இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

புரதச்சத்து என்பது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒரு ஊட்டச்சத்து. குறிப்பாக, தினசரி வேலைகளுக்கான ஆற்றலை வழங்குவதோடு, தசை வளர்ச்சி, திசுக்கள் பழுது பார்த்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளுக்கும் இது அவசியமாகிறது. காலை உணவு என்பது அன்றைய நாளின் தொடக்கம் என்பதால், அதில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில், புரதச்சத்து நிறைந்த தோசை வரிசையில், எளிமையாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒன்றுதான் முளைகட்டிய தானிய தோசை. இதை எப்படி செய்வது? இதன் நன்மைகள் என்னென்ன? போன்ற தகவலோடு சமைத்துக் காட்டுகின்றனர், சமையல் கலைஞர்கள் சீதாராமன் மற்றும் பார்வதி.


செய்முறை

* முதலில், முளைகட்டிய தானியங்களை எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். முளைகட்டியதால், தானியங்களில் ஒருவித வாசனை வரும். எனவே, நன்கு கழுவுவது அவசியம். கழுவிய தானியங்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ளவும். இதுவே தோசையின் முக்கிய மாவு.

* ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கவும்.

* வெங்காயம் லேசாக வதங்கியதும், சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்து நன்கு கிளறவும். தானியங்களால் ஏற்படும் வாயுத் தொல்லையை தவிர்க்க பெருங்காயம் சேர்ப்பது மிகவும் நல்லது. வதக்கிய பொருட்களை அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.


வதக்கிய பொருட்களை தானிய மாவுடன் சேர்த்து கலக்குதல்

* அரைத்து வைத்துள்ள முளைகட்டிய தானிய மாவுடன், வதக்கிய பொருட்களை சேர்க்கவும். இதை அப்படியே தோசையாக சுடலாம். அல்லது, பாரம்பரிய அரிசி மாவுடன் கலந்தும் சுடலாம். இது சுவையை மேலும் அதிகரிக்கும். உதாரணமாக, சூரக்குறுவை அரிசி மாவு தசை மண்டலத்திற்கு மிகவும் நல்லது.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கவும். கல் சூடானதும், மாவை ஊற்றி வட்டமாக மெல்லியதாகத் தேய்க்கவும். சுற்றிலும் எண்ணெய் ஊற்றி, இருபுறமும் நன்கு வேகவிட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.

முளைகட்டிய தானிய தோசையின் நன்மைகள்

* முளைகட்டிய தானியங்களில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது தசைகள் வளர்ச்சிக்கு உதவுவதுடன், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

* தானியங்கள் முளைகட்டிய பிறகு, அதில் உள்ள புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் எளிதில் செரிக்கக்கூடிய வடிவத்திற்கு மாறுகின்றன. இதனால் செரிமான மண்டலம் எளிதாக செயல்படுகிறது.

* முளைகட்டிய தானியங்களில் வைட்டமின் C, ஃபோலேட், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


தயார் நிலையில் முளைகட்டிய தானிய தோசை

* இதில் உள்ள அதிகப்படியான புரதம், தசைகளை வலுப்படுத்த, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

* இந்த தோசையை இரவு உணவாக எடுத்துக் கொள்வதை விட, காலை உணவாக எடுத்துக் கொள்வது மிகச்சிறந்தது. இது உடலுக்கு முழுமையான ஆற்றலைத் தருவதோடு, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவுகிறது.

சாதாரண தோசைகளை மட்டும் சாப்பிடுவதற்கு பதிலாக, புரதம் நிறைந்த இந்த முளைகட்டிய தானிய தோசையை உங்கள் தினசரி உணவுப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு புதிய அடியெடுத்து வைக்கலாம்.

Updated On 9 Sept 2025 10:15 AM IST
ராணி

ராணி

Next Story