இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கோடைக்காலம் வந்தாலே மாம்பழ சீசன் களைகட்டிவிடும். இந்த முறை வழக்கமான மாம்பழ ரெசிபிகளை தாண்டி, ஒரு புதிய மற்றும் சுவையான ருசியை தரக்கூடிய மாம்பழ மிசு(திராமிசு என்றும் சொல்லலாம்) எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம். இத்தாலியின் பிரபலமான திராமிசு (Tiramisu) போல அடுக்கு அடுக்காக, ஆனால் முற்றிலும் மாம்பழத்தின் சுவையுடன் இந்த இனிப்புப் பண்டம் கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு அருமையான விருந்தாகும். இதை எப்படி தயாரிப்பது என்பதை செய்து காட்டுகிறார் ஃபரோஸ் ஹோட்டல் செஃப் லோகேஷ்வரன் தமிழரசன்.


மாம்பழ மிசு - செய்முறை விளக்கம்

மாம்பழ மிசு தயாரிக்க நான்கு முக்கியமான விஷயங்களை நாம் செய்ய வேண்டும். ஒவ்வொன்றையும் கவனமாகப் பின்பற்றினால்தான், அட்டகாசமான சுவையில் இந்த இனிப்பு பண்டத்தை தயாரிக்க முடியும்.

1.மாம்பழக் கூழ் தயாரித்தல்

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் 100 கிராம் மாம்பழத் துண்டுகள், 50 கிராம் சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்து, இந்த கலவையை வடிகட்டவும். வடிகட்டிய மாம்பழச் சாற்றைத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • வடிகட்டிய பிறகு மீதமுள்ள மாம்பழத் துண்டுகளை லேசாக மசித்து ஒரு லேயருக்காகத் தயாராக வைத்திருக்கவும்.

மாம்பழ துண்டுகளை வேக வைத்தல் மற்றும் கூழ் தயாரித்தல்

2. சாபயான் (Sabayon) தயாரித்தல்

சாபயான் என்பது முட்டையின் மஞ்சள் கரு, சர்க்கரை மற்றும் சில சமயம் எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கிரீம் ஆகும். மாம்பழ மிசுவிற்கு இது ஒரு முக்கிய அடுக்காக அமைந்து சுவையை கூட்டுகிறது.

செய்முறை:

  • ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க விடவும். இந்த முறைக்கு, டபுள் பாய்லிங் என்று பெயர். இதில், தண்ணீர் பாத்திரத்தின் மேலே வைக்கப்படும் கிண்ணம் தண்ணீரைத் தொடக்கூடாது, நீராவியில் மட்டுமே சமைக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
  • தண்ணீர் கொதிக்கும் போது, அதன் மேல் ஒரு கிண்ணத்தை வைத்து, அதில் இரண்டு முட்டையின் மஞ்சள் கரு, பழுப்பு சர்க்கரை மற்றும் சிறிதளவு வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.
  • சர்க்கரை கரையும் வரை இந்தக் கலவையை ஒரு விஸ்க் (whisk) கொண்டு இடைவிடாமல் அடிக்கவும்.
  • கிரீமியான பதம் வந்தவுடன், தொடர்ந்து கிண்ணத்தை நீராவியின் மேல் வைத்து மீண்டும் அடிக்கவும். கிண்ணம் சூடாகும்போது வெளியே எடுத்து சிறிது நேரம் ஆறிய பின் மீண்டும் அடிக்கவும். முட்டை திரண்டுவிடாமல் இருக்க வெப்பநிலை கட்டுப்பாடு மிக அவசியம்.
  • தொடர்ந்து அடிக்கும்போது, இந்தக் கலவை கெட்டியாகி, கிரீமியான ஒரு பதத்தைப் பெறும். இதுவே சாபயான். இது திராமிசு கிரீமிற்கு நல்ல பிடிப்பையும் சுவையையும் கொடுக்கும்.

மாம்பழ மிசு அடுக்குகளை தயார் செய்யும் முறை

3. மாம்பழ மிசு கிரீம் தயாரித்தல்

செய்முறை:

  • ஒரு பெரிய கிண்ணத்தில் 120 கிராம் மாஸ்கார்போன் சீஸை எடுத்துக்கொள்ளவும்.
  • தயாரித்து வைத்த சாபயானில் ஒரு சிறிய பகுதியை மாஸ்கார்போன் சீஸுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதற்கு சாக்ரிஃபைஸ் மெத்தட் என்று பெயர். இது சீஸ் மற்றும் சாபயானை நன்கு கலக்கவும்.
  • நன்கு கலந்த பிறகு, மீதமுள்ள சாபயானை முழுவதுமாகச் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • ஏற்கனவே விப் செய்து வைத்த 120 கிராம் விப்பிங் கிரீமை இந்தக் கலவையில் மெதுவாக சேர்க்கவும். விஸ்க் பயன்படுத்தாமல், ஒரு ஸ்பேச்சுலா கொண்டு மெதுவாக ஃபோல்ட் செய்யவும். இப்படி செய்வதால் கிரீமில் உள்ள காற்று உள்ளேயே தங்கி, மென்மையான மற்றும் கெட்டியான பதம் கிடைக்கும்.
  • இறுதியாக, மாம்பழச் சுவைக்காக 3 தேக்கரண்டி மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த கிரீமை ஒரு பைப்பிங் பேகில் (piping bag) நிரப்பி வைத்துக் கொள்ளவும்.

4. மாம்பழ மிசு அடுக்குகளை உருவாக்குதல்

திராமிசுவில் இத்தாலிய பிஸ்கட்டை காபியில் நனைத்து பயன்படுத்துவது போல, இங்கு நாம் மாம்பழச் சாற்றைப் பயன்படுத்தப் போகிறோம்.

செய்முறை:

  • ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது பரிமாறும் பாத்திரத்தில், முதலில் மாம்பழ மிசு கிரீமின் ஒரு அடுக்கைச் சேர்க்கவும்.
  • அடுத்து, வெண்ணிலா ஸ்பாஞ்ச் துண்டுகளை மாம்பழச் சாற்றில் லேசாக நனைத்து, கிரீமின் மேல் அடுக்கவும். அதிகமாக நனைத்தால் ஸ்பாஞ்ச் குழைந்துவிடும்.
  • அதன் மேல், மசித்த மாம்பழத்தின் ஒரு அடுக்கை சேர்க்கவும்.
  • மீண்டும் ஒரு முறை கிரீம், ஸ்பாஞ்ச் (மாம்பழச் சாற்றில் நனைத்து), மசித்த மாம்பழம் என அடுக்குகளைத் மேலே மேலே தொடரவும்.
  • இறுதி அடுக்காக மாம்பழ மிசு கிரீமை நிரப்பவும்.
  • மேலாக, சிறிய துண்டுகளாக நறுக்கிய மாம்பழங்களால் அலங்கரிக்கவும்.
  • தயாரித்த மாம்பழ மிசுவை குறைந்தது 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து நன்கு செட் செய்த பிறகு பரிமாறவும்.

மாம்பழ திராமிசு ரெடி

மாம்பழ மிசுவின் நன்மைகள்

இந்த மாம்பழ மிசு, சுவைக்கு மட்டுமல்ல, சில ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

வைட்டமின்கள் நிறைந்தது: மாம்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சரும ஆரோக்கியத்திற்கும், கண்பார்வைக்கும் உதவுகின்றன.

செரிமானத்திற்கு உதவும்: மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

ஆற்றலை அளிக்கிறது: மாம்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் உடனடியாக ஆற்றலை வழங்குகின்றன. இது கோடைக்காலத்தில் புத்துணர்ச்சி அளிக்கும்.

மாஸ்கார்போன் சீஸ்: இந்த சீஸ் பால் பொருட்களில் உள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்களை வழங்குகிறது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது.

இப்படி தயாரிக்கப்படும் மாம்பழ மிசு என்பது கோடை காலத்திற்கான ஒரு அற்புதமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் இனிப்பு பண்டமாகும். இதை வீட்டிலேயே எளிதாக தயாரித்து, இந்த மாம்பழ சீசனை முழுமையாக அனுபவியுங்கள்!

Updated On 24 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story