
தமிழ்நாட்டில் தற்போது பெரிதாக தலைதூக்கியுள்ள பிரச்சனை ‘கிட்னி திருட்டு’. ஏழை மக்களை குறிவைத்து, அவர்களின் வறுமையை வாய்ப்பாக பயன்படுத்தி, ஆசை வார்த்தைகளை கூறி சிறுநீரக திருட்டில் ஈடுப்பட்டு வந்துள்ளது ஒரு திருட்டு கும்பல். குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் இந்த மோசடி அரங்கேறி வந்துள்ளது. இந்த குற்றத்தில் பிரபல மருத்துவமனை ஒன்று முக்கிய பங்காற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஏழை மக்களை குறிவைத்து சிறுநீரகம் திருடுவது இப்போது தொடங்கவில்லை. சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான ஏழை மக்களிடம் சிறுநீரக திருட்டு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதுதொடர்பாக பதியப்பட்ட வழக்கு விசாரணையும் தற்போதுவரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆனால் இந்த குற்றச் சம்பவம் குறித்து யாரும் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டபோது, எப்போதும் போல நடக்கும் ஒன்றுதான் என அலட்சியமாக பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. பல வருடங்களாக நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரங்கேறி வரும் கிட்னி திருட்டு, மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி? தற்போது இந்த விவகாரம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்பது குறித்து இங்கு காண்போம்.
சர்க்கரை நோய் அதிகரிப்பால் இந்தியாவில் அதிகரிக்கும் கிட்னி தொடர்பான நோய்கள்
‘கிட்னி திருட்டு’ மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை குறிவைக்கும் கும்பல், சிறுநீரகங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறுகிறது. குறிப்பாக பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இந்த சம்பவம் அதிகம் நடப்பதாக சொல்லப்படுகிறது. வறுமையை காரணம் காட்டி ஏழை மக்களை மூளைச்சலவை செய்து, ஒரு கட்டத்தில் கிட்னியை தர ஒப்புக் கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் தருவதாகவும் கூறப்படுகிறது. வறுமையில் இருப்பவர்களும் லட்சத்தில் பணம் என்பதால், ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி கிட்னியை தர ஒப்புக் கொள்கின்றனர். இப்படி சம்மதிப்பவர்களை கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுகின்றனவாம்.
இப்படி ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை விலைப்பேசி எடுக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அல்லது சிறுநீரகங்கள் தேவைப்படும் பணக்காரர்களிடம் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயத்தில் சிறுநீரகங்களை தரும் ஏழை மக்களுக்கு, சொன்னவாறு மீதி பணம் தரப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது. முன்பணமாக கொடுக்கப்படும் பணத்தை தவிர, மற்றப் பணத்தை தருவதாக இழுத்தடித்து அப்படியே கிடப்பில் போட்டு, ஏமாற்றியும் வருகின்றனர். அப்படியே கொடுத்தாலும் அப்பணம் முழுவதும் சிகிச்சைக்கே சரியாக இருக்கிறது. சிகிச்சைக்கே அவர்கள் கொடுத்த மொத்த பணமும் செலவழிவதோடு மட்டுமல்லாமல், ஒரு சிறுநீரகத்துடன் மக்கள் உயிருக்கு ஆபத்தான சூழலிலும் வாழ்ந்து வருவது வேதனையளிக்கிறது.
சிறுநீரக திருட்டில் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரபல மருத்துவமனை முக்கிய பங்கு
சிறுநீரக திருட்டில் முக்கியப் பங்காற்றும் தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனை...
என்னதான் இடைத்தரகர்கள் மக்களிடம் பேசி சிறுநீரகத்தை தர ஒப்புக் கொள்ள வைத்தாலும், அதனை சிகிச்சை செய்து எடுப்பதற்கு மருத்துவர்கள் தேவை. மருத்துவர்கள் உதவி இல்லாமல் இந்த நடைமுறை சாத்தியமா? என்றால் இல்லை. முறையான மருத்துவர்கள் இல்லாமல் இந்த நடைமுறை தொடர்ந்திருந்தால், பல உயிரிழப்புகள் ஏற்பட்டு இந்த குற்றச் சம்பவம் மிகப்பெரிதாக வெடித்து, இந்நேரம் இதற்கு ஒரு தீர்வு கிட்டியிருக்கும். இதனால் இதில் முறையாக படித்து மருத்துவ வேலையில் இருக்கும் மருத்துவர்கள் ஈடுப்பட்டிருப்பது தெளிவாக தெரியவந்துள்ளது. கோவை, திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பிரபல மருத்துவமனைகளும், அதில் பணியாற்றும் மருத்துவர்கள் சிலரும் இந்த கொடூர சம்பவத்திற்கு துணைபோவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் கொண்ட ஒரு மருத்துவமனையும், பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும் ஒரு பிரபல மருத்துவமனையும் இந்த சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது.
10 வருடங்களுக்கு மேல் நாமக்கலில் தொடரும் சிறுநீரக திருட்டு...
இந்த சிறுநீரக திருட்டு சம்பவம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரங்கேறி வருகிறது. நாமக்கல் மட்டுமின்றி சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஏழை மக்களிடம் சிறுநீரக திருட்டு நடைபெற்றதாக அப்போதே புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. காவல்துறை விசாரணையில், மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் இயங்கி வந்த பத்துக்கும் மேற்பட்ட பிரபல தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணராக மருத்துவர் வி.எம். கணேசன் என்பவர் பணியாற்றியதும், இவர் சில மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்கள உடன் இணைந்து சிறுநீரகக் கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கபட்டது. தொடர்ந்து மருத்துவர் கணேசன் உட்பட சிறுநீரக திருட்டில் ஈடுப்பட்ட மருத்துவர்கள் சிலரும், தரகர்களும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு, இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக 2015ஆம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. 2011 - 13 காலக்கட்டத்தில் மட்டும் 80க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சிறுநீரகம் அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இவ்விவகாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
சிறுநீரக திருட்டில் முக்கிய பங்கு வகித்த ஆனந்தன் என்ற இடைத்தரகர் தலைமறைவு
சிக்கிய முக்கிய தலை...
இந்த விவகாரம் தற்போது மீண்டும் வெளிவர காரணம், நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களில் சிலருக்கு, முன்பணம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படாததே ஆகும். அவர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தான் இந்த மோசடி தெரியவந்துள்ளது. சிறுநீரக திருட்டு விவகாரத்தில் முக்கிய பங்காற்றியது ஆனந்தன் என்ற இடைத்தரகர் எனக் கூறப்படுகிறது. விஷயம் பெரிதாக மாற தற்போது இந்த ஆனந்தன் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவரைப் பிடித்தால் இதில் பங்காற்றிய மருத்துவர்கள் யார்? எந்தெந்த மருத்துவமனைகள் இந்த திருட்டு விவகாரத்தில் இடம்பெற்றுள்ளன? போன்ற உண்மைகள் வெளிவந்துவிடும்.
பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை
அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்!
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி, “நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடர் கண்காணிப்பை தமிழ்நாடு அரசு மேற்கொண்டிருந்தால், இத்தகைய சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும். தற்போது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி வெறும் 3 இலட்சத்திற்கு அவர்களின் கிட்னி எடுக்கப்படுவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள் - அமைச்சர் சுப்ரமணியன்
தமிழ்நாடு அரசால் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?
புகாரைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியின் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் போலீஸார், பள்ளிபாளையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆனந்தன் பிடிபட்டால்தான் விசாரணை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது. பிரச்சனை குறித்து பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், “வணிக நோக்கத்தில் யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. நிச்சயமாக குற்றவாளிகள் தப்பவே முடியாது” என தெரிவித்துள்ளார்.
