பெண்கள் பலரும் முகம் அழகாக, பளபளப்பாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான க்ரீம்களையும், மேக்கப் பொருட்களையும் வாங்கி பயன்படுத்துவது உண்டு. மேலும் அடிக்கடி பியூட்டி பார்லர்களுக்கு சென்று ஃபேஷியலும் செய்துகொள்வார்கள். ஆனால் நம்மை அழகாக காட்ட, வேதிப்பொருட்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதுபோல பார்லர்களுக்கு சென்று அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கு மாறாக வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே நம்மை அழகுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான சில எளிய வழிமுறைகளை அழகுக்கலை நிபுணர் பிரஷாந்தி கூறியுள்ளார்.
அரிசிமாவு முகத்திற்கு பளபளப்பை கொடுக்கும்
அரிசிமாவு எல்லோரது வீட்டிலும் இருக்கும். 1 டேபிள்ஸ்பூன் அளவு அரிசிமாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனோடு கொஞ்சம் பால் எடுத்துக்கொண்டு, இரண்டையும் நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும். மிகவும் கெட்டியாக இல்லாமல், கொஞ்சம் தண்ணியாக கலந்துகொள்ள வேண்டும். பின்னர் அதனை முகத்தில் மாஸ்க் போல அப்ளை செய்ய வேண்டும். 5 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சலூனுக்கு சென்று க்ளென்ஸ் செய்த லுக்கை தரும். அடுத்ததாக ஸ்க்ரப் (முகத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றும் முறை) செய்ய வீட்டிலிருக்கும் எந்த காபித்தூளாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம். அதோடு சர்க்கரை, தேன், எலுமிச்சை சாறு எடுத்துக்கொண்டு, நான்கையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பேஸ்ட் பதத்திற்கு வந்தபின் முகத்தில் அப்ளை செய்து, 5 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அடுத்து ஃபேஸ் மாஸ்க். பாப்பாளி பழம் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, அதனுடன் தேன் இரண்டு அல்லது மூன்று டேபிள் ஸ்பூன்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல போட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து மெதுவாக முகத்தை கழுவ வேண்டும். இது முகத்திற்கு நல்ல புத்துணர்ச்சியை தரும். சலூன் போய் ஃபேஷியல் செய்தது போன்ற லுக்கை கொடுக்கும். இவற்றை தினமும் செய்யலாம். உங்களுக்கு நேரம் இல்லையென்றால் வாரத்திற்கு 2 முறை செய்யலாம். இது முகத்திற்கு நல்ல எனர்ஜியை கொடுக்கும். நமக்கு நம்மை பிடித்தால்தான், நம் உடல் உறுப்புகளுக்கும் நம்மை பிடிக்கும். நாம் என்ன கொடுக்கிறோமோ அதைத்தான் அவை திரும்பக் கொடுக்கும். நீங்கள் எந்தளவு சருமத்தின் மீது அக்கறை எடுத்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவு அது அழகாக தெரியும்.
காபித்தூள், சர்க்கரை, எலுமிச்சை கலந்த ஃபேஸ் மாஸ்க்கை முகத்திற்கு போடலாம்
அதுபோல ஸ்க்ரப் மிகவும் மென்மையாக செய்ய வேண்டும். சர்க்கரை கொஞ்சம் கடினமானதாக இருக்கும். அதை காபி பவுடர் மற்றும் எலுமிச்சை சாறில் கலக்கும்போது கரைய கொஞ்சம் நேரம் எடுக்கும். அதற்குள் நீங்கள் எடுத்து முகத்தில் அப்ளை செய்யும்போது, முகத்துவாரங்கள் இருப்பவர்களுக்கு வலியை கொடுக்கும். முகத்திற்கு எரிச்சலாகவும் இருக்கும். நீங்கள் பயன்படுத்துவதை பொறுத்துதான் ரிசல்ட் கிடைக்கும். அதனால் கொஞ்சம் மென்மையாக, அழுத்தி முகத்தில் மசாஜ் செய்யாமல் மெதுவாக செய்யுங்கள். இதுபோல வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகத்தை பராமரிக்கலாம். அதற்காக சலூனிற்கு செல்லக்கூடாது என்றில்லை. சலூனிற்கு செல்ல முடியாதவர்கள் இந்த டிப்ஸை பயன்படுத்திக் கொள்ளலாம். சலூனில் நிறைய மேம்பட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றை செய்யும்போது இன்னும் அழகான சருமம் கிடைக்கும். இதில் ஒருசில சதவீதமே வீட்டில் கிடைக்கும். பப்பாளி மாஸ்க் புத்துணர்ச்சியை கொடுக்கும். இவற்றை எல்லாம் முடித்துவிட்டு நல்ல சீரம் பயன்படுத்தினால் சருமம் ஹைட்ரேட்டடாக இருக்கும். காலையிலிருந்து மாலைவரை பல இடங்களுக்கு சுற்றி திரிந்திருப்பீர்கள். அப்படியே வந்து தூங்குவீர்கள். இதனால் நிறைய இறந்த செல்கள் உருவாகும். முகத்தில் போர்செஸ் திறந்திருக்கும். இதனால் சருமம் நிறைய பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளன. இதனால் வெளியே சென்றுவிட்டு வந்தால் முதலில் ஃபேஸ்வாஷ் செய்ய வேண்டும்.
வெளியே சென்றுவந்தால் முதலில் முகத்தை கழுவ வேண்டும்
வெளியில் இருந்து வந்தவுடன் முகத்தை சோப்பு போட்டு கழுவுவதைவிட, ஃபேஸ்வாஷ் வைத்து கழுவவேண்டும். இரவில் சீரம் அல்லது நீங்கள் எப்போதும் பயன்படுத்தும் க்ரீம்களை பயன்படுத்துங்கள். நீங்கள் காலையில் எழுந்துப் பார்த்தால், முகம் புத்துணர்ச்சியுடன், பளபளப்பாக இருக்கும். இரவில் எப்போதும் இதனை செய்யுங்கள். நம் சருமத்திற்காக நாம் நேரம் செலவிடுவதில் தவறில்லை. பலரும் நம்மை பார்க்கும்போது முதலில் நம் தோற்றத்தைதான் பார்ப்பார்கள். உங்கள் சருமத்திற்கு என்ன பயன்படுத்துகிறீர்கள்? எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்றுதான் கேட்பார்கள். அப்போது நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். அப்படி நம்மை நாம் பார்த்துக் கொண்டால்தான், சருமம் அழகாக காட்சியளிக்கும். பின்னர் பார்த்துக் கொள்ளலாம், அசதியாக இருக்கிறது, நாளைக்கு போட்டுக் கொள்ளலாம் என தவிர்க்காமல் தினமும் முகத்தை கவனிக்க வேண்டும். இரண்டு, மூன்று நாட்கள் செய்தால், அது தினசரி பழக்கமாகிவிடும். இரவு முகத்தை சுத்தம் செய்து, சீரம் அல்லது க்ரீம் பயன்படுத்துங்கள். கொஞ்சமாக பயன்படுத்தினால் போதும்.
நெய் முகத்திற்கு அழகை கொடுக்கும்
இந்த டிப்ஸ் எதனையும் வீட்டில் செய்ய முடியவில்லை என்றால், இப்போது சொல்வதை செய்து பாருங்கள். வீட்டில் இருக்கும் நெய்யை கையில் வைத்து கலக்கி முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யலாம். இது கழுவுவதற்கு கொஞ்சம் எண்ணெயாக இருக்கும். அதனை மிதமான வெந்நீரில் கழுவிவிட்டு அப்படியே விட்டுவிடுங்கள். முகம் கொஞ்சம் எண்ணெய்ப் பசையாக இருக்கும். வீட்டில் இருந்தால் பயன்படுத்துங்கள். வெளியில் செல்லும்போது பயன்படுத்த வேண்டாம். இதனை தினமும் செய்தால், முகம் அழகாக மாறும். இதை வறண்ட சருமம் இருப்பவர்கள் செய்யக்கூடாது. நெய் இன்னும் முகத்தை வறண்டதாக மாற்றும். சாதாரண சருமம் கொண்டவர்கள் இதை செய்யலாம். முகம் அழகாக இருக்க வேண்டும் என்றால் இதை மட்டும் செய்யக்கூடாது. நாம் என்ன உடலுக்குள் எடுத்துக் கொள்கிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் நிறைய குடிக்க வேண்டும். சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். அப்போதுதான் முகம் நன்றாக இருக்கும்.
