
அண்மைக்காலமாகவே கள்ளக்காதல், திருமணத்தை மீறிய உறவால் அரங்கேறும் கொலைக்குற்ற சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. இந்நிலையில் குன்றத்தூரில் உல்லாச செலவுக்காக கள்ளக்காதலனை சொந்த வீட்டிற்கே வரவழைத்து பெண் ஒருவர் நகைதிருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், 88 வயது மாமியரை கட்டிப்போட்டு இந்தக் குற்றச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மாஸ்டர் பிளான் போட்ட காதலிக்கு வயதோ 59, காதலனுக்கு வயதோ 35! இவர்கள் போலீசில் சிக்கியது எப்படி? இதுபோன்ற கள்ளக்காதல் குற்றங்களுக்கு இந்தியச் சட்டம் கூறும் தண்டனை என்ன? என்பது குறித்து இங்கு காண்போம்.

59 வயது காதலியின் பேச்சைக்கேட்டு நகையை திருடி தலைமறைவான 35 வயது காதலன்!
காதலியின் மாஸ்டர் பிளான்... சிக்கிய கள்ளக்காதலன்...
சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான குன்றத்தூரின் மணிகண்டன் நகர், காந்திச் சாலையை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா (59). ராஜேந்திரன், அபிதா, ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள் ஆகிய மூன்று பேரும் ஒரேவீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்தவாரம் ராஜேந்திரன் வேலை விஷயமாக வெளியூரில் தங்கியுள்ளார். ராஜேந்திரன் வீட்டில் இல்லாதநேரம், மர்மநபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்து அபிதா மற்றும் வள்ளியம்மாளை கட்டிப்போட்டு 11 பவுன் தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான். சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது கை, கால்களை கட்டிப்போட்டு கொள்ளையடித்தது வேறு யாருமில்லை, அபிதாவின் இளம்வயது கள்ளக்காதலன்தான் என விசாரணையில் தெரியவந்தது.
அபிதாவிற்கும், ராஜேந்திரனுக்கும் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்கு அடிக்கடி சென்றுவருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் அபிதா. அப்போது 35 வயதுடைய திருநெல்வேலியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இப்படி அடிக்கடி சந்தித்துக்கொள்ளும்போது அபிதாவிடம், அந்த வாலிபர் பணம் கேட்டுவந்துள்ளார். அப்போதெல்லாம் என்னிடம் பணம் இல்லை, ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது என அபிதா கூறிவந்துள்ளார். இதனால் நகைகளை திருட இருவரும் திட்டம் போட்டு தற்போது கையும், களவுமாக சிக்கியுள்ளனர். ஆனால் இது முதல்முறையல்லவாம். முன்னரும் இதுபோல நகைபறிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் அதுகுறித்து போலீசில் புகாரளிக்க வேண்டாம் எனக்கூறி சமாளித்து, காதலனை காப்பாற்றியுள்ளார் அபிதா. பலநாள் திருடன் ஒருநாள் சிக்குவான் என்பதுபோல இந்தமுறை மாட்டிக்கொண்டார்.

59 வயது காதலியின் மாமியாரை கட்டிப்போட்டு நகைகள் திருட்டு!
போலீசுக்கு சந்தேகம் எழுந்தது எங்கே?
புகாரின் அடிப்படையில் வீட்டிற்கு வந்து விசாரித்த குன்றத்தூர் போலீசார், வள்ளியம்மாளின் உடலில் மட்டும் காயங்கள் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் விசாரணையின்போது அபிதா முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததை வைத்து அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போதுதான் கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு இந்த திருட்டு வேலையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த வாலிபர் அபிதாவின் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி, நகையை பறித்துள்ளார். பின்னர் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு செல்லுமாறு அபிதா கூறியதையடுத்து, அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டுவிட்டு காதலன் தப்பிவிட்டார்.

மனைவியுடன் சவுரப் ராஜ்புத் (வலது) - மனைவியுடன் ராஜா ரகுவன்ஷி ( இடது)
அதிகரிக்கும் கள்ளத் தொடர்புகள்...
அண்மைக் காலமாகவே செய்தித்தாள்களிலும், ஊடகங்களிலும் கள்ளத் தொடர்பினால் நடைபெறும் குற்றங்கள் குறித்த செய்திகளை அடிக்கடி பார்க்க முடிகிறது. திருப்தியில்லாத திருமண வாழ்க்கை, விருப்பமில்லாதவர்களோடு திருமணம், வீட்டின் அழுத்தத்தால் திருமணம், வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க முடியாதது, குழந்தைகள் பிறக்கும்போது முன்னுரிமை மாறுவது, கருத்து வேறுபாடு, திருப்தி இல்லாத உடலுறவு, நிதி ரீதியாக பங்களிப்பு இல்லாதது போன்ற பல காரணங்கள் கள்ளத் தொடர்புக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. இப்படி பல காரணிகள் கள்ளத்தொடர்புக்கு வழிவகுக்கின்றன எனக் கூறினாலும், அதனால் ஏற்படும் குற்றங்கள் என்பவை ஒப்புக்கொள்ள முடியாதவையே.
கள்ள உறவில் இருக்கும் சம்பந்தப்பட்ட இருவரால் கொலை, கடத்தல், மிரட்டல், தற்கொலை என மற்றவர்களுக்கு பிரச்சனை வராதவரையில் அந்த உறவால் பாதிப்பில்லை. ஆனால் தற்போதெல்லாம் அப்படி இல்லை. கள்ளத்தொடர்பினால் தங்களுடன் வாழ்ந்துவரும் கணவன், மனைவியை கொடூரமாக கொலைசெய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மீரட் சவுரப் ராஜ்புத் கொலை, மேகாலயா ராஜா ரகுவன்ஷி கொலை போன்றவற்றை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அதுபோல இந்தாண்டே பல்வேறு கொடூரமான கொலைகள் கள்ளத்தொடர்பினால் அரங்கேறி உள்ளன. மேலும் கள்ளக்காதலுக்காக பெற்றத்தாயே குழந்தைகளை கொல்வதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
கள்ளத்தொடர்புக்கு தண்டனை கிடையாதா?
இந்திய சட்டத்தின்படி கள்ளத்தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு எந்த தண்டனையும் அளிக்க இயலாது. ஏனெனில் விரும்பும் நபருடன் பாலியல் உறவுகொள்ள அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அந்தரங்க உரிமை, அடிப்படை உரிமைகளில் ஒன்று என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இந்த உறவால் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவரையிலேயே அது குற்றம் இல்லை. 2018-க்கு முன்புவரை கள்ளத்தொடர்பில் ஈடுபட்டால் சிறைதண்டனை என சட்டம் இருந்தது. ஆனால் பிரிட்டன் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த பழையச் சட்டம் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் 158 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, திருமணமான பெண்ணுடன், அவரது கணவரின் அனுமதியின்றி வேறு ஒரு ஆண் உறவுகொண்டால், அது தண்டனைக்குரிய குற்றம்.
அந்த உறவில் ஈடுபட்டிருந்த பெண் குற்றவாளியாக பார்க்கப்படமாட்டார். ஆனால், அவருடன் உறவில் இருந்த ஆண் அந்தப் பெண்ணை குற்றம் செய்யத் தூண்டியவராக பார்க்கப்படுவார். அதே ஆண் திருமணமாகாத அல்லது கணவரை இழந்த பெண்ணுடன் உறவில் இருந்தாலோ, திருமணமான பெண்ணின் கணவரின் அனுமதியுடன் உறவு கொண்டிருந்தாலோ அது குற்றமாகாது. இதில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் புகார் அளித்தால், அந்தப் பெண்ணுடன் உறவில் இருந்த ஆணுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டம் ஆண், பெண் இருவருக்கும் எதிராக உள்ளதாக கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உடலுறவு கொண்ட ஒரு நபரை மட்டும் குற்றவாளியாக்குவது அறிவுக்கு முரணானது. பெண்கள் திருமணத்திற்கு பிறகு வேறொருவருடன் உடலுறவு கொள்ளமாட்டார்கள் என்று நினைப்பது பாரபட்சம் என்று வழக்கு தொடர்ந்த ஜான் என்பவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய சட்டத்தில் கள்ளத்தொடர்புக்கு தண்டனை இல்லை!
இந்த வழக்கில் அரசுத்தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டிருந்த நிலையில் “திருமணமான பெண்ணுடன் உறவு கொள்வதை குற்றமில்லை என்றாக்கினால் திருமண உறவின் புனிதம் கெட்டுவிடும்” என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருமணமான ஓர் ஆண், திருமணமான இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது கிரிமினல் குற்றம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முன்னரே 1954, 85 மற்றும் 88ல் பெண்களை தண்டிக்காமல் இருப்பதால் இந்த சட்டம் பாரபட்சமானது என்று தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாம் யாருடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சட்டம் சொல்லக்கூடாது என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டாலும், கள்ள உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரையும், அது கொலை, கடத்தல், மிரட்டல் போன்றவற்றிற்கு வழிவகுக்காத வரையும்தான் குற்றம் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
