
"திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன" என்றொரு பழமொழி உண்டு. அவ்வாறு நிச்சயிக்கப்படும் திருமணங்கள் மணமேடைவரை வந்து நின்றுபோவது என்பது இன்று சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் பெங்களூருவிலும் நடந்தேறியுள்ளது. அதுவும், தன்னுடைய எதிர்கால கணவர் தன்னிடம் நன்றாக வெளிப்படையாக பேசுகிறாரே என்ற நம்பிக்கையில், தனது முதல் காதல் குறித்து மணமகள் பகிர்ந்துகொள்ள, அதையே காரணம்காட்டி இறுதிவரை திருமண சடங்குகளை செய்துவிட்டு, கையில் தாலியையும் வாங்கிவிட்டு, மணமகள் கழுத்தில் கட்டாமல், சினிமாவை போல் ட்விஸ்ட் வைத்து கல்யாணத்தை நிறுத்தியுள்ளார் மணமகன். இதையடுத்து பெண் வீட்டார் சார்பில் காவல்நியைத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முதல்நாள் ரிசப்ஷன் முடிந்து அன்று இரவு முழுவதும் ஃபோனில் பேசிய ஜோடி
முதல் காதலை முறையாக மணமகனிடம் தெரிவித்த மணமகள்
பெங்களுர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி, பால்புரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான வேணுவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணிற்கும் கடந்த ஏப்ரல் 30ம் தேதி திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த 29ம் தேதியன்று மிகவும் தடபுடலாக திருமண வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றுள்ளது. இதில் மணமகள் மற்றும் மணமகன் இருவருமே சிரித்தபடி மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு கேமராவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தங்களது திருமணம் நடக்காதென்று. ஒருவேளை அப்போதே மணமகன் திட்டமிட்டிருக்கலாம், திருமணத்தை நிறுத்த!
திருமண வரவேற்பு முடிந்து அன்று இரவு மணமகளும் மணமகனும் அவரவர் அறைகளுக்குச் சென்றுவிட, விடியும்வரை இருவரும் தூங்காமல் கண்விழித்து செல்ஃபோனில் பேசிக்கொள்ளும் பேச்சுக்குரல் கேட்டுக் கொண்டிருந்ததாக திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் தெரிவித்துள்ளனர்.
திருமண சடங்குகள் அத்தனையும் செய்து தாலி கட்டும் நேரத்தில் விட்டுச்சென்ற மணமகன்
மணமேடையில் ட்விஸ்ட் வைத்த மணமகன்
காலை வேளையில் மணமகளும் மணமகனும் திருமண கோலத்தில் திருமணத்திற்கு தயாராகி மணவறையில் அமர்ந்துள்ளனர். தாலி காட்டும் நேரமும் வந்தது. புரோகிதர் திருமண மந்திரங்களை ஓத மணமகளுக்குத் தாலிகட்டும்படி தாலியை எடுத்து மணமகனிடம் நீட்டியுள்ளார். கெட்டி மேளம் முழங்கியுள்ளது. திருமணத்திற்கு வந்த சொந்த பந்தங்கள் அட்சதையை தூவ தயாராக இருக்க, தாலியை வாங்கிய மணமகன் தாலியையே சற்று நேரம் உற்றுப்பார்த்துவிட்டு "என்னை மன்னித்துவிடுங்கள். நான் இந்த பெண்ணுக்கு தாலி கட்டமாட்டேன். என்னால் முடியாது" என்று கூறியுள்ளார். இதனால் திருமண மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் ஷாக் ஆகினர்.
அவ காதலனை அவளிடமே கொடுத்துடுங்க!
மணமகன் தாலி கட்ட மறுத்த காரணத்தை மணமகளின் பெற்றோர் உற்றார் உறவினர்கள் விசாரிக்க, அவர் திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் வருவதை போன்று, உங்கள் பெண் ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து வந்துள்ளார். முதல் காதல் தனக்கு எப்போதுமே மறக்காது என்று என்னிடமே கூறினார். எனவே மணமகள் காதலித்த அந்த நபருக்கே அவளை திருமணம் செய்து வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். நான் உங்களின் வற்புறுத்தலால் மணமகளின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டால் சரியாக இருக்காது. எனவே அவள் விரும்பிய அந்த பையனுக்கே அவளை திருமணம் செய்து கொடுத்துவிடுங்கள். அவள் நல்லா இருக்கணும் என்று உருக்கத்தோடு கூறிவிட்டு திருமண மண்டபத்தைவிட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் திருமண வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
திருமணம் நின்றுபோனபோதும் பந்தியில் அமர்ந்து பொறுமையாக சாப்பிட்டு சென்ற உறவுகள்
திருமணம் நின்றுபோனாலும் தின்றுதீர்த்த சொந்தங்கள்!
யார் எப்படி போனாலும், அடித்துக் கொண்டாலும் எங்களுக்கென்ன? எங்களுக்கு சோறுதான் முக்கியம் என்பது போல திருமணத்திற்கு வந்த சொந்தங்கள், "பரவாயில்ல திருமணம் தானே நின்னுபோச்சு நாங்க சாப்பிட்டுவிட்டு போறோம்" என்று பந்தியில் இலைகளை விரித்து, சாப்பாட்டை பரிமாறச் சொல்லி பக்காவாக ஒரு வெட்டு வெட்டிவிட்டு பந்தியை சிறப்பித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதனிடையே மணமகனின் செயலால் வெகுண்டெழுந்த மணமகள் வீட்டார் தேவனஹள்ளி காவல்நிலையத்தில் மணமகன் வேணுவின் மீது புகாரளித்துள்ளனர். மணமகள் மற்றும் மணமகன் இருவருமே உள்ளுரைச் சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் முறையாக இரு வீட்டாரையும் அழைத்து முதலில் சமாதானம் பேசியுள்ளனர். இதில் மணமகள் மற்றும் மணமகனின் கடந்தகால காதல் கசமுசாக்களும், கிசுகிசுக்களும் காவல்துறயினருக்குத் தெரியவந்ததால் இரு தரப்பிலும் சமரச உடன்பாடு ஏற்படவில்லையெனக் கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து திருமணத்தின்போது தாலி கட்டாமல் கழட்டிக் கொண்டு போய்விட்ட மணமகன் வேணுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் "தான் ஜெயிலுக்கு போனாலும் போவேனேத் தவிர அவ கழுத்துல மட்டும் தாலி கட்டமாட்டேன் என்று மணமகன் வேணு உறுதியாக தெரிவித்துள்ளார்". இதனால் மணமகனின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தேவனஹள்ளி காவல்துறையினர் கலந்தாலோசித்து வருகின்றனர்.
