இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் அவர்களுடைய முக்கியத்துவம் குறித்து அடிக்கடி பேசப்படுகின்றன. ஆனால், சமூகம் மற்றும் குடும்பத்தில் மிக முக்கியப்பங்கு வகிக்கும் ஆண்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, குடும்பம், சமுதாயம் என அனைத்தின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் ஆண்களின் பங்கு அளப்பரியது என்றால் அது மிகையாகாது. எப்போதுமே பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகள் பற்றியே அதிகளவில் பேசப்படுகிறது. இது நமது நாட்டில் மட்டுமல்ல; உலகளவில் இதே நிலைமைதான். இந்நிலையில்தான் பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்களுடைய பெருமையை போற்றும்விதமாக ஆண்டுதோறும் பெண்கள் தினம் கொண்டாடப்படும்போது ஏன் ஆண்களுக்கென்று ஒரு தினத்தை கொண்டாடக்கூடாது என யோசித்த அமெரிக்க கண்டத்திலிருக்கும் டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு நாடுகளில் முதன்முதலாக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அதன்பிறகுதான் இந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடும்விதமாக அங்கீகரித்தது ஐ.நா சபை. ஆனால் ஆண்கள் தினம் வெறும் கொண்டாட்டத்திற்காக மட்டும் அல்ல; ஆண்கள் மற்றும் சிறுவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தி, அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்விதமாக ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்கள் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும், இந்த ஆண்டு கருப்பொருள் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

ஆண்கள் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?

பல நாடுகளில் பெண் அடிமைத்தனம் மற்றும் ஆணாதிக்கம் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், சில நாடுகளில் ஆண்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் பல தசாப்தங்களாக ஆண்களுடைய உரிமைகள் குறித்தும், அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படுவதுடன், பல ஆண் உரிமை ஆர்வலர்களும் எழும்பி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தனர். அப்படி 1990களில் அமெரிக்காவில் நன்கு அறியப்பட்ட ஆண்கள் உரிமை ஆர்வலர்களில் ஒருவர்தான் தாமஸ் ஓஸ்டர். இவருடைய உந்துதலின்பேரில் ஆண்களுக்கென்று ஒரு தினத்தை அனுசரிக்க திட்டமிட்டு, 1999ஆம் ஆண்டு பேராசிரியர் ஜெரோம் டீலக்சிங் என்பவரால் நவம்பர் 19ஆம் தேதி ஆண்கள் தினமாக அனுசரிக்க தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் உலகளவில் ஒவ்வொரு நாளும் ஆணாதிக்கம் குறித்து பேசப்படும் நிலையில் ஆண்களுக்கு ஏன் ஒரு விழிப்புணர்வு தேவை என்ற கேள்விகள் அதிகளவில் எழுந்தன. குறிப்பாக, சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் என எந்த பக்கம் திரும்பினாலும் அங்கு ஆதிக்கம் செலுத்தும் ஆண் என்ற கருத்தைத்தான் பார்க்க முடிகிறது. இதனை எதிர்க்கும் விதமாகவும், பெண்கள் விடுதலையை வலியுறுத்தும் விதமாகவும், உலகம் முழுக்க உள்ள பெண்களுக்கு எதிராக இருக்கும் தடைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் 1911ஆம் ஆண்டு முதல் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருவதை முன்னிறுத்தி சர்ச்சைகள் கிளம்பின.


ஆண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட ஆண்கள் தினம்

ஆனால் கல்வி கற்க சிரமப்படும் சிறுவர்கள், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறைச்சாலையில் அடைபட்டிருக்கும் ஆண்கள் மற்றும் நாளுக்குநாள் அதிகரிக்கும் 50 வயதுக்குட்பட்ட ஆண்களின் தற்கொலைகள் போன்றவை சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் இந்த நாளை அனுசரிப்பதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் விளக்கம் அளிக்கப்பட்டன. அதற்காக, பெண் வெறுப்பை ஊக்குவிக்கும் நோக்கம் இதில் இல்லை எனவும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகுதான், சர்வதேச ஆண்கள் தினத்தை 2010ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அங்கீகரித்து. அதுமுதல் ஆண்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்த ஒவ்வொரு மையப்பொருளைக் கொண்டு ஆண்டுதோறும் ‘சர்வதேச ஆண்கள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இருப்பினும் சர்வதேச பெண்கள் தினத்துடன் போட்டிபோடும் நோக்கத்தை இந்த தினம் கொண்டிருக்கவில்லை. ஆண்களின் உடல் மற்றும் மனநலனில் கவனம் செலுத்துவது, பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது மற்றும் சமூகத்தின் ஆண்களின் நேர்மறையான பங்களிப்புகளை போற்றுவது போன்றவை ஆண்கள் தினத்தின் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்கள் தினம்

சர்வதேச அளவில் ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டாலும் இந்தியாவை பொருத்தவரை இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம் சார்பில் பல்வேறு கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, 2010ஆம் ஆண்டுதான் சர்வதேச ஆண்கள் தினம் அறிவிக்கப்பட்டாலும், 2007ஆம் ஆண்டே உமா சுல்லா என்ற இந்திய ஆண்கள் உரிமை வழக்கறிஞர் இங்கு ஆண்கள் தினத்தை அனுசரிக்க தொடங்கினார். அதன் முக்கிய குறிக்கோளே நமது நாட்டில் சட்டம் மற்றும் நீதி அமைப்பால் ஆண்கள் எப்படி துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள் என்பதை அனைத்து மக்களுக்கும் எடுத்துக்காட்டுவதாகும். குழந்தை, சிறுவன், இளைஞன் மற்றும் தந்தை என பல அவதாரங்கள் எடுத்து, அதன்பிறகு குடும்ப தலைவனாக இருந்து குடும்பம் மற்றும் சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல அயராது உழைக்கும் நபராக பார்க்கப்படுகிறார்கள் ஆண்கள்.


ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள்

மேலும் வேலை, குடும்பம் என பல்வேறு சுமைகளை சுமக்கும் ஆண்களுக்கு உடல்நல குறைவுகள் ஏற்படுவதுடன், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதால் பெண்களைவிட ஆண்கள் அதிகளவில் தற்கொலைக்கு முயல்வதாகவும், தினசரி தற்கொலை எண்ணிக்கையில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், மன அழுத்தமே முக்கிய காரணியாக இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதிலும் குறிப்பாக, பல்வேறு மன அழுத்தங்களால் ஆண்கள் அதிகளவில் கல்லீரல் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதை இந்த நாளில் எடுத்துக்காட்டும் விதமாகவும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரை ஆண்களின் பிரச்சினைகளை அனைவரும் புரிந்துகொள்ளவும், அவர்களுடைய உடல் மற்றும் மனநலத்தை மேம்படுத்தவும், தங்களுடைய கவலை மறந்து கொண்டாடும் நாளாகவும் ஆண்கள் தினம் பார்க்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகள் ஆண்கள் தினத்தை வெவ்வேறு விதமாக கொண்டாடுகின்றன. முக்கியமான கருப்பொருள் உருவாக்கப்பட்டாலும் அந்தந்த நாடுகளில் இருக்கும் சட்டம் ஒழுங்குகள் மற்றும் அங்குள்ள பிரச்சினைகளை மையப்படுத்தி தலைப்புகளும் கருப்பொருள்களும் உருவாக்கப்படுகின்றன.

கருப்பொருளின் முக்கியத்துவம்

உலகளவில் 60 நாடுகளில் ஆண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு கருப்பொருளை வைத்து கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் சர்வதேச ஆய்வறிக்கைகளின்படி, உலகளவில் சிறுமிகளைவிட சிறுவர்கள் கல்வியில் திறமை குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். பெண்களைவிட 6 வயதிற்கு முன்பே ஆண்கள் இறக்கிறார்கள். அதாவது பெண்களைவிட ஆண்களின் ஆயுட்காலம் குறைவாகவே இருக்கிறது. அடுத்து வன்முறையால் நிகழும் மரணங்களில் மூன்றில் இருவர் ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். அதேபோல், தினசரி நடக்கும் தற்கொலைகளில் நான்கில் மூன்றுபேர் ஆண்கள். இதுபோன்ற காரணங்களால் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சமூக பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், ஆண்கள் மற்றும் சிறுவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சிங்கிள் பேரண்டிங் ஆண் குழந்தையை வளர்ப்பதில் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் ஆண்டுதோறும் கருப்பொருள்கள் உருவாக்கப்படுகின்றன.


ஆண்டுதோறும் கருப்பொருளுடன் கொண்டாடப்படும் ஆண்கள் தினம்

அதன்படி இந்த ஆண்டின் கருப்பொருள் - Positive Male Role Models. இந்த நாளில் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை மட்டுமல்லாமல் மற்ற அனைத்து துறைகளில் சிறந்துவிளங்கும் ஆண் முன்மாதிரிகளை அனைவருக்கும் எடுத்துக்காட்டி, அவர்களைப் போல வாழ்க்கையில் சவால்கள் மற்றும் தடைகளை தகர்த்து முன்னேற ஊக்குவிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமான சமூகங்களை உருவாக்குவதே இந்த ஆண்டின் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க, ஒவ்வொரு தம்பதியரும் தங்களது துணையை கவனித்துக்கொள்ள வேண்டும், தங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இதன்மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்தை குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களுக்கு உருவாக்கவேண்டும் போன்றவை இந்த ஆண்டின் துணை கருப்பொருள்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ஆணும் தனிப்பட்ட முறையில் முன்னேறுவதுடன், ஒவ்வொருவருமே ரோல் மாடல்களாக உருவாக வேண்டும் என்பதே இந்த ஆண்டு ஆண்கள் தினத்தின் நோக்கம்!

Updated On 25 Nov 2024 3:55 PM GMT
ராணி

ராணி

Next Story