மட்டன் வாங்கியவுடன், அதில் பிரியாணி செய்யலாமா? கிரேவி வைக்கலாமா? கோலா உருண்டை செய்யலாமா? என்று பலரும் யோசிப்போம். ஆனால், மட்டனை பல வெரைட்டிகளில் எளிமையாக வீட்டிலேயே சமைத்து ருசிக்க வழிகள் இருக்கினறன. அந்த வகையில், சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எந்த உணவுடன் வைத்து சாப்பிட்டாலும் நாவுக்கு இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும் என்ற உணர்வை தூண்டக்கூடிய அளவிலான ஒரு டிஷ்ஷைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். அப்படி என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா...? அதுதான் மீட் பால். இதை வீட்டில் யார் வேண்டுமானாலும் எளிதாகச் செய்து ருசிக்கலாம். அந்த அளவுக்கு சுவை மிகுந்த டிஷ்ஷை ஃபரோஸ் ஹோட்டலின் செஃப் தியாகு, சற்று மாறுபட்ட விதத்தில், தனித்துவமான சுவையுடன் நமக்கு செய்து காட்டுகிறார்.
மட்டன் மீட் பால் கறி செய்முறை :
மீட் பால்ஸ் தயாரிப்பு
* முதலில் 100 கிராம் மட்டனை நன்கு அரைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்தால், அருமையான நறுமணம் கிடைக்கும்.
* இந்த மசித்த மட்டன் கலவையுடன், நன்கு நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். ஏற்கனவே பச்சை மிளகாய் சேர்த்திருப்பதால், காரம் தேவைப்பட்டால் மட்டும் மேலும் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
* மீண்டும் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். இது கிட்டத்தட்ட நம் வீடுகளில் செய்யும் கோலா உருண்டை கலவையை போன்றதுதான். ஆனால் பொட்டுக்கடலை, சின்ன வெங்காயம் போன்றவற்றை இதில் சேர்க்க வேண்டியதில்லை.
* இப்போது அனைத்து பொருட்களையும் கறியுடன் சேர்த்து நன்றாகக் கலக்கி மசித்து கொள்ளவும்.
* இந்த கலவையை சிறிய சிறிய குட்டி பந்துகளாக பிடித்து வைத்துக் கொள்ளவும்.
மசாலா கலந்து அரைத்த மட்டனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குழம்பில் போடுதல்
கறி கிரேவி தயாரிப்பு
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். உங்கள் வீட்டில் பயன்படுத்தக்கூடிய எந்த எண்ணெயையும் பயன்படுத்தலாம்.
* எண்ணெய் காய்ந்ததும், சிறிதளவு பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு வறுக்கவும்.
* இதனுடன் நன்கு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பிறகு, நறுக்கிய பச்சை மிளகாய் (அளவோடு, காரம் அதிகமாக வேண்டாம்) மற்றும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* நறுக்கி வைத்திருக்கும் தக்காளியையும் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கிரேவி கெட்டியாகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.
* மசாலாப் பொருட்களாக, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் ஒன்றரை டீஸ்பூன் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
* பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொருட்களை வதக்கும் போது...
* பின் தோல் உரித்து வைத்துள்ள உருளைக் கிழங்கை சேர்த்து கிழங்கு வேகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, குழம்பு பதத்தில் கொதிக்க விடவும். இந்த உணவின் தனிச்சிறப்பே உருளைக்கிழங்கை சேர்ப்பதுதான்!
* மிக முக்கியமாக, கடைசியில், அரைத்த தேங்காயை சேர்த்து கொள்ளவும். இது கிரேவிக்கு அருமையான சுவையையும், திக்கான பதத்தையும் கொடுக்கும்.
* கிரேவி நன்கு கொதித்து வந்ததும், நாம் தயார் செய்து வைத்துள்ள மீட் பால்ஸை போடவும். உருண்டைகள் உடைந்துவிடும் என்ற அச்சம் இருந்தால், சிறிது முட்டையுடன் கலந்து கூட உருண்டைகளைப் பிடித்து போடலாம். அப்போது உடைய வாய்ப்பிருக்காது.
மீட் பால்ஸ் நன்கு வெந்து, குழம்பும் நன்கு கொதித்து வந்ததும், இதன் மேலாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, அரை மூடி எலுமிச்சை பழம் பிழிந்து இறக்கினால், சுவையான மீட் பால் கறி தயார்!
மட்டன் மீட் பால் கறி குழம்பு தயார்...
இந்த உணவில் உள்ள நன்மைகள்
* மட்டனில் அதிக புரதச்சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமான ஒன்று.
* உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளன.
* வெங்காயம், தக்காளி மற்றும் மல்லி தழையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கு உதவுகிறது.
* மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு, மிளகாய் போன்ற மசாலாப் பொருட்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன.
* இந்த மீட் பால் கறி, சுவையில் மட்டுமல்லாமல், திருப்தியான உணவாகவும் அமைகிறது. சாதம், புலாவ், இட்லி, தோசை என எதனுடனும் இது ஒரு சிறந்த தேர்வாகும்.
இந்த எளிய மற்றும் சுவையான மீட் பால் கறியை, உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து, உங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்கவும்! இந்த வித்தியாசமான டிஷ், நிச்சயம் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாக இருக்கும். நன்றி!
