முன்பெல்லாம் புருவத்தை திருத்துவது என்பது சினிமா பிரபலங்களே செய்து வந்தனர். ஆனால் இக்காலத்தில் புருவம் திருத்தம் என்பது ஐ-ப்ரோ, திரெட்டிங் என்ற பெயர்களில் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இதுபோன்ற அழகு பாராமரிப்புகளை செய்ய தெருவுக்குத்தெரு பார்லர்கள் உள்ளன. ஆனால் இன்று பார்லர்கள் அதிகரித்துள்ள அளவுக்கு திறமையான அழகு கலைஞர்கள் உள்ளனரா என்பது கேள்விக்குறியே. கத்துக்குட்டிகளை எல்லாம் பணியில் வைத்து, சில பார்லர் உரிமையாளர்கள், வரும் கஸ்டமர்களின் புருவங்களில் விளையாடிவிடுகின்றனர். இதனால், தங்கள் புருவங்களை அழகாக்க பார்லருக்கு செல்லும் கஸ்டமர்கள், அதில் திருப்தியின்றி திரும்பி வருகின்றனர். இந்நிலையில், ஐ-ப்ரோ சொதப்பிவிட்டால், அதனை எப்படி வீட்டிலேயே சரி செய்வது என சொல்லிக் கொடுக்கிறார் அழகு கலை நிபுணர் பிரியதர்ஷினி.
ஐ-ப்ரோ பவுடரால் புருவ ஷேப்பை சரிசெய்தல்
பார்லர்களில் சில நேரங்களில், ஒரு புருவத்தை அடர்த்தியாகவும், ஒரு புருவத்தை மெல்லியதாகவும் செய்து சொதப்பிவிடுவார்கள். நமக்கு என்ன செய்வதென்றே தெரியாது. ஒருவேளை நமக்கு அப்படி ஆகிவிட்டால், அதை எப்படி வீட்டிலேயே சரி செய்வது என்று பார்ப்போம். சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வீட்டில் திரெட்டிங் செய்யாதீர்கள். புருவத்தில் கட் விழுந்துவிடும். நன்கு கற்றுக்கொண்டு செய்யலாம். திரெட்டிங் செய்யாமல், சொதப்பிய ஐ-ப்ரோவை எப்படி சரிசெய்வதென்று பார்ப்போம். மார்க்கெட்டில் நிறைய ஐ-ப்ரோ பென்சில்கள் கிடைக்கின்றன. அதேபோன்று ஐ-ப்ரோ பவுடர்களும் கிடைக்கின்றன. ஐ-ப்ரோ பவுடரை வைத்து மெல்லியதாக ஆக்கப்பட்ட புருவத்தை சரிசெய்து, அடர்த்தியாக உள்ள புருவத்திற்கு மேட்ச் செய்யலாம்.
ப்ரஷ்ஷோடு இருக்கும் ஐ-ப்ரோ பவுடரை வாங்கிக்கொள்ளுங்கள். ஐ-ப்ரோ பவுடரை ப்ரஷ்ஷில் தொட்டுக்கொண்டு புருவத்தில் அப்ளை செய்யலாம். புருவத்தின் தொடக்கத்திலிருந்து போடாமல், அந்த இடத்தை விட்டுவிட்டு, சற்றுத்தள்ளி பவுடரை அப்ளை செய்ய வேண்டும். தப்பாகிவிடுமோ என பயந்து பயந்து ஐ-ப்ரோ பவுடரை அப்ளை செய்யாதீர்கள். அது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. சாதாரணமாக அப்ளை செய்யுங்கள். ஒரு வேளை புருவ லைனை தாண்டி, ஸ்கின்னில் பட்டுவிட்டால், ப்ரஷ்ஷை ஸ்க்ரால் செய்து சரி செய்துவிடலாம். இவ்வாறாக புருவம் மெல்லிதாக இருக்கும் பக்கத்தை சரி செய்துவிட்டு, பின்னர், புருவம் அடர்த்தியாக இருக்கும் பக்கம், லேசாக டச் செய்தால், இரு புருவங்களும் ஒரே அளவில் காட்சியளிக்கும்.
ஐ-ப்ரோ பவுடரை கொண்டு புருவத்தை சரிசெய்த பிறகு...
ஏன் நாம் இங்கு ஐ-ப்ரோ பென்சில் பயன்படுத்தாமல், ஐ-ப்ரோ பவுடர் பயன்படுத்தினோம் என்றால், நேச்சுரல் லுக்கிற்காகதான். பென்சில் பயன்படுத்தியிருந்தால் வரைந்தது போல இருந்திருக்கும். ஐ-ப்ரோ பவுடர் பயன்படுத்தியதால், பார்ப்பதற்கு இயற்கையான புருவம் போன்றே இருக்கிறது. மேலும் நாம் எங்காவது போகும்போது, அடிக்கிற வெயிலுக்கு வியர்வை வரும்போது, தெரியாமல் புருவத்தின்மீது துடைத்துவிட்டால், பென்சிலில் வரைந்திருந்தால் அது அழிந்துவிடும். இதுவே ஐ-ப்ரோ பவுடர் பயன்படுத்தினால், புருவத்தின் மீது வியர்வையை துடைத்தாலும் அது அழியாது.
