இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இயற்கை அன்னையின் கைவண்ணத்தில் உருவான ஸ்பிதி பள்ளத்தாக்கு, இமயமலையின் நடுவே ஒளிந்திருக்கும் ஓர் அற்புதமான பொக்கிஷம் ஆகும் . 'ஸ்பிதி' என்றால் 'நடுவில் உள்ள நிலம்' என்று பொருள். அந்த வகையில் இது இந்தியா, திபெத் ஆகிய இரு நாடுகளுக்கும் நடுவில் அமைந்திருப்பது இந்த பெயருக்குப் பொருத்தமாக இருக்கிறது. பனிபடர்ந்த மலைகள், வறண்ட நிலப்பரப்பு, தெளிந்த நீரோடைகள், அழகிய கிராமங்கள் மற்றும் அன்பான மக்கள் எனப் பல தனித்துவமான அம்சங்களை கொண்ட ஸ்பிதி, இங்கு வரும் பயணிகளுக்கு ஓர் அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த தொகுப்பில் , ஸ்பிதி பள்ளத்தாக்கின் வரலாறு, புவியியல், மக்கள், சுற்றுலாத் தலங்கள், அங்கு செல்ல சிறந்த நேரம் போன்ற பல தகவல்களை விரிவாக காணலாம்.

ஸ்பிதியின் தனித்துவமும் வரலாறும்

இமாச்சலப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,500 அடி உயரத்தில் உள்ளது. இது வறண்ட மற்றும் குளிர்ச்சியான பாலைவனப் பகுதியாகும். கோடையில் மிதமான வெப்பநிலை நிலவினாலும், குளிர்காலத்தில் வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸ் வரை குறையும். அதனால், கோடை காலமே இங்கு பயணம் செய்ய சிறந்த நேரமாகும். இந்த ஸ்பிதி பள்ளத்தாக்கு அதன் தனித்துவமான நிலப்பரப்பிற்காக மட்டுமல்லாமல், அதன் வளமான கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது. இந்த பகுதி அதன் அழகிய வறண்ட மலைகள், ஆழமான பள்ளத்தாக்குகள் மற்றும் புத்த மடாலயங்களுக்காக பிரசித்தி பெற்றது. இந்த பகுதி, கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை கொண்டுள்ளது. இமயமலையின் கடினமான சூழலில் வாழும் மக்கள், தங்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் தலைமுறை தலைமுறையாக இங்கு பாதுகாத்து வருகின்றனர்.


ஸ்பிதி பள்ளத்தாக்கு மற்றும் அங்கு வாழும் மக்கள்

ஸ்பிதி பள்ளத்தாக்கு, திபெத்திய புத்த மதத்தின் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும். இங்குள்ள கிராமங்களில் பழமையான புத்த மடாலயங்கள் உள்ளன. அவற்றில் கீ மடாலயம், தபோ மடாலயம் மற்றும் தங்கர் மடாலயம் போன்றவை மிகவும் பிரபலமானவை. இந்த மடாலயங்கள் பல நூறு ஆண்டுகள் பழமையானவை, மேலும் அவை கலை மற்றும் ஆன்மீகத்தின் கருவூலங்களாக உள்ளன. இந்த மடாலயங்கள், வரலாற்று ரீதியாக திபெத்திய எல்லைகளுடன் தொடர்புடையவை, மேலும் இங்குள்ள கலைகள், கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை முறைகள் திபெத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன. இங்குள்ள மக்கள் கடின உழைப்பாளிகள், எளிமையானவர்கள் மற்றும் மிகவும் அன்பானவர்கள். இவர்களின் அன்றாட வாழ்க்கை, இமயமலையின் சவால்களை எதிர்கொள்வதையே அடிப்படையாகக் கொண்டது. இருந்தும் அம்மக்களின் எளிமையும், அன்பும் பயணிகளை எப்போதும் ஈர்க்கும்.

பார்க்க வேண்டிய இடங்கள்

ஸ்பிதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, இங்குள்ள இடங்கள் மறக்க முடியாத அனுபவத்தை தரும். அவற்றில் சில முக்கிய இடங்களை கீழே காண்போம்

கீ மடாலயம்

கடல் மட்டத்திலிருந்து 4,166 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கீ மடாலயம், இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிதி பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற புத்த மடாலயம் ஆகும். ஸ்பிதி பள்ளத்தாக்கின் மிகப்பெரிய மற்றும் பழமையான மடாலயம் இது. இதன் கோட்டை போன்ற கட்டமைப்பு, காலத்தைக் கடந்த அழகிய சுவரோவியங்கள், நேர்த்தியான புத்தர் சிலைகள் ஆகியவை இந்த மடாலயத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகும். இவை உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஆன்மிகத் தேடல் கொண்டவர்களையும் வெகுவாகக் கவர்கின்றன. ஏறக்குறைய கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இந்த மடாலயம், கடந்த பல நூற்றாண்டுகளாகத் திபெத்திய புத்த மதத்தின் ஒரு முக்கிய ஆன்மிக மற்றும் கல்வி மையமாகத் திகழ்ந்து வருகிறது. பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த இடம், அமைதியான மற்றும் ஆன்மிக அனுபவத்தை வழங்குகிறது.


ஸ்பிதி பள்ளத்தாக்கில் உள்ள கீ மடாலயம் மற்றும் தபோ மடாலயம்

தபோ மடாலயம்

'இமயமலையின் அஜந்தா' என்று அழைக்கப்படும் தபோ மடாலயம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இது, கி.பி. 996 ஆம் ஆண்டில் திபெத்திய மன்னர் யேஷே ஓட் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மடாலயம், அதன் தனித்துவமான களிமண் சுவர்கள் மற்றும் சுவரில் வரையப்பட்ட கலைநயம் மிக்க வண்ண ஓவியங்களுக்காக புகழ் பெற்றது. இந்த ஓவியங்கள், பழங்கால புத்த கலையின் மகத்தான அம்சங்களை வெளிப்படுத்துகின்றன. அதன் தனித்தன்மை வாய்ந்த கட்டமைப்பு மற்றும் அமைதி தவழும் சூழல், ஸ்பிதிக்கு வரும் ஆன்மிக பயணிகளுக்கு ஒரு அமைதியான மற்றும் உத்வேகமளிக்கும் புகலிடமாகத் திகழ்கிறது. இந்த மடாலயம், இன்றும் உயிர்ப்புடன் இயங்கி வரும் ஒரு வரலாற்றுச் சின்னமாக உள்ளது.

லாங்சா கிராமம்


லாங்சா கிராமம் மற்றும் ஹிக்கிம் அஞ்சல் அலுவலகம்

கடல் மட்டத்திலிருந்து 4,400 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம், தொல் பழங்கால புதை படிவங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு டைனோசர்கள் மற்றும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி ஒரு கடலாக இருந்திருக்கக்கூடும் என்பதை இது காட்டுகிறது. இது, உலகின் மிக உயரமான மோட்டார் சாலை கொண்ட கிராமங்களில் ஒன்றாகும். இங்கு உள்ள புத்தரின் பிரம்மாண்டமான சிலை, கிராமத்தின் ஒரு சிறப்பான அடையாளமாக உள்ளது. இந்த கிராமம், இயற்கை அழகும், தொல்பழங்கால முக்கியத்துவமும் ஒருசேர அமைந்த ஓர் அரிய இடமாகும்.

ஹிக்கிம் அஞ்சல் அலுவலகம்

உலகின் மிக உயரமான அஞ்சல் அலுவலகம் இங்கு அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,440 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அஞ்சல் அலுவலகம், இந்திய அஞ்சல் துறையின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அஞ்சல் அலுவலகம், சுற்றிலும் பனி படர்ந்த மலைகளுக்கு மத்தியில், ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு தங்கள் பயண நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், அஞ்சல் அட்டைகளை அனுப்பி மகிழ்கின்றனர். மேலும், இங்கு அனுப்படும் அஞ்சல்களுக்கு, 'ஹிக்கிம்' என்ற சிறப்பு முத்திரையும் இடப்படுகிறது. இது வெறும் அஞ்சல் அலுவலகம் மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள அஞ்சல் சேவையின் அன்பையும், நம்பிக்கையையும் எடுத்துரைக்கும் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

சந்திர தால் ஏரி

'சந்திரனின் ஏரி' என்று பொருள்படும் இந்த ஏரி, இமாச்சலப் பிரதேசத்தின் லாஹௌல் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்குகளுக்கு நடுவே, கிட்டத்தட்ட 4,300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் தெளிவான நீல நிற நீர், சுற்றிலும் உள்ள பனி படர்ந்த மலைகளால் சூழப்பட்டு, ஒரு பிறை வடிவில் இருப்பதால் இப்பகுதி இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஏரி கோடை காலத்தில் அதன் முழு அழகை வெளிப்படுத்துகிறது, அப்போது பனிகள் உருகி அதன் நீர்நிலை நிரம்புகிறது. ட்ரெக்கிங், கேம்பிங் போன்ற சாகச நடவடிக்கைகளுக்கு இது ஒரு பிரபலமான இடமாகும்


சந்திர தால் ஏரி மற்றும் கிப்பர் கிராமம்

கிப்பர் கிராமம்

உலகின் மிக உயரமான கிராமங்களில் ஒன்றான இது, இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் ஆகும். இங்கு பனிச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு வனவிலங்குகளை நம்மால் காண முடியும். குறிப்பாக, வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுக்கு இது ஒரு சிறந்த இடம் என்றே சொல்லலாம். இங்குள்ள காலநிலை ஆண்டின் பெரும்பகுதி மிகவும் குளிராக இருக்கும் என்பதால் காலநேரம் அறிந்து பயணிப்பதே நல்லது. அதேவேளை கிராமத்தின் பாரம்பரிய திபெத்திய கட்டிடக்கலை, அழகிய மடாலயங்கள் மற்றும் பனி மூடிய மலைகளின் காட்சிகள் பார்ப்போரை நிச்சயம் மெய்சிலிர்க்க வைக்கும்.

லோசார் மற்றும் கோமிக் கிராமங்கள்

லாஹால் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கின் வடக்கே அமைந்துள்ள லோசார் மற்றும் கோமிக் கிராமங்கள், சாகசப் பிரியர்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகின்றன. பனிபடர்ந்த சிகரங்களுக்கு மத்தியில் ஒரு அமைதியான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் லோசார் கிராமம், அதன் கண்கவர் இயற்கை அழகுக்காகவும், குன்சும் கணவாய் போன்ற சவாலான பாதைகளுடனும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

கோடை மாதங்களில் மட்டுமே அணுகக்கூடிய இந்த கிராமம், தொலைதூரப் பயணிகளுக்காக ஒரு அமைதியான தங்குமிடமாக உள்ளது. இதேபோல், கோமிக் கிராமம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,587 மீட்டர் உயரத்தில் உள்ள உலகின் மிக உயரமான வாகனங்கள் செல்லக்கூடிய கிராமங்களில் ஒன்றாகும். இங்குள்ள டாங்யுட் மடாலயம், அதன் கலைநயம் மற்றும் கட்டிடக் கலைக்காக புகழ் பெற்றது. இந்த கிராமங்களுக்குச் செல்லும் பாதை சவாலானதாக இருந்தாலும், அங்குள்ள மக்களின் அன்பான வரவேற்பு, பௌத்த கலாச்சாரம் மற்றும் கண்கவர் இயற்கை காட்சிகள் என அனைத்தும் பயணிகளின் மனதைக் கவர்கின்றன.


கோமிக் கிராமங்கள் மற்றும் அப்பகுதியின் பிரபல உணவான மோமோஸ்

உணவு மற்றும் பயண வசதிகள்

ஸ்பிதி பள்ளத்தாக்குக்குச் செல்லும் பயணிகளுக்கு பலவிதமான தங்குமிடங்கள் உள்ளன. இங்கு பெரிய ஹோட்டல்கள் இல்லை. ஆனால், உள்ளூர் மக்களின் வீடுகளில் தங்கி, அவர்களது கலாசாரத்தை நேரடியாக அனுபவிப்பது ஒரு சிறப்பான அனுபவம். இந்த அனுபவத்தில், எளிய ஆனால் சுவையான உள்ளூர் உணவுகளையும் நீங்கள் சுவைக்கலாம். மோமோஸ், துக்பா, சிப்பா மற்றும் பட்டர் தேநீர் போன்ற உணவுகள் இங்கு மிகவும் பிரபலமானவை. கடுமையான பனிப்பொழிவு காரணமாக அக்டோபர் முதல் ஏப்ரல் வரை சாலைகள் மூடப்பட்டிருப்பதால், இந்த மாதங்களில் ஸ்பிதிக்கு செல்வது கடினம். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் இங்கு பயணம் செய்வதற்கு மிகவும் ஏற்றவை. மேலும், சாலைகள் சவாலாக இருப்பதால், உள்ளூர் ஓட்டுநர்கள் மட்டுமே அதிகம் பயணிக்கிறார்கள்.

பயணம் செய்ய விரும்புபவர்கள், ஸ்பிதிக்குச் செல்வதற்கு முன், அதன் காலநிலைக்கேற்ப தங்கள் உடலைத் தயார் செய்து கொள்ள வேண்டும். இந்தப் பயணத்துக்குத் தேவையான சூடான ஆடைகள், சன்கிளாஸ்கள் மற்றும் முதலுதவிப் பொருட்கள் போன்றவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளுக்கு அருகில் உள்ள நகரங்களையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த விஷயங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு சரியான நேரத்தில் பயணித்தால், இமாச்சலப் பிரதேசத்தின் இந்த அழகான பகுதி, அதன் தனித்துவமான கலாசாரம் மற்றும் இயற்கை அழகுடன் ஒவ்வொரு பயணிக்கும் மறக்க முடியாத அனுபவத்தை நிச்சயம் வழங்கும்.

ஸ்பிதி கூகுள் மேப்


Updated On 16 Sept 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story