இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மனசோர்வு, மன அழுத்தம், கவலை போன்ற உளவியல் சார்ந்த வார்த்தைகள் தற்போது பலராலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இப்படி பயன்படுத்தும் வார்த்தைகளின் முழுமையான அர்த்தம் என்ன? அதனை எங்கு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்த புரிதல் பலருக்கும் இருப்பதில்லை. இதுபோன்று அர்த்தங்களே தெரியாமல் வார்த்தைகளை பயன்படுத்துவது மிகவும் தவறு என்கிறார் உளவியல் நிபுணர் சரண்யா ஜெயக்குமார். மேலும் மனசோர்வு குறித்த பல்வேறு தகவல்களையும், தனிமை மற்றும் மிகை சிந்தனையின் விளைவுகளையும் பற்றி தெளிவாக விளக்குகிறார்.


மனச்சோர்வின் அறிகுறிகள் (சித்தரிப்புப் படம்)

மனச்சோர்வு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் எவ்வாறு இருக்கும்?

மனச்சோர்வு என்பது ஒரு மன நோய். இதன் அறிகுறிகள் கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று மாதங்கள் சோகத்திலும், அழுகையிலுமே மூழ்குவது, வெளிச்சத்தை வெறுத்து முழுநேரமும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, தனக்குரிய பணியைச் செய்வதில் ஆர்வமின்மை, பிடித்தமான வேலையை செய்வதில்கூட ஆர்வமில்லாத நிலை போன்றவையும் மனச்சோர்வுக்கான முக்கிய அறிகுறிகள். இதில் குறிப்பாக, பெண்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டால் நன்றாக வீட்டில் சமைத்து பரிமாறக்கூடிய பெண்களும்கூட சமைக்க முன்வர மாட்டார்கள். தங்களை அழகுபடுத்திக்கொள்வதில் அதீத ஆர்வம் கொண்டவர்களும் இந்த மனச்சோர்வு காரணமாக தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலும்கூட ஆர்வம் காட்டுவதில்லை. குறிப்பாக, அதிகமாக தூங்குவது மனச்சோர்வு ஏற்பட்ட பெண்களிடையே காணப்படும் பொதுவான அறிகுறியாகும்.


சோகம் vs மனச்சோர்வு (சித்தரிப்புப் படம்)

சோகம் மற்றும் மனச்சோர்வுக்கு இடையில் இருக்கும் வேறுபாடுகள்?

சோகம் மற்றும் மனச்சோர்வு இரண்டுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. அதாவது கணவன் - மனைவி சண்டையில் இருவரும் அழுதுகொண்டு இரண்டு நாட்கள் பேசாமல் இருப்பது மனச்சோர்வின்கீழ் வருமா என்றால் நிச்சயம் இல்லை. அதன் பெயர் சோகம். மனச்சோர்வின் ஒரு பகுதியே சோகம் என்றுகூட சொல்லலாம். மனச்சோர்வு என்பது முழுவதுமாக மாறுபட்ட ஒன்று. அதன்மீது சரிவர கவனம் செலுத்தி சிகிச்சை பெறாவிட்டால், தனியொரு மனிதரை தற்கொலை வரை தள்ளிவிடும்.


மன அழுத்தத்திற்கு சிகிச்சை (சித்தரிப்புப் படம்)

மனச்சோர்விலிருந்து வெளிவருவதற்கான வழிமுறைகளும், சிகிச்சைகளும்...

தனக்கு மனச்சோர்வு இருக்கிறதா இல்லையா என்பதனை முதலில் ஒருவர் சரிவர தெரிந்துகொண்டு மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவத்தில் ஏராளமான வழிமுறைகள் உள்ளன. அதாவது மனச்சோர்விற்கு முறையான சிகிச்சைபெற மனநல நிபுணர் அல்லது உளவியலாளரை அணுகி ஆலோசனை பெறலாம். மனநல நிபுணர்கள் (psychiatrist) மனச்சோர்வுக்கு முதலில் பரிசோதிப்பர். பின்னர் அதிலிருந்து வெளிவர உதவும் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தரப்படும். அதனை சரிவர மருத்துவர் கூறும் கால அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதுவே உளவியல் நிபுணர்களிடம் (psychologist) மனசோர்வுக்கு சிகிச்சைக்கு செல்லும்போது முதலில் பரிசோதனை செய்து, பின்னர் உளவியல் ரீதியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பர். அதாவது அறிவாற்றல் நடத்தை தெரபி (Cognitive behavioral therapy) என்று சொல்லக்கூடிய ஒருவரின் மனதில் உள்ள பிரச்சினைகள், குழப்பங்களை கேட்டு ஆராய்ந்து பன்னிரண்டு முதல் பதினைந்து சிட்டிங்குகள் வரை சிகிச்சை அளிக்கப்படும். இப்படி நோயாளிகளை நிரந்தரமாக மனச்சோர்விலிருந்து மீட்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. மருத்துவரை அணுகாமலேயே தானாகவே சரி செய்துகொள்ள வேண்டும் என எண்ணினாலும் அதுவும் சாத்தியமே.இருட்டறையிலிருந்து வெளியேறி, பிற நண்பர்களோடு கலந்து சகஜமாக உரையாடிப் பேசுவதன்மூலம் மனச்சோர்வில் இருந்து எளிதில் வெளிவரலாம்.


தனிமையை நாடுதல் (சித்தரிப்புப் படம்)

தனிமை என்பது அனுபவத்தை தருகிறதா? ஆபத்தை தருகிறதா?

இது முழுக்க முழுக்க தனிநபரின் ஆளுமைத்திறனை பொருத்தது. பொதுவாக இந்த ஆளுமையை (personality) இரண்டாகப் பிரிக்கலாம். உள்முக சிந்தனையாளர் (introvert) மற்றும் சகஜமாக பழகக்கூடியவர் (extrovert) என்று வகைப்படுத்துகின்றனர். உள்முக சிந்தனையாளர் ஒரு சில விஷயங்களை தனிமையிலேயே இருந்து அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வை தாமாக அறிந்துகொள்வர். ஆனால் சகஜமாக பழகக்கூடியவர்கள் அதிகம் பிறரோடு கலந்து ஆலோசித்து தீர்வை அறிவர். இரண்டுமே நல்லதுதான் என்றாலும், தனிமையில் இருந்து பிறரிடம் கலந்து ஆலோசிக்காமல் இருப்பது நல்லதல்ல. இதற்கு ஓர் எடுத்துகாட்டு: ஆன்லைன் கேமிங் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள், ஏதோ ஒரு விதத்தில் ஏமாற்றம் அடைந்தவர்கள், சைபர் கிரைம் குற்றங்கள் போன்றவையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இதனாலேயே அவர்கள் மனதளவில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அவ்வாறில்லாமல் வெளிவந்து சகஜமாக பிறரிடம் பேசி ஆலோசிக்கும் நிலையில் பலவிதமான ஆபத்துகளிலிருந்தும் அவர்கள் தப்பிக்க முடியும்.


அதீத சிந்தனை (சித்தரிப்புப் படம்)

மிகை சிந்தனையிலிருந்து எவ்வாறு தப்பிப்பது?

மிகை சிந்தனையே பெரும்பாலான உளவியல் ரீதியான பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. ஒரு விஷயத்தை நினைத்து மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருப்பது எந்த ஒரு தீர்வையும் அளிக்காது. அது மேலும் பலவிதமான பிரச்சினைகளுக்கே வழிவகுக்கும். குறிப்பாக, ஆண்களைவிட மாதவிடாய் முடிந்த பெண்கள் அதிகளவில் மிகை சிந்தனையில் இருப்பர். இதற்கு ஹார்மோன் மாற்றங்களே மூலக் காரணமாக இருக்கிறது. இந்த மிகை சிந்தனைக்கு மருத்துவத்தில் 'வொரி ட்ரீ' (worry tree) என்று சொல்லக்கூடிய முறையில் சிகிச்சை அளிப்பர். அதாவது நோயாளிகள் பிரச்சினைகளை மட்டுமே நினைத்து சிந்தித்துக்கொண்டே இருக்காமல், அதற்கான தீர்வை எப்படி எளிதில் எட்டுவது? என்பதை அவர்களை ஆராய்ந்து அறிந்துகொள்ள வைப்பதே இதன் நோக்கம். சிகிச்சையின் இறுதியில் நோயாளிகள் மிகை சிந்தனையினால் ஏற்பட்ட அநாவசிய மன உளைச்சலை உணர்ந்து அதிலிருந்து வெளிவருவர்.


இன்றைய தலைமுறை காதல் (சித்தரிப்புப் படம்)

இந்தக் கால காதல் குறித்து உங்கள் கருத்து என்ன?

70-கள் மற்றும் 80- களில் இருந்த காதல் இப்பொழுது இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. காலங்கள் செல்லச் செல்ல காதலுக்கும் உறவுமுறைகளுக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவங்களும் குறைந்து கொண்டே வருகிறது என்பதுதான் உண்மை. இன்றைய தலைமுறையினர் அதிகம் உடல் சார்ந்த தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் காதலை பற்றிய கருத்தே வேறுமாதிரியாக இருக்கிறது. ஒரு நபரைப் பற்றி முழுவதுமாக அறியாமல் ஒரு உறவுமுறைக்குள் செல்வது சரியா என்று கேட்டால், பெரும்பாலானோர், உடல் சார்ந்த உறவு நிலையில் இருப்பதுதான் உண்மையான காதல் என்கிறார்கள்.

இதிலிருந்து இன்றைய இளம்தலைமுறையினர் உறவுகளுக்குள் இருக்கும் வரம்புகள் தெரியாமல் இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதேபோல், இன்றைய தலைமுறையில் உள்ள பெற்றோர்களுக்கும் முந்தைய தலைமுறை பெற்றோர்களுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி ஆண்களும் சரி, பெண்களும் சரி; கைப்பேசிமூலம் பரிமாறிக்கொள்ளும் புகைப்படங்களிலும், குறுஞ்செய்திகளிலும் அதிகளவில் காமம் கலந்திருப்பது தரவுகளின்மூலம் தெரியவருகிறது.

Updated On 25 Sep 2023 5:50 AM GMT
ராணி

ராணி

Next Story