இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனிதன் இறப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் தற்போது பெரும்பான்மையான காரணமாக இருப்பது மாரடைப்பு என்று சொல்லலாம். அதுவும் குறிப்பாக, 30 வயதிற்குட்பட்ட இளம்வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது மிகவும் அதிகரித்திருக்கிறது. இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸால் (Institute for Health Metrics) வெளியிடப்பட்ட குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் (Global Burden of Disease) ஆய்வின்படி உலக அளவில் மாரடைப்பு விகிதத்தை காட்டிலும் இந்தியாவில்தான் அதிக மாரடைப்பு மரணம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? இதய பிரச்சினை உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? எதை தவிர்க்க வேண்டும்? என்பது குறித்து விளக்கியுள்ளார் இதயநோய் நிபுணர் சிசிலி மேரி மஜெல்லா.

தற்போது மாரடைப்பு என்பது அனைவருக்கும் சுலபமாக வரக்கூடிய ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்னென்ன?

சமீப காலமாக மாரடைப்பு இறப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதற்கு நமது உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது. அதுவும் குறிப்பாக தற்போதிருக்கும் இளைஞர்களிடம் சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஐ.டி போன்ற துறைகளில் பணிபுரியும் இளைஞர்கள் இரவு முழுவதும் கண்விழித்து வேலை செய்வது, தக்க வீட்டு உணவின்றி அதிகமாக வெளியில் சாப்பிடுவது, மைதா நிறைந்த உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்வது போன்றவை காரணமாக இருக்கிறது. அதிலும், கொரோனாவுக்கு பின்பு ரத்தம் உறையும் தன்மை அனைவருக்கும் கூடி இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் மாரடைப்பானது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும் ஏற்படுகிறது.


அதிகரிக்கும் மாரடைப்பு

மன அழுத்தம் மாரடைப்பு வருவதற்கு ஒரு காரணமாக இருக்கிறதா?

ஆம். முதலில் மன அழுத்தத்தினால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன் மூலம் மாரடைப்புகளில் ஒன்றான மன அழுத்த கார்டியோமயோபதி (Stress cardiomyopathy) / டகோட்சுபோ கார்டியோமயோபதி (Takotsubo cardiomyopathy) ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க எந்தெந்த பொருட்கள் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது?

பெரும்பாலும் அதிக எண்ணெய் தன்மையுள்ள உணவை தவிர்ப்பது சிறந்தது. அதிலும் குறிப்பாக 2 அல்லது 3 முறை சூடு செய்த எண்ணெயை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இப்படி 2 அல்லது 3 முறை எண்ணெயை சூடு செய்வதால் சிஸ் கொழுப்பு அமிலங்கள் (cis fatty acids) டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களாக (Trans-fatty acids) மாறி விடுகிறது. இதனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகி விடுகிறது. இதனாலேயே பெரும்பாலும் ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு வீட்டு உணவை சாப்பிட பரிந்துரைக்கிறோம்.


எண்ணெய் உணவுகள் மற்றும் புகைப்பழக்கம்

எண்ணெயைத் தவிர்த்து மைதா, அதிக உப்பு, அதிக சர்க்கரையை தவிர்ப்பது நல்லது. இதுதவிர புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும். பி.ம்.சி ஜர்னல் 2023 இன் அறிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் = 5% மாரடைப்பு அதிகரிப்பு (1 cigarette per day = 5% increase in heart attack) என்று வெளியிட்டிருக்கிறது. இதையெல்லாம் தவிர்ப்பதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

இதய பிரச்சினை உள்ளவர்கள் எந்தவிதமான உணவை உட்கொள்ள வேண்டும்?

இதய பிரச்சினை உள்ளவர்களுக்கு எல்.டி.எல் நிலை (கெட்ட கொலஸ்ட்ரால் லெவல்) 70 திற்கும் கீழ் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த கெட்ட கொலஸ்ட்ரால்தான் நம் இதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் சென்று படிமானம் ஆகிவிடுகிறது. நாம் மனச்சோர்வு அடையும்போதோ, அதிகமாக நடக்கும்போதோ, அதிக அல்லது கனமான வேலை செய்யும்போதோ இந்த படிமானமானது முறிந்து ரத்தத்தில் கலந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இளம் விளையாட்டு வீரர்கள் மாரடைப்பால் இறந்துவிட்டார்கள் என்று சொல்லப்படுவதற்கானபெரும்பாலான காரணமும் இதுவே.


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்

இதய பிரச்சினை உள்ளவர்கள் நன்கு பொறித்த உணவுகளைத் தவிர்க்கவும். அசைவம் சாப்பிடும்போது தோல் உரிக்கப்பட்ட சிக்கன் மற்றும் சிக்கன் குழம்பாக சாப்பிடலாம். ஒரு நாளைக்கு 4 அல்லது 5 டீஸ்பூன் எண்ணெய்த்தன்மை கொண்ட உணவை மட்டும் உட்கொள்வது சிறந்தது. இதுதவிர காய்கறிகள், கீரை வகைகள், பயறு வகைகளை அதிகம் உட்கொள்ளலாம்.

சிகரெட், மனச்சோர்வு தவிர்த்து இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வேறு காரணங்கள் என்னென்ன?

ஒரு சிலருக்கு மரபியல் ரீதியாகவே (Genetical) கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். இரண்டாவதாக போதைப் பழக்கம், அடுத்ததாக அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் உணவு முறை காரணமாக இருக்கிறது. சில இளைஞர்கள் திடீரென்று மாரடைப்பால் இறந்துவிடுவார்கள். அதற்குக் காரணம், ஹைபர்டிராபிக் தடுப்பு கார்டியோமயோபதி (Hypertrophic Obstructive Cardiomyopathy). ஹைபர்டிராபிக் தடுப்பு கார்டியோமயோபதி என்பது இருதயத்தில் ஏற்படும் தசை வீக்கம். இது இயற்கையாகவே சிலருக்குக் கூடுதலாக இருக்கும். சிறுவயதில் பெரிதும் காணப்படாது. ஆனால் வளர்ந்து இளம் வயது அடையும்போது அந்த வீக்கமானது அதிகரித்துவிடும். பெரும்பாலும் இளம் விளையாட்டு வீரர்கள் திடீரென்று மாரடைப்பால் இறப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது.


மரபணு பிரச்சினையும் மாரடைப்பும்

தனக்கு தசை வீக்கம் இருப்பது தெரியாத நிலையில், விளையாட்டு வீரர்கள் கபடி, கால்பந்து, கயிறு இழுத்தல் போன்றப் போட்டிகளில் பங்கேற்கும்போது, சாதாரணமாக 60 - 100 வரை துடிக்கும் இதயம், அந்த சமயத்தில் 200 வரை துடிக்கும். இந்த திடீர் அதிக இதய துடிப்பு மாற்றங்களால்தான் திடீரென்று இறந்துவிடுகிறார்கள்.

இதை தவிர ரத்தம் உறையும் தன்மை அதிகரித்தல் மற்றும் இதய - நுரையீரல் சுழற்சி என்று சொல்லக்கூடிய நுரையீரல் தக்கையடைப்பு (pulmonary embolism), இதயத்திற்கும் நுரையீரலுக்கும் நடுவிலிருக்கும் ரத்தக் குழாயில் (நுரையீரல் தமனிகள் - pulmonary arteries) ரத்தம் கட்டி அடைத்து விட்டால் திடீரென்று உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்ததாக இதய ரத்தக்குழாய் மாறுதலும் (Anomalous Origin) திடீர் மாரடைப்புக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

Updated On 25 Sep 2023 6:55 PM GMT
ராணி

ராணி

Next Story