
கர்நாடகாவின் ஹம்பி தான் இராமாயணத்தில் வானரங்கள் வாழ்ந்த கிஷ்கிந்தா நகரம்!
வரலாறு, கட்டிடக்கலை மற்றும் அமைதியான இயற்கைச் சூழலை நீங்கள் நேசிப்பவராக இருந்தால், ஹம்பி உங்களை நிச்சயம் ஈர்க்கும். கர்நாடகாவின் இதயப் பகுதியில் அமைந்துள்ள இந்த இடம், ஒரு காலத்தில் பிரம்மாண்டமான விஜயநகரப் பேரரசின் தலைநகராக விளங்கியது. இன்றும் அதன் புகழ், செழுமை மற்றும் வீழ்ச்சியின் கதைகளை அதன் சிதிலமடைந்த கற்கள் நமக்குச் சொல்கின்றன. ராமர் காலத்து கிஷ்கிந்தா என்று நம்பப்படும் இந்த புனிதப் பகுதி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பயணிகளை வரவேற்கிறது. இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க ஹம்பி குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
ஹம்பியின் வரலாறு
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட வரலாற்றில், பல்வேறு பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் இடம் பெற்றுள்ளன. இவற்றுள், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் கோலோச்சிய விஜயநகரப் பேரரசு தனித்துவமான இடத்தைப் பெறுகிறது. இப்பேரரசின் பெருமைமிக்க தலைநகராக விளங்கிய ஹம்பி, கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவிலிருந்து சுமார் 340 கி.மீ தொலைவில், துங்கபத்ரா ஆற்றின் கரையில் பிரம்மாண்டமான பாறைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. ஒரு காலத்தில் உலகிலேயே மிகவும் வளமிக்க நகரங்களில் ஒன்றாக திகழ்ந்த ஹம்பி, அதன் தலைசிறந்த கட்டிடக்கலை, வியக்க வைக்கும் பொறியியல் நுட்பங்கள் மற்றும் நேர்த்தியான நீர் மேலாண்மைத் திறன் ஆகியவற்றிற்கு சிறந்த சான்றாக இன்றும் மிளிர்கிறது.
விஜயநகரப் பேரரசின் புகழைப் பாடும் ஹம்பி
படையெடுப்புகளால் ஹம்பி பெருமளவு அழிந்துவிட்ட போதிலும், இன்று எஞ்சியிருக்கும் அதன் எச்சங்கள், காலத்தால் அழியாத கலை மற்றும் கலாச்சாரப் பெருமையை நமக்கு உணர்த்துகின்றன. ஆயிரங்கால் மண்டபங்கள், வானுயர்ந்த கோபுரங்கள், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், அழகிய சிற்பங்கள் ஆகியவை விஜயநகரப் பேரரசின் கலை திறனுக்கு சான்றாக நிற்கின்றன. ஹம்பியின் ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு இடிபாடும் ஒரு கதையைச் சொல்வது போல, அதன் கடந்தகாலச் செழிப்பையும், அதன் பொக்கிஷமான வரலாற்றையும் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த இடிபாடுகளுக்கிடையில், ஹம்பி அதன் பழம்பெருமையை இன்றும் தாங்கி நிற்கிறது.
கட்டிடக்கலை பொக்கிஷம்
ஹம்பியின் அடையாளமாகத் திகழும் விஜய விட்டலர் கோயில், இந்நகரின் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தக் கோயிலின் வளாகத்தில் உள்ள கல் தேர், நுட்பமான வேலைப்பாடுகளுடன் குதிரை பூட்டப்பட்ட ஒரு ரதம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, விஜயநகரப் பேரரசின் கட்டிடக்கலை திறனுக்கு ஒரு அழியாத சான்றாக விளங்குகிறது. அதேபோல், ஹம்பியில் உள்ள பழமையான, இன்றும் வழிபாட்டில் இருக்கும் கோயில் விருபாட்சர் கோயில் ஆகும். 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில், கம்பீரமான கோபுரங்கள், நேர்த்தியான சிற்பங்கள் மற்றும் பழங்காலக் கட்டிடக்கலை மூலம் பக்தர்களைக் கவர்கிறது. இந்தக் கோயில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு காலை வேளையில், விருபாட்சர் கோயில் யானையான லட்சுமி, துங்கபத்திரை ஆற்றில் குளிப்பதை காணலாம்.
விஜய விட்டலர் கோயில் மற்றும் லோட்டஸ் மஹால்
அதேபோல் ஹம்பியில் அமைந்துள்ள லோட்டஸ் மஹால், இந்நகரின் கட்டிடக்கலையின் தனித்துவமான கலவையை வெளிப்படுத்துகின்றது. அதுவும் இங்குள்ள ராணியின் குளம், படிக்கட்டு குளம், மற்றும் ஹசாரா ராமர் கோயில் ஆகியவை விஜயநகரப் பேரரசின் பொறியியல் மற்றும் நீர் மேலாண்மைத் திறனுக்குச் சான்றாக திகழ்கின்றன. இதில் குறிப்பாக ஹசாரா ராமர் கோயில் சுவர்களில் செதுக்கப்பட்டுள்ள இராமாயண காட்சிகள், ஒரு சிற்பக் கதைப் புத்தகத்தைப் போல காட்சியளிக்கின்றன. மேலும் இந்நகரில் உள்ள லட்சுமிநரசிம்மர் சிலை, கர்நாடகாவில் உள்ள மிகப்பெரிய ஒற்றை கல் சிலைகளில் ஒன்று. இது ஹம்பியின் சிறந்த சிற்ப கலைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இது தவிர பெரிய ஒற்றைக் கல் கணேஷர் சிலைகளான சசிவேகாலு கணேஷா, கடலைகாலு கணேஷா ஆகியவை சிற்பக் கலை ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன.
விஜயநகரப் பேரரசின் பிரம்மாண்டம்
இந்நகரம் கட்டிடக்கலைக்கு மட்டும் அல்ல ஒரு ராஜாங்கத்தின் அழகை அன்றைய காலத்துக்கே சென்று ரசிக்கும்படியான உணர்வை தரும் அழகிய பகுதியாகும். இங்கு விஜயநகரப் பேரரசின் பிரம்மாண்டத்தை அதன் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் மூலம் இன்றும் காணலாம். இங்குள்ள ஒரு பிரம்மாண்ட மேடை, மன்னர்கள் தங்கள் குடும்பத்துடன் விழாக்களைக் கண்டுகளிக்கவும், பட்டாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தவும் பயன்படுத்தப்பட்டது. இந்த மேடையின் பல படிகளில் போர் காட்சிகளை சித்தரிக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், துங்கபத்ரா நதியிலிருந்து தண்ணீர் கொண்டு வர பல கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்டமான கல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மேலாண்மை அமைப்பு, நமது முன்னோர்களின் பொறியியல் திறனுக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது. அவசர காலங்களில் பயன்படுத்தும் வகையில், மண்டபங்களுக்கு அடியில் குளிர்ச்சியான கற்களால் கட்டப்பட்ட பாதாள அறைகளும் உள்ளன. இவை அன்றைய காலகட்டத்தின் பாதுகாப்புக் குறித்த தொலைநோக்கு சிந்தனையைக் காட்டுகிறது.
பொறியியல் திறனை பறைசாற்றும் ஹம்பி நீச்சல் குளங்கள்
மேலும் ஹம்பியில் உள்ள நீச்சல் குளங்கள் கூட அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு எண் கோண வடிவ நீச்சல் குளத்தின் நடுவில் நீரூற்று ஒன்றும் உள்ளது. அதில், நீர் வெளியேற எட்டுத் துளைகளும், அடிமட்டத்தில் துளைகளும் அமைக்கப்பட்டிருப்பது, அன்றைய பொறியியல் திறனைப் பறைசாற்றுகிறது. ராணிகள் வசிக்கும் அந்தப்புரம் பெரிய கோட்டைச் சுவர்களாலும், நான்கு கண்காணிப்பு கோபுரங்களாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஓய்வு நேரத்திற்காக கட்டப்பட்ட தாமரை மாளிகை, தனித்துவமான கலைநயத்துடன், கீழே மண்டபமும் மேலே அறைகளும் கொண்டதாக உள்ளது. யானைப் படையின் முக்கியத்துவத்தை காட்டும் வகையில், 11 பட்டத்து யானைகளை நிறுத்துவதற்கான கூடாரம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் குவிந்த கோபுரங்களில் அழகிய வேலைப்பாடுகள் உள்ளன. இந்த அறை யானைகள் மற்றும் பாகன்களுக்கான வசதிகளையும் கொண்டுள்ளது.
சுற்றுலாவும், உணவும்
ஹம்பி, அதன் வரலாற்றுச் சிறப்புக்காக மட்டுமல்லாமல், அதன் இயற்கையான அழகிற்காகவும் பிரபலமானது. துங்கபத்ரா ஆற்றைக் கடந்து மறுபக்கம் உள்ள விருபாபூர் காடி பகுதிக்குச் சென்றால், அமைதியான வயல்வெளிகள், தென்னை தோப்புகள் மற்றும் எழில்மிகு இயற்கைச் சூழலை அனுபவிக்கலாம். அங்கு சைக்கிள் அல்லது பைக் வாடகைக்கு எடுத்துக்கொண்டு பசுமையான பாதைகளில் மெதுவாகப் பயணிப்பது ஒரு தனி அனுபவம். மேலும், இராமாயணத்துடன் தொடர்புடைய கிஷ்கிந்தா என நம்பப்படும் ஆனேகுந்தி கிராமத்தை சுற்றிப் பார்ப்பது ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பயணம். அமைதியான சூழலில் பாறைகளுக்கு இடையே அமைந்துள்ள சனாபுரா ஏரியில் சூரிய அஸ்தமனத்தை காண்பது மனதிற்கு ஒரு இதமான அனுபவத்தைத் தரும்.
ஹம்பியின் புகழ் பெற்ற உணவான மசாலா தோசை
இங்குள்ள உணவுமுறையை பொறுத்தவரை, ஹம்பியில் கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகளைச் சுவைக்கலாம். துங்கபத்ரா ஆற்றின் அருகே உள்ள உணவகங்களில் எழில்மிகு சூழலில் உணவருந்துவது ஒரு தனிச்சிறப்பு. இங்கு, மசாலா தோசை, இட்லி, வடை, பூரி போன்ற தென்னிந்திய உணவுகளும், சோள மாவு ரொட்டி, மிர்ச்சி பஜ்ஜி மற்றும் கத்தரிக்காய் கறி போன்ற வட கர்நாடகாவின் சிறப்பு உணவுகளும் கிடைக்கும். பாரம்பரிய உணவு வகைகளைத் தவிர, அங்கு கிடைக்கும் உள்ளூர் பழச்சாறுகள் மற்றும் தேநீரும் மிகவும் பிரபலமானது. இப்படி ஹம்பி அதன் வரலாற்றுச் சிறப்பு, கட்டிடக்கலை மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் தனித்துவமான கலவையாக மட்டுமல்ல, நம் முன்னோர்களின் அறிவு, கலை மற்றும் பொறியியல் திறனுக்கு ஒரு அழியாத சான்றாகவும் விளங்குகிறது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் ஹம்பிக்குச் செல்வது சிறந்த அனுபவத்தைத் தரும். அதுவும் இந்த இடத்தைச் சுற்றி பார்க்க ஒரு நாள் போதாது. குறைந்தது மூன்று நாட்களாவது ஆகும். இந்தப் பயணம் நம் கலாச்சாரத்தின் ஆழத்தையும், நம் முன்னோர்களின் பெருமைகளையும் நமக்கு உணர்த்தி, தன்னம்பிக்கையையும் பெருமையையும் ஏற்படுத்தும்.
ஹம்பி - கூகுள் வரைபடம்
