இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டு நிறுவனமாகக் கருதப்படும் அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ லிமிடெட், இந்தியாவில் மட்டும் 13 துறைமுக டெர்மினல்களை இயக்கி வருகிறது. இதுதவிர இந்தியாவின் கடல்சார் வருமானத்தில் 24% பங்குகளையும் அதானி குழுமம் கொண்டுள்ளது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அதானி குழுமம் சென்னையை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை வாங்கியுள்ளது. சென்னை எண்ணூரை அடுத்தக் காட்டுப்பள்ளி கிராமத்தில் சுமார் 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ‘எல் அன் டி’ துறைமுகமானது இந்தியாவின் நவீன துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது மட்டுமின்றி தமிழகம், கர்நாடக மாநிலங்களின் ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் வாயிலாகவும் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த இந்த துறைமுகத்தை 2018 ஆம் ஆண்டு அதானி குழுமம் வாங்கியதில் இருந்து, விரிவாக்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வரும் அதானி குழுமம் சொல்ல வருவது என்ன? இதனால் சுற்றுச்சூழலுக்கு வரப்போகும் பாதிப்புகள் என்னென்ன? என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்...

துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டம்

தற்போது அதானி குழுமத்தின் வசம் உள்ள இந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை சுமார் 53 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 6200 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யவும், தொழில் பூங்கா அமைக்கவும் இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான அனுமதி குறிப்பாணை 2019ஆம் ஆண்டு அரசிடம் இருந்து பெறப்பட்டது. சென்னை மாநகருக்கும், எண்ணூர் முதல் பழவேற்காடு ஏரி வரையிலான பகுதிகளுக்கும் சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தான திட்டமாக உள்ளது. அதாவது விரிவாக்கத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் 6200 ஏக்கரில் ஆற்று வடிநிலப் பகுதி, கரைகடல் பகுதிகள், தனியார் நிலங்களும் இவற்றுள் அடங்கும். இதில் குறிப்பாக 7 கி.மீ நீளம் மற்றும் 1.5 கி.மீ அகல அளவிற்கு சுமார் 1800 ஏக்கர் பரப்பளவில், மணல் மற்றும் சேற்றுத் திட்டுகள் நிறைந்த கரைகடல் பகுதிகளை மேடாக்குவது இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். அதுமட்டுமின்றி இயற்கையாக உருவாகி இருக்கும் கடல் திட்டுகள் மற்றும் சேத்து திட்டுகள் தான் சுனாமி மற்றும் கடல் சீற்றத்தின் போது கரையோரப் பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்படாமல் காத்து வருகிறது.


காட்டுப்பள்ளி துறைமுகம்

அதுபோக இத்திட்டத்தின் பயன்பாட்டிற்காக துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் ஆறு கிலோ மீட்டர் வரையிலான கடல் பகுதிகளில் மணலைக் கொட்டி கிட்டத்தட்ட 1967 அளவிலான கடற்பரப்பையும் துறைமுக பயன்பாட்டிற்காக ஆக்கிரமிக்க இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இவ்வாறு கடல் பகுதியை மணல் கொட்டி நிரப்பி அதன் இயல்பில் இருந்து மாற்றுவது என்பது திரும்ப சரி செய்ய இயலாத மிகப்பெரிய சூழலியல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். மேலும் இயற்கை வளங்களை அழித்து சீர் குலையச் செய்வது நம்முடைய சுற்றுச் சூழலுக்கு பேரழிவை உண்டாக்கும்.

அழியப்போகும் பழவேற்காடு ஏரி

இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர் ஏரியாக விளங்கும் இந்த பழவேற்காடு ஏரியானது, சென்னையில் இருந்து 60 கி.மீ தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 250 சதுர கிலோ மீட்டர் முதல் 450 துர கிலோ மீட்டர் ஆகும். அதாவது பழவேற்காடு முதல் ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் வரைப் பரவிக்கிடக்கிறது. அதிலும் ஆந்திராவின் சுவர்ணமுகி, காளங்கி ஆகிய ஆறுகளும், தமிழகத்தில் இருந்து வரும் கொசஸ்தலை மற்றும் ஆரணி போன்ற ஆறுகளும், ஓடைகளும் இங்குதான் ஒன்றாகக் கலக்கின்றன.

இந்த பழவேற்காடு ஏரியின் முகத்துவாரத்தில் அரிய வகை சிங்க இறால்கள், பச்சைக்கல் நண்டுகள் உள்ளிட்ட 15 வகையான இறால் மற்றும் நண்டு இனங்களும், சிப்பிகளும், 50 வகையான மீன் இனங்களும் உயிர்வாழ்கின்றன. கடல் நீரோடு சேர்ந்து இறால்கள் ஏரிக்குள் நுழைவதும், இனப்பெருக்கம் செய்து பின் வெளியேறுவதும் காலங்காலமாக நடந்து வருகிறது. மேலும், 10 வகையான பாசிகள், 50- மேற்பட்ட நீர்ப்பறவை இனங்கள், பாம்புகள், சிறு கடல் ஆமைகள் போன்ற அரிய வகை நீர்வாழ் உயிரினங்களுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது.


பழவேற்காடு ஏரி

இந்த துறைமுகம் சார்ந்த விரிவாக்கத் திட்டத்தின் போது பழவேற்காடு ஏரிக்கு அதிகளவிலான பாதிப்புகள் நிச்சயம் ஏற்படக் கூடும். கடற்பரப்பு இருக்கும் இடத்தில் ஆறுகள் வருவதால் ஏரியின் தன்மை கெடுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருக்கிறது. அதுபோக மனிதர்கள் மட்டுமல்லாது சின்னஞ்சிறு பூச்சி, புழுக்கள் என இந்த ஏரியை நம்பி வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் உயிர் வாழ தகுதியற்ற நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்

பழவேற்காடு ஏரியைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. எண்ணூர் காட்டுப்பள்ளி சுற்றுவட்டாரத்திலுள்ள பல கிராம மக்களும் மீன்பிடித் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மீனவர்கள், கைவினைஞர்கள், வியாபாரிகள் என பலதரப்பு மக்களின் வாழ்க்கையும் கொசஸ்தலை ஆறு மற்றும் பழவேற்காடு ஏரியை நம்பியே இருக்கிறது. இந்த விரிவாக்கத் திட்டத்தால் பாமர மக்களின் தொழில், வாழ்க்கை, எதிர்காலம் இனி என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


எண்ணூர் காட்டுப்பள்ளி மீன்பிடித் தளம் மற்றும் மீன் மார்க்கெட்

காட்டுப்பள்ளி கிராம மீனவ விவசாயியின் கருத்து

பழவேற்காடு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராஜ்கமல் கூறும்போது “இந்த விரிவாக்கத் திட்டம் என்பது எங்களின் கிராமம் அல்லது துறைமுகம் சார்ந்த இடத்தை மட்டும் தான் பாதிக்கும் என்பது இல்லை. இது ஒட்டுமொத்த தமிழகம் சார்ந்த நீர்நிலைகளையும், அந்த நீர்நிலைகளை சார்ந்தே வாழக்கூடிய மக்களுக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் எங்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராக இருப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. எங்களின் இந்த மீன்பிடித் தொழிலை விட்டுவிட்டு துறைமுகத்தில் கூலி வேலைக்கு செல்லும் நிலை வந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்கு வருகிறது. எங்கள் தொழில், வாழ்க்கை, நிலம் அனைத்தையும் அதானிக்கு தாரை வார்த்துத் தர எங்களால் இயலாது. எனவே எங்களுடைய கருத்துகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்பது மட்டும்தான் தற்போது ஒரே கோரிக்கையாக உள்ளது” என தெரிவித்தார்.


காட்டுப்பள்ளி மீனவ மக்கள்

சமூக ஆர்வலர்கள் கூறும் கருத்து

“கடற்கரை பகுதிகள் என்பது மக்களின் வாழ்வியல் மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த விஷயங்களை பாதுகாக்கக் வேண்டிய ஒரு இடமாக உள்ளது. தற்போது இதுபோன்ற துறைமுகங்கள் அதிக அளவில் வருவதால் கடல் மற்றும் கடலை சார்ந்து வாழக்கூடிய மீனவ மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு கடல் அரிப்பையும் அதிகளவில் ஏற்படுத்தும். பழவேற்காடு ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமல்லாது பழவேற்காட்டில் அமைந்துள்ள அதிகளவிலான பறவைகள் வந்து செல்லக்கூடிய பறவைகள் சரணாலயத்திற்கும் இந்த விரிவாக்கத் திட்டம் பேரிழப்பை உண்டாக்கும்.


கடற்கரை பகுதிகள்

கடலில் மண்ணைக் கொட்டி தகர்ப்பது அங்கு வாழும் சிறு சிறு பூச்சிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவற்றின் இனப்பெருக்கம் போன்ற நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும். மேலும் கிராம மக்கள் வேறு இடங்களுக்கு மாறி குடிபெயர்ந்தாலும் அவர்களின் ஆணிவேர்த் தொழில் என்னவோ அது மீன்பிடித்தொழில் தான். இதனை விட்டு விட்டு அவர்கள் வேறு தொழிலுக்கு செல்வது மிகவும் கொடுமையானது. தொழில் வளர்ச்சி அவசியம் என்றாலும், அப்பாவி மக்களின் வாழ்க்கை அதைவிட முக்கியமானதாக உள்ளது” என்கிறார் சமூக ஆர்வலர் ஸ்ரீனிவாசன்.

Updated On 25 Oct 2023 4:50 AM GMT
ராணி

ராணி

Next Story