இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பண்டிகை காலங்களில் அதிரசம் இல்லாமல் கொண்டாட்டம் நிறைவடையாது. அதன் இனிமையான சுவை மற்றும் மென்மையான தன்மை பலருக்கும் பிடித்திருந்தாலும், பாகு பதம் சரியாக அமையுமா என்ற தயக்கம் காரணமாக பலர் இதைச் செய்யத் தயங்குகிறார்கள். கடந்த வாரம் ஸ்ரீ ஜெயந்தி பட்சணமாக வெல்ல அதிரசம் செய்வது எப்படி என்று பார்த்தோம். இந்த வாரம், மற்றொரு பாரம்பரிய இனிப்பான சர்க்கரை அதிரசம் செய்வது எப்படி என சமையல் கலைஞர் லதா விளக்குகிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த அதிரசத்தை சரியான முறையில், எளிமையான சில குறிப்புகளுடன் மிருதுவாகவும் சுவையாகவும் எப்படி தயாரிப்பது என்பதை அவர் விரிவாக செய்து காட்டுகிறார்.


சர்க்கரை அதிரசம் செய்முறை

* முதலில், பச்சரிசியை நன்றாக ஊறவைத்து, நன்கு கழுவி, தண்ணீரை வடிகட்டி, உலர வைக்கவும். அரிசி நன்கு காய்ந்ததும், அதை நைஸான மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதுவே அதிரசம் மென்மையாக வர முக்கிய காரணம்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்து, கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். அடுப்பை மிகவும் குறைவான தீயில் வைத்து சர்க்கரையை கரைய விடவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்து நூல் போன்ற பதத்திற்கு வரும்போது, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து, ஒரு சொட்டு பாகை அதில் விடவும். பாகு தண்ணீரில் கரையாமல், உருண்டையாக திரண்டு வந்தால் சரியான பதம்.


சர்க்கரை அதிரச மாவை வட்டமாக தட்டி எடுத்தல்...

* பாகு சரியான பதத்தில் வந்ததும், அடுப்பை அணைத்து, ஏலக்காய் பொடி சேர்க்கவும். பின்னர், அதில் மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறவும். மாவு நன்கு கலந்த பிறகு, ஒரு ஸ்பூன் நெய் மற்றும் பொடித்த முந்திரி சேர்த்து மீண்டும் நன்கு கிளறி, பாத்திரத்தை மூடி வைக்கவும்.

* மறுநாள், மாவு இறுகி இருக்கும். அதில் தண்ணீர் சேர்க்காமல், கைகளால் நன்கு அழுத்தி பிசைந்து, மிருதுவான பதத்திற்கு கொண்டு வரவும். பின்னர், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தட்டி, மிதமான சூட்டில் உள்ள எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அதிரசத்தை அதிக தீ வைத்து பொரிக்கக் கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து பதமாக பொரித்து எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதிரசம், மிகவும் ரஃப்பாகிவிடும்.


அதிரசத்தை எண்ணெயில் பொரித்தெடுக்கும் தருணம்

சர்க்கரை அதிரசம் செய்வது ஒரு கலை. சர்க்கரை பாகின் பதம்தான் இதற்கு மிகவும் முக்கியம். அத்துடன் அதிரசத்தை அதிக சூட்டில் பொரித்தால் ஒருமாதிரி கெட்டியாகிவிடும்.

சர்க்கரை அதிரசத்தின் நன்மைகள்

அதிரசத்தில் பயன்படுத்தப்படும் அரிசி மாவு மற்றும் சர்க்கரை உடனடி ஆற்றலை அளிக்கின்றன. மேலும், இதில் சேர்க்கப்படும் ஏலக்காய் செரிமானத்திற்கு உதவுகிறது. நெய் மற்றும் முந்திரி உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை தருகின்றன. குழந்தைகளுக்கு சத்தான மற்றும் பாரம்பரிய இனிப்புகளை அளிப்பதில் இந்த அதிரசம் முக்கிய பங்கு வகிக்கிறது.


சுவையான சர்க்கரை அதிரசம் ரெடி

இந்த சுவையான இனிப்பு, தீபாவளி மற்றும் பிற பண்டிகைகளில் இறைவனுக்கு படைக்கப்படும் ஒரு முக்கிய நைவேத்தியமாக இருக்கிறது. வெல்ல அதிரசம் போலவே, இந்த சர்க்கரை அதிரசமும் அதன் தனித்துவமான சுவைக்காக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.

நீங்கள் அனைவரும் இந்த சர்க்கரை அதிரசத்தை வீட்டில் செய்து பார்த்து, உங்கள் குடும்பத்தினருடன் பண்டிகைகளை இனிமையாக கொண்டாடுங்கள்.

Updated On 26 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story