இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மேட்ரிமோனியல் இணையதளத்தின் மூலம் திருமண ஆசை காட்டி சென்னை பெண்ணிடம் பணத்தை கொள்ளையடித்த பலே நைஜீரிய நாட்டு திருமண மோசடி கில்லாடிகள் சிக்கியது எப்படி? என்பதை விவரிக்கின்றது இந்த பதிவு.

பெண்ணிற்கு விலை உயர்ந்த பரிசுகளை அனுப்பி ஆசையை தூண்டிய கொள்ளையர்கள்

சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்திற்காக வரன் தேடி ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தில் சுய விவரங்களை வெளியிட்டுள்ளார். அப்போது அவரது விவரங்களை அறிந்து அந்த பெண்ணின் வாட்ஸாப்புக்கு தொடர்பு கொண்ட அலெக்சாண்டர் சன்ஜீவ் என்ற ஒரு மர்ம நபர், பெண்ணிற்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளையும் படங்களையும் அனுப்பி வைத்து தனது தந்திரமிக்க காதல் வார்த்தைகளால் அவரை பெரிதும் கவர்ந்துள்ளார். மேலும் வாட்ஸாப் குறுஞ்செய்தியில் தகவல்களை அனுப்பிய அந்த நபர், தான் வெளிநாட்டில் வசிப்பதாக அந்த பெண்ணிடம் கூறியதுடன், தங்களை மிகவும் பிடித்திருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசை வார்த்தைகளால் மயக்கியதுடன், அந்த பெண்ணின் முகவரிக்கு சில விலை உயர்ந்த பரிசு பொருட்களை அனுப்பியும் வைத்துள்ளார். உடனே அந்த பெண் சந்தோஷத்தில் தன்னை மறந்து, உண்மை முகம் தெரியாத மர்ம நபருடன் தொடர்ந்து வாட்ஸாப் குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அந்த சைபர் குற்ற விபரீதம் அப்பெண்ணுக்கு நடந்தேறியுள்ளது.

வித்தியாசமான முறையில் பெண்ணிடம் பணத்தை பறித்த நைஜீரிய கொள்ளையர்கள்


ஹேக்கர்ஸ் தொடர்பான புகைப்படம்

திருமண ஆசையில், வெளிநாட்டில் தான் விரும்பிய நபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாம் என்ற கனவில் இருந்த அந்த பெண்ணுக்கு ஒரு ஃபோன் கால் வந்துள்ளது. ஃபோனில் பேசிய அந்த மோசடி கும்பலின் ஆசாமி தான் புதுடெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், தன்னை ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி என்றும் பெண்ணிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். மேலும் அந்த பெண்ணுக்கு பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், சுங்கவரி செலுத்தினால் மட்டுமே அதனை பெற்றுக் கொள்ளமுடியும் என்றும், உடனே பணத்தை அனுப்பும்படியும் அப்பெண்ணிடம் அந்த பலே மோசடி கும்பலின் ஆசாமி தெரிவித்துள்ளான். இதனை உண்மையென்று நம்பிய அந்த அபலைப்பெண்ணிடம், பல்வேறு வங்கிக் கணக்குகளை கொடுத்து அந்த வங்கி கணக்குகளில் பணத்தை போடவும் சொல்லியுள்ளான். இது ஒரு ஏமாற்றுவேலை என்பதை உணர்ந்து கொள்ளாத அந்த அபலைப் பெண், கொஞ்சம் கொஞ்சமாக 2 கோடியே 87 லட்சம் ரூபாயை, மோசடி ஆசாமி சொன்ன எல்லா வங்கிக் கணக்குகளிலும் செலுத்தியுள்ளார். மேலும் மேலும் அந்த மர்ம ஆசாமி அந்த பெண்ணை விடாமல் வங்கிகணக்குகளில் பணம் செலுத்த சொல்ல, அப்போதுதான் தான் யாரோ ஒருவரால் நன்கு ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த பெண் இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினருக்கு புகாரளித்துள்ளார் .

அதிரடியில் இறங்கிய சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸ்


சைபர் கிரைம் போலீஸ், பண பரிமாற்றம், மோசடி கும்பல் ஆகியவற்றின் மாதிரி புகைப்பட காட்சிகள்

பெண்ணின் புகாரினை கையிலெடுத்த காவல்துறை உடனடியாக சைபர் கிரைம் குற்றவாளிகளை கூண்டோடு பிடிக்க களம் இறங்கியது. ஆம் காவல்துறையினரின் விசாரணையில் பல்வேறு விதமான அதிர்ச்சிகள் காத்திருந்தன. மோசடி பேர்வழிகள் பணத்தை போட சொன்ன எல்லா வங்கிகளிலும் இருந்து முதலில் அந்த குற்றவாளிகளின் செல்ஃபோன் எண்ணை காவல்துறையினர் பெற்றுக் கொண்டனர். அந்த வங்கி கணக்குகளில் தெற்கு டெல்லி, மேகாலயா, கேரளா, ஜார்க்கண்ட், குஜராத், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஊர்களில், போலியான பல பெயர்களில் அந்த வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் மேலே சொன்ன ஊர்களில் உள்ள வங்கிகளின் ATM கார்டுகளின் பண பரிமாற்றம் மற்றும் நெட் பேங்கிங் போன்றவை புது டெல்லியில் உள்ள உத்தம் நகர், மோகன் நகர், துவாரகா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை கண்டு காவல்துறையினர் ஆச்சர்யம் அடைந்தனர். உடனே புதுடெல்லி நோக்கி ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் விரைந்துள்ளனர். புதுடெல்லியில் திருமண தகவல் இணையதளத்தின் மூலம் பெண்ணிடம் திருமண ஆசைகாட்டி பணத்தை கொள்ளையடித்த நைஜீரியாவைச் சேர்ந்த அகஸ்டின் மற்றும் சின்னேடு என்ற இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 7 செல் ஃபோன்கள், 3 லேப்டாப்கள், 40 டெபிட் கார்டுகளை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.

திருமண இணையதளங்களில் கவனம் தேவை - போலீஸ் எச்சரிக்கை


பிடிபட்ட நைஜீரிய திருடர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 செல் ஃபோன்கள் மற்றும் 40 டெபிட் கார்டுகள்

தற்போதைய லேட்டஸ்ட் சைபர் கிரைம் நிகழ்வாக மேட்ரிமோனியல் இணையதளங்களில், பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி நூதனமாக பணம் பறிக்கும் சம்பவங்கள் நடப்பதாகவும், பெண்கள் இது போன்ற விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. திருமண தகவல் இணையதளங்கள் அதிகரித்துவரும் நிலையில், அவற்றை கவனத்துடன் கையாண்டால் மட்டுமே இது போன்ற சைபர் கிரைம் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க முடியும் என்பதே நிதர்சனம்.

Updated On 26 Feb 2024 6:28 PM GMT
4SubEditor

4SubEditor

Next Story