இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கோவாவின் மகுடமாய் திகழும் துத்சாகர் நீர்வீழ்ச்சி, அதன் வெண்ணிறப் பேரழகால் "பால் கடல்" என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான வனப்பகுதிக்குள், மாண்டவி ஆற்றின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சி, வெறும் ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல், சாகசப் பயணிகளுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை வழங்குகிறது. கண்கவர் காட்சிகள் நிறைந்த ஒரு மாயாஜால உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும் இந்த நீர்வீழ்ச்சி, இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகும். இப்படி பல அற்புதங்களை தன்னகத்தே கொண்டுள்ள துத்சாகர் நீர்வீழ்ச்சி குறித்த முழுமையான தகவலை இந்த தொகுப்பில் காண்போம்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயம்

துத்சாகர், அதன் பெயருக்கேற்ப, சுமார் 310 மீட்டர் (1017 அடி) உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் வெண்ணிற நீர், பால் பெருக்கெடுத்து ஓடுவதை போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்குகிறது. சுற்றிலும் பசுமையான மலைகளும், அடர்ந்த காடுகளும் சூழ, இந்த நீர்வீழ்ச்சி ஒரு அழகிய ஓவியத்தைப் போலவே காட்சியளிக்கிறது. பிற நீர்வீழ்ச்சிகளை போலல்லாமல், துத்சாகர் நீர்வீழ்ச்சியின் நடுவே ஒரு ரயில் பாதை செல்வது இதன் தனிச்சிறப்பு. இந்த ரயில் பாலத்தின் மீது ரயில் செல்லும்போது, நீர்வீழ்ச்சியின் அழகை ரசிப்பது ஒரு அலாதியான அனுபவமாகும். ரயிலில் இருந்து பார்க்கும் போதும், அருகிலிருந்து பார்க்கும் போதும் இதன் கம்பீரம் வேறுபடும். சாகசப் பிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், இயற்கை ஆர்வலர்கள் என அனைவரையும் ஈர்க்கும் ஒரு காந்த சக்தி இந்த நீர்வீழ்ச்சிக்கு உண்டு. இந்தப் பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு அடைக்கலமாக உள்ளன. இது, இதன் சூழலியல் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.


அழகிய ஓவியத்தைப் போல காட்சியளிக்கும் துத்சாகர் நீர்வீழ்ச்சி

குறிப்பாக துத்சாகர் நீர்வீழ்ச்சி, மாண்டவி ஆற்றின் மீது அமைந்துள்ளதோடு, மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பகவான் மகாவீர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்காவிற்குள் அமைந்துள்ளது. இதன் புவியியல் இருப்பிடம், இதனை கோவாவிற்கும் கர்நாடகாவிற்கும் இடையிலான எல்லையில் ஒரு முக்கிய இயற்கை அடையாளமாக மாற்றியுள்ளது. வரலாற்று ரீதியாக, இந்த பகுதி கோவாவின் கலாச்சாரம் மற்றும் சூழலியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. அடர்ந்த இலையுதிர் காடுகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, செழுமையான பல்லுயிர் பெருக்கத்தை கொண்டுள்ளது. போர்ச்சுகீசிய காலனித்துவத்தின் போதும், அதற்குப் பின்னரும், இந்த நீர்வீழ்ச்சி கோவாவின் சுற்றுலா வளர்ச்சியில் ஒரு மையப்புள்ளியாக விளங்கி வருகிறது. இதன் பிரம்மிப்பூட்டும் காட்சிகள் சமூக ஊடகங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அதிகமானோரை தொடர்ந்து ஈர்த்து வருகின்றது.

துத்சாகர் நீர்வீழ்ச்சியை அடைவது எப்படி?

துத்சாகர் நீர்வீழ்ச்சியை அடைய இரண்டு முக்கிய வழிகள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. ரயில் மூலம் நீர்வீழ்ச்சியை அணுகுவதற்கு, அருகிலுள்ள குலேம் ரயில் நிலையம் ஒரு முக்கிய மையமாகும். இங்கிருந்து ரயில் தண்டவாளம் வழியாக நீர்வீழ்ச்சியை அடைய முடியும் என்றாலும், தண்டவாளத்தில் நடப்பது அனுமதிக்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், சாகச விரும்பிகள் பலர் இந்த வழியைத் தேர்வு செய்கிறார்கள். சமீப காலமாக, இந்திய ரயில்வேயால் துத்சாகர் ரயில் நிலையத்தில் பயணிகள் ஏறுவதோ அல்லது இறங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், இந்த ரயில் பாதை அடர்ந்த காடுகள் வழியாகச் செல்வதால், பயணத்தின் போது அற்புதமான இயற்கை காட்சிகளை அள்ளித்தரும். கர்நாடகாவின் உத்தர கன்னடத்தில் அமைந்துள்ள கேஸில் ராக் ரயில் நிலையத்திலிருந்தும் இந்த அருவியை அணுகலாம்.


ரயில் பயணம் மற்றும் ஜீப் சஃபாரி மூலம் துத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு செல்லலாம்

இரண்டாவது வழி ஜீப் சஃபாரி மூலம் நீர்வீழ்ச்சியை அடைவதாகும். குலேம் அல்லது கேஸில் ராக் ரயில் நிலையத்தில் இருந்து ஜீப் சஃபாரி வசதிகள், உற்சாகமான சாகச அனுபவத்தை வழங்குகின்றன. இருப்பினும், மழைக்காலத்தில் ஜீப் சஃபாரி சேவை நிறுத்தப்பட்டு, நடைபயணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. நீங்கள் மழைக்காலத்தில் செல்கிறீர்கள் என்றால், நடைப்பயணத்திற்கு தயாராக இருப்பது அவசியம். குலேம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 10 - 15 கிலோமீட்டர் தூரம் அடர்ந்த காடுகள் மற்றும் ஆற்றங்கரை வழியாக பயணிக்க வேண்டியிருக்கும். இந்த வனப்பாதையில் நடப்பது ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும். பாதைகள் கரடுமுரடானதாகவும், வழுக்கும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால், நல்ல நடைபயிற்சி காலணிகள் அணிவதும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதும் மிக முக்கியம்.

சுற்றுலா அனுபவங்கள் மற்றும் வசதிகள்

துத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பல அற்புதமான அனுபவங்களை பெறலாம். பால் போன்ற வெண்ணிற நீர், குன்றிலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் காட்சி கண்களுக்கு விருந்தளிக்கிறது என்றால், அருகில் செல்லும் போது நீரின் தெளிவும் தூய்மையும் உங்களை ஆச்சரியப்படுத்தும். அடர்ந்த காடுகள் வழியாக மேற்கொள்ளும் வனப்பாதை நடைப்பயணம் ஒரு சாகச அனுபவமாக அமைகிறது. இந்தப் பயணத்தின் போது தென்படும் சிறு ஓடைகள், வன விலங்குகள், பறவைகளின் ஒலிகள் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவை பயணத்தை மேலும் இனிமையாக்குகின்றன. இங்கு குரங்குகள், மான்கள் மற்றும் பல்வேறு வகையான பறவைகளைக் காண முடியும். நீர்வீழ்ச்சியின் நடுவே அமைந்துள்ள ரயில் பாலத்தில் ரயில் செல்லும் போது கிடைக்கும் காட்சி, புகைப்படக் கலைஞர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும்; இந்த இடத்திலிருந்து நீர்வீழ்ச்சியைப் படம்பிடிப்பது தனித்துவமானது. மேலும், நீர்வீழ்ச்சியின் கீழ்ப்பகுதியில் உள்ள குளங்களில் குளிப்பது புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக அமைகிறது; நீர் மிகவும் குளிர்ச்சியாகவும், தூய்மையாகவும் இருக்கும்.


டெவில்ஸ் கேன்யன் பள்ளத்தாக்கு மற்றும் தம்ப்டி சுர்லா கோயில்

இப்படி நீர்வீழ்ச்சி, காடு, ரயில் பாதை, பசுமையான சூழல் என ஒவ்வொரு பகுதியும் புகைப்படங்களுக்கு ஏற்ற காட்சிகளை வழங்குகின்ற அதேவேளையில், நம் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. வசதிகளை பொறுத்தவரை துத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு அருகில் சில இடங்களில் உணவகங்கள் மற்றும் தின்பண்டக் கடைகள் அமைந்துள்ளன. காலை உணவை இங்கேயே முடித்துக்கொண்டு பயணத்தை தொடரலாம். நீர்வீழ்ச்சிக்கு அருகில் சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்ப்டி சுர்லா கோயில் மற்றும் டெவில்ஸ் கேன்யன் பள்ளத்தாக்கு போன்ற இடங்களும் இங்கு பார்வையிடத்தக்கவையாகவே உள்ளன . மேலும், அருகிலுள்ள மசாலாத் தோட்டங்களுக்கு சென்று பல்வேறு மசாலாப் பொருட்களின் சாகுபடியையும், அவற்றின் நறுமணத்தையும் அனுபவிக்கலாம். இந்த இடங்கள் துத்சாகர் பயணத்தை ஒரு முழுமையான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக நமக்கு மாற்றுகின்றன.

சிறந்த நேரம் மற்றும் கூடுதல் குறிப்புகள்

துத்சாகர் நீர்வீழ்ச்சியை பார்வையிட ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மழைக்காலம் மிகச் சிறந்த நேரமாகும். இக்காலத்தில் நீர்வரத்து அதிகமாக இருப்பதோடு, சுற்றிலும் பசுமையாக காட்சியளிக்கும். இருப்பினும், மழைக்காலத்தின் காரணமாக பாதைகள் வழுக்கும் தன்மை கொண்டதாகவும், நடைப்பயணம் சவாலானதாகவும் அமையலாம். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ஜீப் சஃபாரிகள் தொடங்குவதால், அநேகமாக வறண்ட காலங்களில் துத்சாகர் அருவியைப் பார்வையிட இதுவும் ஒரு நல்ல நேரமாகும். இருப்பினும் ஜீப் சஃபாரி விரும்பாதவர்கள் நடந்து செல்ல முடிவெடுத்தால், நடைப்பயணத்திற்கு நல்ல உடல்திறன் அவசியம், எனவே 8-15 நாட்களுக்கு முன்பே பயிற்சி செய்வது நல்லது.


நீர்வீழ்ச்சிக்கு அருகில் ரயில் தண்டவாளத்தில் நடக்க தடை

நீர்வீழ்ச்சிக்கு அருகில் வசதிகள் குறைவாக இருப்பதால், தேவையான அளவு நீர் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்வது அவசியம். வனப்பாதையில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், வனத்துறை விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இந்திய ரயில்வேயால் தடை செய்யப்பட்டுள்ளதால், ரயில் தண்டவாளத்தில் நடப்பதைத் தவிர்க்கவும். புகைப்படக் கருவிகளை எடுத்துச் செல்லும்போது நீர்வீழ்ச்சியின் அருகே தண்ணீர் தெளிக்கும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். துத்சாகர் நீர்வீழ்ச்சிக்கு ஒரு பயணம் என்பது வெறும் கண்கவர் காட்சி மட்டுமல்ல, அது இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு சாகச அனுபவமாகும். வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள் ! இந்த பால்வெள்ளிக் கம்பளம் உங்கள் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Updated On 22 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story