இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

2018 ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் நீச்சல் குளத்திற்கு அருகே, அதன் பயிற்சியாளர், மூன்றரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், அந்த பயிற்சியாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கி அண்மையில் தீர்ப்பளித்தது. 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' குற்றத்தின் கீழ் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அளித்தார். இதில் நிறைய பேருக்கு உள்ள சந்தேகம், 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன? இது ஆன்லைன் குற்றமா? அப்படியென்றால் அந்த மூன்றரை வயது சிறுமி நேரில்தானே பாதிக்கப்பட்டாள்? ஆன்லைனில் இல்லையே...?


சிறுமிகளை குறிவைத்து நடக்கும் "டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைகள்"

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது ஆன்லைன் குற்றமல்ல!

கடுமையான பாலியல் குற்றங்களில் ஒன்றாக டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை உள்ளது. 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பது ஆன்லைன் செயல்பாடுகளுடன் தொடர்புடைய குற்றம் என்று நிறையே பேர் நினைத்துக்கொள்ள காரணம், அதில் உள்ள டிஜிட்டல் என்ற வார்த்தைதான். ஆனால் அதன் பொருள் முற்றிலும் வேறுபட்டது. பாலியல் வன்கொடுமை தொடர்பான பல்வேறு வழக்குகளில் நாடு முழுவதும் உள்ள பல நீதிமன்றங்கள், கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்ற சொற்களை பயன்படுத்தி தீர்ப்புகளை வழங்கியுள்ளன.

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்றால் என்ன?

ஒரு சிறுமி அல்லது பெண்ணின் அந்தரங்க பகுதிகளை அவர்கள் அனுமதியின்றி விரலாலோ, வேறு பொருளாலோ தொட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபடும் செயலே, டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை எனப்படுகிறது. அப்படி என்றாலும் கூட, டிஜிட்டல் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறோம்? என்று கேள்வி எழும்.

அதற்கான விளக்கம் பின்வருமாறு... 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' என்பதில், டிஜிட்டல் என்ற சொல் லத்தீன் சொல்லான 'டிஜிட்டஸ்' என்பதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. லத்தீன் மொழியில் டிஜிட்டஸ் என்றால் விரலைக் குறிக்கிறது. அது கை விரலாகவோ, கால் விரலாகவோ இருக்கலாம்.

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' தண்டனை விவரம்!

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' வழக்கில், தண்டனை வழங்க BNS சட்டப்பிரிவு 64இன் கீழ் வகை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனைவரை தண்டனைகள் வழங்கப்படும். இதுவே டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை மூலம், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 20 ஆண்டுகள்வரை சிறை தண்டனை வழங்க BNS சட்டப்பிரிவு 65(2) வகை செய்கிறது. சிறை தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம். அதிகபட்சமாக மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.


டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைக்கும் கடும் தண்டனை - நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை VS டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமைக்கும், டிஜிட்டல் பாலியல் வன்கொடுமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்தோமானால், ஒரு ஆண் நேரடியாக தனது அந்தரங்க உறுப்பின்மூலம் குற்றத்தில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமை என்றும், தனது விரல் அல்லது வேறு பொருளின் மூலம் குற்றத்தில் ஈடுபடுவது டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. காரணம், தனது அந்தரங்க உறுப்பின்மூலம் நேரடியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபர், எவ்வாறேனும் தண்டிக்கப்பட்டுவிடுகிறார் என்றும், ஆனால், விரலாலோ அல்லது பிற பொருளாலோ பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் நபரை தண்டித்து, பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைப்பது சிரமம் என்றும் கூறப்படுகிறது. எனவேதான், விரல் அல்லது பிற பொருளால் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள், சாக்கு சொல்லி எளிதில் தப்பிவிடாமல் இருக்க "டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை" என்று குறிப்பிட்டு, வழக்குகள் நடத்தப்படுவதாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

2013-ஆம் ஆண்டுக்கு முன்புவரை, ஒரு ஆண் தன் அந்தரங்க உறுப்பை பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் செலுத்தி செய்யப்படும் குற்றம் மட்டுமே பாலியல் வன்கொடுமையாகக் கருதப்பட்டது. பெண்ணின் அந்தரங்க உறுப்புக்குள் விரலையோ வேறு எந்தவொரு பொருளையோ விடுவது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படவில்லை. அதாவது, பாலியல் வன்கொடுமை தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு 375 என்பதற்குப் பதிலாக, பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல் சட்டப்பிரிவு 354 அல்லது இயற்கைக்கு மாறான பாலியல் உறவு சட்டப்பிரிவு 377 என்றுதான் இருந்துள்ளது. எனவே விரல் அல்லது பிற பொருள் மூலம் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர், சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி தப்பித்துவிடும் நிலை இருந்துள்ளது.

ஆனால், டெல்லியில் 2012-ஆம் ஆண்டு நடந்த நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்குப் பின்னர், பாலியல் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டன. அதன்படி, பெண்ணின் உறுப்பில் ஆணின் விரல் ஊடுருவுவதும், அவனால் பொருள் ஏதேனும் செலுத்தப்பட்டாலும் கூட, அது பாலியல் வன்கொடுமைதான் என்று அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யும் குற்றவாளிகள் மீதும் எவ்வித கருணையும் காட்டப்படுவதில்லை. மேலும், IPC சட்டப் பிரிவு 375 என்பது BNS சட்டப்பிரிவு 63-ஆக மாற்றப்பட்டுவிட்டது.

'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் புகார் தெரிவித்தால், காவல்துறை தரப்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், தடயவியல் சோதனை நடத்தி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், பாலியல் வழக்குகளில் வழங்கப்படும் மருத்துவ அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்தரங்க உறுப்பில் காயம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுவிட்டால், அது தொடர்பான வழக்கு பலவீனப்பட்டுவிடும் நிலையில், 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' புகார் தொடர்பான வழக்குகளில், பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றுக் கூறப்பட்டுள்ளது.


பாலியல் கல்வியை வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

விழிப்புணர்வு அவசியம்!

பொதுவான பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஏற்படும் அதே அதிர்ச்சியும், பாதிப்பும் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஏற்படுவதாக, உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை குற்றங்களையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட நபர் மீது பழி சுமத்துவதை சமூகம் நிறுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாலியல் கல்வி என்பதை பள்ளி, கல்லூரிகளில் மட்டுமே பேச வேண்டும் என்ற சூழல் மாறி, வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும் என்றும், சரியான தொடுதல் எது? தவறான தொடுதல் எது?ஒருவர் நம்மிடம் தவறான முறையில் அணுகுவதை எவ்வாறு கணிப்பது போன்றவற்றை வீட்டிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஆண் உறுப்பை பெண்ணின் உறுப்புக்குள் செலுத்தாமலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு, நேரடியாக உறுப்பின் மூலம் செய்யப்படும் பாலியல் வன்கொடுமைக்கு நிகரான தண்டனையை நிச்சயம் வழங்க வேண்டும் என்பதை 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை' சட்டம் உறுதிப்படுத்துவதை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்து விழப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On 26 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story