இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

ஒரு மருத்துவ பரிசோதனை செய்யும்போது என்னென்ன முறைகளை பின்பற்ற வேண்டும்? எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்? மருத்துவ பரிசோதனை மையங்களில் அறிவிக்கப்படும் சலுகைகள் உண்மையானதா? இதனால் மக்களுக்கு என்ன பயன்? உள்ளிட்ட மருத்துவ பரிசோதனையில் அடங்கியுள்ள பல முக்கிய தகவல்கள் குறித்து பேசியுள்ளார் உயிர் வேதியியல் மருத்துவரான எழிலரசன் கைலாசம்.


இதய பரிசோதனை - எலக்ட்ரோ கார்டியோகிராம் பரிசோதனை

இந்த ஆய்வகம்தான் மருத்துவ பரிசோதனைக்கு சிறந்தது என மக்கள் எப்படி முடிவெடுப்பது?

கொஞ்சம் சிரித்து பேசினால், அவர்களை நல்லவர்கள் என நினைப்போம். ஆனால் அது உண்மையல்ல. அதுபோல தனியார் ஆய்வகங்களில் தாழ்மையாக, பணிந்து பேசுவார்கள். அதைவைத்து நம்பக்கூடாது. எந்த ஆய்வகங்களிலும் வாடிக்கையாளர்களை கடிந்துகொள்ள மாட்டார்கள். அப்படி கொஞ்சம் இறங்கி வந்து பேசுவதை மட்டும் நாம் பார்க்கக்கூடாது. பரிசோதனை முறைகள், நேரத்திற்கு உங்களுக்கு முடிவுகளை சொல்கிறார்களா என்பதைத்தான் பார்க்க வேண்டும். இதைத்தாண்டி அந்த ஆய்வகம் தரச்சான்றிதழ் பெற்றுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.

எப்போதும் கடைசி நேரத்தில் உடல் பரிசோதனை செய்ய சொல்வது ஏன்?

இதய நோய்களில் க்ரிட்டிக்கல், நான் க்ரிட்டிக்கல், ரிஸ்க் ஃபேக்டர் என உள்ளது. இதில் க்ரிட்டிக்கல் நிலையில் இருப்பவர்களுக்கு டெஸ்ட் எடுக்க சொல்வார்கள். தேவையில்லாமல் மருத்துவர்கள் எந்த டெஸ்டும் எடுக்க சொல்லமாட்டார்கள். ஈசிஜி மட்டும் எடுத்துவிட்டு பிரச்சனை என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாது. இரத்த பரிசோதனையும் செய்ய வேண்டும். ஈசிஜியில் இல்லாத மாற்றம் இரத்த பரிசோதனையில் இருந்தால் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். ஈசிஜிகளில் பல அட்வான்ஸ் முறைகளும் உள்ளன. அதற்கேற்றவாறு செலவும் அமையும். அப்போது பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தேவை இருப்பவர்கள் தாங்கள் எந்தெந்த டெஸ்ட்கள் எடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு அதை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். எல்லா டெஸ்ட்களையும் எடுக்க தேவையில்லை.


பரிசோதனை மாதிரிகள் - பரிசோதனைக்கு முதல் நாள் இரவு தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்

ஒரு ஆய்வகத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

இதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆய்வகத்தில் டியூப்கள் எல்லாம் சரியாக உள்ளதா? ரத்தம் சரியான முறையில் எடுக்கப்படுகிறதா? எத்தனை வருடமாக இந்த ஆய்வகம் இயங்குகிறது. தரச்சான்றிதழ் பெற்றுள்ளதா? கூகுள் ரெவ்யூக்கள் எப்படி இருக்கின்றன. ஆனால் கூகுள் ரெவ்யூக்களை நம்புவதைவிட அங்கு பரிசோதனை செய்து கொண்ட மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை எடுத்துக் கொள்ளலாம்.

பரிசோதனைக்கு முன்பும் பின்பும் செய்யக்கூடாதவை?

பரிசோதனைக்கு முன்பு தினசரியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை போடலாமா என மருத்துவரிடம் கேட்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து பேருந்தில் பயணம் செய்துவந்து டெஸ்ட் எடுக்கக்கூடாது. டெஸ்டுக்கு முன்னால் அனைத்துவிதமான பயணங்களையும் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, புகைபிடித்துவிட்டு வந்து பரிசோதனை செய்யக்கூடாது. அதுபோல உணவு வகைகளிலும் கொழுப்புச்சத்து நிறைந்த, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை பரிசோதனைக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இரவில் சரியாக தூங்க வேண்டும். அதுபோல முதல்நாள் இரவில் தண்ணீரை தவிர வேறு எதுவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதுபோல பல வழிமுறைகள் உள்ளன. அதனை மருத்துவரிடமும், ஆய்வகங்களிலும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். டெஸ்டுக்கு முன்பே சம்பந்தப்பட்ட ஆய்வகத்தை அணுகி என்ன என்ன செய்ய வேண்டும்? எந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும்? என்பதை கேட்டு தெரிந்துகொள்ளலாம். நார்மல் ஹெல்த் செக்கப் செய்தாலும் கவனம் தேவை. டெஸ்ட்க்கு முன் எப்போதும் முறையான ஓய்வு தேவை. நீண்ட தூரம் நடக்கவோ, ஓடவோ கூடாது.


இரத்த பரிசோதனைக்காக எடுக்கப்படும் இரத்த மாதிரி

பரிசோதனை முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிடுவது யார்?

ஒரு பரிசோதனை மையத்தில் யாரெல்லாம் பரிசோதனையை மேற்கொள்ளலாம் என அரசே ஒரு விதிமுறையை கொண்டுவந்துள்ளது. ஆனால் பல சின்ன சின்ன லேப்களில் உதவியாளர்களே கையெழுத்து போட்டு தருகிறார்கள். மருத்துவர்தான் முடிவுகளை சரிபார்ப்பார். இதற்கென பல வரைமுறைகள் உள்ளன. பதோலோஜிஸ்ட், பிஹெச்டி முடித்தவர்கள் எல்லாம் முடிவுகளை சரிபார்த்து கையொப்பமிடலாம் என வரையறைகள் உள்ளன. ஆனால் பல ஆய்வகங்களில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

சலுகைகள் யாருக்கு சாதகமானது?

எப்போதும் சலுகைகள் ஆய்வகங்களுக்கு சாதகமானதாகத்தான் இருக்கும். ஆனால் மக்களுக்கும் நன்மை உள்ளது. சலுகை என்பதால் பசிக்காத நேரத்தில் போய் சாப்பிடமுடியாது. அதுபோல சலுகை இருக்கிறது என்பதற்காக, டெஸ்ட் எடுப்பதில் எந்த பயனும் இல்லை. எப்போது தேவையோ அப்போது எடுத்துக் கொண்டால் போதுமானது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி டெஸ்ட் எடுப்பார்கள். சிறுநீரக செயல்பாடு குறித்து டெஸ்ட் எடுப்பவர்கள் எல்லாம் வருடத்திற்கு ஒருமுறை செய்துக்கொண்டால் போதும். இந்த சலுகை தேவையா, இல்லையா என்பதை பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சலுகை என்றாலே அது வியாபார நோக்கத்தை கொண்டதுதான்.


வியர்வை சோதனைக்கு முன் எப்போதும் கை, முகத்தை கழுவிவிட்டுதான் செல்ல வேண்டும்

வித்தியாசமான வழக்குகளை பார்த்ததுண்டா?

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனும் நோய் உள்ளது. இந்த நோய்க்கு வியர்வையை சோதனை செய்ய வேண்டும். அந்த டெஸ்டை செய்வதற்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, அப்பா, இரண்டு குழந்தைகள் வந்தனர். அவர்களிடம் டெஸ்டுக்கு முன்பு பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அனைத்தையும் கூறினேன். கையை சோப்பு போட்டு கழுவிவிட்டு, ஒரு பேப்பரை வைத்து கட்டினோம். அதில் வந்த வியர்வையைத்தான் அந்த டெஸ்டிற்கு எடுத்துக் கொண்டோம். அந்த டெஸ்டின் முடிவு நார்மல் என வந்தது. சில இடங்களில் முகத்தில் இருந்து வரும் வியர்வையை சோதனைக்கு எடுப்பார்கள். குளோரைடு டெஸ்ட்தான் நாம் செய்கிறோம். அப்படி இருக்கையில் ஏற்கனவே முகத்தில் இருக்கும் பவுடரில் குளோரைடு இருக்கும். அதனை எடுத்து சிலர் சோதனை செய்வர். இதனால் முடிவுகள் மாறுபடும். விதிமுறைகளை சரியாக பின்பற்றினால் இதுபோன்ற தவறுகள் நடக்காது. எனவே வியர்வை பரிசோதனைக்கு செல்பவர்கள், முதலில் வரும் வியர்வையை துடைத்துவிட்டு, முகத்தை கழுவிவிட்டு, பிறகுவரும் வியர்வையைதான் சோதனைக்கு தரவேண்டும்.

Updated On 8 July 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story