இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலக தாய்ப்பால் வாரம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் வாரம், அதாவது ஆகஸ்டு ஒன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதும், எந்த இடத்திலும் தங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாயின் உரிமையை ஊக்குவிப்பதும், இத்தினத்தின் நோக்கம். இந்த தினம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் அமைப்புகள் கைகோர்க்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளின் அடிப்படையில் தாய்ப்பால் வார கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில், அந்த ஆண்டு உலக தாய்ப்பால் வாரத்தின் கருப்பொருள் என்ன? குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது குறித்து தாய்மார்களிடம் உள்ள சந்தேகங்கள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

2025ம் ஆண்டிற்கான உலக தாய்ப்பால் வார கருப்பொருள்

உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டின் கருப்பொருள், "தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுங்கள்: நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்குங்கள்". தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை எளிதாக்குவதற்கும் அதிகரிப்பதற்கும் நீண்டகால ஆதரவு அமைப்புகளை உருவாக்க வேண்டியதன் அவசரத் தேவையை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.


குழந்தைக்கும் தாய்க்கும் இடையே நல்ல பிணைப்பை ஏற்படுத்தும் அமிர்தம் தாய்ப்பால்

ஏன் தாய்ப்பால் அவசியம்?

பிறந்த குழந்தையின் வாழ்க்கையில் முதல் சில மாதங்களில், தாய்ப்பால்தான் அவர்களின் அனைத்து ஊட்டச்சத்து தேவைகளுக்கும் முதன்மையான ஆதாரமாகும். குழந்தையின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் இன்றியமையாதது. ஏனெனில் தாய்ப்பாலில் 87% நீர், 7% கார்போஹைட்ரேட், 4% லிப்பிட் மற்றும் 1% புரதம், வைட்டமின்கள் மற்றும் பிற தாதுக்கள் (கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை) உள்ளன. எனவே தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதன் மூலம், குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும். குறிப்பாக, தாய்ப்பால் கொடுப்பதால், குழந்தைகளை தாக்கும் கடுமையான நோய்கள் தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதிர்ச்சியடையாத குழந்தைகளைப் பாதிக்கும் இரைப்பை குடல் பிரச்சனை, வயிற்றுப்போக்கு, உடல் பருமன், வகை 1 நீரிழிவு நோய், சுவாசப் பிரச்சனைகள், திடீர் குழந்தை இறப்பு போன்றவை தடுக்கப்படுகின்றதாம்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த தாய்ப்பாலை குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தாயின் கடமையாகும். ஆனால், தாய்ப்பால் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் பெண்களிடம் நிலவுகின்றன. தாய்ப்பால் எப்படி கொடுக்க வேண்டும்? எவ்வளவு மாதத்திற்கு கொடுக்க வேண்டும்? அதனை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து கொடுக்கலாமா? தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் தொங்கிவிடுமா? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் மகளிரிடத்தில் உள்ளன. அத்தனை சந்தேகங்களுக்குமான பதிலை கீழே ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தாய்ப்பாலின் 3 நிலைகள் தெரியுமா?

கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் சுரப்பதில் 3 நிலைகள் உள்ளன.

1. இதில் முதல் நிலை என்பது, கொலஸ்ட்ரம் (Colostrum) பால். இது, குழந்தை பிறந்த 5 நாட்களுக்குள் சுரப்பது. இது மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

2. தாய்ப்பாலின் இரண்டாம் நிலை என்பது, டிரான்சிஷனல் (Transitional) பால். இது தாய்மார்களுக்கு, குழந்தை பிறந்த 5வது நாள் முதல் 2வது வாரம் வரை சுரக்கும்.

3. தாய்ப்பாலின் மூன்றாம் நிலை என்பது, முதிர்ச்சியடைந்த (Mature) பால். இது தாய்மார்களுக்கு. குழந்தை பிறந்த 2வது வாரத்திற்கு பிறகு சுரப்பது.

குழந்தை பிறந்த உடன், முதல் 5 நாட்களுக்குள் சுரக்கும் கொலஸ்ட்ரம் பால் மஞ்சளாக இருக்கும். இந்த பாலில், கொழுப்பு, நியூக்ளியோசைடுகள், இம்யூனோகுளோபுலின் A உள்ளிட்ட குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்திகள் உள்ளன.

குழந்தைக்கு எவ்வளவு காலத்திற்கு தாய்ப்பால் தர வேண்டும்?

குழந்தைக்கு முதல் 6 மாத காலத்திற்கு தாய்ப்பால் அளிப்பது அவசியம்.

குழந்தையின் 1 வயது வரை தாய்ப்பால் அளிப்பது ஆரோக்கியம் தரும்.

குழந்தையின் 2 வயது வரை தாயப்பால் அளிப்பது மிகவும் ஆரோக்கியமானது.

பிறந்த குழந்தைக்கு எக்ஸ்க்ளூஸிவ் ஃபீடிங் எனும் காலகட்டமான முதல் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. வேறு எந்த உணவும் தேவையில்லை என்றும், குழந்தைக்கு எந்த தொற்றும் ஏற்படாமல் தாய்ப்பால் காக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சரியான முறையில் குழந்தைக்குப் பசிக்கும் நேரத்தில் தாய்ப்பால் அளிக்கப்படும் பட்சத்தில் நீர் போன்ற பிற ஆகாரங்கள் அளிக்க அவசியம் இருக்காது என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.

6 முதல் 12 மாதங்களில் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தில் பாதியளவு தாய்ப்பாலில் இருக்கிறது. இச்சமயத்தில் தான் குழந்தைக்கு திட உணவுகள் அளிப்பது துவங்கப்படும். 1 வயதில் இருந்து 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தில் மூன்றில் ஒரு பங்கு தாய்ப்பாலில் இருந்து கிடைக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


தாய், அமர்ந்த நிலையில்தான் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும்

தாய்ப்பாலை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து கொடுக்கலாமா?

தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து குழந்தைக்கு ஊட்டுவது தவறல்ல. ஆனால் இந்த முறையினால் ஊட்டச்சத்தின் தரம் சிறிதளவு குறைய வாய்ப்புள்ளது. எனவே வேலைக்குச் செல்லும் பெண்கள் இந்த முறையை பின்பற்றலாம். வீட்டிலிருக்கும் பெண்கள் நேரடியாகவே கொடுத்துவிடலாம். தாய்ப்பாலை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து கொடுப்பவர்கள், ஃப்ரிட்ஜிலிருந்து அப்படியே குளிர்ச்சியான நிலையில் ஊட்டுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல. அறை வெப்பநிலையில், சற்று வெதுவெதுப்பான தன்மையில் ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் எப்படி தர வேண்டும்?

* தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையை சரியான முறையில் கையில் பிடித்திருக்க வேண்டும்.

* தாய் அமர்ந்த நிலையில்தான் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

* படுத்துக் கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக் கூடாது.

* தாய்ப்பால் கொடுத்தவுடன், குழந்தையைத் தூக்கித் தோளில் வைத்து தட்டிக் கொடுத்து ஏப்பம் வரச்செய்ய வேண்டும்.

தாய்ப்பால் சுரப்பு குறைய காரணம் என்ன?

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் முதல் 6 மாதம், தாய்க்கு மிகவும் கடினமான காலம். சில குழந்தைகள் இரவில் தூங்கிவிடுவார்கள். சில குழந்தைகள் இரவு முழுக்க தூங்காமல் விழித்திருப்பார்கள். இதனால் தாய்க்கு தூக்கமின்மை ஏற்பட்டு உடல்சோர்வு மனச்சோர்வு உண்டாகும். இந்த காலக்கட்டத்தில் கணவர் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு தாய்க்கு தேவை.

மனச்சோர்வால் தாய்ப்பால் சுரப்பு குறைய வாய்ப்புள்ளது. மேலும், தாயின் உடல் எடை மிகக் குறைவாக இருத்தல், மார்பகத் திசு குறைந்திருத்தல், ஹார்மோன் சமநிலையின்மை, தைராய்டு உள்ளிட்ட பிரச்சனைகளாலும் தாய்ப்பால் குறைவாக சுரக்கலாம்.

மார்பக அளவைப் பொறுத்து தாய்ப்பால் சுரப்பது வேறுபடுமா?

மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்பதற்கும் சம்மந்தம் இல்லை எனக் கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். தாய்ப்பால் சுரப்பது மார்பகத்தின் அளவைப் பொறுத்ததல்ல, பால் சுரப்பிகளின் செயல்பாட்டைப் பொறுத்தது. எனவே, சிறிய மார்பகங்கள் உள்ள பெண்களும் போதுமான அளவு தாய்ப்பால் சுரக்க முடியும். ஏனெனில் அவர்களின் மார்பகங்களில் உள்ள சுரப்பிகளே பால் உற்பத்திக்கு போதுமானவை. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க, தாய்க்கு போதுமான அளவு உணவு மற்றும் திரவம் அவசியம்.

தாய்ப்பால் கொடுத்தால் மார்பகங்கள் தொங்கிவிடுமா?

முதல் முறை குழந்தை பெற்ற தாய்மார்கள் இடையே இருக்கும் மிகப்பெரிய சந்தேகம் இது. இதுகுறித்து ஆன்லைனில் சில பெண்கள் எழுதும் தவறான தகவல்களை படித்து, தாய்மார்கள் குழம்பிக்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தவறான புரிதலால் தாய்ப்பால் ஊட்டினால் மார்பகம் தொங்கிவிடும் என்ற அச்சத்தின் பேரில் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை சில தாய்மார்கள் தவிர்த்துவிடுகின்றனராம்.

உண்மையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களின் மார்பகம் தளர்ந்துவிடாது என்றும், மார்பகம் தளர்வதற்கு வயதும், மரபணுவும்தான் காரணம் என்றும் மகப்பேறு மருத்துவர்கள் உறுதியாக தெரிவிக்கின்றனர். அத்துடன், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் அபாயம் குறைவதாகவும் கூறுகின்றனர்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட வேண்டியவை...

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், தேவையான அளவு புரதம் மற்றும் கொழுப்புச்சத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளில் 3 முறையாவது போதுமான அளவு புரதம் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கிய சமச்சீரான உணவுமுறையைப் பின்பற்ற வேண்டும். மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், தாய்மார்கள் நிறைய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


தாயின் புகை & மதுப்பழக்கம் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தி குழந்தைக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்

பால் அதிகம் சுரக்க...

தாய்ப்பால் சுரப்புக்கும், அதனை ஊட்டும் தாயின் மனநிலைக்கும் தீவிர தொடர்பு உண்டாம். தாய்ப்பால் ஊட்டும் பெண்ணின் மனநிலையை பொறுத்து தான் ஹார்மோன் சுரக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவை பொறுத்து தான் தாய்ப்பால் சுரக்கும் அளவு மாறுபடும். எனவே, தாயின் மனநிலை ஆரோக்கியமாக இருப்பது மிக முக்கியம்.

சில சமயம் போதுமான அளவு உணவு சாப்பிடாத தாய்மார்கள் கூட, குழந்தைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் ஊட்டுவதை தங்கள் அனுபவத்தில் பார்த்துள்ளதாக மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே தாய்ப்பால் சுரப்பதற்கும் உணவுமுறைக்கும் சம்மந்தம் இல்லை என்றுக் கூறும் அவர்கள், அதேநரேம், தாய்ப்பாலின் தரத்திற்கும் உணவுக்கும் இடையே சம்மந்தம் இருப்பதாக சொல்கின்றனர். தாய்ப்பாலின் தரம் மற்றும் அடர்த்தியை அதிகரிப்பதில் கொழுப்பு முதலிடம் வகிக்கிறதாம். எனவே, போதுமான அளவு கொழுப்பு, புரதம் மற்றும் திரவ உணவுகளை தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமாம்.

புகை மற்றும் மது பழக்கம் உள்ள தாய்மார்களின் கவனத்திற்கு!

புகைப் பழக்கம் மற்றும் மதுப்பழக்கம் இருக்கும் தாய்மார்கள், பிரசவ காலத்தில் இருந்து தாய்ப்பால் ஊட்டும் காலம் வரையாவது அப்பழக்கங்களை முற்றிலும் கைவிடுவது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இப்பழக்கங்களுடன் தாய்ப்பால் அளித்தால், குழந்தைக்கு வயிற்று வலி, மார்பு தொற்று, சுவாச கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளனவாம். தாயின் மது மற்றும் புகைப்பழக்கம் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தும் போது, குழந்தைக்கு உறக்கம் மற்றும் வளர்ச்சியில் பிரச்சனை உண்டாகுமாம்.

Updated On 5 Aug 2025 10:31 AM IST
ராணி

ராணி

Next Story