இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

எவ்வளவு சம்பாதித்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்? வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அதை எப்படி சிக்கனப்படுத்துவது? சேமிப்பது? மேலும் எங்கு முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும்? லோன் எடுக்கும்போது தெரிந்துவைத்திருக்க வேண்டியவை என்னென்ன? என்பது போன்ற நிதி மற்றும் முதலீடு தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் நிதி ஆலோசகர் பத்மஜா கவிசரி.

எந்த வகையில் முதலீடு செய்தால் கட்டாயம் லாபம் கிடைக்கும்?

நமக்கு முந்தைய தலைமுறையினர் ரியல் எஸ்டேட், ஃபிக்ஸ்டு டெபாசிட் அல்லது எல்.ஐ.சி-யில் முதலீடு செய்வார்கள். ஆனால் இப்போது மியூச்சுவல் ஃபண்டு, ஸ்டாக் மார்க்கெட், போஸ்ட் ஆஃபீஸ் என முதலீடு செய்ய பல வழிகள் உருவாகிவிட்டன. இதனால் எங்கு பாதுகாப்பாக முதலீடு செய்வது என்ற கேள்வி பலருக்கும் எழுகின்றது. எனவே முதலீடு செய்யும்முன்பு, எதற்காக முதலீடு செய்கிறோம்? என்ற நோக்கத்தை கருத்தில்கொண்டே, அதற்கேற்ற இடங்களில் முதலீடு செய்யவேண்டும்.

போஸ்ட் ஆஃபீஸ் அல்லது ஃபிக்ஸ்டு டெபாசிட், எதில் முதலீடு செய்வது சிறந்தது?

இது ஆப்பிள் நல்லதா அல்லது ஆரஞ்சு நல்லதா? கதை போன்றதுதான். இரண்டுமே வெவ்வேறு ஊட்டச்சத்துகளை வழங்குவதுபோல, போஸ்ட் ஆஃபீஸ் அல்லது ஃபிக்ஸ்டு டெபாசிட் இரண்டிலுமே வெவ்வேறு நன்மைகள் இருக்கின்றன. வங்கிகளில் ஃபிக்ஸ்டு டெபாசிட் மற்றும் லோன்களை வழங்குவார்கள். வங்கிகளுடன் ஒப்பிடுகையில் போஸ்ட் ஆஃபீஸில் வட்டி சற்று கூடுதலாக கிடைக்கும். மேலும் வங்கிகள் இல்லாத கிராமங்களில்கூட போஸ்ட் ஆஃபீஸ் கட்டாயம் இருக்கும். இது அரசு நிர்வகிப்பதாக இருக்கும்.


முதலீடும் லாபமும்

ஸ்டாக் மார்க்கெட் என்றால் என்ன? ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஸ்டாக் மார்க்கெட் பிஸினஸில் இருக்கிறார்கள். அந்த நிறுவனங்களில் ஷேர் ஹோல்டராக சேர்ந்து, அதில் முதலீடு செய்து, ஒரு பங்கை லாபமாக வாங்குவதுதான் ஸ்டாக் மார்க்கெட். ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானதுதான் என்றாலும், இன்றைக்கு முதலீடு செய்துவிட்டு நாளைக்கே லாபம் எடுக்கவேண்டும் என்றால் அது முடியாது.

பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் முதலீடு திட்டங்கள் குறித்து கூறுங்கள்?

சுகன்யா சம்ரிதி யோஜனா (செல்வமகள் சேமிப்பு திட்டம்) என்ற அரசின் திட்டம் போஸ்ட் ஆஃபீஸ்களில் வழங்கப்படுகிறது. ஒரு வீட்டில் பெண் குழந்தை பிறந்தவுடன் இந்த திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, குழந்தை பேரில் இந்த கணக்கைத் தொடங்குவார்கள். இதில் 8% வட்டி கிடைக்கிறது. 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில்தான் இந்த கணக்கை தொடங்கமுடியும். அந்தப் பெண் 21 வயதை எட்டியபிறகு, செலுத்திய தொகையை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம். இது PPF போன்றதுதான். எனவே குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்கு பதிலாக, இதுபோன்ற திட்டங்களில் கணக்கைத் தொடங்கலாம்.


ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு

மியூச்சுவல் ஃபண்டு பாதுகாப்பானதா?

பாதுகாப்பானது என்று சொல்லலாம். ஆனால் உடனே லாபம் எதிர்பார்த்தால் அது சாத்தியமாகாது. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டால் லாபம் எடுக்கும்வரை பொறுமை மிகவும் அவசியம்.

இன்றைய அடிப்படை சம்பளம் என்பது 15 ஆயிரம் ரூபாய். இதில் சேமிப்பது எப்படி?

இன்றைய தலைமுறையினர் சம்பளம் வாங்கியவுடன் அதனை செலவழித்துவிடுகிறார்கள். ஆனால் முடிந்தவரை சேமிப்பது அவசியம். ஏனெனில் திருமணத்திற்கு பிறகு பொறுப்புகள் கூடிவிடும். எனவே சேமிப்பு என்பதே கடினமானதாகி விடும். இந்தியாவை பொருத்தவரை கேரியர் தொடங்குவதே 20 வயதிற்கு பிறகுதான். ஆனால் அதற்கு முன்பே சேமிக்கத் தொடங்கினால்தான் வேலைக்கு செல்லும்போது பாதி அளவிற்காவது ‘நிதி சுதந்திரத்தை’ (Financial freedom) அடைய முடியும். எனவே 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினால்கூட முடிந்தவரை பணத்தை மிச்சப்படுத்த வேண்டும். அப்போதுதான் சேமிப்பு பழக்கம் உருவாகும். முதலில் சேமித்தால்தான் பிறகு முதலீடு செய்யமுடியும்.

எப்படியெல்லாம் சேமிக்கலாம்? நமக்கு நாமே ப்ளான்ஸ் வைத்துக்கொள்வது எப்படி?

இப்போது பெரும்பாலான இடங்களில் Rich man - poor man குறித்து பேசப்பட்டு வருகிறது. Rich man -இன் பழக்கவழக்கங்களை பொருத்தவரை needs -க்கு 25%, wants-க்கு 15% தான் செலவழிப்பார்கள். மீதியை சேமிப்பார்கள். இப்படி சேமிப்பதால்தான் அவர்களால் நிறைய சேமிக்க முடிகிறது.


குறைந்த வருமானத்தில் சேமித்தல்

மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்கள் என்னென்ன பொருட்களையெல்லாம் EMI -இல் வாங்கலாம்? என்னென்ன வாங்கக்கூடாது?

இப்போதெல்லாம் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவதைவிட ஆன்லைனிலேயே பொருட்கள் வாங்க நிறைய ஆப்கள் வந்துவிட்டன. அதிலும் எந்த பண்டிகை வந்தாலும் நிறைய சலுகைகள் மற்றும் பிக் பில்லியன் டே போன்ற ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. இதனிடையே பஜாஜ் போன்ற நிறுவனங்கள் பிரபலமான ஆன்லைன் சேல்ஸ் ஆப்களில் லோன் கொடுக்க தொடங்கின. ஆனால் ஷோரூமில் சென்று வாங்கினால் மட்டுமே லோன் கொடுக்கவேண்டும் என்று கூறி RBI அதற்கு தடை விதித்துவிட்டது. இதுபோன்ற லோன்களை வாங்குவது என்பது சரியானதல்ல. லோன் வாங்கிவிட்டு, EMI-யே கட்டிக்கொண்டு இருந்தால் எதிர்காலம் பாதிக்கப்படும். EMI-யில் பொருட்களை வாங்குவது என்பது நம்மை நாமே அடமானம் வைப்பது போன்றதுதான்.

லோனை பொருத்தவரை, Good Loan மற்றும் Bad Loan என்று இருக்கிறது. ஷாப்பிங்கிற்காக லோன் எடுப்பது Bad Loan கணக்கில் வரும். Good Loan என்பது வீடு, கார் போன்றவற்றிற்காக வாங்குவது.


ஹவுஸ் லோன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டியவை

வீடு லோன் (Home loan) வாங்குவது நல்லதா? கெட்டதா?

இங்கு ஹவுஸிங் லோன் இல்லாத ஆட்கள் மிகவும் குறைவு. வேலை கிடைத்தவுடன் முதலில் வாங்கும் லோனாக இருப்பது இந்த லோன்தான். வீடு வாங்குவதற்கான முழு லோனையும் பேங்க் தராது. அதற்கு முன்பணம் (down payment) முதலில் செலுத்தவேண்டும். மாதம் ரூ. 1 லட்சம் சம்பாதிப்பவருக்கு முன்பணம் செலுத்தும் கெபாசிட்டி இருக்கும். வங்கியில் லோன் பெற அணுகும்போது 100 சதவீத லோனையும் வங்கி வழங்காது. 20% முன்பணத்தை நாம்தான் செலுத்தவேண்டும். அந்த பணத்தை செலுத்த சேமிப்பு அவசியம். உதாரணத்திற்கு, ரூ. 50 லட்சம் லோன் கேட்டு விண்ணப்பித்தால் ரூ. 10 லட்சமாவது முன்பணமாக செலுத்தவேண்டும். அதிலும் க்ரெடிட் கார்டு, பர்சனல் லோன் மற்றும் பிற லோன்கள் இருந்தால் வங்கிக்கடனானது குறைவாகத்தான் கிடைக்கும். ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் அதில் லோன் எடுத்தால் இரு தரப்பிலிருந்தும் வரி சலுகைகளை பெறலாம். இதுதவிர, மனைவி மெடர்னிட்டி விடுப்பில் இருந்தாலும்கூட கணவன் அக்கவுண்ட் மூலம் லோன் கட்டமுடியும்.

கணவன் - மனைவி இருவரும் வேலை செய்தால் வரிச்சலுகை பெறுவது எப்படி?

இதில் நிறைய நன்மைகள் இருக்கிறது. முதலில் ஹவுசிங் லோன். இதில் வட்டி மற்றும் அசல் இரண்டிலுமே சலுகை பெறலாம். இதுதவிர, பி.எஃப், குழந்தைகளின் படிப்பு செலவு போன்றவற்றையும் காட்டி வரியை குறைக்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் அதையும் கழித்துக்கொள்ளலாம். லைஃப் இன்சூரன்சும் இதில் அடக்கம். ஹெல்த் இன்சூரன்சில் 25 ஆயிரத்தை தம்பதியருக்கும், இன்னொரு 25 ஆயிரத்தை பெற்றோருக்கும் எடுக்கலாம். இப்போது வரியில் புது மற்றும் பழைய வரி இருக்கிறது. அதை பொருத்து சேமிப்பும், வரியும் அதற்குள் அடங்கும்.

Updated On 11 Dec 2023 6:46 PM GMT
ராணி

ராணி

Next Story