் பல வியாதிகளுக்கு சிறந்த தீர்வளிக்கின்றன. அப்படிப்பட்ட சிகிச்சைமுறைகளில் ஒன்றுதான் ஹோமியோபதி. இந்த மருத்துவத்துக்கும் ஆங்கில மருத்துவத்துக்குமிடையேயான வித்தியாசம் என்ன? இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுமா? என்னென்ன வியாதிகளுக்கு இந்த சிகிச்சைமூலம் நல்ல பலன் கிடைக்கும்? என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் இதில் பின்பற்றப்படுகின்றன? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் ஹோமியோபதி மருத்துவர் ரவீந்திரன்.

ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன?

ஹோமியோபதி என்பது ஒரு ஜெர்மன் மருத்துவம் ஆகும். சாமுவேல் ஹானெமன் என்பவரால் 1795ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ‘முள்ளை முள்ளால் எடுத்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில்தான் இந்த மருத்துவம் செயல்படுகிறது. சாமுவேல் என்பவர் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி, எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரும்கூட. அப்படி ஒரு சமயம் இத்தாலியில் மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருந்தபோது எதேச்சையாக like cures like என்ற தத்துவத்தை கண்டறிந்து, முதலில் தன்னிடையே சுய பரிசோதனை செய்து பார்த்துள்ளார். உதாரணத்திற்கு, குயினா மரப்பட்டையை சாப்பிட்டால் மலேரியா வரும் என்று சொல்வார்கள். அப்படி அவர் அதை செய்தபோது அவருக்கு மலேரியா காய்ச்சல் வந்துவிட்டது. பிறகு தனக்குத்தானே ஒவ்வொரு சிகிச்சைமுறையாக பரிசோதித்து பார்த்து கடைசியாக மருந்தை கண்டுபிடிக்கிறார். அப்படி உருவானதுதான் ஹோமியோபதி சிகிச்சை.

ஹோமியோபதி மருத்துவத்துக்கும் மற்ற மருத்துவத்துக்குமான வித்தியாசம் என்ன?

முக்கியமான வித்தியாசம் என்று பார்த்தால் இந்த சிகிச்சையில் மிகவும் குறைந்த டோஸ் மருந்துதான் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகள் -9 (மைனஸ் 9) வரை நீர்க்க செய்யப்படுகின்றன. அதனால் திசுக்கள் பாதிப்படையாது. பக்கவிளைவுகளும் ஏற்படாது. அதேசமயம் சளி முதல் கேன்சர் வரை இந்த சிகிச்சைமூலம் சிறந்த தீர்வளிக்கமுடியும். இந்த மருந்து மாத்திரைகள் அனைத்தும் எளிதில் உண்ணக்கூடியவையும்கூட. மேலும் இவை சாப்பிட சுவையாக இருப்பதுடன் மலிவான விலையிலும் கிடைக்கின்றன.


ஹோமியோபதி மருத்துவத்தை கண்டறிந்த ஜெர்மன் விஞ்ஞானி சாமுவேல் ஹானெமன்

மனிதனுக்கு வரக்கூடிய அனைத்து நோய்களையுமே ஹோமியோபதி மூலம் குணப்படுத்த முடியுமா?

விபத்துகளால் எலும்பு முறிவு, அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ள பிரச்சினைகளுக்கு அலோபதி சிகிச்சைக்கு போகலாம். மற்றபடி, முக்கால்வாசி பிரச்சினைகளுக்கு ஹோமியோபதியில் நல்ல தீர்வு கிடைக்கும். கேன்சரை பொருத்தவரை முதல் மற்றும் இரண்டாம்கட்டத்தை ஹோமியோபதி சிகிச்சைமூலம் எளிதில் குணப்படுத்தலாம். மூன்று மற்றும் நான்காம் கட்டத்திற்கு போகும்போது அலோபதி சிகிச்சையைத்தான் நாடவேண்டி இருக்கும்.

ஹோமியோபதி மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன?

ஹோமியோபதியில் 80% மருந்துகள் தாவரங்களிலிருந்துதான் எடுக்கப்படுகின்றன. அதுபோக, விலங்குகளிடமிருந்தும், கெமிக்கல் பயன்படுத்தியும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி தயாரிக்கப்படும் மருந்துகள் கெட்டுப்போகாமல் இருக்க ஆல்கஹால் பயன்படுத்தி நீர்க்கச் செய்யப்படுகின்றன. இப்போது இந்தியாவில் பெரும்பாலான ஹோமியோபதி மருந்து தயாரிப்பு நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இணைந்துதான் இயங்கிவருகின்றன. இப்படி தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தினுடைய தரமும் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்புதான் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன.

நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதியில் தீர்வு உண்டா?

கண்டிப்பாக. முடக்குவாதம், நாள்பட்ட ஆஸ்துமா, நாள்பட்ட சரும பிரச்சினைகள் போன்றவைகளுக்கு ஹோமியோவில் சிறந்த மருத்துவம் அளிக்கப்படுகிறது. ஹோமியோவின் சிறப்பு என்னவென்றால் நோயாளிகள் ஒவ்வொருவரின் மனம் மற்றும் உடல்நலத்தை ஆராய்ந்து அதற்கேற்ப மருந்துகளும் சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஒருவருக்கு தலைவலி வந்தால் அந்த வலி எப்படி இருக்கிறது? தலையில் வலி எங்கு இருக்கிறது? வெயிலில் போனால் வலி அதிகமாகிறதா? தலைவலியுடன் வாந்தி, வயிற்றுவலி, கால்வலி போன்ற பிற அறிகுறிகளும் இருக்கிறதா? என்பது போன்றவற்றை நோயாளியிடம் கேட்டு ஆராய்ந்து அதற்கேற்ப மருந்து அளித்து குணப்படுத்தவேண்டும்.


ஹோமியோபதி முறையில் சாதாரண சளி முதல் கேன்சர் வரை சிகிச்சை

மூளை சம்பந்தப்பட்ட நோய்கள், மாரடைப்பு போன்றவற்றிற்கு ஹோமியோவில் சிகிச்சை இருக்கிறதா?

நிறைய கார்டியாக் பிரச்சினைகளுக்கு ஹோமியோவில் நல்ல சிகிச்சைகள் இருக்கின்றன. மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்குக்கூட சிகிச்சை அளிக்கப்படும். மூளை நரம்பு சம்பந்தப்பட்ட ரத்த ஓட்டம், நரம்பு பலவீனம், அட்ரோஃபியா, மைக்ரேன் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். கொரோனா போன்ற தொற்றுநோய்களுக்கும் பக்கவிளைவுகள் இல்லாமல் ஹோமியோவில் நல்ல மருந்துகள் இருக்கின்றன. ஹெபடைட்டிஸ் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கிடைக்காவிட்டாலும் கொஞ்ச நாட்களில் குணப்படுத்த முடியும்.

இதுவரை நீங்கள் சிகிச்சையளித்ததில் கடினமாக இருந்த நோயாளி குறித்த அனுபவத்தை பகிரமுடியுமா?

15 வருடங்களுக்கு முன்பு 7 வயது சிறுவன் ஒருவனுக்கு ரத்த புற்றுநோய். முதலில் குழந்தைகள் மருத்துவமனையில் சிறுவனுக்கு அலோபதி சிகிச்சை அளிக்கப்பட்டாலும், அந்த சிறுவனுடைய தந்தை என்னிடம் வந்து ஹோமியோபதி சிகிச்சை அளிக்கமுடியுமா என்று கேட்டார். கிட்டத்தட்ட 2 வருட சிகிச்சைக்கு பிறகு சிறுவன் முழுமையாக குணமடைந்துவிட்டான். இப்போது அந்த சிறுவன் வளர்ந்து படித்து முடித்துவிட்டு வேலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார். அதேபோல் 25 வருடங்களுக்கு முன்பு ஒரு 3 வயது குழந்தைக்கு சிறுநீரகத்தில் 3 கற்கள் இருப்பதாகக் கூறி சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். அந்த குழந்தைக்கு ஹோமியோபதி சிகிச்சையால் பரிபூரண சுகம் கிடைத்துவிட்டது. இப்போது அவரும் பரிபூரண குணமடைந்து வேலைக்கு செல்கிறார்.

அலோபதி போல் ஹோமியோபதியிலும் நவீன கருவிகள் வளர்ச்சியடைந்திருக்கிறதா?

மனிதனுக்கு வரக்கூடிய நோய்கள் என்பது பொதுவானது. ஆனால் அலோபதியில் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களான சிடி, எம்.ஆர்.ஐ போன்றவை நோயை கண்டறியும் தொழில்நுட்ப முறைகள். அதேபோல்தான் ஹோமியோபதியிலும் நோயை கண்டறிய அல்ட்ராசவுண்டு போன்றவற்றை நாங்களும் பயன்படுத்துவோம். இங்கும் நிறைய தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. உலகளவில் 80 நாடுகளுக்கும் மேல் ஹோமியோபதி மருத்துவமுறை கற்றுத்தரப்படுகிறது. கிட்டத்தட்ட 55-60 கோடி மக்கள் இந்த சிகிச்சைமுறையை எடுத்துக்கொள்கிறார்கள். உலகத்திலேயே ஆங்கிலமுறைக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிகிச்சைமுறை ஹோமியோதான்.


மாரடைப்புக்கு ஹோமியோ சிகிச்சைமூலம் சிறந்த தீர்வு உண்டு

ஹோமியோபதி சிகிச்சையில் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பக்கவிளைவுகள் மிகமிக குறைவு. அதனை பக்கவிளைவுகள் என்றுகூட சொல்லவேண்டாம், adverse reactions என்று சொல்லலாம். நாள்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆரம்பத்தில் சில adverse reactions ஏற்படலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.

இந்தியாவில் ஆங்கில மருத்துவம் அளவிற்கு ஹோமியோபதியை மக்கள் அதிகளவில் நம்பாததற்கு காரணம் என்ன?

இந்த சிகிச்சைமுறை போதிய அளவில் மக்களை சென்றடையவில்லை, அதற்கான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படவில்லை. அதேசமயம், மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் ஹோமியோதான் முதன்மை மருத்துவமாக இருக்கிறது. அடுத்துதான் ஆங்கில சிகிச்சை அல்லது ஆயுர்வேத முறைக்கு போகிறார்கள். நமது மாநிலத்தை பொருத்தவரை இங்கு கண்டறியப்பட்ட சித்த மருத்துவத்துக்கு ஹோமியோவைவிட சற்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஹோமியோ மருத்துவம் மக்களுக்கு அதிகம் தெரியவேண்டுமென்றால் அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தெந்த வயதினர் ஹோமியோ சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம்?

குழந்தை பிறந்த 2வது நாள் முதல் 90 வயது வரை யார் வேண்டுமானாலும் ஹோமியோபதி சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, paediatric என்று சொல்லக்கூடிய குழந்தைகளுக்கும் geriatric என்று சொல்லக்கூடிய வயது முதிர்ந்தவர்களுக்கும் இந்த சிகிச்சைமுறை சிறந்தது. ஹோமியோ சிகிச்சைக்கு வயது வரம்பு கிடையாது.


நாள்பட்ட ஆஸ்துமாவை ஹோமியோபதிமூலம் முழுமையாக குணப்படுத்தலாம் - மருத்துவர் ரவீந்திரன்

ஹோமியோபதியில் சிறப்பான மருத்துவம் எதற்கெல்லாம் அளிக்கப்படுகிறது?

சென்னை போன்ற கடற்கரை பகுதிகளில் தொடர் தும்மல், சைனசைட்டிஸ் மற்றும் ப்ராங்கைட்டிஸ் (bronchitis - மூச்சுக்குழாய் அழற்சி) போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அடுத்து ஜீரண மண்டலம் சம்பந்தப்பட்ட அஜீரணம் முதல் அல்சர்வரை அனைத்துக்குமே சிறந்த தீர்வு கிடைக்கும். முடக்குவாதம், தன்னுடல் எதிர்ப்பு சக்தி சார்ந்த பிரச்சினைகளுக்கும் ஹோமியோ சிகிச்சைதான் சிறந்தது.

ஆங்கில மருத்துவத்தில் அனஸ்தீசியா போன்று ஹோமியோபதியில் வலி நிவாரணியாக எதை பயன்படுத்துவீர்கள்?

ஹோமியோவில் வலி நிவாரணிகள் என தனிப்பட்ட மருந்துகள் இருக்கின்றன. வயிற்றுவலி, தலைவலி, மூட்டுவலி என ஒவ்வொரு வலிக்கும் தனி மருந்துகள் இருக்கின்றன. அனஸ்தீசியாவிற்கும் ஹோமியோவிற்கும் சம்பந்தம் கிடையாது.

வலியில்லாமல் சிகிச்சை என்பது ஹோமியோவில் சாத்தியமா?

சிறுநீரக கற்களால் வலி ஏற்பட்டு சிகிச்சைக்கு வருவார்கள். அதற்கு இளநீர் அல்லது தண்ணீரில் சொட்டு மருந்து கலந்து கொடுத்தால் உடனடியாக வலி போய்விடும். அதேபோல் மைக்ரேன் என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலிக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.


80% தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோ மருந்துகள்

ஆங்கில மருத்துவத்தில் பலனளிக்காத பட்சத்தில் ஹோமியோபதிக்கு சிலர் வருவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பீர்களா?

அதுதான் பெரும்பாலும் நடக்கும். டெங்கு, கடுமையான இரைப்பை குடல் அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு நோயின் தீவிரத்திற்கு ஏற்ப சிகிச்சை அளித்து குணப்படுத்தப்படும். அதுதான் நிறைய நேரங்களில் சவாலாகவும் இருக்கும்.

உள்ளுறுப்புகளில் ரத்தம் உறைதல் போன்ற பிரச்சினைகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கிறீர்கள்?

ITP என்று சொல்லக்கூடிய Idiopathic thrombocytopenic purpura என்ற நிலையில் ரத்தம் உறையாமல் ரத்தக்கசிவு ஏற்படும். இதற்கு ஹோமியோபதியில் ஒரே மருந்து கொடுத்து சரிசெய்யப்படும்.

சுலபமாக குணப்படுத்தக்கூடிய பிரச்சினைகளுக்குக்கூட ஆங்கில மருத்துவத்தை நாடுவது சரியா?

முன்பெல்லாம் குடும்ப மருத்துவர் என ஒருவர் இருப்பார். அவருடைய பரிந்துரையின்படி சிகிச்சை மேற்கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. எனவே என்ன பிரச்சினை என்றாலும் முதலில் பொதுநல மருத்துவர் ஒருவரை அணுகி அவரிடம் ஆலோசனை பெறவேண்டும். அந்த பொதுநல மருத்துவர் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா என எந்த சிகிச்சைமுறையை சார்ந்தவராகவும் இருக்கலாம். இதுதான் Primary care. அடுத்த சிகிச்சைநிலைதான் Secondary care. அதையும் தாண்டி சிறப்பு சிகிச்சை மருத்துவரை அணுகுவதுதான் Tertiary care. ஒரு நோயாளி எப்போதும் அடிப்படை சிகிச்சை குறித்துதான் யோசிக்கவேண்டும்.

Updated On 12 Aug 2024 6:32 PM GMT
ராணி

ராணி

Next Story