இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கால மாற்றங்களாலும் தொழில்நுட்ப வளர்ச்சிகளாலும் தற்போது குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை என்று கூறும் அளவிற்கு பல சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போதிய சிகிச்சையின்றி பல உயிர்கள் பறிபோன புற்றுநோய்க்கு தற்போது பல சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புற்றுநோய்களுக்கு அளிக்கப்படும் இந்த சிகிச்சை முறைகளை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் பாலசுப்ரமணியம்.

`ரேடியோ தெரபி’ என்று அழைக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை என்றால் என்ன?

புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி என்று மூன்று வகை சிகிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் கதிர்வீச்சு சிகிச்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. கதிர்வீச்சு சிகிச்சையை அறுவை சிகிச்சைக்கு பின்னர் வழங்கலாம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் வெறும் கதிர்வீச்சு சிகிச்சையை மட்டும்கூட வழங்கலாம் அல்லது கீமோதெரபியுடன் சேர்த்து வழங்கலாம்.

கதிர்வீச்சு சிகிச்சையில் என்ன செய்யப்படும்?

கதிர்வீச்சு சிகிச்சையில் நேரியல் முடுக்கி (Linear Accelerator) என்ற கருவி இருக்கிறது. அந்த கருவிமூலம் மின்சாரத்தால் கதிர்வீச்சு உண்டாக்கி அதை, நோயாளிக்கு புற்றுநோய் பாதிக்கப்பட்ட திசுக்கள் மேல் செலுத்தி, பாதிக்கப்பட்ட செல்கள் அழிக்கப்படுகிறது. இது கதிர்வீச்சு சிகிச்சைமுறையாகும். கதிர்வீச்சு சிகிச்சையில் இரண்டு வகைகள் உள்ளன.


ரேடியோதெரபி சிகிச்சை

1. அண்மை கதிர்வீச்சு (Recent radiation) - கதிர்வீச்சை நேரடியாக நோயாளியின் உடலில் செலுத்தி புற்றுநோயின் திசுக்களை அழிப்பது

2. நேரியல் முடுக்கி (Linear Accelerator) - இதில் நோயாளிகளை படுக்கவைத்து மேலிருந்து கதிர்வீச்சை பாய்ச்சி திசுக்களை அழிப்பது

கதிர்வீச்சு சிகிச்சையினால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா?

எல்லா சிகிச்சை முறைகளிலும் பக்கவிளைவுகள் ஏற்படும். அதேபோலத்தான் கதிரியக்க சிகிச்சை முறையிலும் பக்க விளைவுகள் ஏற்படும். ஆனால் பெரிதளவில் இருக்காது. அப்படி பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் அதை சரி செய்துவிட முடியும். புற்றுநோயே குணமாகும்போது பக்க விளைவுகளை குணப்படுத்துவது பெரிய விஷயம் இல்லை.

உடலில் செலுத்தப்படும் கதிர்வீச்சுகளால் நரம்புகள் அல்லது திசுக்கள் பாதிக்கப்படுமா?

இப்போதெல்லாம் அப்படி இல்லை. துல்லியமான கதிர்வீச்சு (Precise Radiation) மற்றும் முறையான கதிர்வீச்சு (Conformal Radiation) கருவிகள் மூலம் எந்த திசுக்கள் பாதிப்படைந்துள்ளதோ அந்த திசுக்கள் மட்டுமே அழியும்படியாகவும், பக்கத்திலிருக்கும் திசுக்கள் எல்லாம் அழியாமல் பாதுகாப்பாக இருக்கும் படியாகவும்தான் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


துல்லியமான கதிர்வீச்சு சிகிச்சை

ரேடியோ தெரபி ஒரு சில புற்றுநோய்களுக்கு மட்டும் தீர்வாக இருக்கிறதா? அல்லது எல்லாவித புற்றுநோய்களுக்கும் தீர்வாக இருக்கிறதா?

கதிர்வீச்சு சிகிச்சை எல்லா புற்றுநோய்களுக்கான தீர்வாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மார்பக புற்றுநோய் அதிகரித்துள்ளது. மார்பக புற்றுநோய்க்கு முதலில் அறுவை சிகிச்சை செய்து, அந்தக் கட்டியை அகற்றிவிட்டு, பின்னர் கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கவேண்டும். ஆனால் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை வெறும் கதிர்வீச்சு சிகிச்சையின் மூலமே குணப்படுத்தலாம். இப்படி பல்வேறு புற்றுநோய்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது.

வேறு எந்த நோய்களுக்கு கதிர்வீச்சு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது?

எல்லா வகையான புற்றுநோய்க்கும் அந்தந்த நிலை, நோயின் தீவிரம் மற்றும் தன்மைக்கு ஏற்றாற்போல் கதிர்வீச்சு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் மரபணு பிரச்சினைகள் ஏற்படுமா?

இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் மிகவும் அரிதாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுவும் சிகிச்சை மேற்கொண்ட உடனே பாதிக்காது. கிட்டத்தட்ட 20 வருட கால இடைவெளிக்குப் பின்னரே பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதுவும் 100 சதவீதத்தில் 2 அல்லது 3 சதவீதம் பேருக்கு மட்டுமே இதற்கு வாய்ப்பிருக்கிறது.


கதிர்வீச்சு சிகிச்சையும் திசுக்களும்

அறுவை சிகிச்சையின்போது ஏற்படும் வலியைப்போல கதிர்வீச்சு சிகிச்சையிலும் வலி ஏற்படுமா?

ரேடியோ தெரபியில் கண்ணுக்குத் தெரியாத கதிர்கள்தான் இருக்கும். இதனால் வலி ஏற்படாது. அந்த கதிர்கள் உடலில் செயல்படத் தொடங்கி 4 அல்லது 5 வது வாரத்தில் ஒருசில விதமான எதிர்வினைகள் ஏற்படும். அப்போதுதான் கொஞ்சம் வலி இருக்கும். அந்த வலியையும் எளிதாக குறைத்துவிட முடியும்.

மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்னென்ன?

முதலாவதாக மார்புப்பகுதியில் சிறிய கட்டி தென்பட்டாலோ, ரத்தமோ அல்லது சீழோ கசிந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். முதற்கட்டத்திலேயே மருத்துவரை அணுகினால் எளிதில் குணப்படுத்திவிடலாம். அதற்கு முதலில் போதிய விழிப்புணர்வு தேவை. இரண்டாவதாக மார்பக சுய பரிசோதனை (Breast self-examination) உள்ளது. அதை மாதந்தோறும் பெண்கள் செய்துகொள்வது சிறந்தது. அதேபோல் வருடத்திற்கு ஒருமுறை மருத்துவரை அணுகி மார்பில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதனையும் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.

மூன்றாவதாக மேமோகிராம் (Mammogram) பரிசோதனை. இந்த மேமோகிராம் பரிசோதனையின் மூலம் ஆரம்பகால மார்பக புற்றுநோயை எளிதில் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை எளிதில் அளித்து பரிபூரணமாக குணப்படுத்திவிடலாம். ஆனால் இந்த மேமோகிராம் பரிசோதனையை 40 வயதுக்கு பின்னரே செய்யவேண்டும். அதுவும் குறிப்பாக 2 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆரம்பக்கட்டத்திலேயே மார்பக புற்றுநோய் அறியப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்படும்.


மார்பக புற்றுநோய் அறிகுறிகள்

பொதுவாக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு முன் திட்டமிடல் செய்வது போல கதிர்வீச்சு சிகிச்சைக்கும் முன் திட்டமிடல் உள்ளதா?

நிச்சயம் முன் திட்டமிடல் இருக்கிறது. சிகிச்சையின் முதற்படியாக சி.டி ஸ்கேன் (CT Scan) எடுக்கப்பட்டு, எந்த பாகத்தில் புற்றுநோய் இருக்கிறது என்பது தெளிவாகக் கண்டறியப்படும். அந்த சி.டி ஸ்கேனானது ‘சிகிச்சை திட்டமிடல் அமைப்பு’ (Treatment planning system) என்று சமீபத்தில் உபயோகிக்கக்கூடிய ‘கிரகண சிகிச்சை திட்டமிடல்’ (Eclipse treatment planning) அமைப்பில் செலுத்தப்பட்டு புற்றுநோய் பாதித்த பகுதி அதில் வரையப்படும்.

இப்படி புற்றுநோய் பாதித்த பகுதி வரையப்பட்ட பின்னர், சாஃப்ட்வேரானது பாதிப்படைந்த பகுதிக்கு மட்டும் கதிர்வீச்சு கிடைக்கும்படியாகவும், அருகிலிருக்கும் மற்ற திசுக்கள் பாதிப்படையாமல் இருக்கவும் சிகிச்சை திட்டமிடல் அமைப்பை சரியாக கணக்கிட்டுக் கொடுக்கும். இந்த திட்டம் அப்படியே இயந்திரங்களுக்கு அனுப்பப்படும். பின்னர் நோயாளியின் பெயரை அந்த திட்டத்தில் பதிவிட்டவுடன், அது சரியாக நோயாளியின் புற்றுநோய் தாக்கிய பகுதிக்கு சிகிச்சை அளிக்கும். எனவே இந்த கதிர்வீச்சு சிகிச்சை முறையில் சிகிச்சை திட்டமிடல் அமைப்பு என்பது மிக முக்கியப் பங்காற்றுகிறது.

கீமோதெரபி என்றால் என்ன?

கீமோதெரபி என்பது ஒரு மருந்து சிகிச்சை முறை. இந்த தெரபியில் உடலில் மருந்து செலுத்தப்பட்டு புற்றுநோய் பாதித்த பகுதி சரி செய்யப்படுகிறது. ஆனால் இதில் பக்கவிளைவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். சாதாரணமாகவே அடிக்கடி வாந்தி எடுப்பது, முடி உதிர்தல், ரத்த சோகை ஏற்படுதல் போன்ற பக்க விளைவுகள் சற்று அதிகமாகவே காணப்படும்.


கீமோதெரபியின் பக்கவிளைவுகள்

கீமோதெரபியின் பக்க விளைவுகளால் உடல் தோற்றமே மாறுகிறது என்று கூறப்படுகிறதே. இது உண்மைதானா?

ஆம். முதலில் கீமோதெரபி முடிந்தவுடன் உடல் தோற்றம் மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் தெரபி முடிந்த 6 மாத காலத்தில் உடல் தோற்றம் பழைய நிலைக்கு வந்துவிடும். அதனால் இத குறித்து வருத்தப்பட்டு கீமோதெரபி செய்வதை தவிர்ப்பது தவறானது. பக்கவிளைவுகள் ஏற்படுவது தற்காலிகமானதுதான். இதை வைத்து புற்றுநோய்களை குணப்படுத்தக்கூடிய கீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகளை மேற்கொள்ளாமல் இருப்பது புற்றுநோயைத்தான் தீவிரப்படுத்தும்.

அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி இது மூன்றும் எல்லாவித புற்றுநோய்களுக்கும் சிகிச்சையாக வழங்கவேண்டுமா?

ஒவ்வொரு புற்றுநோய்க்கும் ஒவ்வொரு வித சிகிச்சை அளிக்கப்படும். உதாரணத்திற்கு லுக்கேமியா (Leukemia), லிம்போமா (Lymphoma) போன்றவற்றிற்கு வெறும் கீமோதெரபி மட்டுமே போதுமானது. ஆரம்பக்கட்ட புற்றுநோய்களுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். நடுத்தர நிலையிலுள்ள புற்றுநோய்களுக்கு மூன்று சிகிச்சை முறையும் வழங்கப்படும். மல்டிபிள் மைலோமா (Multiple myeloma), ரத்த சம்பந்தப்பட்ட புற்றுநோய்களுக்கெல்லாம் கீமோதெரபிதான் முக்கியமான சிகிச்சையாக இருக்கிறது.

Updated On 18 Sep 2023 6:53 PM GMT
ராணி

ராணி

Next Story