இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கொடைக்கானல், தூத்துக்குடி, தஞ்சாவூர் என தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் ஒரு கும்பல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், மோசடியில் சிக்கி பணத்தை இழந்த பெரும்பாலானோர் படித்தவர்கள். பத்தியை படித்தால் போதும், பணம் வரும் என்ற ஆசை வார்த்தையை நம்பி, லுக் கல்ச்சர் மீடியா என்ற செயலியில் பணம் செலுத்தியுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள். பின்னர் அனைத்தும் மோசடி என தெரியவந்த நிலையில், தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு பாதிக்கப்பட்டோர் கண்ணீருடன் காவல் துறையிடமும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மோசடியில் கொடைக்கானலில் மட்டும் சுமார் 360 பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கோடிக்கணக்கில் பணம் ஏமாற்றப்பட்டுள்ளது. இந்த மர்ம கும்பல் மோசடியில் ஈடுப்பட்டது எப்படி? எந்த சந்தேகமும் எழாமல் இத்தனை பேர் அவர்கள் கேட்ட பணத்தை கட்டி வந்தது எப்படி? என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

படித்தால் போதும், பணம் வரும் எனக்கூறி மோசடி

கதை படித்தால் காசு வருமா? மோசடி நடந்தது எப்படி?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின் மேரி. இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை சேர்ந்த அமுதா என்பவர் மூலம் லுக் கல்ச்சர் மீடியா என்ற செயலியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அமுதா மாநிலத்தின் பல பகுதிகளில் இந்த செயலி தொடர்பாக கூட்டம் ஒன்றினைக் கூட்டி, அதில் செயலி குறித்த தகவல்களை தெரிவித்துள்ளார். புத்தகம் மட்டும் படித்தால் போதும், காசு வரும் எனக் கூறியதால் பலரும் இதில் இணைந்துள்ளனர். செயலியில் இணைந்தவர்களுக்கு என ஒரு வாட்ஸ்-ஆப் குழு உருவாக்கப்பட்டு அதில் தகவல்கள் பரிமாறப்பட்டு வந்துள்ளன. மேலும் செயலிக்கு ஆள் சேர்த்துவிட்டால் அதற்கும் பரிசுகள் வழங்கப்படும் என வாட்ஸ்-ஆப் குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 பேரை சேர்த்துவிட்டால் ஸ்பீக்கர், ப்ளூடூத் போன்ற பொருட்களும், 100 பேரை சேர்த்தால் ஸ்கூட்டி போன்ற பொருட்களும், எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பரிசுப் பொருட்கள் நேராக வழங்கப்படாமல், அதனை சம்பந்தப்பட்டவர்கள் வாங்கிக் கொண்டு அதற்கான பணம் கட்டிய ரசீதை வாட்ஸ்-ஆப்பில் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பின்னர் அதற்கான பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி பலரும் தங்களுக்கு தெரிந்தவர்களை சேர்த்துவிட்டுள்ளனர்.

செயலிக்குள் நுழையும்போது ஆங்கில நாவலின் பிடிஎஃப் இருந்துள்ளது. ஒரு பாராவை படிப்பதற்கு 20 நொடிகள் அவகாசம் கொடுத்துள்ளனர். அதை படிக்க வேண்டும் என்ற அவசியல் இல்லை. அந்த இருபது நொடிகள் ஓடினால் போதுமாம். ஆனால் முதலில் நாம் பணம் கட்ட வேண்டுமாம். அதன்பின்தான் படிப்பதற்கு ஏற்றவாறு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லுக் செயலியில் (Look App) ரூ.2,250, ரூ.6,600, ரூ.20,300, ரூ.70,000 என பல திட்டங்கள் இருந்துள்ளன. அதில் தங்களது வசதிக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்து பலரும் பணம் செலுத்தி, அவர்கள் கொடுக்கும் நாவல்களை படித்து வந்துள்ளனர். அவர்கள் அந்த நாவல்கள், புத்தகங்களை படிப்பதற்கு ஏற்றவாறு அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.700 வரை கிடைத்துள்ளது. ஒரு கட்டத்தில் ஆள் அதிகமாக சேர சேர வாரத்திற்கு ஒருமுறை மட்டும்தான் பணம் வரும் எனக் கூறியுள்ளனர். அதுவும் வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் பணம் எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

லுக் கல்ச்சர் செயலியில் பணம் செலுத்திய அனைவரின் வங்கி கணக்குகளும் முடக்கம்

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது எப்படி?

புதிதாக சேருபவர்களிடம் ஒரே யுபிஐ ஐடியை கொடுக்காமல், நான்கைந்து வேறு வேறு யுபிஐ ஐடிகளை கொடுத்து தாங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத் தொகையினை செலுத்த கூறியுள்ளனர். இவ்வாறு அந்த வாட்ஸ்-ஆப் குழுவில் இருந்தவர்களின் யுபிஐ ஐடியே, மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு குழுவில் இருப்பவர்களின் வங்கிக் கணக்குக்கு செல்லும் பணத்தை மீண்டும் வேறு ஒரு யுபிஐ ஐடி கொடுத்து அதில் அனுப்ப கூறியுள்ளனர். ஒருவரிடம் இருந்து பணம் பெறுவதற்கு வேறு ஒருவரின் வங்கிக் கணக்கை கொடுப்பார்கள். எதிர் முனையில் உள்ளவரும் கம்பெனி பணம் கொடுத்ததாக நினைப்பார்கள். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதாக பணம் செலுத்தியவர் புகார் கொடுக்கும்போது, யாருடைய வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டதோ அந்தக் கணக்கு முடக்கப்படுகிறது. இவ்வாறுதான் இதில் பணம் செலுத்திய அனைவரின் வங்கிக் கணக்கும் தற்போது முடக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், மாத சம்பளம், அரசிடமிருந்து வரும் உதவித்தொகை என அனைத்து வரவும் இந்த செயலிக்கு கொடுத்த வங்கிக்கணக்குக்குத்தான் செல்கிறது என பாதிக்கப்பட்ட பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனுவில் கூறியது என்ன?

லுக் செயலி மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, திண்டுக்கல் காவல் நிலையத்தில் வியாழக்கிழமையன்று (ஜூலை 10) பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், “தூத்துக்குடி, விளாத்திகுளத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் மூலமாக எங்களுக்கு செயலி அறிமுகம் ஆனது. அதில் 2,250 ரூபாய் முதல் 2,24,000 ரூபாய் வரை திட்டங்கள் இருப்பதாகக் கூறினார். அவரை நம்பி முதல் மாதம் பணம் செலுத்திய நிலையில், எங்களுக்கு சரியாக தினந்தோறும் படிப்பதற்கு ஏற்ப பணம் வந்தது. இதை நம்பி எங்களுக்கு தெரிந்தவர்களை செயலியில் சேர்த்தோம். தற்போது லுக் கல்ச்சர் மீடியா செயலி தென்படவில்லை. எங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டன. பணம் கொடுத்தவர்கள் தகராறு செய்கின்றனர். லுக் செயலியை அறிமுகம் செய்து வைத்த அமுதா மூலம் நாங்கள் ஏமாந்துவிட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியில் பாதிக்கப்பட்ட பெண் ரோஸ்லின் மேரி (வலது)

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ரோஸ்லின் மேரி கூறியதாவது;

"தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3000 பேர், லுக் ஆப் கல்ச்சர் மீடியா என்ற செயலி மூலம் ரூ.5 கோடி வரை இழந்துள்ளனர். கதை படித்தால் காசு கிடைக்கும் எனக்கூறி, சிறிய தொகையை பெற்று, பெரிய தொகையை முடக்கியுள்ளனர். அந்த செயலியில் பணம் கட்டிய அனைவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. எங்களது வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படும் அனைத்து நிதிகளும் அவர்களிடம்தான் சென்றுக் கொண்டிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.1000 உட்பட அந்த வங்கிக் கணக்குக்குத்தான் செல்கிறது. இதை எப்படி நிறுத்துவது என தெரியவில்லை. படித்தவர்கள்தான் இந்த மோசடியில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். எல்லோரும் படித்தவர்களாக இருந்தாலும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது குறித்து தெரிந்து கொள்ள முயன்றபோது யுபிஐ ஐடியை வைத்து இவ்வளவு பெரிய மோசடி நிகழ்த்தப்பட்டது தெரியவந்தது.

ஏதோ ஒரு செயலியில் போய் தெரியாமல் இதை நாங்கள் செய்யவில்லை. தெரிந்த ஒரு பெண் மூலம்தான் இதை செய்தோம். அமுதாதான் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி இந்த செயலி குறித்த தகவல்களை அனைவருக்கும் தெரிவித்தார். ஆனால் கடைசியில் இப்படி ஆகிவிட்டது. இப்போதுவரை இதுகுறித்து எந்த பதிலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. முதலமைச்சருக்கும் இதுதொடர்பாக புகார் மனு அளித்துள்ளோம். கன்னியாகுமரி மட்டுமல்ல தூத்துக்குடி, திருநெல்வேலி, மன்னார்குடி, தஞ்சாவூர் என எல்லா மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். எல்லோருடைய தகவல்களும் எங்களிடம் உள்ளது. அவர்கள் மூலம் இன்னும் எத்தனை பேர் இதில் பாதிக்கபட்டுள்ளனர் என தெரியவில்லை. நிறைய பேர் இதனை வெளியே சொல்ல முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் பெண்களாக இணைந்து இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வந்துள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து எங்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும்.


யுபிஐ ஐடி-கள் மூலம் அரங்கேற்றப்படும் மோசடிகள்

ஒருவர் 10 பேரை சேர்த்தால் ஸ்பீக்கர், ப்ளூடூத் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. இதை பார்த்து பலரும் ஆட்களை சேர்க்க, எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பரிசுகளை கொடுக்க ஆரம்பித்தனர். முதலில் எங்களுடைய கைக்காசை போட்டுதான் வாங்கிக்கொள்ள வேண்டும். அதற்கான பண ரசீதை காண்பித்தால் பணம் போட்டுவிடுவர். 100 பேரை சேர்த்தால் இருசக்கர வாகனம் தருவதாக கூறினர். அப்படி சேர்த்துவிட்டப்பிறகு வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் போட்டனர். அதில் பத்தாயிரம் வரி என அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். நாங்கள் ரூ. 70 ஆயிரம்தான் எடுக்க முடியும். மீதி பணத்தை பின்னர்தான் எடுக்க முடியும். என்னுடைய யுபிஐ ஐடியை வாங்கிக் கொண்டனர். அதனை வேறு ஒருவருக்கு அனுப்பி, அதில் பணம் செலுத்த கூறுவர். அந்தப் பணம் எனது கணக்கிற்கு வந்ததும், என்னிடம் ஒரு யுபிஐ ஐடியை கொடுத்து பணத்தை அதற்கு மாற்ற சொல்வர்.

அப்படி செய்யும்போது ரூ.250 மதிப்புள்ள கூப்பன் கார்டும் கொடுப்பர். ஏமாற்றப்பட்டோம் என தெரிந்து நாங்கள் பணம் அனுப்பிய யுபிஐ ஐடியை கண்டுபிடித்து பார்த்தபோதுதான் இந்த மோசடி தெரியவந்தது. இதில் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்து 24 ஆயிரம். கன்னியாகுமரியில் 2 பேர் இந்த தொகையை கட்டியுள்ளனர். ரூ.70,000, ரூ.20,300 எனவும் பிரிவுகள் உள்ளன. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கே ரூ.1 கோடி வரும் அளவிற்கு சலுகைகள் கொடுத்து பணம் வாங்கிவிடுவர். கொடைக்கானலில் மட்டும் 364 பேரின் ரூ.77 லட்சம் பணம் முடங்கியுள்ளது. திண்டுக்கல் எஸ்பியிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளோம். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தனித்தனியாக முதலமைச்சருக்கும் புகார் மனு அளித்துள்ளோம். முதலமைச்சர் தலையிட்டால் இதற்கு முழு தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த செயலியால் பணத்தை இழந்துள்ள ரோஸ்லின் மேரி, கடந்த டிசம்பர் மாதம் இதில் இணைந்துள்ளார். முதல் மூன்று மாதங்களுக்கு சரியாக பணம் வந்து கொண்டிருக்க, மார்ச் முதல் பணம் வருவது நின்றுள்ளது. பின்னர் வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுதொடர்பாக விசாரிக்க தொடங்கியுள்ளார். அப்போதுதான் இப்படி ஒரு மோசடி அரங்கேறியுள்ளதை கண்டறிந்துள்ளார். பாதிக்கப்பட்ட பலரிடம் கேட்கும்போது, புத்தகம் படிக்கும் பணி என்பதால் யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என நினைத்தோம். ஆரம்பத்தில் பணம் வந்ததால் சந்தேகம் வரவில்லை என தெரிவிக்கின்றனர். மேலும் இதுதொடர்பாக இந்த செயலியை அறிமுகப்படுத்திய அமுதா என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “அவர்களைப் போல நானும் ஏமாந்துவிட்டேன். கடந்த அக்டோபர் மாதம் செயலியில் இணைந்தேன். எனக்கு டார்லேன் என்பவர் வழிகாட்டினார். இதன் தலைமை அலுவலகம் புனேவில் உள்ளதாகக் கூறினார். வாட்ஸ்-ஆப்பில் மட்டும்தான் உரையாடல் நடக்கும்" எனத் தெரிவித்தார். இந்த செயலி நிறுவனத்தினர் மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தி ஆட்களைச் சேர்த்ததாகவும் அமுதா கூறியுள்ளார். கூட்டத்திற்கான செலவுகளை அவர்களே ஏற்றுக்கொண்டு அதற்கான பணத்தையும் யுபிஐ ஐடி ஒன்றின் மூலம் அனுப்பிவிடுவர் எனவும் அமுதா தெரிவித்துள்ளார்.

இதுபோல தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் அவ்வப்போது பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2012-ல் கூட ஈமு கோழி வளர்ப்பு எனக்கூறி தமிழ்நாட்டில் மிகப்பெரிய மோசடி நிகழ்ந்தது. அதற்கு பின்னும் செயலியில் விளம்பரம் பார்த்தால் காசு வரும் என்பது போன்ற மோசடிகள் அரங்கேறியது. இதனைப் பார்த்தும் கூட பணத்தாசையால் பலரும் இதுபோல ஏமாறுகிறார்கள்.

சமூக வலைதளங்கள் மூலம் அதிகரிக்கும் மோசடிகள்

போன்சி திட்டம்

மோசடியில் பல வகைகள் உள்ளன. இந்த மோசடி, போன்சி திட்டத்தின் கீழ் வரும். அதாவது புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பெரும் பணத்தை பழைய முதலீட்டாளர்களுக்கு லாபம் அல்லது சம்பளம் எனக்கூறி கொடுப்பர். அவர்கள் அதைப்பார்த்து ஆள் சேர்த்துவிட இந்த மோசடி தொடரும். ஒரு கட்டத்தில் யாரும் சேரவில்லை என்றால் முழுவதுமாக ஏமாற்றிவிட்டு ஓடிவிடுவர். உதாரணமாக முதல் மாதத்தில் 10 பேர் தலா ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறார்கள் என்றால், ரூ.10 லட்சம் கிடைக்கும். அடுத்த மாதம் ஐந்து பேர் முதலீடு செய்தால், அவர்களின் பணத்தை லாபம் அல்லது சம்பளம் எனக்கூறி பிரித்து முதலில் முதலீடு செய்தவர்களுக்கு கொடுப்பர். இந்த நிலை தொடர ஒருக்கட்டத்தில் மக்கள் மொத்த தொகையையும் கேட்க ஆரம்பித்தால், மொத்தமாக ஏமாற்றிவிட்டு அந்த நிறுவனத்தை அல்லது செயலியை மூடிவிட்டு ஓடிவிடுவர்.

போன்சி திட்டத்தை அறிவது எப்படி?

  • அதிக லாப வாக்குறுதி,
  • சந்தேகத்திற்கிடமான பயிற்சி கூட்டங்கள், மின்னஞ்சல்/வாட்ஸ்-ஆப் விளம்பரங்கள்,
  • உறுப்பினர் சேர்த்துவிட்டால்தான் பணம்,
  • உறுப்பினர்களை சேர்த்துவிட்டால் அதிக கமிஷன்...

போன்ற வாக்குறுதிகள் அனைத்தும் மோசடியை குறிப்பவையே. ஆகையால் பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற பொய் அல்லது ஆசை வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழப்பதை தவிர்க்கலாம்.

Updated On 15 July 2025 12:53 AM IST
ராணி

ராணி

Next Story