இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

கடந்த இரண்டு வாரங்களாக இரத்த தானம் குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் பார்த்து வருகிறோம். இரத்தத்தின் வகைகள் குறித்தும், அதில் அரியவகைகள் குறித்தும் பார்த்தோம். தானமாக கொடுக்கப்படும் இரத்தங்கள் இரத்த வங்கிகளில் எந்தெந்த முறைகளில் சேமிக்கப்படுகின்றன என்பது குறித்தும் விரிவாக தெரிந்துகொண்டோம். தொடர்ந்து இரத்த வங்கிகள் எப்படி செயல்படுகின்றன? என்பது குறித்தும், இரத்த தானம் செய்ய நினைக்கும் பெண்கள் எப்படி ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் நம்முடன் உரையாடுகிறார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் தலைமை இரத்த வங்கி அதிகாரி மருத்துவர் தமிழ்மணி திருநாராயணன்.

ஆம்புலன்ஸில் நோயாளிகள் மட்டுமன்றி இரத்தம் கொண்டுசெல்லப்படுவதாகவும் சொல்கிறார்களே?

கல்லீரல், இதயம் போன்று ரத்தமும் மிகவும் முக்கியமானது. பாம்பே ப்ளட் குரூப் போன்ற அரிய வகை இரத்தங்களை வெளியூர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பவேண்டி இருந்தால் அவை ஆம்புலன்ஸில் அனுப்பப்படும். அதற்கேற்றார்போல் ஸ்டோரேஜ் மற்றும் வெப்பநிலை ஆகியவற்றை செட் செய்துதான் அனுப்பப்படும். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை பகிர்கிறேன். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஒரு பெண் டெலிவரிக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் தனக்கு ஓ பாசிட்டிவ் தான் என்று நினைத்திருந்தார். ஆனால் பரிசோதித்தபோது அவருக்கு பாம்பே ப்ளட் குரூப் என்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் இரத்தம் கிடைக்காததால் டோனர்களின் லிஸ்ட்டில் தேடிப்பார்த்தோம். பெங்களூருவில் வேலைசெய்யும் ஒரு ஆண் இரத்தம் கொடுக்க தயாராக இருந்தார். நாங்கள் தொடர்புகொண்டு கேட்டதும் ஃப்ளைட் பிடித்து அவரே இங்கு வந்து இரத்தம் கொடுத்துவிட்டுச் சென்றார். இதுபோன்ற மனிதாபிமானமிக்க நபர்கள் இங்கு அதிகம் இரத்தம் கொடுப்பதால்தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரத்த தானம் செய்வதில் முதலிடத்தில் இருக்கிறது. அதேபோல் வெளி மாநிலங்களுக்கு அரிய வகை இரத்தம் தேவைப்பட்டாலும் விமானங்கள் மூலமாக அனுப்பி வைப்போம். இதுதவிர, சிங்கிள் டோனர் பிளேட்லெட் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் இரத்தத்தில் இருந்து பிளேட்லெட்கள் மட்டும் தனியாக பிரித்து வெளியே எடுக்கப்படும். இதுபோன்ற பிளேட்லெட் டோனர்கள், 55 கிலோவுக்கு அதிக எடைகொண்ட ஆணாக இருந்தால் வருடத்திற்கு 24 முறை கொடுக்கலாம். இந்த பிளேட்லெட்டுகள் கேன்சர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதுபோக தட்டணுக்கள் மிகவும் குறைகிற டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கும் இந்த டோனர்களின் உதவி தேவைப்படும். சாதாரணமாக இரத்தம் கொடுக்க 10 நிமிடங்கள் ஆகுமென்றால் இந்த முறையில் தானம் செய்ய ஒன்றரை மணிநேரம் ஆகும்.


அவசர காலத்தில் ஆம்புலன்ஸ்மூலம் கொண்டுசெல்லப்படும் இரத்தங்கள்

மற்ற மாநிலங்களிலுள்ள இரத்த வங்கிகளுக்கும், தமிழகத்திலுள்ள ரத்த வங்கிகளுக்கும் வித்தியாசம் மற்றும் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக இரத்த வங்கிகளில் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் வெளிநாடுகள், இண்டர்நேஷனல் கான்ஃபரன்ஸ்களுக்கு போயிருக்கிறேன். எங்களிடையே ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடுகளோ அல்லது எந்தவிதமான அழுத்தங்களோ இருக்காது. நன்றாக வேலைசெய்தால் பாராட்டுகள் கிடைக்கும். பெரிய விஐபிக்கள், நடிகர் நடிகைகளைகூட எங்களால் எளிதில் தொடர்புகொள்ள முடியும்.

சுகாதரத்துறையிலிருந்து உங்களுக்கு பாராட்டுகள் கிடைத்திருக்கிறதா?

இரத்த வங்கியில் வேலைசெய்வதால் சிறந்த மருத்துவர் விருது வாங்கியிருக்கிறேன். இதுவரை 16 முறை சிறந்த மருத்துவர் விருது வாங்கியிருக்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் அழைத்து பாராட்டி இருக்கிறார். இதுவே இன்னும் நிறைய சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு கொடுக்கிறது.


சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருந்து கிடைத்த பாராட்டு குறித்து மருத்துவர் தமிழ்மணி

கிட்னி டயாலிசிஸ் செய்பவர்களுக்கு என்னென்ன மாதிரியான உதவிகள் செய்யப்படுகின்றன?

டயாலிசிஸ் செய்கின்ற நோயாளிகளுக்கு சில நேரங்களில் ஹீமோகுளோபின் குறைய ஆரம்பிக்கும், சில நேரங்களில் இரத்த இழப்பு ஏற்படும். அவர்களுக்கு தேவையான இரத்தத்தை கொடுக்க வெளியே இருந்து டோனர்களை தயார்செய்வோம். அதனாலேயே நெஃப்ராலஜி டிபார்ட்மெண்ட் எப்போதும் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சில நேரங்களில் சேகரித்த இரத்தம் குறைவாக இருந்தால் டோனர்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுமாறு கூறுவோம். அதேசமயம் தன்னார்வமாக இரத்த தானம் கொடுப்பவர்களைத்தான் நாங்கள் நம்புவோம்.

ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் எப்படி இரத்த தானம் செய்வது?

நிறைய பெண்கள் மிகவும் ஆசைப்பட்டு இரத்த தானம் செய்ய முகாம்களுக்கு வருவார்கள். அவர்களை பரிசோதிக்கும்போது ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். அதை அவர்களிடம் சொன்னால் ஏமாற்றமடைந்துவிடுவார்கள். இதற்கு வீட்டில் சரியாக சாப்பிடாதது, ஹீமோகுளோபின் அளவை சரியாக கவனிக்காதது, சீரற்ற மாதவிடாய் போன்றவை முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எனவே அவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி பரிசோதிப்பது அவசியம். வயிற்றில் பூச்சி அதிகமாக இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் 6 மாத இடைவெளியில் வயிற்றுப்புழுக்களை அழிக்க ஆல்மண்டசோல் என்ற மாத்திரையை எடுக்க அறிவுறுத்தப்படும். பச்சை பயறு, கறிவேப்பிலை, முருங்கை உள்ளிட்ட கீரை, ஈரல், சூப் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தன்னார்வ இரத்த தானம் செய்யும் பெண்களின் எண்ணிக்கையை பார்த்தோமானால் 2%தான் இருக்கிறார்கள். எனவே பெண்கள் தங்களுடைய உடலை பார்த்துக்கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் அளவை கட்டாயம் பரிசோதிக்கவேண்டும். அதேபோல் காலை உணவை கட்டாயம் தவிர்க்கக்கூடாது.


ஹீமோகுளோபின் குறைபாட்டால் இரத்த தானம் செய்வதில் பெண்களின் பின்னடைவு

சாதாரண ஒரு மனிதனுக்கு இரத்தம் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன மாதிரியான உணவுகளை சாப்பிடவேண்டும்?

நிறையபேர் கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக்கொண்டு, புரோட்டீன் குறைவாக சாப்பிடுகிறார்கள். அதேபோல் ஹீமோகுளோபின் அதிகரிக்கவேண்டுமானால் இரும்புச்சத்து அதிமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முருங்கை, பச்சைப்பயறு, முளைக்கட்டிய தானியங்கள், மண்ணீரல், கரும்பு சர்க்கரை, வெல்லம், ராகி போன்றவற்றை சாப்பிடும்போது இரும்புச்சத்து அதிகமாக கிடைக்கும். பல தானியங்கள் சேர்த்து அரைத்த மாவில் கஞ்சி காய்ச்சி குடிப்பது ஆண், பெண் இருவருக்கும் நல்லது. இருந்தாலும் ஹீமோகுளோபின் குறைந்துகொண்டே போனால் மருத்துவரை அணுகி இரும்புச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தும் குறைந்தால் பிரச்சினை என்ன என்பதை பரிசோதித்து கண்டறியவேண்டும். இப்போதுள்ள உலக மக்கள் தொகையில் 7% பேர்தான் தொடர்ந்து இரத்த தானம் செய்கின்றனர். அதுவே 14% பேர் கொடுத்தால் தேவையான இரத்தம் கிடைத்துவிடும். ‘இரத்தம் இல்லாததால் இறப்பு என்ற நிலை இனிவரும் காலங்களில் இல்லாமல் செய்வோம்’ என தமிழ்நாடு அரசு 2009, 2010ஆம் ஆண்டுகளிலேயே முடிவு செய்தது. அதையேதான் இப்போதும் தாரக மந்திரமாக பின்பற்றி வருகிறோம்.

இரத்த சோகை வராமல் தடுக்க என்ன செய்வது?

இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதைத்தான் இரத்த சோகை அல்லது அனீமியா என்று சொல்கின்றனர். அனீமியாவை கட்டுப்படுத்த நிறைய சிறுசிறு ஆரம்ப சுகாதார நிலையங்களில்கூட அயர்ன், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. வளர் இளம்பெண்களுக்கு 14 வயதிலிருந்தே இதுபோன்ற மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. வயிற்றுப்பூச்சியை சரிபடுத்தவேண்டும். இரத்த சோகை இருக்கும் பெண்களுக்கு டெலிவரி சமயங்களில் நிறைய இரத்த இழப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் முன்பு நிறைய உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இப்போது ‘வருமுன் காப்போம்’ திட்டம் மூலமாக நிறைய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காகவே தனியாக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு பள்ளிகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொண்டு இதுகுறித்து கற்பிக்கப்படுகிறது. இதனால் டெலிவரி சமயங்களில் இரத்த சோகையால் இறப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

Updated On 13 May 2025 10:11 AM IST
ராணி

ராணி

Next Story