
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர், 14 வயது சிறுவனால் 21 முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். கொலையை செய்வதற்கு முன்பு சிறுவன் சில படங்களையும், ஓடிடி தொடர்களையும் பார்த்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் படபாணியில் குற்றச்சம்பவங்கள் அரங்கேறுவது இது ஒன்றும் புதிதல்ல. சினிமாவின் தாக்கம் என்பது இளம் தலைமுறையினர் மனதில் அப்படியே படிந்துவிடுகிறது என்று சமூக ஆர்வலர்களும் அடிக்கடி சொல்லிக்கொண்டுதான் வருகின்றனர். இதனை கருத்திற்கொண்டு வன்முறை காட்சிகளுக்கு எதிராக பேசினால், படத்தை படமாக பாருங்கள் என ஒருவாதம் முன்வைக்கப்படுகிறது. அண்மைக்காலமாக படங்களின் பாணியில் அதேபோன்ற சில குற்றச் சம்பவங்கள் தொடர்ந்துதான் வருகிறது. இந்நிலையில் சிறுமி கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன? கொலையை சிறுவன் அரங்கேற்றியது எப்படி? உள்ளிட்ட தகவல்களை விரிவாக காண்போம்.
கத்திக்குத்தில் உயிரிழந்த தெலங்கானா சிறுமி
10 வயது சிறுமி 21 முறை கத்தியால் குத்திக்கொலை...
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் முத்தக்யாசாராம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் அப்பகுதியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஒரு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். கிருஷ்ணா கடந்த ஆக.18ஆம் தேதி மதியம் 12 மணியளவில் வேலையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். பள்ளியில் இருக்கும் மகனிற்காக மதிய உணவு எடுக்க வந்த கிருஷ்ணா, வீடு வெளிப்புறமாக பூட்டியிருப்பதை பார்த்து திகைத்துள்ளார். கதவை திறந்து பார்த்தபோது தனது 10 வயது மகள் கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக சைபராபாத் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் கொலை காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் 14 கத்திக்குத்து காயங்களும், வயிற்றில் ஆறேழு கத்திக்குத்து காயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சிறுமியின் உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதை வைத்து இது கொலை என முடிவு செய்த போலீசார், அப்பகுதியில் இருந்த அனைவரையும் பிடித்து விசாரிக்க தொடங்கினர். முதலில் குடும்பத்தினரிடம் இருந்து விசாரணையை தொடங்கிய போலீசார், அப்பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யத் தொடங்கினர். ஆனால் சிசிடிவி கேமராக்கள் அதிகம் இல்லாததால் அப்பகுதி மக்களிடையே விசாரணையை நடத்தினர். முதலில் சிறுமியின் தந்தையின் மேல் சந்தேகம் கொண்ட போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். பின்னர் அவர்களின் குடியிருப்பின் கீழ் இருக்கும் அனைவரிடமும் விசாரணை நடைப்பெற்றுள்ளது. ஆனால் ஐந்து நாட்களுக்கு பிறகு கொலையை செய்தது 14 வயது சிறுவன் என்றும், ரூ.500 மதிப்புள்ள கிரிக்கெட் பேட்டிற்காக இந்த கொலையை அவர் நிகழ்த்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கிரிக்கெட் பேட்டிற்காக சிறுமி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரம்
கிரிக்கெட் பேட்டிற்காக கொலை செய்யப்பட்ட சிறுமி...
கொலையில் சம்பந்தப்பட்ட சிறுவன், சிறுமியின் 6 வயது தம்பியுடன் தினமும் கிரிக்கெட் விளையாடுவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளான். அப்போது சிறுவனிடம் இருந்த கிரிக்கெட் பேட்டை இந்த 14 வயது சிறுவன் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அச்சிறுவன் அதை தர மறுத்துள்ளான். இதனால் கொலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிலிருந்தே அந்த பேட்டை திருடுவதற்கு முயன்று வந்துள்ளான் 14 வயது சிறுவன். இந்நிலையில் திங்கட்கிழமையன்று சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. அவளது தம்பி பள்ளிக்கு செல்ல, பெற்றோர்களும் வீட்டில் இல்லை. சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டைச்சேர்ந்த 14 வயது சிறுவன், மாடி வழியாக சமையலறைக்குள் நுழைந்து கிரிக்கெட் பேட்டை எடுத்துக்கொண்டு வெளியேறும்போது, டிவி பார்த்துக்கொண்டிருந்த சிறுமி, சிறுவனைப் பார்த்து கத்தியுள்ளார். மேலும் பேட்டை கொடுக்காவிட்டால் தந்தையிடம் கூறிவிடுவேன் எனவும் கூறியுள்ளார். இதனால் பயந்த சிறுவன், சிறுமியை தள்ளிவிட்டு கண்ணை மூடிக்கொண்டு, கதவை திறப்பதற்காக, தான் எடுத்து வந்திருந்த கத்தியால், பலமுறை சிறுமியை குத்தியுள்ளான். இதனால் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தாள். இதனையடுத்து அங்கிருந்து சிறுவன் தப்பி ஓடியுள்ளான்.
சிறுவன் சிக்கியது எப்படி?
ஆகஸ்ட் 18 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது சிறுமி கொலை செய்யப்பட்டார். ஆரம்பத்தில் எந்தவொரு சந்தேக நபரும் கட்டிடத்திற்குள் நுழைந்ததாகவோ அல்லது வெளியேறியதாகவோ எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. மேலும் ஆங்காங்கு இருந்த சிசிடிவி காட்சிகளிலும் வெளியாட்கள் அதிகம் தென்படாததால், சந்தேகிக்கும்படியான நபர்களும் குறைவு என இந்த வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 23, சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சைபராபாத் காவல் ஆணையர் அவினாஷ் மொஹந்தி தெரிவித்தார். பின்னர் எவ்வாறு சிறுவன்தான் கொலை செய்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது என கேள்வி எழும்ப, கொலை நடந்த அன்று காலை வீட்டின் காம்பவுண்ட் அருகே இந்த சிறுவன் நின்றுக் கொண்டிருந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர்.
சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்ட 14 வயது சிறுவன்
இதனைவைத்து போலீசார் சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையை தொடங்கியவுடன் சிறுவன் எந்தவித பதட்டமும் இன்றி, ஆம் நான் அந்த சிறுமி கத்தியதை கேட்டேன் எனக் கூறியுள்ளான். தொடர்ந்து விசாரித்ததில் கொலையை ஒப்புக் கொண்டதாகவும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, சிறுமியின் வீட்டிலிருந்து எடுத்த கிரிக்கெட் பேட் போன்றவற்றை அவனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளான். இதனையடுத்து சிறுவனின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போலீசார், கொலையின் போது சிறுவன் அணிந்திருந்த ஆடை ரத்தக்கறையுடன் இருப்பதை கண்டனர். பின்னர் அந்த ஆடை, கிரிக்கெட் பேட், கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்ததில், கொலைப் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், ஆனால் கடந்த மூன்று நாட்களாக சிறுவனின் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவனின் நடத்தையில் மாற்றத்தை உணர்ந்த அவரது தாய், கொலை பற்றி உனக்கு ஏதேனும் தெரியுமா? என சிறுவனிடம் கேட்டிருந்தாராம். அதற்கு இல்லை, எனக்கு எதுவும் தெரியாது. என்னை போலீசில் பிடித்துக்கொடுத்து விடுவீர்களாக என்று கேட்டுள்ளான்.
குற்றத் தொடர்கள் மூலம் கொலைத்திட்டம்...
சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவனது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், சிறுவன் கொலைக்கு திட்டமிட்டு எழுதி வைத்திருந்த சில கடிதங்களையும் கைப்பற்றியுள்ளனர். அதில் முதலில் ரூ.80 ஆயிரம் பணத்தை திருடிவிட்டு, வீட்டின் கேஸை வெடிக்கவைத்து விட்டு வந்துவிடலாம் என எழுதியிருந்தாகவும், பின்னர் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டு பேட்டை மட்டும் எடுக்கலாம் என சென்றுள்ளான் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே சிறுவன் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி பள்ளி செல்வதை தவிர்த்து த்ரில்லர் குற்றத் தொடர்களையும், பல வெப் தொடர்களையும் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், போலீசார் வழக்கை நீர்த்துப்போகச் செய்வதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
வெப் தொடர்களை பார்த்து கொலைக்கு முயற்சித்த சிறுவன்
குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரி, உறவினர்களுடன் சேர்ந்து, குகட்பள்ளி காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். சிறுவன் மட்டையைத் திருட வீட்டிற்குள் நுழைந்து, பிடிபட்டபோதுதான் சிறுமியைக் கொலை செய்தான் என்ற காவல்துறையின் கூற்றை குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர். சிறுவனுக்கு வயது 14 என்பதால், வேறு காரணம் இருக்கலாம் என்று தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அப்பகுதி மக்கள் அச்சிறுவன் இப்படி செய்வான் என எதிர்பார்க்கவில்லை எனவும், மேலும் படத்தை பார்த்து இப்படி கொலைமுயற்சி மேற்கொண்டது மற்ற சிறுவர்களின் மீது கவனம் செலுத்த வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
