இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காகவோ அல்லது ஏதேனும் உடல் நலம் சரியில்லாத காரணத்தினாலோ செல்லும் ஒரு நபர் திடீரென உயிரிழந்தால், அச்சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும். பின்னர் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு, ஒருவேளை தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால் அதற்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்கும். அதுபோல நாம் இரத்த பரிசோதனை, முழு உடல் பரிசோதனை செய்ய செல்லும் ஆய்வகங்களில் யாரேனும் திடீரென உயிரிழந்தால் அதற்கு யார் பொறுப்பு? அப்படியான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து பேசியுள்ளார் மருத்துவர் எழிலரசன் கைலாசம்.


இரத்த அழுத்தப் பரிசோதனை

பரிசோதனைகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவது குறித்து பொதுமக்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?

சலுகைகள் என்ற பெயரில் ஏமாற்று வேலை, வேண்டுமென்றே தேவையற்ற டெஸ்டுகளை மருத்துவர்கள் எடுக்க சொல்கிறார்கள் என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. உலகிலேயே இந்தியா மருத்துவத் துறையில் சிறந்து விளங்கி வருகிறது. உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இந்தியாவில் உள்ளனர். எனவே ஹெல்த் செக்கப் செய்ய சொல்வதை ஸ்கேம் என மக்கள் எண்ண வேண்டாம். கடந்த 10 ஆண்டுகளை திரும்பி பார்த்தால், மனிதனின் வாழ்வியல் முறை எவ்வளவு மாறியுள்ளது என்பது தெரியும். நான் என் 12 வயதில்தான் காரை பார்த்தேன். ஆனால், இப்போதோ பிறந்த குழந்தைகளே காரில்தான் செல்கின்றனர். அப்போதெல்லாம் வறுமை, ஆனால் தற்போது எல்லாம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. அதேநேரம் மருத்துவர் கூறும் ஹெல்த் செக்கப், அவசியமற்றது என தோன்றினால், மக்கள் சிந்தித்து முடிவெடுங்கள்.


ஒரு டெஸ்டின் முடிவு பல காரணிகளுக்கு ஒத்துப்போகும்...

ஆனால், சலுகைகளை பொய் எனக் கூறுவதால், இதனால் பலன் பெற வேண்டியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். நான் சரியான உணவினை எடுத்துக் கொள்கிறேன்; உடற்பயிற்சி செய்கிறேன்; என் குடும்பத்தில் யாருக்கும் எந்த நோயும் இல்லை என்றால் அவர்களுக்கு ஹெல்த் செக்கப் தேவையில்லை. இப்போதெல்லாம் உணவுப் பொருட்களில் கலப்படம் அதிகம் உள்ளது. அதனை எடுத்துக் கொள்ளும் நம் உடலிற்கு செக்கப் என்பது முக்கியம். 25 வயதிலேயே இதய பிரச்சனைகள் இருப்பவர்களை எல்லாம் நாம் பார்க்கிறோம். அதனால், டெஸ்ட் வேண்டுமா? வேண்டாமா? என்பதை தனிப்பட்டவர்தான் முடிவு செய்ய வேண்டும். இழப்புகளை ஏற்க யாரும் தயாராக இல்லை. வேண்டுமென்றே பணத்திற்காக எந்த மருத்துவரும் டெஸ்ட் எடுக்க சொல்லி நான் பார்த்ததில்லை.

ஒரு டெஸ்டின் ரிசல்ட் முடிவை கூகுளில் போட்டு பார்த்து, உங்களை நீங்களே குழப்பிக் கொள்ளாதீர்கள். ஏனெனில் ஒரு டெஸ்டின் முடிவு பல காரணிகளுக்கு ஒத்துப்போகும். சர்க்கரை நோய் டெஸ்ட் முடிவு, புற்றுநோய், இதய கோளாறுகள் சம்பந்தப்பட்ட அறிகுறிகளில் கொண்டு சென்றும் நிறுத்தலாம். டெஸ்டில் நெகட்டிங், பாசிட்டிங் என உள்ளது. வைரஸ் நெகட்டிவ் என வந்தால் நல்லது. அதுவே கர்ப்பத்தை உறுதிசெய்ய எடுக்கப்படும் பீட்டா ஹெச்சிஜி சோதனை பாசிட்டிவ் என வந்தால்தான் மகிழ்ச்சி. டெஸ்ட்டை பற்றி முழுவதாக தெரியாதவர்கள் முடிவை படித்து தவறாக தகவல்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதுபோல எவ்வளவு மருந்துகள் இருந்தாலும் மன தைரியம் வேண்டும். 20 வருடத்திற்கு முன்பு சிறுநீரக சிகிச்சை செய்து கொண்டவர் எல்லாம் இப்போதுவரை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார். அதேநேரத்தில் இறந்தவர்களும் நிறைய பேர் உள்ளனர். அவர் ஆரோக்கியமாக இருக்க மருத்துவம், உடற்பயிற்சி, மன தைரியம்தான் காரணம். தேவையற்ற தகவல்களால் உங்களை குழப்பிக் கொள்ளாதீர்கள். மேலும், இரத்த பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கு செல்லும்போது, என்னென்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என ஆய்வகங்களில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.


பயாப்ஸி - மனித உடலில் இருக்கும் திசுக்களைப் பரிசோதிக்கும் முறை

பயாப்ஸி டெஸ்ட் முடிவுகள் ஆய்வகங்களுக்கு ஆய்வகம் மாறுபடுவது ஏன்?

திசு மாதிரி எடுக்கப்பட்டு, நோய்களை கண்டறியும் முறைதான் பயாப்ஸி. பெதாலஜிஸ்டுகள்தான் முடிவை கூறுவர். அதனால்தான் தற்போது எல்லாம் இரண்டு பெதாலஜிஸ்டுகள் பார்த்து உறுதி செய்தபின்தான், முடிவுகள் வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி முடிவுகள் மாறுபடுவது தவிர்க்கப்பட வேண்டியதுதான்.


ஆய்வகங்களில் இறப்புகள் நடக்க வாய்ப்பில்லை - மருத்துவர் கைலாசம்

சோதனைக்காக வந்த நோயாளி ஆய்வகத்தில் இறந்தால் யார் பொறுப்பு?

என்னுடைய அனுபவத்தில் அதுபோல இதுவரை எந்த வழக்கையும் நான் பார்க்கவில்லை. இரத்தம் எடுப்பதால் யாரும் இறக்கப்போவதில்லை. சிலருக்கு மயக்கம் வரும். இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வருபவர்கள் இருக்கிறார்கள். சிலருக்கு சின்கோப் இருக்கும். அவர்கள் அப்படியே மயங்கி விழுவார்கள். அவர்களுக்கு அங்குள்ள பணியாளர்கள் உடனடியாக முதலுதவி வழங்கி நார்மலாக்கி விடுவார்கள். அதனால் ஆய்வகங்களில் இறப்புகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. நானும் அதுபோல பார்த்தது இல்லை.

Updated On 15 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story