இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாட் உணவு வகைகளை விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக, சிக்கன் உணவுகளுக்கு அதிக மவுசு உண்டு. அந்த வகையில், இந்தத் தொகுப்பில் சிக்கன் பாப்கார்ன் பயன்படுத்தி மூன்று விதமான காரசாரமான உணவுகளை சமையல் கலைஞர் ஜெயக்குமார் செய்து காட்டுகிறார். இந்த உணவு வகைகளை வீட்டில் எப்படிச் செய்வது என்பது குறித்து விரிவாகக் காணலாம்.

சீஸ் லோடட் சிக்கன் பாப்கார்ன் வித் பிரெஞ்ச் ஃப்ரைஸ்

செய்முறை

* முதலில், சிக்கன் பாப்கார்ன் செய்ய, எலும்பில்லாத கோழிக்கறியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, மிளகாய் தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு மற்றும் மிளகு சேர்த்து கலக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை ஊற்றவும். முதலில் கோழித் துண்டுகளை முட்டைக்கருவில் தோய்த்து, பிறகு மாவு கலவையில் புரட்டி எடுக்கவும். இதை மீண்டும் ஒரு முறை செய்யலாம், அப்போது சிக்கன் இன்னும் மொறுமொறுப்பாக இருக்கும். இந்தத் துண்டுகளை சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


பிரெஞ்சு ஃப்ரைஸ் மேல் பெரி-பெரி மசாலாவை தூவும் போது...

* அடுத்து, ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் தயார் செய்ய வேண்டும். உருளைக்கிழங்குகளை ஃபிரைஸ் வடிவத்தில் வெட்டி, அவற்றை குளிர்ந்த நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இதனால் அவற்றில் உள்ள ஸ்டார்ச் நீங்கி, மொறுமொறுப்பாக இருக்கும். பிறகு, அவற்றை உலர்த்தி, மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

* இறுதியாக, பொரித்த பிரெஞ்சு ஃப்ரைஸை ஒரு தட்டில் அடுக்கவும். அதன் மேல் பெரி-பெரி மசாலாவை தூவி, பின்னர் ஒரு கோட் மயோனைஸ் ஊற்றவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் சிக்கன் பாப்கார்னையும் அதன் மேல் பரப்பி, துருவிய சீஸ் தூவி, மேலும் சுவை கூட்ட மீண்டும் ஒரு கோட் மயோனைஸ் ஊற்றி, மறுபடியும் பெரி-பெரி மசாலாவைத் தூவிப் பரிமாறினால், சுவையான, சூடான சீஸ் லோடட் சிக்கன் பாப்கார்ன் வித் பிரெஞ்சு ஃப்ரைஸ் தயார்.

ஸ்பைசி சிக்கன் பாப்கார்ன் ராப்

செய்முறை

* முதலில், கடைகளில் கிடைக்கும் ராப் ரொட்டியை எடுத்து, லேசாக வெண்ணெய் தடவி சூடாக்கிக் கொள்ளுங்கள். சூடான ரொட்டியை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் உங்களுக்கு விருப்பமான மயோனைஸ் வகையைத் தடவுங்கள். பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயை அதன் மீது பரப்பி, பெரி-பெரி மசாலாவைத் தூவுங்கள்.


சிக்கன் பாப்கார்னை ராப்பின் மேல் பரப்பி அடுக்கும் தருணம்

* அடுத்து, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சிக்கன் பாப்கார்னை ராப்பின் மேல் பரப்பி அடுக்கவும். அதன் மீது காரமான மயோனைஸ், சாதாரண மயோனைஸ் மற்றும் பெரி-பெரி மசாலாவைத் தூவவும். இப்போது, ராப்பை இறுக்கமாகச் சுருட்டி மடித்து, அதை டோஸ்ட் செய்து பரிமாறினால், மொறுமொறுப்பான மற்றும் சுவையான ஸ்பைசி சிக்கன் பாப்கார்ன் ராப் தயார். இந்த ராப், உங்களுக்கு ஒரு புதிய சுவை அனுபவத்தை நிச்சயம் தரும்.

ஸ்பைசி லேஸ் சிக்கன் பாப்கார்ன்

செய்முறை

* முதலில் ஒரு சிப்ஸ் பாக்கெட்டை எடுத்து, அதில் உள்ள சிப்ஸ்களை நன்கு நொறுக்கிப் பொடியாக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாயைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர், தேவைக்கேற்ப முட்டை சேர்க்கப்படாத மயோனைஸை சேர்த்து மீண்டும் நன்கு கிளறிவிடவும். அடுத்து, ஒரு சீஸ் துண்டு சேர்த்து கலவையை ஒன்று சேர கலக்கவும்.


காரமான ஸ்பைசி லேஸ் சிக்கன் பாப்கார்ன்

* இந்தக் கலவையுடன், ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த சிக்கன் பாப்கார்னை தேவையான அளவு சேர்த்து, அதன் மீது மீண்டும் மயோனைஸ், தந்தூரி மயோனைஸ் மற்றும் காரசாரமான மயோனைஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இறுதியாக, சாஸைச் சேர்த்துப் பரிமாறினால் சுவையான காரமான ஸ்பைசி லேஸ் சிக்கன் பாப்கார்ன் தயார்.

Updated On 30 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story