இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள், திருவிழாக்கள் மற்றும் கல்யாணம் போன்ற விசேஷ நாட்களில் நம் வீடுகளில் பிரதானமாக இடம் பெறும் இனிப்பு வகைகளில் அதிரசம் தவிர்க்க முடியாத ஒன்று. மிகவும் பாரம்பரியம் மிக்க இந்த அதிரசம் தமிழர்களின் முக்கியமான சம்பிரதாய சீர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இன்றும் பல கிராமங்களில் தாய்மாமன்கள் கொடுக்கும் சீர் தட்டுகளில் அதிரசம் இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு சிறப்புமிக்க இந்த அதிரசத்தை வீட்டில் செய்வது என்பது தற்போதைய வாழ்க்கை சூழலில் குறைந்து வருகிறது. காரணம் பக்குவமாக செய்யத் தெரியவில்லை என்பதுதான். பாரம்பரியமும், சுவையும் கொண்ட இந்த அதிரசத்தை அதற்கே உரிய பக்குவத்துடன் மிகவும் எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பதை நமக்கு செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் திருமதி. லதா.


அதிரசம் செய்முறை

ஈரப்பதம் உள்ள பச்சரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து பொடித்த வெல்லத்தை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். வடிகட்டிய வெல்ல பாகை அடுப்பில் மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.

அதிரசம் செய்வதற்கு பாகு பதம்தான் மிகவும் முக்கியமான ஒன்று. பதத்தை தெரிந்து கொள்வதற்கு வெல்லம் நன்றாக கொதித்ததும் கிண்ணம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்ல பாகை போட வேண்டும்.


அதிரசத்தை எண்ணெயில் போடும் முன்பு வட்டமாக தட்டும் காட்சி

அந்த பாகு தண்ணீரில் கரையாமல் கொஞ்சம் பந்து போல தக்காளி பதத்தில் இருந்தால் அதுதான் அதிரச மாவை தயார் செய்வதற்கான சரியான பதம்.

இப்பொழுது மாவு உருட்டும் பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பாகை, அரிசி மாவின் மேல் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி கொண்டு மாவை நன்றாக கிளறவும். அதனுடன் ஏலக்காய் பொடியையும் தூவி பிசைந்து கொள்ளவும்.

இதன்பிறகு மாவின் மேல் கொஞ்சம் நெய் தடவி, மாவை மூடி வைத்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவும்.

அடுத்த நாள் மாவு கொஞ்சம் கெட்டியாக அதிரசம் போடுவதற்கு ஏற்ற வகையில் மாறியிருக்கும்.


அதிரசத்தை எண்ணெய்யில் பொரித்தெடுக்கும் தருணம்

இப்பொழுது ஒரு தட்டில் பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி அதன்மேல் ஒரு உருண்டை அளவு மாவை எடுத்துவைத்து வட்டமாக தட்டிக்கொள்ளவும்

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சூடானதும் தீயை மிதமாக வைத்து, தட்டி வைத்துள்ள மாவை எடுத்து போடவும். ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடவும்.

அதிரசம் சீக்கிரமாக வெந்துவிடும் என்பதால் நீண்ட நேரம் சிவக்க விடாமல் சரியான பதத்தில் எடுத்துவிடவும். இப்பொழுது சுவை மிகுந்த அதிரசம் தயார்.


பொரித்து எடுத்த பிறகு சாப்பிட தயாராக இருக்கும் அதிரசம்

அதிரசம் மாவில் உள்ள நன்மைகள்

அரிசி மாவில் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாத உணவாகவும் இது உள்ளது. குறிப்பாக, இந்த வகை உணவானது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், எலும்புகளை வலுவடைய செய்கிறது.

Updated On 6 May 2025 12:03 AM IST
ராணி

ராணி

Next Story