
ஹைதராபாத்தில் செயல்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் ஒன்று குழந்தையில்லாத தம்பதிகளை குறிவைத்து மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாதவர்களை குறிவைத்து ரூ.30 லட்சம் செலவு செய்தால் போதும், செயற்கை கருத்தரித்தல் மூலம், உங்கள் விந்தணு மற்றும் கருமுட்டையை வைத்தே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்து, ரூ. 25 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்டுள்ளது. மேலும் விசாரணையில், பச்சிளங் குழந்தைகளை 90 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி 35 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது எங்கே நடந்தது? இந்த மோசடி கும்பல் சிக்கியது எப்படி என்பது குறித்து காண்போம்.
செயற்கை கருத்தரித்தல் முறையை விளக்கும் மாதிரி படம்
செயற்கை கருத்தரித்தல்...
திருமணத்திற்குப் பின் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு தம்பதியின் ஆசை அல்லது குழந்தை என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். சிலருக்கு திருமணம் ஆனவுடன் குழந்தை பிறக்கும். சிலருக்கு தாமதமாகும். சில நேரங்களில் அது நிறைவேறாமல் போகலாம். அப்போது பலரும் வாடகைத்தாய் அல்லது செயற்கை கருத்தரித்தல் முறையை தேர்வு செய்கின்றனர். அதற்கேற்றாற்போல மாறிவரும் உணவுப்பழக்கம், மன அழுத்தம், மருத்துவ காரணங்களால் குழந்தையின்மை அதிகரித்துவரும் நிலையில், செயற்கை கருத்தரித்தல் மையங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று, குழந்தையில்லாத தம்பதிகளை குறிவைத்து மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இல்லாதவர்களை குறிவைத்து ரூ.30 லட்சம் செலவு செய்தால் போதும், செயற்கை கருத்தரித்தல் மூலம், உங்களுடைய கருமுட்டை மற்றும் விந்தணுவை வைத்தே குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். அதனை நம்பி பலரும் பணத்தை செலுத்தி குழந்தை பெற்றெடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜஸ்தான் தம்பதியினர் ஒருவரிடமும் இதுபோல கூறி செயற்கை கருத்தரித்தல் மூலம் குழந்தை பெற்றெடுக்க சம்மதிக்க வைத்துள்ளனர். அவர்களும் குழந்தையை பெற்றெடுத்து உள்ளனர். ஆனால் டிஎன்ஏ சோதனையில் அது அவர்களுடைய குழந்தை இல்லை என்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்ததில் இதுபோல பல தம்பதியினரை, அந்த கருத்தரிப்பு மையம் ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
குழந்தையின் டிஎன்ஏ-வால் அம்பலமான மோசடி
காட்டிக் கொடுத்த டிஎன்ஏ ரிப்போர்ட்
ராஜஸ்தானை சேர்ந்த தம்பதியினர் நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், ஹைதராபாத்தின் செகந்திராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஃபெர்டிலிட்டி அண்ட் ரிசர்ச் சென்டரில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். ரூ.66 ஆயிரம் செலுத்தி அனைத்து மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்தக் கருத்தரித்தல் மையத்தின் மேலாளரான மருத்துவர் நம்ரதா என்பவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். முதலில் இவர்கள் மறுக்க, செய்துகொள்ளுங்கள் என அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இவர்களின் முட்டைகள் மற்றும் விந்தணுக்களைப் பயன்படுத்தியே ஒரு கருவை உருவாக்கி, வாடகைத் தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த நடைமுறைக்கு ரூ.30 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.
அதன் பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில், அந்தத் தம்பதியினர் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு கருத்தரித்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த மாதமே வாடகை தாயும் கிடைத்துவிட்டதாக அந்த கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருவின் வளர்ச்சி தொடர்பான ஸ்கேன்களையும் நிர்வாகம் தரப்பில் அவ்வப்போது காண்பித்தும் வந்துள்ளனர். இப்படி அனைத்தும் சுமூகமாக செல்ல, குழந்தை வயிற்றில் இருந்தபோதே தம்பதியினர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கோரியுள்ளனர். ஆனால் அதற்கு கருத்தரித்தல் மையம் தரப்பில் சரியான பதில் கொடுக்கப்படவில்லை. தொடர்ந்து குழந்தை பிறந்த பிறகும் டிஎன்ஏ பரிசோதனை சான்று இல்லாமல், குழந்தையை கொடுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தம்பதியினர் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க கோரியுள்ளனர். ஆனால் அதற்கு அந்த கருத்தரித்தல் மைய நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பெற்றோரே, ஹைதராபாத்தில் இருந்து டெல்லி சென்று அங்கு டிஎன்ஏ சோதனை செய்துள்ளனர். அதில் குழந்தையின் டிஎன்ஏவும், இவர்களின் டிஎன்ஏவும் ஒத்துப்போகாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தம்பதியினர் காவல்துறையினரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.
மோசடியில் கைதானவர்கள்
பின்பற்றப்படாத வாடகைத்தாய் கொள்கை...
புகாரைத் தொடர்ந்து கருத்தரிப்பு மையத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த கருத்தரித்தல் மையத்தின் நிர்வாகிகள், கருவுற்றிருக்கும் ஏழை தாய்மார்களை மூளைச்சலவை செய்து, அவர்களது குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, குழந்தை இல்லை என்று மருத்துவ பரிசோதனைக்கு வரும் தம்பதிகளிடம், செயற்கை கருத்தரித்தல் மூலம் நிச்சயம் குழந்தை பிறப்பை உறுதி செய்கிறோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். அதுவும், உங்கள் கருமுட்டை மற்றும் விந்தணு மூலம் மட்டுமே என்றும் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். உங்கள் கருமுட்டை மற்றும் விந்தணுவை வாடகைத் தாய்க்கு செலுத்தி குழந்தை பெற்றுத் தருகிறோம் என்ற நடைமுறையை ஃபோலோ செய்து, இந்த நடைமுறைக்கு ஒரு தம்பதிக்கு 30 லட்சம் ரூபாய் வரை வசூலித்துள்ளனர். அதுவும், நேரடி பணமாக 15 லட்சமும், மீதியை வேறு வழியிலும் பெற்றுள்ளனர்.
ஆனால், தம்பதியரிடம் இருந்து பெறப்படும் கருமுட்டையையும், விந்தணுவையும் குப்பையில் வீசிவிட்டு, யாரோ ஒரு ஏழை பெண்ணுக்கு பிறக்கும் குழந்தையை ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான பணத்திற்கு வாங்கி, அந்த குழந்தையை வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை எனக் கூறி, அந்தக் குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினரிடம் கொடுத்துவிடுகின்றனர். இவ்வாறாக 25 கோடி ரூபாய் வரை, அந்த செயற்கை கருத்தரித்தல் மையம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
விசாகப்பட்டினம், குண்டூர் மற்றும் கோபாலபுரத்தில் உள்ள அந்த கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மீது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. “ஏராளமான சிகிச்சைகளும், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டதற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. விசாரணை நடந்து வருகிறது. வாடகைத் தாய் மூலம் கருத்தரித்தல் என்ற பெயரில் எத்தனை குழந்தைகள் இவ்வாறு வாங்கி விற்கப்பட்டன என்பது விசாரணையில் தெரியவரும்” என்று இந்த வழக்கை விசாரித்து வரும் டி.சி.பி. ரஷ்மி பெருமாள் என்பவர் தெரிவித்துள்ளார். மேலும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பலரும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் கருத்தரித்தல் மையத்தின் மேலாளர் பச்சிபாலா நம்ரதா, அவரின் மகன் உட்பட இதற்கு உடந்தையாக இருந்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் பலருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகவும், 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் நம்ரதா
2021லேயே அனுமதி ரத்து...
மருத்துவர் நம்ரதா கடந்த 1998 முதலே செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளைச் செய்து வருவதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட கருத்தரித்தல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் சோதனை நடத்தியதில் ஐவிஎஃப் சிகிச்சை உட்பட அந்த மையத்தில் மொத்தமும் அனுமதியின்றி இயங்குவது 2021ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. அப்போதே சில புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, செகந்திராபாத்தில் உள்ள மையத்தின் மீது தடை விதிக்கப்பட்டதாம். ஆனால் அதனை மீறியும் தொடர்ந்து கருத்தரித்தல் சோதனையில் அந்த மையம் ஈடுபட்டு வந்துள்ளது. விசாரணை தொடரும் நிலையில் இன்னும் பல முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் வெளிவர வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
