முடி மற்றும் ஸ்கேல்ப்பை பராமரிப்பது எப்படி? முடி கொட்டுவதற்கான காரணங்கள் என்னென்ன? கலரிங் மற்றும் ஸ்டைலிங் என மொத்த ஹேர் கேர் குறித்தும் விளக்கமாக பேசியுள்ளார் அழகுகலை நிபுணர் தனசேகரன்.
ஆரோக்கியமான முடிவளர்ச்சிக்கு ஸ்கேல்ப் தூய்மை அவசியம்
ஸ்கேல்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?
ஆரோக்கியமான முடிக்கு அடிப்படையே ஸ்கேல்ப்தான். நாம் ஸ்கேல்ப்பை எந்த அளவு ஆரோக்கியத்துடன் வைத்துள்ளோமோ, அந்த அளவுதான் தலைமுடியும் ஆரோக்கியமானதாக இருக்கும். எண்ணெய் ஸ்கேல்ப், ட்ரை ஸ்கேல்ப், சென்சிட்டிவ் ஸ்கேல்ப் என ஸ்கேல்ப்பில் பல வகைகள் உள்ளன. பொடுகு இருந்தால் க்ளென்ஸிங் ஷாம்பூ பயன்படுத்தி அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டும். பாக்டீரியா பரவலைத் தடுக்க, தலையை ஈரப்பதம் இன்றியும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பசை இருப்பவர்கள் பேலன்ஸிங் ஸ்கேல்ப் ஷாம்புவை பயன்படுத்தலாம். அது முடியை ஹைட்ரேட் செய்யும். அப்படி ஹைட்ரேட் ஆகும்போது, அதிகளவிலான எண்ணெய் பசை உருவாகாது. ஆனால் சிலர் எண்ணெய் பசையாக இருக்கிறது என்று இரண்டு, மூன்று முறை தலையை வாஷ் செய்வர். அது ஸ்கேல்ப்பை இன்னும் மிருதுவாக மாற்றும்.
அதனால் தகுந்த பேலன்ஸிங் ஸ்கேல்ப் ஷாம்புவை பயன்படுத்த வேண்டும். சிலர் எப்போதும், ஸ்கேல்ப், ட்ரையாக இருக்கிறது எனக் கூறுவர்கள். அவர்கள் ஜென்டில் ஷாம்பூவை பயன்படுத்தலாம். அதுபோல சல்பைடு ஃபீரி ஷாம்பூ அனைவருக்கும் ஒத்துவராது. அதாவது கட்டிடம் சம்பந்தப்பட்ட வேலைகள், தினமும் வாகனம் ஓட்டுபவர்கள், அதிகம் பயணிப்பவர்களுக்கு சல்பைடு ஃப்ரீ ஷாம்பூ சரிவராது. ஏனெனில் வெயில், மாசுவால் தலை டி-ஹைட்ரேட் ஆகும். அவர்களுக்கெல்லாம் சல்பைடு ஃப்ரீ - ஷாம்பூ சரிவராது. வெளியில் அதிகம் செல்லாதவர்கள், தினமும் தலைக்கு குளிப்பவர்கள் சல்பைடு ப்ரீ ஷாம்பூவை பயன்படுத்தலாம். ஸ்கேல்ப் ஹைட்ரேட் மற்றும் சுத்தமாக இருந்தாலே ஆரோக்கியமானதாக இருக்கும்.
ஒரு முடியின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள்
ஸ்கேல்ப் ஆரோக்கியமானதாக இருந்தாலும் முடி கொட்டுவது ஏன்?
முடி கொட்டுபவர்கள் முதலில் எதனால் முடி கொட்டுகிறது என்பதை அறிய வேண்டும். முதலில் முடி கொட்டுவது எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். நாம் முடியை எவ்வாறு பராமரிக்கிறோம், வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மற்றொன்று முடியின் சுழற்சிமுறை. அதவாது ஒரு முடியின் வாழ்நாள் காலம் 3 முறைகளை கொண்டது. வளர்ச்சி, ஓய்வு, உதிர்தல். இந்த சுழற்சி முறை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அதாவது ஒரு முடியின் வாழ்நாள் காலம் 5 ஆண்டுகள். அதன்படி உதிர்தல் நிலையில் இருக்கும்போது முடி உதிர்வது இயல்பான ஒன்று. 100 நாட்கள் வரை முடி உதிரலாம். அதற்கு மேல் முடி உதிர்வு இருந்தால், அதற்கு வேறு பிரச்சனைகள் காரணமாக இருக்கலாம். ஒரு ஃபாலிக்குள் அதன் வாழ்நாளில் 25 முறை முடியை மீண்டும் வளர்ச்சியடைய செய்யும். இது இயல்பானது. இந்த முடி உதிர்தலுக்கும், மீண்டும் வளர்வதற்கும் இடையேயான இடைவெளியில் ஃபாலிக்குள்ஸ் அடைபடும். அவை ஆக்ஸிஜன் அடைப்பு போன்று இருக்கும். அதாவது, ஸ்டெம்செல்ஸ் இரண்டு ஒன்று சேர்ந்து மீண்டும் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இந்த அடைப்பு ஸ்டெம்செல்ஸை ஒன்றுசேர விடாது. இதனால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். இதற்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன.
ட்ரை ஹேர்...
சென்னையில் காற்றின் ஈரப்பதம், மாசு போன்றவற்றால் கண்டிப்பாக முடி ட்ரை ஆகும். அதனால் வெளியில் செல்லும்போது எப்போதும் ஹேர் சீரம் பயன்படுத்துங்கள். வெறும் ஷாம்பூ மட்டும் போட்டுவிட்டு வெளியே போனால் முடி ட்ரை ஆகும். ஏனெனில் தலைக்கு குளிக்கும்போது கியூட்டிக்கிள் திறக்கும். அப்போது தலைக்கு எதுவும் போடாமல் வெளியே போனால், மாசுக்கள் சென்று கியூட்டிக்கிள்ஸை அடைத்துக்கொள்ளும். இதனால் ஈரப்பதம் இன்றி முடி ட்ரை ஆகும். இதனை தடுக்க சரியான ஷாம்பூ, கன்டிஷனர், சீரம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
தலைக்கு குளித்தபின் முடிக்கு சீரம் பயன்படுத்துவது நல்லது
சுருள் மற்றும் பராமரிக்க இயலாத முடி...
அடர்த்தி மற்றும் சுருள் முடி பராமரிக்க முடியாததாக இருக்கும். அவர்களுக்கு முறையான ஸ்டைலிங் வேண்டும். முடிக்கு சரியான வடிவம் இருந்தால், பரந்தமாதிரி தெரியாது. இந்த முடியை கொண்டவர்கள் ஒரு நல்ல சலூனில் பிராப்பர் ஹேர் கட் செய்ய வேண்டும். இதில் பல ஸ்டைல்கள் உள்ளன. அந்த சுருள் வடிவத்தை வைத்து கொண்டே முடியை ஸ்டைல் செய்யலாம். அதுபோல ஃப்ரீஸியாக இருக்கும் முடியை ஸ்டைட்டனிங், ஸ்மூத்னிங் செய்யாமல் முடியை ஹைட்ரேட் செய்ய வேண்டும். அப்போது முடி ஆரோக்கியமாகவும், ஷைனாகவும் தெரியும்.
முதலில் எந்த ஹேர் கலரை பயன்படுத்தினீர்களோ, அதையே தொடர்வது நல்லது
கலரிங் செய்த முடியை பராமரிப்பது எப்படி?
முன்னரே முடிக்கு கலரிங் செய்தவர்கள் எந்த பிராண்டை பயன்படுத்தினீர்களோ, அதன் கலரையே பயன்படுத்தலாம். முதல்முறையாக கலரிங் செய்பவர்கள் நீங்கள் முடிக்கு பயன்படுத்தப்போகும் கலரிங் பவுடரை முதலில் முடிக்கு அப்ளை செய்யாமல், காதுக்கு பின்புறம் கொஞ்சமாக அப்ளை செய்யுங்கள். பின்னர் 48 மணிநேரம் கழித்து, அந்த இடத்தில் எந்த பாதிப்பும் இல்லை என்றால் அந்த கலரை பயன்படுத்துங்கள். எப்போதும் என்ன கலர் வேண்டும் என்பதை மட்டும்தான் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதற்கு எந்த டெவலப்பர் வேண்டும் என்பதையும் கேட்க வேண்டும். சாதாரணமாக நிறங்கள் என்றால், 20 வால்யூம் (6% ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டது) வரைதான் ஸ்கேலப்பில் அப்ளை செய்ய வேண்டும். சிலர் 30 வால்யூமில் வெளிர் நிறங்களை கலர் செய்வர். இதனால் ஸ்கேல்ப் பாதிப்படையும். இதனால் முடி உதிர்வு ஏற்படும். பொதுவாக ஹேர் கலரிங் என்றால் எல்லோரும் நினைப்பது, கலரை அப்ளை செய்தால், கலர் வந்துவிடும். ஆனால் அதற்கு பின் இருக்கும் தொழில்நுட்பம் யாருக்கும் தெரியாது. கலரிங்கில் இரண்டு செயல்பாடுகள் உள்ளன.
லைட்னிங், டெபோசிஷன் என இரண்டு செயல்பாடுகள் உள்ளன. கருப்பு முடியில் வெளிர் நிறங்களை பயன்படுத்தும்போது எப்படி முடியில் வெளிர் நிறத்தை காட்டுகிறது? அதற்குத்தான் ப்ரீ லைட்னிங் செய்யப்படுகிறது. அதன்பின் கலர் டெபோசிஷன் மிக முக்கியமானது. சிலர் ப்ளான்ட் கலர் கேட்டால், ப்ரீ லைட்னர் போட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். அது தவறு. நேரடியாக 40 வால்யூம் பயன்படுத்தி கலர் செய்தால், முடி தானாகவே சூடாகும். இந்த சூட்டால் முடி வெடிக்கும். அது கலரிங் செய்யும்போது தெரியாது. பின்னர்தான் தெரியும். அதனால் பாதுகாப்பான டெவலப்பரை தேர்வு செய்து கலர் செய்யுங்கள். முடி ஆரோக்கியமாக இருக்கும். அதுபோல கலரிங் செய்து முடித்தவுடன் கண்டிப்பாக கலர் பாதுகாப்பு ஷாம்புவை பயன்படுத்துங்கள். இது நிறைய பிராண்டுகளில் உள்ளது. இது கலரிங் ஹேரை பாதுகாப்பாக வைத்திருக்கும். அதுபோல கலர் செய்தவர்களுக்கு கன்டீஷனர் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் க்யூட்டிக்கிள்ஸை மென்மையாக்கி, பாதுகாக்க கன்டிஷனர் அவசியமான ஒன்று.
தலைமுடியின் அடியில் வெடித்துள்ள முடிகளை கட் செய்தல்...
ஸ்டைலிங்...
ஸ்டைலிங் என்பது வயதை பொறுத்தது கிடையாது. யாருக்கு எந்த ஸ்டைல் வேண்டுமோ அதை செய்துகொள்ளலாம். ஸ்டைலை நீங்கள் எப்படி கொண்டு செல்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் ஸ்டைலிங் ப்ராடக்ட் குறித்து தெரிந்துகொண்டு, அதனை சரியாக பயன்படுத்துங்கள். ரூட் லிப்ட் என ஒரு ப்ராடக்ட் உள்ளது. இது ஸ்கேல்ப்புக்காக தயாரிக்கப்பட்டது. முதலில் ட்ரை செய்துவிட்டு, முடியை ஸ்டைலிங் செய்யுங்கள். குட்டையான, நீளமான என அனைத்து தலைமுடிக்கும் தனி ஸ்டைல் உள்ளது. அதை வாடிக்கையாளர்கள் கேட்க வேண்டும். ஹேர் கட் செய்தால் சலூன்களிலேயே ஒரு ஸ்டைல் செய்யப்படுகிறது. உங்களுக்கு எது வேண்டுமோ அதை நீங்கள்தான் கேட்க வேண்டும்.
