இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எல்லா அம்சங்களிலும் ஆண்களை விட பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதனாலேயே, சிலர் இந்தியாவின் எதிர்காலம் பெண்கள் கையில்தான் இருக்கிறது என்று கூறுவார்கள். இப்படியான ஒரு வாக்கியத்திற்கு உரியவர்தான் டாக்டர் ஷீபா லூர்தஸ். உளவியலாளர், பரதநாட்டிய கலைஞர், எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதி போன்ற பன்முகத்தன்மை கொண்டவரான இவர் மிஸ் தமிழ்நாடு, கண்ணழகி மற்றும் கூந்தலழகி போன்ற தென்னிந்திய பட்டங்களையும் வென்றவர். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட டாக்டர் ஷீபா லூர்தஸ் யுனைடெட் சாமரிடன்ஸ் இந்திய தேசிய இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும் தான் சம்பாதித்த ரூ.4 கோடியை ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அப்படியே கொடுத்துள்ளார். இப்படி பல வகைகளில் முன்னுதாரண நாயகியாக திகழ்ந்துவரும் டாக்டர் ஷீபா லூர்தஸ், தன்னை பற்றியும், தான் கடந்து வந்த பாதை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலை இந்த பதிவில் காணலாம்.

எத்தனையோ நாடுகளுக்கு நீங்கள் பயணித்துள்ளீர்கள், அப்படியென்றால் உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும்?

எனக்கு 11 மொழிகள் தெரியும். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அல்ல. நான் பிறப்பால் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட நபர் என்பதால் எனக்கு தெலுங்கு மற்றும் தமிழ் நன்றாக தெரியும். ஹிந்தியும் கொஞ்சம் கொஞ்சம் பேசுவேன். இவைகள் தவிர ஸ்வீடிஷ், ரஷ்யன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உட்பட 9 உலக மொழிகள் தெரியும். இதில் குறிப்பாக ஸ்பானிஷ் மட்டும் தெரிந்துக் கொண்டாலே பத்திற்கும் மேற்பட்ட மொழிகளை நாம் எளிதாக கற்றுக் கொள்ளலாம். ஆனால் நான் ஐந்து மொழிகளைதான் கூடுதலாக கற்றுக் கொண்டேன். இதில் அனைத்து மொழிகளையுமே என்னால் பேசவும் முடியும், எழுதவும் முடியும். அதனால் அந்தந்த மொழிகளில் சில புத்தகங்களும் நான் எழுதியுள்ளேன். சமீபத்தில் என்னுடைய படைப்பாக வெளிவந்துள்ள ஆங்கில புத்தகம் கூட ஸ்வீடிஷ் மொழியில் நான் எழுதிய ஒரு புத்தகத்தின் மொழிபெயர்ப்பே ஆகும். இதில் நான் பெருமைப்பட கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் கிரேக்க மொழியை கற்றுக் கொண்டதுதான். கிரேக்கத்திற்கும், நம் சமஸ்கிருதத்திற்கும் மிகப்பெரிய தொடர்பு இருக்கிறது. அதேபோல் ரஷ்யன் மொழியை கற்றுகொள்வதும் மிகவும் சிரமமான ஒன்றுதான். அதனைக் கற்றுக்கொண்டால் போர்ச்சுகீசிய மொழியை நம்மால் எளிதாக கிரகித்து சிரமம் இன்றி கற்றுக்கொள்ள முடியும். இவை அனைத்தையுமே எனது சொந்த ஆர்வம் மற்றும் முயற்சியினால்தான் கற்றுக்கொண்டேன். இது தவிர கூடுதலாக 4 மொழிகள் பேச மட்டும் வரும்.


லயன்ஸ் கிளப் நிகழ்ச்சி ஒன்றில் ஷீபா லூர்தஸ் கலந்துகொண்ட தருணம்

பல துறைகளில் நீங்கள் சாதனை புரிந்துள்ளீர்கள், இருந்தும் திருமணம் செய்துக்கொள்வதில் மட்டும் ஏன் பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை?

எனக்கும் திருமண பந்தத்திற்குள் நுழைவதற்கான சூழல் 2013 ஆம் ஆண்டு அமைந்தது. அந்த சமயம்தான் நான் என்னுடைய பிஎச்டி படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பி இருந்தேன். அப்போது எனது குடும்பத்தார் என்னை கல்யாணம் செய்துக்கொள்ள சொல்லி நிர்பந்தித்தனர். ஆனால் அந்த சமயம் நான் பல நாடுகளில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளையும், அகதிகளாக தவித்து வந்த சில குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வந்தேன். என் வீட்டிலேயே மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் என 4 பேர் என்னுடன் அப்போது இருந்தனர். நான் வெளிநாடுகளில் பயணித்து வந்த சமயங்களில் செஞ்சிலுவை சங்கம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிறைய சமூக பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். அதில் ஒரு வாய்ப்பாகத்தான் சுவீடனில் இருந்தபோது அகதிகளாக தவித்து வந்த நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் சூழல் எனக்கு அமைந்தது. இதனை ஒரு பாக்கியமாக நினைத்து அவர்களை வளர்த்துவந்த நேரத்தில்தான் எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்க துவங்கின. அப்போது எனக்கு திருமணத்திற்காக பார்த்திருந்த பையனுக்கு பெரிதாக இந்த சமூக பணிகள் மீது ஆர்வம் இல்லை.

மேலும் நான் தத்தெடுத்து வளர்த்த குழந்தைகளை அரசு பார்த்துக் கொள்ளும், நாம் நம்முடைய வாழ்க்கையை பார்த்துக் கொள்ளலாம் என்கிற மன ஓட்டமும் அவரிடம் இருந்தது. இதனை ஒருகட்டத்தில் புரிந்துக் கொண்ட நான், கல்யாண மேடை வரை சென்று பல பிரச்சினைகளை எதிர்கொண்டு அவரிடம் இருந்து விளகினேன். இதனால் என் குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கு ஆளானதோடு, என் அம்மாவின் உடல்நிலையும் மோசமாக மாறியது. ஆனால் அப்போது நான் அப்படி ஒரு தீர்க்கமான முடிவு எடுத்திருக்காவிட்டால், நானும் ஒரு சராசரியான பெண்ணாக வாழ்ந்துவிட்டு போயிருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இத்தகைய மாற்றங்களும், வளர்ச்சியும் ஏற்பட்டிருக்காது. அந்த நிகழ்விற்கு பிறகு நான் திருமணத்தைப் பற்றி இன்றுவரை சிந்திக்கவே இல்லை. நான் தத்தெடுத்து வளர்த்த நான்கு குழந்தைகளில் மூன்று பேருக்கு திருமணமாகிவிட்டது. பல தடைகளையும், சுமைகளையும் தாங்கித்தான் நான் பயணித்து வருகிறேன். தொடர்ந்து எனது லட்சியத்தை நோக்கி பயணிப்பேன்.


வெளிநாட்டில் கப்பலில் வளர்ப்பு பிராணிகளுடன் மற்றும் முக்கிய தருணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம்

உங்களுடைய இந்த முடிவிற்கு உங்களின் அப்பா, அம்மா என்ன சொன்னார்கள்? குடும்ப உறவுகள் எப்படி பார்த்தார்கள்?

எங்கள் வீட்டை பொறுத்தவரை என் தங்கையின் திருமணத்திற்கு பிறகும் நான் தத்தெடுத்து வளர்த்த குழந்தைகளை பார்த்து கொள்வதற்கோ, அவர்கள் மீது அக்கறை கட்டவோ யாரும் விரும்பவில்லை. நான் தத்தெடுத்து வளர்த்து திருமணம் செய்துவைத்த மூவரில் ஒரு பெண் பிள்ளைக்கு சிலமாதங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது. உடனே என் குடும்பத்தாரிடம் உங்களுக்கு பேரன், பேத்தி வேண்டும் என்று கேட்டீர்களே, எனக்கு பேத்தி பிறந்திருக்கிறார், அது உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையா என கேட்டேன். உடனே அவர்கள், நம்ம ரத்தமா என கேட்டார்கள். என்னதான் நாம் ஊருக்கு உபதேசம் பேசினாலும், நம் வீட்டை பொறுத்தவரை குழந்தையாகத்தான் பெற்றோர்கள் நம்மை பார்க்கிறார்கள். அவர்களிடம் நமது மனநிலையை புரிய வைக்க முடியவில்லை. ஏன் இப்போதும் எனது அப்பா எப்போது எனக்கு பேரன், பேத்தி பெற்று தருவாய் என கேட்கிறார். இன்னமும் அவர்களுக்கு ஏற்கனவே பிறந்த என் பேரக் குழந்தையை பேத்தியாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வரவில்லை.


ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் ரியாஸ் கானுடன்

உங்களுடைய வாழ்க்கையின் லட்சியம் என்ன? எதை சாதிக்க நினைக்கிறீர்கள்?

நான் இப்போது செய்து கொண்டிருக்கும் சமூகப் பணியை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்வதே எனது நோக்கம். அடுத்த 5 ஆண்டுகளில் நகரங்களின் பல இடங்களில் நகர்ப்புற காடு என சொல்லப்படக்கூடிய Urban forestry-யை மேம்படுத்துவதே எனது முக்கிய குறிக்கோள். மேலும் நான் தற்போது நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் பணிகளை மேலும் விரிவடைய செய்து அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். குறிப்பாக கோவில்களில் கொடுப்பது போலவே இலவச அன்னதானத்தை, நாள் முழவதும் வழங்கும் திட்டமும் என்னிடம் உள்ளது. இதற்காக இடமெல்லாம் பார்த்து வைத்திருக்கிறேன். இதுதவிர துவக்கத்தில் நான் கையில் எடுத்து செய்து வந்த மொபைல் பெட் கிளினிக் சேவையை மேலும் பெரிதாக்கி, ஆதரவற்று, உயிருக்கு போராடும் கால்நடைகளை பராமரிப்பது போன்ற பல திட்டங்கள் உள்ளன. என்னைப் பொறுத்தவரை என் இறுதி மூச்சு நிற்கும் வரை மனசாட்சிபடி வாழ்ந்து இந்த சமூகத்திற்கு சேவை செய்வதையே வாழ்க்கையின் லட்சியமாக வைத்துள்ளேன்.

Updated On 8 July 2024 6:17 PM GMT
ராணி

ராணி

Next Story