இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும், ஆசிய கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தொடங்குகின்றன. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே அணியில் இடம்பெறுகின்றன. இதுபெரும் கவனம் ஈர்த்துள்ளது. காரணம், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன. கடந்த மே மாதத்துக்குப் பிறகு, இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. பல அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி பிசிசிஐ பாகிஸ்தான் உடன் விளையாட ஒப்புக் கொண்டுள்ளது. மற்ற அணிகளின் போட்டிகளைவிட உலகளவில் ஒரே நேரத்தில் மில்லியன்‌கணக்கான ரசிகர்களை கவரும் கிரிக்கெட் போட்டி என்றால் அது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிதான். ஆனால் இந்தியாவுடன் விளையாடவுள்ளதை நினைத்து இப்போதே பாகிஸ்தான் அணி பயத்தில் கதற தொடங்கியிருக்கிறது. இதுகுறித்தும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சில சுவாரஸ்ய போட்டிகள் குறித்தும் இங்கு காணலாம்.


பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஒரே அணியில் இடம்பெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகள்

ஆசிய கோப்பை 2025

இங்கிலாந்துக்கு எதிராக டெண்டுல்கர் - ஆண்டர்சன் கிரிக்கெட் தொடரில் விளையாடிவிட்டு நாடு திரும்பிய இந்திய அணி, அடுத்த மாதம் முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அவை இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளாம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.

தொடரின் முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், இந்திய அணி செப்டம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்துடன் முதல் லீக் போட்டியில் விளையாடவுள்ளது. அதே சமயம் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? எனவும் ரசிகர்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையொட்டி சமீபத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளை இந்தியா புறக்கணித்தது. அதேபோன்று தற்போதும் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா என கேள்விகள் எழுந்துள்ளன. அதுவும் இரு அணிகளும் ஒரே அணியில் இடம் பெற்றுள்ளது இன்னும் கவனம் பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கிடையே நிலவும் அரசியல் பதட்டங்கள் மற்ற போட்டிகளைவிட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை எப்போதும் உயிர்ப்புடன் வைத்துள்ளது. உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப்பில் ரத்து செய்யப்பட்டது போல், ஆசிய கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது. எனவே இது இன்னும் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.


இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ஆசிய லீக் போட்டி செப்.14ஆம் தேதி நடைபெற உள்ளது

இந்நிலையில், ஆசிய கோப்பையில் இந்தியா எங்களுடன் விளையாட மறுத்துவிட வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி தெரிவித்துள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், "இந்தியா எங்களை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமாக அடிக்கும்" என்பதுதான். ஏனென்றால் தற்போதைய பாகிஸ்தான் அணி துளியும் ஃபார்மில் இல்லை. அதனாலேயே தனது சொந்த அணியை நினைத்து, விரக்தியின் உச்சத்தில் இந்த வார்த்தைகளை பாசித் அலி உதிர்த்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் மோதல்...

1947ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் பிரிவினை நடைபெற்ற பிறகு, இரு நாடுகளின் உறவுகள் பல்வேறு அரசியல் பதற்றங்களால் நிறைந்திருந்தன. அந்த உறவுகள் கிரிக்கெட் மைதானத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கின. 1952ஆம் ஆண்டு இந்தியா–பாகிஸ்தான் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் மோதின. அதிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டியும் சாதாரண விளையாட்டு என்பதைத் தாண்டி தேசிய பெருமை மற்றும் உற்சாகத்தின் அடையாளமாகவே கருதப்படுகின்றன.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை டெஸ்ட், டி20, ஓடிஐ என 3 முக்கிய வடிவங்களிலும் மொத்தம் 208 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் பாகிஸ்தான் 88 போட்டிகளிலும், இந்தியா 76 போட்டிகளிலும் வென்றுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 59 டெஸ்டில் மோதியுள்ளன. அந்த 59 போட்டிகளில் , இந்தியா 9 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் 12 முறை வெற்றி பெற்றுள்ளது. 38 போட்டிகள் சமமாக முடிந்துள்ளன. இரு அணிகளும் இதுவரை 136 ஓடிஐ போட்டிகளில் விளையாடியுள்ளன. அந்த 136 போட்டிகளில், இந்தியா 58 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் 73 முறை வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவு தெரியவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இதுவரை 13 T20 போட்டிகளில் சந்தித்துள்ளன. அந்த 13 போட்டிகளில் , இந்தியா 10 முறை வென்றுள்ளது. பாகிஸ்தான் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு, பல அரசியல் பிரச்சனைகளுக்கு மத்தியில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி இரு அணிகளும் மோத உள்ளன.


2011-ல் முதல்முறையாக உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா படைத்த சாதனைகள்!

ICC உலகக் கோப்பை மற்றும் T20 உலகக் கோப்பை போன்ற உலகளாவிய போட்டிகளில், இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறந்த சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, உலகக் கோப்பை வரலாற்றில் (ODI) இந்தியா பாகிஸ்தானை எதிர்த்த 8 ஆட்டங்களிலும் 8 முறையும் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. 2021-ஆம் ஆண்டு T20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் முதல் முறையாக இந்தியாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பெற்றது. 1992-ல் சிட்னியில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்முதல், 1996-ல் பெங்களூருவில், 1999 மான்செஸ்டரில், 2003-ல் செஞ்சுரியனில், 2011 மொஹாலியில், 2015 அடிலெய்டுவில், 2019, 2023 என இதுவரை நடைபெற்றுள்ள 8 போட்டிகளிலும் இந்தியாவே ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

அதுபோல டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு, பாகிஸ்தானுடன் மோதிய இரண்டு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றது. அத்தொடரில் முதல் போட்டியில் ஆட்டம் டிராவாக, BOWLED OUT முறையில் தோனியின் அசத்தலான வியூகங்களால் இந்தியா வென்றது. இறுதிப் போட்டியிலும் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை வசப்படுத்தியது இந்தியா. அதன் பின்னர் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2012ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் களம் கண்டன. இலங்கை கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தானை 128 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா. விராட் கோலியின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 3 ஓவர்கள் எஞ்சியிருக்கும் போதே இந்தியா அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற தொடரில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், 20 ஓவர்களில் 130 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 9 பந்துகள் எஞ்சியிருக்கும் போதே வெற்றி அடைந்தது. 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி வெற்றிக் கணக்கை தொடர்ந்தது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 118 ரன்களை மட்டுமே எடுத்தது. இப்போட்டியில் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் அரைசதம் விளாசியதோடு, 13 பந்துகள் எஞ்சியிருக்கும் போதே இந்தியா இலக்கை எட்ட வித்திட்டார். இந்த தொடர் வெற்றிக் கணக்கை மாற்றும் வகையில் முதல்முறையாக 2021-இல் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான பல போட்டிகளிலும் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரோஹித் சர்மா போன்றோர் ரசிகர்கள் மறக்க முடியாத ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷாயீத் ஆஃப்ரிதி, பாபர் அசாம் போன்றோரும் இந்தியாவுக்கு கடும் சவாலாக இருந்துள்ளனர்.

இப்படி இந்தியா - பாகிஸ்தான் பல போட்டிகளில் விளையாடி இருந்தாலும், சில போட்டிகள் பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.


1986 ஆஸ்திரேலிய கோப்பைக்கான இறுதிப்போட்டியில் பாக். வீரர் ஜாவேத் அடித்த கடைசி சிக்ஸர்

1986-ல் நடைபெற்ற ஆஸ்திரேலியா கப்

1986-ல் நடைபெற்ற ஆஸ்திரேலிய கோப்பைக்கான இறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 245 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக கவாஸ்கர் 92 ரன்களும், ஸ்ரீகாந்த் மற்றும் வெங்சர்க்கார் அரைசதமும் அடித்தனர். இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும், ஜாவேத் மியாண்தத் அபாரமாக ஆடி ரன்களை குவித்தார். கடைசி பந்தில் 4 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், பந்து வீச்சாளர் சேத்தன் சர்மாவிடம் எக்ஸ்ட்ரா எதுவும் வீசி விட வேண்டாம் என்று கேப்டன் கபில் தேவ் கூறினார். அப்போது யார்க்கருக்கு முயற்சி செய்து சேத்தன் வீசிய பந்து, ஃபுல் டாஸாக மாற, கடைசிப் பந்தில் சிக்ஸ் அடித்து பாகிஸ்தான் ரசிகர்களை பெரும் கொண்டாட்டத்தில் திளைக்க செய்தார் ஜாவேத்.

2003 உலகக் கோப்பை

2003 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின்போது இந்தியாவுக்கு பாகிஸ்தான் 274 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 75 பந்துகளில் 98 ரன்கள் அதிரடியாக சேர்த்தார். இதன் மூலம் 45.4 ஓவர்களிலேயே இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின்போது சோயிப் அக்தர் பந்தில் சச்சின் அடித்த “square cut six” இன்னும் ரசிகர்களின் நினைவில் நீங்காமல் உள்ளது.

டி20 உலகக்கோப்பை

2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் மெல்பர்ன் மைதானத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 31 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது. இந்தியாவின் கடைசி நம்பிக்கையாக கோலி மட்டும் இருக்க இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. ஆனால் கோலியின் சாதுர்யமான ஆட்டம் போட்டியை மாற்றியது. கடைசி இரண்டு ஓவர்களில் சிக்ஸர்களை பறக்கவிட்ட கோலியின் ஆட்டம், இந்தியா மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்ய உதவியது. இந்த ஆட்டம் T20 வரலாற்றின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.


2022 உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலியை தூக்கி மகிழும் ரோகித்

இதுபோன்ற பல போட்டிகள் பெரும் சுவாரசிய பின்னணிகளை கொண்டுள்ளன. மொத்தத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் வெறும் விளையாட்டு என்பதைத் தாண்டி, இரு நாடுகளின் உணர்ச்சிகளையும் பெருமைகளையும் பிரதிபலிக்கும் நிகழ்வாக உள்ளன. ஒவ்வொரு மோதலும் ஒரு புது வரலாறு படைத்து, உலக கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கிறது.

Updated On 19 Aug 2025 12:06 AM IST
ராணி

ராணி

Next Story