இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மத்திய தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க மாவட்டமான அரியலூர், அதன் தொன்மையாலும், கலை மற்றும் கட்டிடக்கலையின் பொக்கிஷங்களாலும், செழிப்பான இயற்கை வளங்களாலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கிறது. சுண்ணாம்புக்கல் மற்றும் கனிமப் பொருட்களின் வளம் காரணமாக சிமெண்ட் தொழிற்சாலைகளின் மையமாகத் திகழும் இந்த நகரம், வடக்கே வெள்ளாறும் தெற்கே கொள்ளிடம் ஆறும் அரணாக அமையப் பெற்று செழிப்பான கலாச்சாரத்திற்கு சான்றாக நிற்கிறது. சோழர்களின் தலைநகரம், பௌத்த, சமண சிற்பங்கள், பறவைகள் சரணாலயம் எனப் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள அரியலூர் குறித்த விரிவான தகவலையும், கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி, ஏன் அவ்வளவு முக்கியத்துவம் அளித்தார் என்றும் இந்த தொகுப்பில் காணலாம்.

சோழர்களின் பெருமைக்குரிய தலைநகரம்

அரியலூர் மாவட்டம், பல நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு தொன்மையான பகுதியாகும். இது சோழப் பேரரசின் முக்கியத்துவமிக்க நிலப்பரப்பாக விளங்கியது. மேலப்பழுவூர், கீழையூர் ஆகிய கிராமங்கள், ஒரு காலத்தில் கேரளத்தைச் சேர்ந்த பழுவேட்டரையர் சிற்றரசர்களின் தலைநகரங்களாக திகழ்ந்தன. மேலும் முதலாம் ஆதித்த சோழன் காலம் முதல் முதலாம் ராஜேந்திர சோழன் காலம் வரை, சோழர்களின் ஆளுகைக்குட்பட்ட இந்தப் பகுதியை, குமரன் கண்டன், குமரன் மாறவன் போன்ற பழுவேட்டரையர் மன்னர்களும் ஆட்சி செய்தனர். முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலே இவர்களின் ஆட்சிக்கு ஓர் அழியாத சான்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது.

குறிப்பாக அரியலூர் மாவட்டத்தின் தனித்துவம் அதன் ஆழமான வரலாற்றுச் செழுமையிலும், கலை மற்றும் கட்டிடக்கலைச் செல்வங்களிலும் அடங்கியுள்ளது. அதிலும் கங்கை கொண்ட சோழபுரம், ஒருகாலத்தில் சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கி, அதன் பிரம்மாண்டமான கோயிலும், சிற்பங்களும் சோழர்களின் தலைசிறந்த கலைத்திறனை உலகிற்குப் பறைசாற்றுகின்றன. இவற்றுடன், காமரசவல்லி, விக்கிரமங்கலம், திருமழபாடி, கீழப்பழுவூர் போன்ற இடங்களிலுள்ள பழமையான கோயில்களும் அரியலூரின் வரலாற்றுப் பெருமையை மேலும் பறைசாற்றுகின்றன. குறிப்பாக உலகப் புகழ் பெற்ற கங்கை கொண்ட சோழபுரம் கோயில் இங்கு அமைந்திருப்பதால், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக அரியலூர் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


கங்கா ஜடாதீஸ்வரர் & கோதண்டராமசுவாமி கோயில்

அரியலூரின் முக்கிய வழிபாட்டு தலங்கள்

ஆயிரமாண்டுகளுக்கும் மேலான சோழர் காலப் பொலிவையும், புவியியல் அதிசயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள அரியலூர், ஒவ்வொரு பயண ஆர்வலருக்கும் புதிய அனுபவங்களை அள்ளித்தரும் ஒரு ரம்மியமான சுற்றுலாப் பகுதியாகும். இங்குள்ள ஒவ்வொரு தலமும் ஒரு ஆன்மீக கதையைச் சொல்லும்; ஒவ்வொரு காட்சியும் பல வரலாற்று சுவடுகளை பிரதிபலிக்கும். அத்தகைய தனித்துவமான பகுதிகள் குறித்த முழு தகவல்களை கீழே காண்போம்

கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில்

அரியலூர் மாவட்டத்தின் மையப்புள்ளியாக கம்பீரமாக உயர்ந்து நிற்கும் கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில், மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனின் கலைத்திறன், வீரம், மற்றும் பரந்து விரிந்த சாம்ராஜ்யத்தின் வாழும் சான்றாகத் திகழ்கிறது. கி.பி. 1023 ஆம் ஆண்டில், வடதிசைப் படையெடுப்பில் கங்கை நீரைக் கொண்டு வந்த தனது மகத்தான வெற்றியின் அடையாளமாக இக்கோயிலை ராஜேந்திர சோழன் கட்டினான். மத்திய சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த சான்றான இக்கோயில், தஞ்சைப் பெரிய கோயில் போல் இல்லாமல், மென்மையான பாவங்களையும், நுணுக்கமான வேலைப்பாடுகளையும் கொண்ட சிற்பங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, ஆலயத்தின் வடிவமைப்பு மற்றும் கோபுர அமைப்பில் தனித்துவமான பெண்மைத்தன்மையும், எழிலும் மிளிர்கின்றன. இக்கோயிலின் கருவறையில், சுமார் 13.5 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான சிவலிங்கம் கம்பீரமாக எழுந்தருளியுள்ளது. இது தமிழகக் கோயில்களில் உள்ள சிவலிங்கங்களிலேயே தனித்துவமானதாக கருதப்படுகிறது.

அதேபோல், ஆந்திரா, கர்நாடகா, வங்காளம் போன்ற பகுதிகளில் இருந்து போர்க்களங்களில் கைப்பற்றப்பட்ட பல அரிய சிற்பங்கள் இங்கு கொண்டுவரப்பட்டு, கோயிலிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சோழர்களின் அடையாளங்களாக திகழ்கின்றன. இக்கோயிலில் உள்ள சிற்பங்கள், சோழர்களின் கலை நுட்பத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். சண்டேசுர அனுகிரக மூர்த்தி, தனது பக்தனான சண்டேசருக்கு சிவபெருமான் அருள் புரியும் காட்சியும், சரஸ்வதி தேவி சிற்பமும் அவற்றின் நேர்த்திக்கு சிறந்த சான்றுகளாகும்.மேலும், இந்த ஆலயத்தைச் சுற்றியுள்ள மாளிகைமேடு மற்றும் அருகில் காணப்படும் பிற சிறு கோயில்களும், சோழர்களின் நகரத் திட்டமிடல், அவர்களின் அன்றாட வாழ்க்கை முறை, சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை தெளிவாய்ப் பிரதிபலிக்கின்றன. தற்போது இந்தியத் தொல்லியல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், தொடர்ந்து உலகெங்கிலும் இருந்து வரும் பார்வையாளர்களை ஈர்த்து, சோழர்களின் பொற்கால புகழைப் பறைசாற்றி வருகிறது.


சோழீஸ்வரர் கோயில் & கார்க்கோடேசுவரர் கோயில்

காமரசவல்லி: கார்க்கோடேசுவரர் கோயில்

அரியலூர் மாவட்டத்தின் அமைதியான கிராமப்புறத்தில், ஆயிரமாண்டு கால வரலாற்றையும், ஆன்மிகப் பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ள காமரசவல்லி, ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் புதிய அனுபவங்களை தரவல்லது. இங்குள்ள பிரசித்தி பெற்ற கார்க்கோடேசுவரர் கோயில், கி.பி. 962 ஆம் ஆண்டு சுந்தர சோழன் காலத்தில் கட்டப்பட்டது. இதன் தனித்துவமான தல புராணங்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும்; ரதிதேவி தனது கணவன் மன்மதனை மீண்டும் பெற இங்கு தவம் செய்ததால் 'காம-ரதி-வல்லி' எனப் பெயர் வந்ததாகவும், நாகராஜா கார்கோடகன் இங்கு சிவபெருமானை வழிபட்டுச் சாப விமோசனம் பெற்றதால் தெய்வம் 'கார்கோடகேஸ்வரர்' என்று அழைக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. சோழர், பாண்டியர், ஹொய்ச்சாளர் காலங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் இக்கோயிலின் நீண்ட நெடிய வரலாற்றையும், அக்கால சமூக அமைப்பையும் அறிந்து கொள்ள உதவுகின்றன. சோழர் காலத்தின் அழகிய சிற்பங்கள் மற்றும் வெண்கலச் சிலைகள் இக்கோியலின் கலைச் செழுமைக்கு சான்றாக அமைந்து, புகைப்படக் கலைஞர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் ரம்மியமான அனுபவத்தை தருகின்றன.

திருமழபாடி : வைத்தியநாத சுவாமி கோயில்

அரியலூர் மாவட்டத்தின் ஆன்மிகச் செழுமைக்கு மற்றுமொரு சான்றாய் திகழும் திருமழபாடி, சங்க காலம் தொட்டே புகழ்பெற்ற பழம்பெரும் கிராமமாகும். இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில், அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற தேவாரம் நாயன்மார்களாலும், பல்லவ மன்னன் ஐயடிகள் காடவர்கோனாலும் பாடப்பட்டுப் புகழ்பெற்றது. சுந்தரரின் கனவில் இறைவன் தோன்றி இங்கு வந்து பாடச் சொன்னதாகவும், அதனாலேயே 'பொன்னார் மேனியனே' தேவாரம் இங்கு பாடப்பட்டது என்றும் ஒரு ஐதீகம் உண்டு. முதலாம் ஆதித்த சோழனால் கல்லால் கட்டப்பட்டு, பின்னர் ராஜராஜ சோழனால் மீண்டும் கட்டப்பட்டு, ராஜேந்திர சோழனால் நிறைவு செய்யப்பட்டு, ஹொய்சாள மன்னன் வீரநரசிம்மாவால் பழுதுபார்க்கப்பட்ட இக்கோயில், சோழ மற்றும் பாண்டியர் காலக் கோபுரங்களையும் கொண்டுள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்புமிக்க நிகழ்வான நந்தி கல்யாணம், திருமணத் தடைகளை நீக்கும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இத்தகைய வரலாறு, ஆன்மிகம் மற்றும் திருமண வரங்கள் அருளும் புண்ணிய பூமியாகத் திகழும் திருமழபாடி, சுற்றுலாப் பயணிகளை நிச்சயம் கவரும் பகுதியாகும்.


வைத்தியநாத சுவாமி & ஆளந்துறையார் கோயில்

கீழப்பழுவூர்: ஆளந்துறையார் கோயில்

அரியலூர் அருகே அமைந்துள்ள கீழப்பழுவூர், பழம்பெரும் வரலாற்றையும் ஆன்மிகப் பெருமையையும் கொண்ட ஒரு கிராமமாகும். ஒரு காலத்தில் பழுவேட்டரையர்களின் தலைநகராக விளங்கிய இப்பகுதி பல வரலாற்று சுவடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் இங்குள்ள ஆளந்துறையார் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமயக் குரவரான திருஞானசம்பந்தரால் இக்கோயிலின் மீது பல பாடல்கள் பாடப்பட்டுள்ளன. இதுவே இத்தலத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு ஆகும். பின்னர் முதலாம் பராந்தக சோழன் மற்றும் உத்தம சோழன் ஆட்சிக் காலத்தில் கற்கோயிலாக மாற்றப்பட்ட இக்கோயில் குறித்து மற்றொரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது. பரசுராமர் தனது தாயை கொன்ற பாவத்திலிருந்து விடுபட இங்கு தவம் செய்து அருள் பெற்றதாக கூறப்படுகிறது. இது இத்தலத்தின் ஆன்மிக முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதோடு, ஆன்மிகப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் அறிய பல தகவல்களையும் வழங்கும் ஒரு சிறந்த பகுதி என்பதை உணர்த்துகிறது.

கோவிந்தபுத்தூர்: கங்கா ஜடாதீஸ்வரர் கோயில்

கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் உள்ள கங்கா ஜடாதீஸ்வரர் கோியல், புராணக் கதைகளின் பிறப்பிடமாக விளங்குகிறது. மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்த அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோர் இக்கோியலின் இறைவனை தங்கள் தேவாரம் பதிகங்களில் புகழ்ந்துள்ளனர். மகாபாரத அர்ஜுனன் இங்கு சிவபெருமானை வழிபட்டு வரம் பெற்றதாகவும், காமதேனு தனது பாலை சிவலிங்கத்தின் மீது ஊற்றி வழிபட்டதால் கோவிந்தபுத்தூர் எனப் பெயர் பெற்றதாகவும் நம்பப்படுகிறது. சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகளைக் கொண்டுள்ள இக்கோயில், கி.பி. 980 இல் உத்தம சோழன் காலத்தில் கல்லால் கட்டப்பட்டது. ஆரம்பகால சோழர் காலத்தின் அழகிய சிற்பங்கள் மற்றும் வெண்கல சிலைகளுடன் திகழும் இத்தலம், வரலாறு, ஆன்மிகம் மற்றும் கலை ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தைத் தரும்.

அரியலூர்: கோதண்டராமசுவாமி கோயில்

அரியலூரில் அமைந்துள்ள கோதண்டராமசுவாமி கோயில், முதன்மை கடவுள்களாக ஸ்ரீனிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை கொண்டிருந்தாலும், ராமர், லட்சுமணன், சீதை ஆகியோரின் சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால், 'கோதண்டராமசுவாமி கோயில்' எனப் பரவலாக அறியப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட ராமர், லட்சுமணன், சீதையின் கலைநயம் மிக்க சிற்பங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இக்கோயிலின் சிறப்பம்சமாக, கண்கவர் தசாவதார மண்டபம் விளங்குகிறது. இருபது அடி உயரத் தூண்களில் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் செதுக்கப்பட்டு, பிரம்மாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. மேலும், ஒரு தலைவர் மற்றும் அவரது ராணியின் சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இதுதவிர ஆறு அடுக்கு ராஜகோபுரம், கருடன் சன்னதி, கோதண்ட புஷ்கரணி எனப்படும் குளம் ஆகியவை இக்கோயிலின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. கி.பி. 1635 முதல் 1742 வரையிலான காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும், செப்புப் பட்டயங்களும் இக்கோியலின் செழுமையான வரலாற்றை எடுத்துக்காட்டுவதோடு, அரியலூரின் கட்டிடக்கலைச் சாதனைகளுக்குச் சான்றாகவும் திகழ்ந்து, பலரின் மனதைக் கவர்ந்து வருகிறது.


சமண சிற்பங்கள் & இராஜேந்திர சோழனின் வரைபடம்

விக்கிரமங்கலம்: பௌத்த, சமண சிற்பங்கள்

அரியலூருக்கு அருகிலுள்ள விக்கிரமங்கலம், முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் 'விக்கிரம சோழபுரம்' என்ற புனைபெயருடன் உருவான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம். இரண்டாம் குலோத்துங்கன் மற்றும் மூன்றாம் குலோத்துங்கன் போன்ற பிற்காலச் சோழ மன்னர்களுக்கு இது ஒரு துணைத் தலைநகரமாக செயல்பட்டுள்ளது என்பதற்கு இங்குள்ள கல்வெட்டுகளே சான்றுகளாகும். மன்னர்கள் இங்குள்ள அரச மாளிகையில் தங்கி, சோழ நாட்டில் உள்ள பல கோவில்களுக்கு நிலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சோழர் காலத்தில் புகழ்பெற்ற வர்த்தக மற்றும் வணிக மையமாக திகழ்ந்த விக்கிரமங்கலம், இன்றும் அக்காலத்திய அழகிய சமண மற்றும் பௌத்த சிற்பங்களை தன்னகத்தே பாதுகாக்கிறது. இக்கிராமத்தில் உள்ள ராஜேந்திர சோழீஸ்வரம் என்ற சிவலிங்கக் கோயிலும், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தைச் சேர்ந்ததாகும். வரலாறு, வர்த்தகம் மற்றும் கலை ஆர்வலர்களுக்கு விக்கிரமங்கலம் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

இத்தகைய ஆன்மீக தலங்கள் தவிர அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏலாக்குறிச்சி, ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஒரு முக்கிய புனித யாத்திரை தலமாகும். இங்கு இத்தாலியைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர் கி.பி. 1710 முதல் 1742 வரை கிறிஸ்தவ மதத்தைப் பரப்பி, அடைக்கல மாதா கோயிலை கட்டினார். புனித அன்னை மரியின் அருளால் இங்கு பல அதிசயங்கள் நிகழ்வதாக நம்பப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். மேலும், கரைவெட்டி பறவைகள் சரணாலயம் பறவை ஆர்வலர்களின் சொர்க்கமாக திகழ்கிறது. 453.71 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இது, மேட்டூர் அணையிலிருந்து நீர் பெறும் ஒரு பாசனக் குளம் ஆகும். தமிழகத்தில் புலம்பெயர்ந்த நீர் பறவைகளுக்கான மிக முக்கியமான நன்னீர் உணவு ஊட்டும் இடங்களில் இதுவும் ஒன்று. செப்டம்பர் முதல் மார்ச் வரையிலான காலம் இங்கு பறவைகளைக் காண சிறந்த நேரமாகும்.


கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

சோழர்களின் சரித்திரம் பேசும் "கங்கை கொண்ட சோழபுரம்" வந்த பிரதமர் மோடி!

அரியலூர் மாவட்டத்தின் மணிமகுடமாய் உயர்ந்து நிற்கும் கங்கை கொண்ட சோழபுரம், மாமன்னன் முதலாம் இராஜேந்திர சோழனின் இணையற்ற வீரத்தையும், கலை ஆர்வத்தையும் பறைசாற்றுகிறது. கி.பி. 1023-ல் கங்கை சமவெளி வெற்றியின் நினைவாக அவர் உருவாக்கிய இம்மாபெரும் நகரம், பிரம்மாண்டமான கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோயில் மற்றும் சோழ கங்கம் ஏரியுடன் கூடிய புதிய தலைநகராக 256 ஆண்டுகள் சோழப் பேரரசின் மையமாகத் திகழ்ந்தது. சோழர் கால வாழ்வியலையும், கலைநுட்பங்களையும், கல்வெட்டுச் சான்றுகளையும் தன்னகத்தே கொண்ட இத்தலம், பாண்டியர் தாக்குதலால் அழிவுற்ற போதிலும், மாளிகைமேடு போன்ற பகுதிகளில் இன்றும் தனது வரலாற்று எச்சங்களைச் சுமந்து நிற்கிறது. இங்கு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரின் அகழாய்வுகள், அரண்மனைச் சுவர்கள், வடிகால் அமைப்புகள், 21 அடி நீளக் கல்தூண், அலங்கரிக்கப்பட்ட கூரை ஓடுகள் போன்ற சோழர்களின் கட்டிடக்கலையின் உச்சத்தைப் பறைசாற்றும் சான்றுகளைக் கண்டுபிடித்துள்ளன.

மேலும், செப்பு நாணயங்கள், தந்தம், கண்ணாடிகள், சீனப் பானை ஓடுகள் போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களும், சரஸ்வதி, துர்க்கை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கற்சிற்பங்களும் இங்கு கிடைத்துள்ளன. இத்தகைய பெருமையின் சான்றாகவே, கலை, வீரம், வெற்றி எனப் பல அடையாளங்களுடன் சோழப் பேரரசின் பொற்காலத்தை ஒளிரச் செய்த மாமன்னன் இராஜேந்திர சோழனின் சாதனைகளுக்கு மகுடமாய், கங்கைகொண்ட சோழபுரத்தில் சமீபத்தில் நடைபெற்ற அவரது 1005-வது பிறந்தநாள் விழா, நகரத்தின் ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய வெற்றிகளின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாக்களில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுச் சிறப்பித்தார். இது தமிழர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்ததுடன், சோழப் பேரரசின் புகழை உலகறியச் செய்தது. இத்தகைய பெருமைமிகு அரியலூருக்கு நீங்களும் ஒரு பயணத்தை மேற்கொண்டு, இந்த நிலப்பரப்பின் செழிப்பான பாரம்பரியத்தையும், வரலாற்றையும் ரசித்து வாருங்கள்!

Updated On 29 July 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story