இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைத்தொடர்களுக்கு நடுவே அமைந்திருக்கும் அற்புதமான நகரம் உதய்பூர். "ஏரிகளின் நகரம்" என்று அழைக்கப்படும் இந்த நகரம், அதன் வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைகள், அமைதியான ஏரிகள் மற்றும் பிரம்மாண்டமான கோட்டைகளால் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. 1553-ல் மகாராணா இரண்டாம் உதய் சிங் என்பவரால் மேவார் ராஜ்ஜியத்தின் தலைநகராக நிறுவப்பட்ட இந்த நகரம், ராஜபுத்திரர்களின் வீரத்திற்கும், கலாச்சாரத்திற்கும் சான்றாக இன்றும் மிளிர்கிறது. குறிப்பாக, பிச்சோலா ஏரியின் நடுவே படர்ந்திருக்கும் அரண்மனையின் பிரதிபலிப்பு, உதய்பூரின் தனித்துவமான அடையாளமாக திகழ்கிறது. இதுபோன்ற அழகும், வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்த நகரமான உதய்பூரில் நாம் காண வேண்டிய இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

ராஜஸ்தானின் பெருமைமிகு நகரமான உதய்பூர், ஏரிகளாலும், கம்பீரமான அரண்மனைகளாலும் சூழ்ந்த ஓர் அற்புதமான சுற்றுலாத் தலமாகும். "கிழக்கின் வெனிஸ்" என்று அழைக்கப்படும் இந்த நகரம், அதன் ஒவ்வொரு மூலையிலும் வீரமிக்க வரலாற்றையும், நேர்த்தியான கலைகளையும் தன்னுள் கொண்டுள்ளது. உதய்பூரின் முக்கியமான இடங்களை விரிவாகப் பார்ப்போம்.

பிரம்மிக்க வைக்கும் சிட்டி பேலஸ்

பிச்சோலா ஏரியின் அழகிய கரையில் அமைந்துள்ள சிட்டி பேலஸ், உதய்பூரின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகும். 400 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ராஜபுத்திர மன்னர்களால் படிப்படியாக கட்டப்பட்டது இந்த பிரம்மாண்டமான அரண்மனை வளாகம். பல அரண்மனைகள், விசாலமான முற்றங்கள், வராண்டாக்கள் மற்றும் பசுமையான தோட்டங்கள் ஆகியவற்றைக் கொண்ட இது, ராஜஸ்தானி மற்றும் முகலாய கட்டிடக்கலைகளின் கலவையாகும். அரண்மனையின் உட்புறம், கண்ணைக் கவரும் கண்ணாடி வேலைப்பாடுகள், நேர்த்தியான சுவரோவியங்கள் மற்றும் பழங்கால பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் அருங்காட்சியகங்கள், மேவார் வம்சத்தின் வாழ்க்கை முறை, அவர்களின் வீரம் மற்றும் ராஜ வாழ்க்கை முறையை நமக்கு காட்சிப்படுத்துகின்றன. இங்குள்ள ஒவ்வொரு அறையும் ஒரு கதையை சொல்வது போல உணர்வளிக்கும்.


சிட்டி பேலஸ் மற்றும் சஜ்ஜன்கர் அரண்மனை

உதய்பூரின் அழகை ரசிக்க ‘சஜ்ஜன்கர் அரண்மனை’

"மழைக்கால அரண்மனை" என அழைக்கப்படும் சஜ்ஜன்கர் அரண்மனை, ஆரவல்லி மலையின் உச்சியில் வானத்தைத் தொடும் வகையில் கம்பீரமாக நிற்கிறது. 19-ஆம் நூற்றாண்டில் மகாராணா சஜ்ஜன் சிங் என்பவரால், மேகங்களை கண்டு ரசிப்பதற்காக கட்டப்பட்டது இந்த தனித்துவமான அரண்மனை. இந்த அரண்மனையின் உச்சியில் இருந்து உதய்பூர் நகரம், அதன் அழகிய ஏரிகள் மற்றும் சுற்றியுள்ள காடுகளின் 360 டிகிரி கண்கவர் காட்சியைப் பார்க்கலாம். குறிப்பாக, சூரிய அஸ்தமனத்தின் போது இங்கு நிற்கும் அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த அரண்மனையின் அடிவாரத்தில் அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயம், இயற்கை விரும்பிகளுக்கு ஒரு சிறப்பான இடமாகும்.

பிச்சோலா ஏரி மற்றும் ஜக் மந்திர் அரண்மனை

உதய்பூரின் இதயம் என்று பிச்சோலா ஏரியைச் சொல்லலாம். படகு சவாரிக்கு மிகவும் புகழ்பெற்ற இந்த ஏரியின் நடுவில், பளபளக்கும் ஜக் மந்திர் அரண்மனை அமைந்துள்ளது. "ஏரித் தோட்ட அரண்மனை" என்று அழைக்கப்படும் இது, சிசோடியா ராஜபுத்திரர்களின் கோடைக்கால ஓய்வு இல்லமாக இருந்துள்ளது. இந்த அரண்மனை 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும், அதன் வரலாறு பல நூற்றாண்டுகள் பழமையானது. அமைதியான ஏரியின் நடுவில், அழகிய தோட்டங்கள் மற்றும் அற்புதமான கட்டிட கலையுடன் இந்த அரண்மனை தனித்து மிளிர்கிறது. இங்கு படகு சவாரி செய்து, இரவின் அமைதியில் மிதக்கும் அரண்மனையை ரசிப்பது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

கலையும் ஆன்மிகமும் சங்கமிக்கும் ‘ஜகதீஷ் கோயில்’

உதய்பூர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஜகதீஷ் கோயில், விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த இந்தோ-ஆரிய கட்டிடக்கலை அதிசயம், அதன் ஆன்மிக முக்கியத்துவத்திற்காக மட்டுமல்லாமல், நுட்பமான செதுக்கு வேலைப்பாடுகளுக்காகவும் பிரபலமானது. இங்கு கற்களில் செதுக்கப்பட்ட பல்வேறு தெய்வங்களின் சிலைகள், யானைகள் மற்றும் குதிரைகளின் உருவங்கள் ஆகியவை கோயிலின் பிரம்மாண்டத்தை உணர்த்துகின்றன. இது ஒரு புனிதத் தலமாக மட்டுமின்றி, கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கும் ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது.


பிச்சோலா ஏரி மற்றும் ஜகதீஷ் கோயில்

கலாச்சாரத்தின் கண்ணாடி ‘பாகோர் கி ஹவேலி’

பிச்சோலா ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த பழைய ஹவேலி, மேவார் அரச குடும்பத்தின் பிரபுக்களுக்கு சொந்தமானது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இங்கு, ராஜஸ்தானின் பாரம்பரிய உடைகள், இசைக்கருவிகள், நுட்பமான ஓவியங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மாலையில் இங்கு நடைபெறும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள், ராஜஸ்தானின் கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்க ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சி, பார்வையாளர்களை அந்த காலத்திற்கே அழைத்துச் செல்லும் ஒரு உணர்வைத் தருகிறது.

ஃபதே சாகர் ஏரி மற்றும் குலாப் பாக் உயிரியல் பூங்கா

பிச்சோலா ஏரிக்கு வடக்கே அமைந்துள்ள ஃபதே சாகர் ஏரி, உதய்பூர் மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு பிரபலமான ஓய்வு இடமாகும். இதன் கரையில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள், ஓய்வு நேரத்தை செலவிட ஏற்ற இடங்கள். இந்த ஏரியின் நடுவில் அமைந்துள்ள பூங்கா, படகு சவாரி செய்து செல்வதற்கு ஒரு சுவாரஸ்யமான இடமாகும். அதேபோல் ஃபதே சாகர் ஏரிக்கு அருகில் அமைந்துள்ள குலாப் பாக் உயிரியல் பூங்கா, வண்ணமயமான பூக்கள், பசுமையான தோட்டங்கள் மற்றும் பளிங்கு நீரூற்றுகளுடன் ஒரு அமைதியான சூழலை வழங்குகிறது. இங்கு பல்வேறு வகையான விலங்குகள் மற்றும் பறவைகளையும் காணலாம். இது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒரு இடமாகும்.


பாகோர் கி ஹவேலி மற்றும் குலாப் பாக் உயிரியல் பூங்கா

உதய்பூரின் வேறு சில முக்கிய அம்சங்கள்

உதய்பூர் பயணத்திற்கு சிறந்த காலம், நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரையிலான குளிர்காலம்தான். இந்த மாதங்களில் பகல் நேரங்களில் மிதமான வெப்பநிலை நிலவுவதாலும், மாலை நேரங்களில் இதமான குளிர் காற்று வீசுவதாலும், அரண்மனைகளையும், ஏரிகளையும் சுற்றிப் பார்ப்பது மிகவும் இனிமையான அனுபவத்தைத் தரும். அதிலும் இங்கு குளிர்காலத்தில் பூக்கும் மலர்கள் நகரத்திற்குப் புத்துணர்வையும், கூடுதல் அழகையும் சேர்ப்பதால், புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு சொர்க்கமாக இருக்கும். கோடைக்காலத்தில் இங்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால், பயணத்தைத் திட்டமிடும்போது முடிந்த வரை கோடை காலத்தை தவிர்ப்பது நல்லது.

உணவு முறைகளை பொறுத்தவரை, உதய்பூர் அதன் சுவையான உணவு வகைகளுக்காகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரிய ராஜஸ்தானி உணவு வகைகளை இங்கே சுவைக்கலாம். தால் பாட்டி சுர்மா, கட்டே கி சப்ஜி, பஜ்ரே கி ரொட்டி போன்ற பிரபலமான உணவுகளை நகரத்தின் பல்வேறு உணவகங்களில் முயற்சி செய்யலாம். மேலும், இங்கு கிடைக்கும் மிர்ச்சி வடா, பியஜ் கச்சோரி போன்ற தெருவோர உணவுகளும் மிகவும் சுவையானவை. இப்படி உணவுப் பிரியர்களுக்கு மட்டுமின்றி, கலை மற்றும் கைவினைப் பொருட்களின் ஆர்வலர்களுக்கும் உதய்பூர் ஒரு சிறந்த இடம் ஆகும். இங்குள்ள சந்தைகளில் ராஜஸ்தானின் பாரம்பரிய கலைப் பொருட்களை காணலாம். ராஜஸ்தானி நகைகள், வண்ணமயமான ஆடைகள், கையால் செய்யப்பட்ட பொருட்கள், மினியேச்சர் ஓவியங்கள் போன்றவற்றை நினைவுப் பரிசுகளாக வாங்கலாம். இங்கிருக்கும் கடைகளின் கைவினைப் பொருட்கள், ராஜஸ்தானின் கலை மரபையும், திறமையையும் பறைசாற்றுகின்றன.


உதய்பூர் ஏரி மற்றும் ராஜஸ்தானின் பிரபலமான உணவு வகைகள்

இப்படி உதய்பூர் வெறும் சுற்றுலாத் தலமாக மட்டுமன்றி, ஒரு கலாச்சார சின்னமாகவும் திகழ்கிறது. அதன் பிரம்மாண்டமான அரண்மனைகள், அமைதியான ஏரிகள், உயிரோட்டமுள்ள சந்தைகள் ஆகியவை ஒவ்வொரு பயணிக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகின்றன. ராஜஸ்தானின் பெருமைகளைத் தாங்கி நிற்கும் இந்த நகரம், அதன் மயக்கும் அழகால், இங்கு பயணம் செய்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுகிறது. முடிந்தால் நீங்களும் ஒரு முறை சென்று வாருங்கள்.

உதய்பூர் கூகுள் மேப்


Updated On 9 Sept 2025 10:10 AM IST
ராணி

ராணி

Next Story