இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தமிழ்நாட்டையே தற்போது உலுக்கி கொண்டிருக்கிறது, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் லாக்கப் மரணம். ஒரு சகமனிதன் தனது எதிரிக்கு காட்டும் சிறு கருணைக்கூட, காக்கி சட்டை என்ற உடை அணிந்திருக்கும் இந்த காவல்துறைக்கு கிடையாது என்ற ஆதங்கமும், #Justiceforajithkumar என்ற ஹேஷ்டேகும்தான் இந்த வாரம் முழுவதும் இணையத்தை ஆக்கிரமித்திருந்தன. காவல்துறையினரின் காலால் மிதிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, அழுகுரல் காதுகளில் கேட்க ஒரு உயிர் துடிதுடிக்க இறப்பது தமிழ்நாட்டில் இது முதல்முறையல்ல. ஆண்டுதோறும் இதுபோன்ற மரணங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டதாக பொதுமக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அஜித்குமார் மரணத்தில் நிகழ்ந்தது என்ன? அதற்கு தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன? காவல்துறையினரின் கூற்றுப்படி உண்மையில் அஜித்குமார் வலிப்பு ஏற்பட்டுதான் இறந்தாரா? அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன என்பது குறித்தெல்லாம் இங்கு விரிவாக காண்போம்.


இறந்த இளைஞர் அஜித்குமார் - அஜித்குமார் தாக்கப்படும் காட்சி

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தின் பின்னணி என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ந் தேதியன்று, மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி போராசிரியை நிகிதா என்பவரும், அவரது 76 வயதான தாய் சிவகாமியும் சாமி கும்பிட வந்துள்ளனர். காரில் வந்த இருவரும், காரை கோயிலின் முன்பு நிறுத்திவிட்டு, சிவகாமியால் நடக்க முடியாத நிலையில் கோயில் காவலாளி அஜித்குமாரிடம் வீல் சேர் கேட்டுள்ளனர். அவரும் கொண்டு வந்து கொடுத்துள்ளார். தொடர்ந்து வேறு இடத்தில் காரை பார்க் செய்ய, அஜித்திடம் சாவியையும் நிகிதா கொடுத்துள்ளார். கார் ஓட்ட தெரியாத அஜித், அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் உதவியுடன் காரை கொண்டுசென்று பார்க்கிங் செய்துள்ளார். சாமி கும்பிட்ட பின் வெளியே வந்த இருவரும், காரில் ஏறியுள்ளனர். அப்போது காரில் கட்டைப்பையின் கீழ் கழற்றி வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை எனக்கூறி, காவலாளி அஜித்குமாரை விசாரித்திருக்கின்றனர். தொடர்ந்து கோயில் நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர். அவர்கள் அஜித்குமாரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமார்...

விசாரணைக்காக போலீசிடம் அஜித்குமார் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதியாமல் தனியாக அழைத்துச் சென்று ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் என்ற ஐந்து காவலர்கள் அஜித்குமாரை கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் அஜித்குமார் உயிரிழந்தார். அஜித்குமார் உயிரிழந்த செய்தியை அவர்கள் உறவினர்களிடத்தில் தெரிவிக்கும்போது, விசாரணையின் போது வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறியுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக, அஜித்குமார் தாக்கப்படும் வீடியோவும் வெளியானது.


காவல்துறையை கேள்விகளால் துளைத்த நீதிமன்ற அமர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...

இந்த விவகாரத்தை ஜூலை 1ம் தேதி கையிலெடுத்து விசாரிக்க தொடங்கியது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. அப்போது, அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோ மனுதாரர்கள் தரப்பில் போட்டுக் காட்டப்பட்டது. கோயில் நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்து அஜித் தாக்கப்பட்டதாகவும், அதனை அங்கிருந்த கழிவறையின் ஜன்னல் ஓட்டையில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்தாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, எவ்வளவு நேரம் எடுக்கப்பட்டது, அங்கு யார் இருந்தார்கள் என வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் என்பவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும்,

  • நகை காணாமல் போன விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல், விசாரணை நடத்தியது ஏன்?
  • சிறப்பு படை எதன் அடிப்படையில், யார் சொல்லி இந்த விவகாரத்தை கையில் எடுத்தது?
  • அஜித்குமாரை இரண்டு நாட்கள் வேறு இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க யார் அனுமதி கொடுத்தது?
  • அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது.
  • விசாரணை நடத்தப்படாத காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் கொடுக்கப்பட்ட நிலையில், அஜித்குமாரை வைத்து தாக்கிய இடத்தின் சிசிடிவி காட்சி பதிவுகள் சமர்பிக்கப்படாதது ஏன்?

போன்ற பல கேள்விகளை உயர் நீதிமன்றம் முன்வைத்தது. தொடர்ந்து விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இதுவரை இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்...

விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கிய நிலையில் 1 ஹெட் கான்ஸ்டபிள், 4 கான்ஸ்டபிள்கள் மற்றும் டிரைவர் என 6 பேரை சிவகங்கை எஸ்பி சஸ்பெண்ட் செய்துள்ளார். தொடர்ந்து அழுத்தம் அதிகரிக்க இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 5 காவலர்கள் மீதும் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை எஸ்பி ஆஷித் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வழக்கை சிபிஐக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முதலமைச்சர் இரங்கல்... அஜித்குமாரின் தம்பிக்கு அரசுப்பணி...

சம்பவத்தை தொடர்ந்து இறந்த இளைஞர் அஜித்குமாரின் தாயிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு, ஆறுதல் கூறினார். அஜித்தின் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை பட்டாவும், சகோதரருக்கு அரசு வேலைக்கான பணி ஆணையும் வழங்கப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பண் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து, பணி ஆணையை வழங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இளைஞரின் தாயை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதுடன், அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நீதி வாங்கித் தரப்படும் எனவும் கூறினார்.


இறந்த இளைஞர் அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய விஜய்

எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சிகள் நேரில் சென்று ஆறுதல்...

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆர்.பி. உதயகுமார், தவெக தலைவர் விஜய், திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.


இறந்த இளைஞர் அஜித்குமார் - உடற்கூராய்வு அறிக்கை

உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன?.

  • 50 வெளிப்புற காயங்கள்,
  • 12 சிராய்வு காயங்கள் - அடித்து தரையில் இழுத்து சென்றிருக்கலாம்,
  • பல இடங்களில் ரத்தக் கட்டு காயங்கள் - தொடர்ச்சியாக ஒரு இடத்தில் தாக்கும்போது உண்டாகும் ரத்த உறைதல்,
  • நடுவயிற்றில் கம்பால் குத்திய காயம்,
  • தலை கபாலத்தில் அடி, மூளையில் ரத்தக்கசிவு,
  • இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு,
  • காது, மூக்கில் ரத்தக்கறை,
  • இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு,
  • பழுப்பு நிறத்தில் திரவம் - வயிற்றில் செரிமானம் ஆகாத உணவுடன் சேர்ந்து இருந்துள்ளது.

இதுபோல பல தகவல்களை அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை கூறுகிறது.


காரில் வைத்திருந்த நகை திருடு போனதாக புகாரளித்த நிகிதா

புகார் அளித்த நிகிதா என்பவர் யார்?

நகை காணாமல் போனதாக, அஜித்குமார் மீது புகாரளித்த கல்லூரி பேராசிரியை நிகிதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பல பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என பலரும் காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர். மேலும் தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறனை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தனக்கும், நிகிதாவுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றதாகவும், திருமணம் நடந்த அன்றே நிகிதா ஓடிவிட்டார் என்றும் தெரிவித்தார். மேலும் தனக்கு முன்பே நிகிதா 3 திருமண மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்து லட்சக்கணக்கில் பணம் பறிப்பதுதான் அவருக்கு வாடிக்கை என குறிப்பிட்டார். நிகிதாவின் குடும்பமே ஒரு ஏமாற்றுக் குடும்பம் எனக் குறிப்பிட்ட திருமாறன், அவரது அப்பா 10 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டுதான் தனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுத்தார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையுடன் நிகிதாவுக்கு நிறைய செல்வாக்கு இருப்பதால் அவர்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என திருமாறன் தெரிவித்தார். நிகிதாவை அஜித்குமார் கொலைவழக்கில் சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். திருமாறனைத் தொடர்ந்து, திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் நிகிதாமீது அக்கல்லூரி மாணவிகள் பலரும் மனரீதியாக தங்களை துன்புறுத்தியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த புகார்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் தொடரும் லாக்கப் மரணங்கள்...

தற்போது தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ள அஜித்குமாரின் மரணம்தான் முதல் லாக்-அப் மரணமா என்றால், இல்லை. தற்போதைய ஆட்சியில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 பேர் காவல் நிலையங்களில், போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகவும், அதில் அஜித்குமார் போன்ற சிலரின் தகவல்கள்தான் வெளியே பெரிதாக தெரிவதாகவும் கூறப்படுகிறது. அதுபோல கடந்த அதிமுக ஆட்சியில் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த லாக்-அப் மரணம்தான் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலைவழக்கு.


அதிமுக ஆட்சியின்போது காவல்துறையால் அடித்துக் கொல்லப்பட்ட பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ்

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாத்தான்குளம் வழக்கு...

கடந்த 2020-ம் ஆண்டு, கொரோனா காலகட்டத்தில், சாத்தான்குளம் சரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் நீண்ட நேரம் கடை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக, சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீஸ் காவலில் இருந்த தந்தை, மகன் இருவரும் அடித்தே கொல்லப்பட்டனர். இருவரும் இறந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்னும் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. 2021ம் ஆண்டே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்றும் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. 2021 வழக்கிலேயே இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், அஜித்குமார் வழக்கில் எப்படி விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Updated On 8 July 2025 12:04 AM IST
ராணி

ராணி

Next Story