எடுப்பாக இருக்கும் பற்களை சரி செய்ய எந்த வயதுக்குள் க்ளிப் போட வேண்டும்?
"பல் போனால் சொல் போச்சு" என்பது பழமொழி. அப்படிப்பட்ட பற்கள் எதிர்பாராதவிதமாக உடைந்துவிட்டால் அதனை சரி செய்வது என்பது பெரும்பாடு. முன்பெல்லாம் உடைந்த பற்களை கட்டுவது என்பது பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில், எப்படிப்பட்ட பற்களையும் சரி செய்துவிடலாம் என்று பல் மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். அந்த வகையில், உடைந்த பற்களை எந்த மெட்டீரியலில் கட்டுவது சிறப்பாக இருக்கும்? விபத்தில் தாடையில் அடிபட்டு பல் வரிசை போனவர்கள் என்ன செய்வது? நன்றாக இருக்கும் பற்களை, அப்படியே நல்ல நிலையில் பாதுகாத்துக்கொள்வது எப்படி? போன்ற பற்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு, எல்லோருக்கும் புரியும் வகையில் எளிதாக பதில் அளிக்கிறார், ரூட்கேனால் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் விஜேந்திர மகிரெட்டி. அவர் அளித்த பேட்டியின் கடந்த வார தொடர்ச்சியை பார்ப்போம்...

பற்களை இம்ப்ளாண்ட் செய்யும் முறை
உடைந்த பற்களை கட்டும் முறைகள் குறித்து சொல்லுங்களேன்?
ஒருவருக்கு பற்கள் மொத்தமாக இல்லை என்றால் 3 முறைகளில் கட்டலாம். முதலாவது, மொத்தமாக அப்படியே எடுத்து மாட்டுவதுபோல பல் செட் மாதிரி செய்யலாம். ஆனால் அது அவ்வளவு சௌகரியமாக இருக்காது. ஏனென்றால் நாம் அதனை தினமும் கழற்றி கழற்றி மாட்ட வேண்டி இருக்கும். இரண்டாவது, டென்டல் பிரிட்ஜ் என்று சொல்வார்கள். அதாவது 2 பில்லர்கள் போன்று சப்போர்ட் எடுத்துக்கொண்டு பிரிட்ஜ் போன்று அமைப்பது. எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமானால், சாலைகளில் பிரிட்ஜ் எப்படி கட்டுவார்கள். இரண்டு பக்கமும் சப்போர்ட் வைத்துதானே கட்டுவார்கள். அதேபோல்தான் அருகில் உள்ள பல்லின் சப்போர்ட்டை கொண்டு பிரிட்ஜ் மாதிரி கட்டுவோம். இது ஃபிக்ஸ்டாக இருக்கும்படி கட்டுவோம். கழற்றவேண்டிய தேவை இருக்காது. ஒருவேளை நீங்கள் பக்கத்து பல்லை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தால், இம்ப்ளாண்ட் போன்று செய்யலாம். எலும்பிற்குள் டைட்டானியம் ஸ்க்ரூ போன்ற ஒன்றை செட் செய்து, அப்பகுதியில் எலும்பு நன்கு ஃபார்ம் ஆனப்பிறகு, தனியாக கேப் போட்டுவிடலாம்.
பற்களை கட்டுவதில் இதுபோன்ற பல முன்னேற்றங்கள் வந்துவிட்டன. இவைகளில் செராமிக் பற்களைத்தான், அதாவது இயற்கையான பற்களின் நிறத்திலேயே இருக்கும் பற்களையே செட் செய்ய மக்கள் விரும்புகின்றனர். செராமிக்கில் மெட்டல் கலப்படம் இருக்காது என்பதால், நன்கு வலுவாக இருக்கும். அத்துடன் பார்க்கவும் அழகாக இருக்கும். இதற்கு CAD/CAM டெக்னாலஜியில் கிரவுன் எல்லாம் செய்து தருவார்கள். CAD/CAM-ல் நிறைய டெக்னாலஜிகள் வந்துவிட்டன. நிறைய பல் மருத்துவ கிளீனிக்குகளில், அதன்கூடவே மருத்துவர்கள் லேப் வசதியையும் சேர்த்தே வைத்துள்ளனர். உதாரணத்திற்கு இதுபோன்ற கிளீனிக்குகளுக்கு நோயாளிகள் வந்தால், உடனடியாக ஸ்கேன் எடுத்துவிட்டு, அதனை 3D முறையில் பிரிண்ட் எடுத்து, CAD/CAM மில்லிங் மெஷினில் ட்ரான்ஸ்வர் செய்து, 24 முதல் 48 மணி நேரத்தில் கிரவுனை தயார் செய்து டெலிவரி செய்துவிடலாம்.

பற்களை வரிசைப்படுத்த இன்விசிபிள் அலைனர்ஸ் பொருத்துதல்
சிலருக்கு எதிர்பாராதவிதமாக அடிபட்டு தாடையே போய்விடுகிறது. அவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிப்பீர்கள்?
விபத்துகளில்தான் இதுபோன்று நடக்கும். அவ்வாறு விபத்துகளில் அடிபட்டு வருவோரின் தாடையை முதலில் ஸ்டேபிள் செய்வோம். மேல் வாயையும். கீழ் வாயையும் சரியாக பொருத்துவதை முதலில் பார்ப்போம். ஒருவேளை தாடை உடைந்திருந்தால், அங்கு ஒரு டைட்டானியம் பிளேட்டை வைத்து சரி செய்வோம். இவையெல்லாம் விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள்.
சிலருக்கு பற்கள் துருத்திக்கொண்டு எடுப்பாக இருக்கும். அதனை எப்படி சரி செய்வீர்கள்?
எடுப்பாக இருக்கும் பற்களை சரி செய்யவும், சரியாக வரிசையாக இல்லாத பற்களை வரிசைப்படுத்தவும் தற்போது பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்துவிட்டன. வழக்கமாக 14 முதல் 15 வயதுக்குள் அனைத்து பால் பற்களும் விழுந்து நிலையான பற்கள் முளைத்துவிடும். அப்படி நிலையான பற்கள் முழுமையாக முளைத்த பிறகே, கம்பிக்கட்டி பற்களை சரியாக வரிசைப்படுத்த முடியும். இதில் அடிப்படை சிகிச்சை என்பது, ஒவ்வொரு பல்லிலும் கம்பி வைத்து ஒட்டிவிட்டு, பின்னர் பிரேசஸ் போடலாம். இந்த சிகிச்சை முறை தற்போது மிக அட்வான்ஸாக வந்துவிட்டது. அதனை இன்விசிபிள் அலைனர்ஸ் என்று சொல்வோம். இது க்ளிப் மாதிரிதான் இருக்கும். ஆனால், பற்களில் போட்டிருப்பதுபோன்று, பார்த்தால் தெரியாது. இதனை வாரம் ஒருமுறையோ, 2 வாரங்களுக்கு ஒருமுறையோ மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பற்கள் சரியான வரிசைக்கு வந்துவிடும். இப்போது இந்த சிகிச்சை முறைதான் ட்ரொண்டிங்கில் உள்ளது. மேலும் இந்த முறையில் 6 மாதங்கள் முதல் 2 வருடங்களில் பற்கள் அழகாக வரிசையாகிவிடும்.

உடைந்த பற்களை சீர் செய்ய அருகில் உள்ள பல்லின் சப்போர்ட்டில் பிரிட்ஜ் கட்டி கேப் போடலாம்
வரிசையாக இருக்கும் பற்களில், நடுவில் சில பற்கள் உடைந்துவிட்டால், அதனை எப்படி சரி செய்வீர்கள்?
இதற்கு 2 வகைகளில் சிகிச்சை அளிக்கலாம். பற்கள் முழுமையாக உடைந்துவிட்டால், இம்ப்ளாண்ட் செய்து பல் செட் போட்டுவிடலாம். ஒருவேளை உடைந்த பற்கள் கொஞ்சம் அங்கே இருந்தால், ஏற்கனவே சொன்னதைப்போல், அருகில் உள்ள பல்லின் சப்போர்ட்டில் பிரிட்ஜ் மாதிரி கட்டிக்கொள்ளலாம்.
பற்கள் பார்க்க பளிச் என்று இருப்பதற்காக ப்ளீச் செய்து கொள்வது ஆரோக்கியமானதா?
அதில் பெரிதாக பாதிப்பு இல்லை. டீன் ஏஜெர்ஸ், நடிகர் நடிகைகள் உள்ளிட்டோர் தங்கள் பற்கள் பளிச் என அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் கெமிக்கல் கொண்டு ப்ளீச் செய்கின்றனர். அவ்வாறு செய்யும்போது, மற்றவர்களின் பற்களைவிட, ஒன்று அல்லது இரண்டு ஷேட் பளிச் என்று காணப்படும்.

வாய் துர்நாற்றத்தை போக்க மவுத் வாஷ் பயன்படுத்தலாம்
பற்களை பாதுகாக்க பல் மருத்துவராக உங்களுடைய அறிவுரை என்ன?
தினமும் காலை, மாலை என 2 வேளைகளும், தலா 2 நிமிடங்கள் பற்களை தேய்க்க வேண்டும். அப்படி செய்தால் பற்கள் சுத்தமாக ஆரோக்கியமாக இருக்கும்.
வாய் துர்நாற்றம் போக என்ன செய்ய வேண்டும்?
இதற்கு மவுத் வாஷஸ் இருக்கின்றன. பற்களில் ஏதாவது துணுக்குகள் ஒட்டிக்கொள்ளும் போதுதான் பெரும்பாலும் வாய் துர்நாற்றம் அடிக்கும். எனவே எதுவொன்றையும் சாப்பிட்டு முடித்தவுடன் நன்றாக வாயை கொப்பளித்தால், அந்த துணுக்குகள் வெளியே வந்துவிடும். துர்நாற்றமும் வராது.
சிலர் பற்களை குச்சி வைத்து குத்துகிறார்களே... அது சரியா?
பற்களை குச்சி வைத்து குத்தவேக்கூடாது. பற்களில் குச்சிவைத்து குத்தும்போது, பற்களுக்கு இடையே உள்ள இடைவெளி மேலும் மேலும் அதிகரிக்க செய்யும். இதனால் இன்னும் அதிக அளவிலான உணவு துகள்கள் அந்த இடைவெளியில் மாட்டிக்கொள்ளும். மேலும் ஈறுகள் வீங்கி பிரச்சினை ஏற்படும். அதற்குபதில், இப்பிரச்சினைகளை சரிசெய்ய திரெட் ஃப்ளாசர், வாட்டர் ஃப்ளாசர் உள்ளிட்டவை தற்போது வந்துள்ளன. வாட்டர் ஃப்ளாசர் என்பதில் மிக வேகமாக தண்ணீர் பற்களில் பீய்ச்சி அடிக்கப்பட்டு பற்களுக்கு இடையில் மாட்டியுள்ள உணவு துகள்கள் வந்துவிடும். இதேபோன்றுதான் திரெட் ஃப்ளாசரும். திரெட்டை வைத்து பற்களை சுத்தம் செய்துகொள்ளலாம்.

பற்களை குச்சியால் குத்தினால் இடைவெளி அதிகரிக்கும் - பல் தேய்க்க பட்டாணி அளவுக்கு பேஸ்ட் வைத்தால்போதும்
பல் தேய்க்க எவ்வளவு பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?
நிறைய பேருக்கு எவ்வளவு பேஸ்ட் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லை. விளம்பரங்களில் வருவதை போன்று ப்ரஷ்ஷில் நீட்டாக, முழுவதும் பேஸ்டை வைத்து தேய்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் நிஜத்தில், ஒரு பட்டாணி அளவுக்கு ப்ரஷ்ஷில் பேஸ்ட்டை வைத்து, 2 முதல் 3 நிமிடங்களுக்கு பல் தேய்த்தால் போதும். அத்துடன் பற்களை தேய்க்கும்போது மேலும் கீழுமாக ஸ்மூத்தாக தேய்க்க வேண்டும். கடவாயில் உள்ள பற்களை 45 டிகிரி ரொட்டேஷனில் சுத்தம் செய்ய வேண்டும்.
