இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

நம்மை நாமே பராமரித்துக் கொள்வதால் அழகு மேம்படுவதுடன் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் என்கின்றன பல ஆய்வுகள். ஆனால் வாரம் முழுவதும் வேலை வேலை என்று ஓடும் பலருக்கு தங்களை பராமரித்துக் கொள்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் பலபேர், இருக்கும் கொஞ்ச நேரத்தில் எதையாவது கிரீமை தடவலாம் என்று நினைத்து நிபுணர்களின் ஆலோசனையின்றி தனது சருமத்திற்கு ஒவ்வாத பொருட்களை வாங்கி பயன்படுத்தி அதனால் பல்வேறு பக்கவிளைவுகளை சந்திக்கின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்த்து, இயற்கையாக வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து எப்படி சருமத்தை பராமரிப்பது என்பது குறித்தும் மற்றும் வெளியே ப்ராடக்ட்ஸ் வாங்கும்போது எப்படி தேர்ந்தெடுத்து வாங்குவது என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் அழகுக்கலை நிபுணர் லலிதா.

சரும பராமரிப்பு குறிப்புகள்!

நிறையப்பேருக்கு சருமம் வறண்டு காணப்படும். அவர்கள் ஆரஞ்சுபழ சாறை சருமத்தின்மீது தடவலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் சருமத்தின்மீது தேன் தடவலாமா என்ற சந்தேகம் இருக்கும். முகத்தில் நிறைய முடி இருப்பவர்கள் தேன் தடவுவதை தவிர்த்து விடலாம். ஆனால் முகத்தில் முடி இல்லாதவர்கள் புருவம் மற்றும் கண்ணிமை தவிர்த்து மற்ற இடங்களில் தேன் தடவி சிறிது நேரம் வைத்திருந்து பிறகு குளிக்கலாம். இப்படி செய்வதால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைக்கும். அதேபோல சரும வறட்சி இருப்பவர்கள் தினமும் மாய்ச்சுரைஸர் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, 30 முதல் 35 வயதில் இருப்பவர்கள் மாய்ச்சுரைஸர் பயன்படுத்தாவிட்டால் விரைவில் சுருக்கங்கள் ஏற்படும்.

மாய்ச்சுரைஸரை கிரீமாகவோ சீரமாகவோ பயன்படுத்தலாம். இரவு நேரங்களில் சீரம் பயன்படுத்துவது சரியா என்ற கேள்வி நிறையப்பேருக்கு இருக்கும். வறண்ட சருமம் கொண்டவர்கள் தூங்க போகும் முன்பு முகத்தை நன்றாக கழுவிவிட்டு, 1 அல்லது 2 சொட்டு சீரமை முகத்தில் தடவலாம். கருமை, முகப்பரு நீங்க, சருமத்தை பொலிவாக்க என வெவ்வேறு சீரம்கள் இப்போது கிடைக்கின்றன. அவற்றில் எது தேவையோ அதை வாங்கி பயன்படுத்தலாம். அதுவே எண்ணெய் சருமம் கொண்டவர்கள் தினமும் மாய்ச்சுரைஸர் தடவ வேண்டிய அவசியமில்லை.

வறண்ட சருமம் உள்ளவர்கள் தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவி 1 அல்லது 2 சொட்டு சீரமை முகத்தில் தடவலாம்

சரும கருமை கொண்ட சிலர் அதனை போக்க ஃபேஷியல் அல்லது ப்ளீச் செய்கிறார்கள். ஆனால் இதனை அடிக்கடி செய்யாமல் மாதம் ஒருமுறை செய்துகொள்ளலாம். பொதுவாக முகத்தை மசாஜ் செய்யும்போது அங்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால் அதற்கு நல்ல தரமான ப்ராடக்ட்ஸைத்தான் பயன்படுத்த வேண்டும். சிலருக்கு ஹெர்பல் ப்ராடக்ட்ஸ் மட்டும் செட்டாகுமென்றால் அதனை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு அரோமா மேஜிக் மற்றும் ப்ளாசம் கோச்சார் போன்ற ப்ராடக்ட்ஸை நீண்ட காலம் பயன்படுத்தலாம். லேசர் சிகிச்சை போன்ற பல்வேறு சரும சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள்கூட இவற்றை பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம்.

ப்ரைட்டனிங் சீரம், பிக்மெண்ட் சீரம், ஆன்டி ஏஜிங் சீரம் போன்ற சீரம்களை தினசரி இரவில் பயன்படுத்தலாம். இதேபோல் க்ரீம்களும் இருக்கின்றன. அவற்றையும் சருமத்தின் தன்மைக்கேற்றவாறு நிபுணரின் ஆலோசனையுடன் வாங்கி பயன்படுத்தலாம். நிறையப்பேருக்கு சீரம், கிரீம் இரண்டையும் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இருக்கும். அவர்கள் இரவில் சீரம் பயன்படுத்தினால் காலை கிரீம் பயன்படுத்தலாம். அதுவே காலையில் சீரம் பயன்படுத்தினால் இரவில் கிரீம் பயன்படுத்தலாம். ஆனால் பகலில் SPF இருக்கும் கிரீம்களை பயன்படுத்திவிட்டு, இரவில் சீரம் தடவினால் நல்லது. ப்ரைட்டனிங் கிரீம் பயன்படுத்த நினைப்பவர்கள் மாய்ச்சுரைஸருக்கு தனி கிரீம், ப்ரைட்டனிங்கிற்கு தனி கிரீம் என்று பயன்படுத்தாமல் SPF உள்ள ஒரே கிரீமை பயன்படுத்தலாம்.

கிரீம் பயன்படுத்தும்போது நல்ல ரிசல்ட் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் ஃபேஷியல் செய்து சருமத்தை க்ளீன் செய்துவிட்டு பயன்படுத்தவேண்டும். கிரீம் பயன்படுத்த விரும்பாதவர்கள் தக்காளி சாறுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம். இப்படி தொடர்ந்து செய்துவர, வறண்ட சருமம் மாறி பொலிவுறும்.

தலை குளிக்கும்போது நல்ல தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்

தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்!

இப்போது நிறையப்பேருக்கு இருக்கும் சந்தேகங்களில் ஒன்று தலைக்கு தினமும் எண்ணெய் வைக்கலாமா என்பதுதான். இன்றைய காலநிலை மற்றும் சூழலுக்கு தினசரி எண்ணெய் தேய்ப்பது சரியாக இருக்காது. ஏனென்றால் நிறையப்பேருக்கு இதனால் பொடுகு பிரச்சினை வருகிறது. அதேபோல் தலைக்கு குளிக்கும்போது நல்ல தரமான ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி நன்றாக தலையை தேய்த்து கழுவ வேண்டும். முடியை சரியாக கழுவாவிட்டாலும் நரைமுடி, முடிகொட்டுதல் போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

இப்போது நூறில் 80 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் கட்டாயம் தங்களை பராமரித்துத்தான் ஆகவேண்டும். அதற்காக பார்லர்களுக்கு கட்டாயம் செல்லவேண்டும் என்று அவசியமில்லை. முடிந்தவரை வீட்டிலேயே self care செய்துகொள்வது நல்லது.

அதேபோல் ஆன்லைனில் ப்ராடக்ட்ஸ் வாங்கும்போது அதில் போலியான பொருட்களை குறைந்த விலையில் விற்பது, காலாவதி தேதி, விலை போன்றவற்றை மாற்றி விற்பனை செய்வது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு பொருட்களை வாங்கவேண்டும்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்கவேண்டும். அப்படி குளிக்கும் முன்பு தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறவைத்து பிறகு முடியை கழுவினாலே போதுமானது.

சருமத்திற்கு மட்டுமல்லாமல் தலைமுடிக்கும் மாய்ச்சர் கட்டாயம் தேவை. இல்லாவிட்டால் தலைமுடி வெடித்தல், முடி கொட்டுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதனை தவிர்க்க, எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம்

பாதவெடிப்பு நீங்க உருளைக்கிழங்கு சாறை முறையாக பயன்படுத்தும் வழிகள்

பாத வெடிப்பு நீங்க!

நிறையப்பேருக்கு பாத வெடிப்பு பிரச்சினை இருக்கும். அதற்கு, உருளைக்கிழங்கு சாறை பூசலாம். ஆனால் அதற்கு பாதங்கள் சுத்தமாக இருப்பது அவசியம். வேண்டுமானால் பெடிக்கியூர் செய்துவிட்டு, பிறகு அந்த சாறை தடவலாம். இப்படி செய்வதால் பாத வறட்சி நீங்கி மிருதுவாகும். வெடிப்பும் நீங்கிவிடும்.

கருவளையம் நீங்க!

கண்களை சுற்றியுள்ள கருவளையம் நீங்க தினசரி க்ரீம் பயன்படுத்த நினைப்பவர்கள் அரோமா மேஜிக் போன்ற ஹெர்பல் ப்ராடக்ட்ஸை பயன்படுத்தலாம். இவை கிரீம் வடிவிலோ அல்லது ஜெல் வடிவிலோ கிடைக்கின்றன.

இதுபோன்ற ப்ராடக்ட்ஸ் பயன்படுத்த விரும்பாதவர்கள் வைட்டமின் இ ஆயிலுடன் இரவில் பயன்படுத்தும் கோல்டு கிரீமை கலந்து கண்களை சுற்றி தடவிவிட்டு தூங்கச் செல்லலாம். இப்படி தொடர்ந்து செய்துவர, கருவளையம் படிப்படியாக குறைந்துவிடும்.

Updated On 25 Nov 2024 3:56 PM GMT
ராணி

ராணி

Next Story