இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பெட்ரோல், டீசல் கொண்டு எரிக்கப்பட்டு, தர்ம தேவதைகளின் சன்னதியில் புதைக்கப்பட்டுள்ளனர்? கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய இந்த குரூர கொடூரம் திடீரென வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? இந்தியாவின் முக்கிய கோயிலாக விளங்கும் தர்மஸ்தலா மீது எழுந்த குற்றச்சாட்டு உண்மைதானா? உடல் முழுவதையும் கருப்பு துணியால் மறைத்து வந்து வாக்குமூலம் அளித்த துப்புரவு பணியாளர் கூறியது என்ன? சாட்சியாக கொண்டு வரப்பட்ட மண்டை ஓடு யாருடையது? இந்த குற்றச்சாட்டிற்கு பின் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் யார்? என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயில்

கர்நாடகாவின் தர்ம இடம்...

கர்நாடக மாநிலம் தெற்கு கன்னடம், நேத்ராவதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தர்மஸ்தலா கோயில். கேரளாவில் எப்படி சபரிமலை அய்யப்பன் கோயில், ஆந்திராவில் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் புகழ்பெற்றதோ, அதுபோல கர்நாடகவில் மிகவும் புகழ்பெற்ற கோயிலாக இந்த தர்மஸ்தலா இருந்து வருகிறது. இந்த கோயில் ஒரு ஜெயின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலுக்கு ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பக்தர்கள் வந்துசெல்வார்கள் எனக் கூறப்படுகிறது. கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு அன்னபூர்ணா என்ற இடத்தில் அன்னதானமும் வழங்கப்படுகிறது. அந்த அன்னதானத்தை சாப்பிட்டால்தான் கோயிலுக்கு வந்ததற்கான முழு பலன் கிட்டுமாம். ஏனெனில் இதுபோல தர்மங்கள் செய்ய தொடங்கப்பட்டதே இந்த கோயில் என இதற்கு ஒரு வரலாறும் உள்ளது. கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடம் குடும்பபுரம் என்று அழைக்கப்பட்டதாகவும், தேவதைகளின் கோரிக்கைக்கிணங்க பரமன்ன ஹெக்டே என்பவர் இந்த இடத்தில் கோயில் ஒன்றை கட்டி, பலருக்கும் அன்னதானம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த இடம் தர்மத்திற்கான இடம், அதாவது தர்மஸ்தலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பரமன்ன ஹெக்டேவை தொடர்ந்து அவரின் சந்ததியினர் இந்த கோயிலை பாதுகாத்து தேவதைகளின் பிரதிநிதிகளாக இருந்து பணியாற்றி வருகின்றனர் என கூறுகின்றனர். தற்போது பரமன்னாவின் பரம்பரையான, ராஜ்யசபா எம்.பியாக பரிந்துரைக்கப்பட்ட வீரேந்திர ஹெக்டே கோயிலின் நிர்வாகியாக உள்ளார்.


தூய்மை பணியாளர் மூலம் வெளிவந்த கொடூரம்...

பகீரை கிளப்பிய தூய்மை பணியாளர்

இந்நிலையில் தர்மஸ்தலா கோயிலில் 1995 முதல் 2014 வரை 19 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர், கடந்த ஜூலை.4ம் தேதி தர்மஸ்தலா காவல் நிலையத்திற்கு 6 பக்கங்கள் கொண்ட புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தன் பெயரை குறிப்பிடாத அவர், நேத்ராவதி ஆற்றின் அருகே கோயிலுக்கு சொந்தமான இடத்தில், அதாவது கோயிலுக்கு அருகிலேயே 100க்கும் மேற்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் சிலரின் உடல்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை குறிப்பிட்டிருந்தார். அங்கு புதைக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அதில் சில பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன் இருந்ததாகவும் அந்த புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஆதாரமாக, புதைக்கப்பட்ட இடத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக்கூடு, அதன் எச்சங்கள் மற்றும் சில புகைப்படங்களை அதனுடன் இணைத்து அனுப்பினார்.

புகாரில் கூறியது என்ன?

புகாரில் அவர் கூறியிருந்ததாவது, “நேத்ராவதி ஆற்றின் அருகே வழக்கமாக செய்யப்படும் தூய்மை பணிகளுக்கு பொறுப்பேற்றிருந்தேன். அந்த காலக்கட்டத்தில் கோயில் நிர்வாகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலர், இறந்த பெண்களின் உடல்களை என்னிடம் கொடுத்து புதைக்க சொல்வார்கள். நான் மறுப்பு தெரிவித்தால் என்னை கொன்றுவிடுவேன் என மிரட்டுவார்கள். நான் காவல்துறைக்கு புகார் அளிக்க முயன்றபோது, “உன்னையும் கொன்று புதைத்துவிடுவோம். உன் குடும்பத்தையும் கொன்று புதைப்போம்” என மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து சடலங்களை அடக்கம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்களை புதைத்துள்ளேன். இதில் பல பெண்களின் உடல்கள் ஆடைகள் இல்லாமல், அரை நிர்வாணமாக, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான காயங்களுடன் இருக்கும். ஆண்களின் கழுத்தில் நெரித்து கொன்றதற்கான அடையாளங்கள் இருக்கும். 2010-ல் நடந்த ஒரு சம்பவம் இன்னும் என்னை அடியோடு உலுக்கி கொண்டிருக்கிறது.


நீதிபதி முன் ஆஜராக சென்றபோது முழு உடலையும் கருப்பு துணியால் மறைத்துக் கொண்ட தூய்மை பணியாளர்

கலையரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், காவலர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியின் உடலைப் பார்த்தேன். அவரது உடலில் ஆடைகள் குறைவாக இருந்தன, பாலியல் வன்முறையின் தெளிவான அடையாளங்கள் இருந்தன. அவரது கழுத்தில் கட்டிப்போடப்பட்ட தழும்புகள் இருந்தன. சீருடையுடன் இருந்த அந்த சிறுமியையும், அவரது பள்ளி பையையும் புதைக்க சொன்னார்கள். அது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது. என்னால் மறக்க முடியாத மற்றொரு சம்பவம் 20 வயது பெண் ஒருவரின் முகம் ஆசிடால் எரிக்கப்பட்டதுதான். ஆண்கள் சிலர் நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டு, முகம் முழுவதும் துண்டால் கட்டப்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட வைத்து கொல்லப்பட்டுள்ளார்கள். சில நேரங்களில் ஆதாரங்களை மறைக்க டீசல் ஊற்றி உடலை எரிக்க சொல்வார்கள். இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் அழிக்கப்பட்டன. இந்த குற்றத்தில் கோயில் நிர்வாக ஊழியர்கள் சிலரும், அவர்களுடன் தொடர்புடைய சிலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெரிய இடத்தை சேர்ந்தவர்கள். அவர்களை எதிர்ப்பது அவ்வளவு எளிதல்ல. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் அரசு தரப்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டால், அவர்கள் யார்? இந்த குற்றச் சம்பவத்தில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது தொடர்பான விவரங்களை அளிக்கிறேன்”. என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து இதுதொடர்பாக கடந்த 14ஆம் தேதி மங்களூரு நீதிமன்றத்தில், தனது முழு உடலையும் கருப்பு துணியால் மறைத்து ஆஜரான தூய்மை பணியாளர், காவல் நிலையத்தில் சொல்லாத கோயில் நிர்வாகிகளின் பெயரை நீதிபதி இடத்தில் கூறியதாக கூறப்படுகிறது.

உறவுக்கார சிறுமி...

இதனிடையே கடந்த 2014ஆம் ஆண்டு தூய்மை பணியாளரின் சொந்தக்காரர்கள் சிலர் தர்மஸ்தலா கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர். அப்போது குடும்பத்தினருடன் வந்த சிறுமி ஒருவர் தொலைந்து போயுள்ளார். பின்னர் கோயில் நிர்வாகிகளாலேயே அந்த சிறுமியின் உடல் அவரிடம் புதைக்க கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மனம் நொந்து இரவோடு இரவாக ஊரைவிட்டு தப்பித்து சென்றுள்ளார். அண்டை மாநிலத்தில் தஞ்சமடைந்த அவரை பலமுறை போன் செய்து அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அண்டை மாநிலங்களில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிறகு, தற்போது திரும்பியுள்ளார். தற்போது வழக்கிற்கு ஒத்துழைப்பதாகவும், அடக்கம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டுவதாகவும், இதில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களைக் கூற இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


சிபிஐ முன்னாள் ஸ்டெனோகிராஃபரான சுஜாதா பட்

அனன்யா...

தூய்மை பணியாளரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கு முன் தர்மஸ்தலா கோயிலுக்கு சென்று காணாமல் போன தனது மகள் குறித்து விசாரிக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் சிபிஐயின் முன்னாள் ஸ்டெனோகிராஃபரான 63 வயதான சுஜாதா பட் என்பவர். கடந்த 2003 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த சுஜாதாவின் மகளான அனன்யா, நண்பர்களுடன் தர்மஸ்தலா கோயிலுக்கு சென்றுள்ளார். கோயிலுக்கு சென்ற அனன்யா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தபோது, யாருடனாவது சென்றிருப்பார் எனக்கூறி அவமானப்படுத்தி அனுப்பினார்களாம். தொடர்ந்து கோயிலுக்கு சென்று அங்கு இருந்த சிலரிடம் விசாரித்துள்ளார். அதில் சிலர் சுஜாதா சொன்ன அடையாளங்களுடன் ஒத்துப்போன பெண் ஒருவரை கோயிலில் பணிபுரியும் ஒருவர் அழைத்துச் சென்றதாக கூறியுள்ளனர். இதனையடுத்து உண்மையை கண்டறிய கோயிலின் உள்ளே கடைவைக்க முயன்றுள்ளார் சுஜாதா. இதனையறிந்த கோயில் ஊழியர்கள் நான்கு பேர் மகளை பற்றி தகவல் தெரியும் எனக்கூறி அழைத்து சென்று சுஜாதாவை தாக்கியுள்ளனர். இதில் சுஜாதா கோமா நிலைக்கு சென்றுவிட்டார். தற்போது கோமாவில் இருந்து மீண்டுள்ள அவர், தனது மகளின் உடலை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.


மாணவி சௌஜன்யா கொலைவழக்கில் கைதான நபர்...

சௌஜன்யா

கர்நாடகாவின் பெல்தங்கடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி சௌஜன்யா, கடந்த 2012 ஆம் ஆண்டு அக். 09 தேதி கல்லூரிக்கு சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் சௌஜன்யாவை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மறுநாள் தர்மஸ்தலா கோயிலுக்கு அருகில் அரை நிர்வாணமாக சௌஜன்யாவின் உடல் மீட்கப்பட்டது. இந்த வழக்கு மக்களால் கவனிக்கப்பட்டு போராட்டங்கள் வெடித்த நிலையில், யாசகம் கேட்டு கோயிலில் சுற்றி திரியும் சந்தோஷ் என்பவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் இந்த கொலையை சந்தோஷ்தான் செய்தார், என்பதற்கு போலீசாரால் போதிய ஆதாரங்கள் கொடுக்கப்படாத நிலையில், அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை சௌஜன்யா வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் இவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்களில் ஒருவராக சௌஜன்யாவும் இருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.


வழக்கு குறித்து டிஜிபி பிர​னாப் மொஹந்தி...

உண்மை என்ன?

செல்வாக்குமிக்க ஒரு குடும்பத்தால் இந்தக் கோயில் நிர்வகிக்கப்படுவதால், குற்றச்சாட்டு குறித்து மந்தமாக விசாரணை நடைபெறுவதாகவும், கர்நாடக அரசும், காவல்துறையும் வேடிக்கை பார்த்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வீரேந்திர ஹெக்டே 1968 முதல் கோயிலின் நிர்வாக தலைவராக இருந்து வருகிறார். இவர் ஹெக்டே குடும்பத்தின் 21வது நிர்வாகி ஆவார். இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய விருதான பத்ம விபூஷண் பெற்ற ஹெக்டே, நாடாளுமன்றத்தின் ராஜ்யசபா உறுப்பினராக இருக்கிறார். 2022ல் பாஜகவால் இவர் எம்பியாக பரிந்துரைக்கப்பட்டார். இந்த சூழலில் கோயிலின் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி செய்தி வெளியிட பெங்களூரு சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதற்கு முன்னதாக வீரேந்திர ஹெக்டே பற்றி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட 8,000-க்கும் மேற்பட்ட வீடியோக்களை அழிக்கும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது தூய்மை பணியாளரின் புகாரைத் தொடர்ந்து போலீ​ஸார் கோயில் நிர்​வாகத்​தின் மீது 3 பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்​தனர். டிஜிபி பிர​னாப் மொஹந்தி தலை​மையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தர்மஸ்தலா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது இது முதல்முறையல்ல. 1980களில் இருந்தே தர்மஸ்தலத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அல்லது மர்மமாக இறக்கும் பலரது உடல்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் உண்மைதான் இதுவரை வெளிவரவில்லை....

Updated On 29 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story