திருமணத்திற்கு பின் எவ்வளவு மாதத்திற்கு குழந்தைப்பேற்றை தள்ளிப்போடலாம்?
திருமணமாகவிருக்கும் பெண்கள் குழந்தைப்பேற்றை எவ்வளவு நாட்கள் வரை தள்ளிப்போடலாம்? குழைந்தப்பேற்றை தள்ளிப்போடுவதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? ஆண்களின் விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை எவ்வாறு கண்டறிவது? கருவுறுதல் தள்ளிப்போவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்தெல்லாம் ராணி ஆன்லைன் உடனான நேர்காணலில் விளக்கமாக பேசியுள்ளார் கருத்தரித்தல் சிறப்பு சிகிச்சை மருத்துவர் நிவேதிதா. மேற்காணும் சந்தேகங்களுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் உங்களுக்காக...
குழந்தைப்பேற்றை தள்ளிப்போடுவது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும் - நிவேதிதா
திருமணமாகவிருக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை என்ன?
சமீபகாலமாக குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பெண்கள் திருமணத்தையும், குழந்தைப்பேற்றையும் தள்ளிப்போடுவதுதான். படிப்பு, வேலை போல திருமணத்திற்கும் அதற்கான நேரத்தில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். ஏனெனில் வயது அதிகரிக்க அதிகரிக்க குழந்தை பெறும் தன்மை குறையும் என நிறைய ஆய்வுகளின் மூலம் நிரூபித்துள்ளனர். அதனால் சரியான வயதில் திருமணம் செய்துகொள்வது என்பது முக்கியமான ஒன்று. திருமணத்திற்கு பின் குழந்தைப்பேற்றை தள்ளிப்போடாமல், தேவை என்றால் மட்டும் தள்ளிப்போட்டால் போதுமானது. அப்படி குழந்தை பிறப்பை தள்ளிப்போட நீங்கள் விரும்பினால், முன்னரே ஒரு மகப்பேறு மருத்துவரை பார்த்து, அவருடன் ஆலோசித்து உங்களுடைய கருப்பை, சினைப்பை, கருமுட்டை எண்ணிக்கை போன்றவை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்வது நல்லது. இந்த சோதனைக்குப் பிறகு நீங்கள் குழந்தைப் பிறப்பை தள்ளிப்போட்டால், பிற்காலத்தில் நீங்கள் வருத்தப்படாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
இவற்றை மருத்துவமனை சென்றுதான் தெரிந்துகொள்ள முடியுமா? வீட்டிலேயே நான் ஆரோக்கியமாக இருக்கிறேனா என்பதை தெரிந்துகொள்ள முடியாதா என்றால், கண்டிப்பாக தெரிந்துகொள்ளலாம். இதற்கு முக்கிய அறிகுறி மாதவிடாய். மாதம் மாதம் மாதவிடாய் சரியாக வருகிறது, சரியான ரத்தப்போக்கு இருக்கிறது, மாதவிடாய் நேரத்தில் அதிகம் வலி இல்லை என்றால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிலபேருக்கு மாதவிடாய் சரியாக இருந்தாலும், குழந்தையின்மை பிரச்சனைகள் இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை மாதவிடாய் சரியாக இல்லை, வலி அதிகமாக உள்ளது என்றால் குழந்தை இருப்பதற்கான வாய்ப்புகளை திருமணத்திற்கு முன்பே மருத்துவ சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அவற்றை சரிசெய்ய முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக் கொள்வது கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்.
வயது அதிகரிக்க அதிகரிக்க குழந்தை பெறும் தன்மை பெண்களுக்கு குறையும்
பிஆர்பி சிகிச்சை என்றால் என்ன?
பிஆர்பி என்பதை “Platelet-Rich Plasma” எனக் கூறுவோம். நம் ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் வெள்ளை அணுக்களே இந்த ப்ளேட்லெட் ரிச் பிளாஸ்மா. இதற்கு சில முறைகள் உள்ளன. இதை மருத்துவத்தில் லிக்விட் கோல்ட் எனக் கூறுவார்கள். ஏனெனில் அவற்றில் நிறைய வளர்ச்சி காரணிகள் உள்ளன. சமீபகாலமாக இவற்றை அதிகமாக பயன்படுத்துகிறோம். காரணம் ஒரு சிலருக்கு கர்ப்பப்பையில் இருக்கும் எண்டோமெட்ரியத்தின் (கர்ப்பப்பையில் இருக்கும் மெல்லிய அடுக்கு) தடிமம் குறைவாக இருக்கும். எண்டோமெட்ரியம்தான் கரு பதிந்து வளர்வதற்கான தலையணை போன்றது. கரு விதை என்றால், அது பதிந்து வளர்வதற்கான மண்தான் எண்டோமெட்ரியம். இந்த எண்டோமெட்ரியம் மெல்லியதாக இருக்கும்போது, இந்த ப்ளேட்லெட்ஸை அதில் செலுத்தும்போது, அது எண்டோமெட்ரியத்தின் தடிமத்தை அதிகப்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதுபோல சில பெண்களுக்கு கருமுட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அவர்கள் டோனர் முறையை விரும்பாமல், தங்கள் சொந்த கருமுட்டையை வைத்தே குழந்தைப்பெற விரும்பும்போது, அவர்களின் சினைப்பையில் ப்ளேட்லெட் ரிச் பிளாஸ்மாவை செலுத்தும்போது, பத்தில் மூன்று, நான்கு பேருக்கு சிலநேரங்களில் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால் இவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இருந்தாலும் வேறு வழியே இல்லை எனும்போது, எண்டோமெட்ரியம் மற்றும் சினைப்பையில் ப்ளேட்லெட் ரிச் பிளாஸ்மாவை செலுத்துகிறோம்.
IVF, ICSI முறைக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன?
பெரும்பாலும் பயனாளிகளிடம் டெஸ்டியூப் பேபி, ஐவிஎஃப் என பொதுவாக கூறிவிடுவோம். ஆனால் உண்மையில் ஆய்வகத்தில் செய்யக்கூடிய சிகிச்சை இக்ஸிதான். 90% கருத்தரிப்பு மையங்களில் முட்டையை பெண்ணிடம் இருந்து எடுத்து, விந்தணுவை ஆணிடம் இருந்து பெற்று, ஒவ்வொரு விந்தணுவையும் ஒவ்வொரு முட்டைக்குள் இக்ஸி என்ற முறையில்தான் செலுத்துகின்றனர். ஐவிஎஃப் என்பது அந்தக்காலத்தில் இக்ஸி முறைகள் இல்லாதபோது, பெண்களிடம் இருந்து முட்டையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு, விந்தணுக்களை கழுவிவிட்டு அதில் போட்டுவிடுவோம். அந்த விந்தணு தானாக அந்த முட்டையை கருவுறச் செய்யும். இதைத்தான் ஐவிஎஃப் முறை எனக்கூறுவோம். இதை கண்டுபிடித்தபோது ஐவிஎஃப் முறையைத்தான் செய்வார்கள். ஆனால் இப்போது மேம்பட்ட சிகிச்சைகள் வந்துவிட்டதால், இக்ஸியில் கருவுறுதல் சிறந்ததாக இருப்பதால் பெரும்பாலான கருத்தரிப்பு மையங்கள் இக்ஸியைத்தான் செய்கின்றனர்.
கருவுறுதல் (Fertility), கருவுறாமை (Infertility) என்றால் என்ன?
எந்த சிகிச்சையும் இல்லாமல் 6 மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் ஒரு தம்பதி கருவுற்றால் அவர்களை ஃபெர்டைல் ஜோடி (ஆரோக்கியமான ஜோடி) எனக் கூறுவோம். கருவுறுதலில் தம்பதியினருக்கு பிரச்சனை இருந்தால், இந்த நிலையை இன்ஃபெர்டிலிட்டி எனக் கூறுவோம்.
விந்தணுக்கள் நீந்தி சென்றால்தான் கருவுறும் தன்மை கொண்டதாக இருக்கும்
Motile மற்றும் Non Motile என்றால் என்ன?
ஒரு ஆண் ஆரோக்கியமாக இருக்கிறாரா என்பதை தெரிந்துக்கொள்ள விந்தணுக்களின் எண்ணிக்கையை சரிபார்ப்போம். இந்த டெஸ்டில் மூன்று முக்கிய விஷயங்களை பார்ப்போம். அணுக்களின் எண்ணிக்கை (15 மில்லியனுக்கும் அதிகமான விந்தணுக்கள் இருந்தால் நார்மல்). பின்னர் விந்தணுக்கள் எப்படி ஊர்ந்து செல்கின்றன என்று பார்ப்போம். எதற்காக இது முக்கியம் என்றால் அணுக்கள் நீந்தி சென்றுதான் முட்டையில் இணைந்து கருவாக மாறவேண்டும். அதனால் அது நீந்தி செல்லவேண்டும் என்பது மிக முக்கியமானது. இந்த மொடிலிட்டியை ரேபிட், ஸ்லோ என பலவிதமாக பிரிப்போம். ரேபிட் மொடிலிட்டி குறைந்தது 30% சதவீதம் இருக்கவேண்டும். அதாவது நூறு அணுக்களை எண்ணுகிறார்கள் என்றால், அதில் 30 அணுக்களாவது வேகமாக நீந்தி செல்லவேண்டும். அப்படி இருந்தால் அவர்களின் கருவுறும் தன்மை நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். இதில் அசையாமல் இருக்கும் அணுக்களை நான்-மொட்டைல் ஸ்பெர்ம் எனக் கூறுவோம். இந்த நான் மொட்டைல் ஸ்பெர்ம் நகரமுடியாத தன்மையில் இருக்கலாம் அல்லது உயிருடன் இல்லாமல் இருக்கலாம். இவற்றை கண்டுபிடிக்க பல மருத்துவ சோதனைகள் உள்ளன. தேவைப்பட்டால் அந்த சோதனையை செய்வார்கள்.
மூன்றாவது உருவ அமைப்பு. விந்தணுக்களுக்கு தலை, நடுப்பகுதி, வால் ஆகியவை சரியான அளவில் இருக்கிறதா என்பதை பார்ப்பதைத்தான் Morphological assessment எனக் கூறுகிறோம். விந்தணுக்கள் சோதனையில் இந்த மூன்று விஷயங்களையும் பார்ப்போம். உருவவியல் மதிப்பீட்டில் 4 சதவீதம்தான் ஆரோக்கியமான தன்மையில் இருக்கும். 96 சதவிகிதம் அப்நார்மலாகத்தான் இருக்கும். நிறைய பேர் டெஸ்ட் முடிவுகளை பார்த்துவிட்டு 1 சதவீதம்தான் நார்மலாக உள்ளது. 99 சதவீதம் அப்நார்மல் என பயப்படுவார்கள். அதற்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. மில்லியன்கணக்கான அணுக்களில் 1 சதவீதம் நார்மல் என்றால், ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். ஒரு முட்டைக்கு ஒரு அணுதான் தேவை என்பதால் அதனை செழிப்பாக்குவதற்கான வழிகளை மருத்துவர்கள் கூறுவார்கள். அதனை பின்பற்றுங்கள்.
அசூஸ்பெர்மியா என்றால் என்ன?
ஆண்களின் விந்தணுக்கள் குறைந்தது 15 மில்லியன்கள் இருக்கும். அதற்கு குறைவாக, அதாவது 10 மில்லியன் உள்ளது என்றால் ஆலிகோசூஸ்பெர்மியா எனக்கூறுவோம். அதுவே ஆண்களின் விந்தில் உயிரணுக்கள் இல்லாத நிலையே அசூஸ்பெர்மியா எனக்கூறுவோம். ஆனால் ஒரேயொரு மருத்துவ முடிவை வைத்து அசூஸ்பெர்மியா என சொல்ல முடியாது. ஏனெனில் அணுக்களின் எண்ணிக்கை எப்போதும் நிச்சயமற்ற முறையில் அதாவது ஏற்ற, இறக்கத்துடன் இருக்கும். உடல்நிலை சரியில்லாதபோது அதன் எண்ணிக்கை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் நம் உடல் நன்றாகும்போது அணுக்கள் அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. அதனால் ஒரு முடிவை வைத்து அசூஸ்பெர்மியா என வரமுடியாது. ஒருவேளை ஒருவருக்கு அசூஸ்பெர்மியா இருக்கிறது என சந்தேகம் வந்தால், வைட்டமின் மாத்திரைகள் கொடுத்துவிட்டு 2,3 வாரங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் எடுக்க சொல்வோம். இரண்டு மருத்துவ முடிவுகளில் அணுக்களே இல்லை என்று வந்தால்தான் அசூஸ்பெர்மியா என எடுத்துக் கொள்வோம். அசூஸ்பெர்மியாவிற்கு தீர்வு உள்ளது.
அசூஸ்பெர்மியா இருந்தாலும் டீசா சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்
ஆனால் டெஸ்டிஸ் சரியாக இயங்கவில்லை என்றால், அதற்கு இதுவரை சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், டீசா எனும் நடைமுறை செய்வதன்மூலம் அசூஸ்பெர்மியா இருந்தாலும் 30 சதவீதம் ஆண்களுக்கு அவர்களின் அணுக்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கும். அதைவிட அட்வான்ஸாக மைக்ரோ - டீசா எனும் சிகிச்சை முறை உள்ளது. மைக்ரோ - டீசா செய்தால் அசூஸ்பெர்மியா இருக்கும் 10 ஆண்களில் 6 பேருக்கு அவர்களின் சொந்த அணுக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அப்படி கிடைக்கும் அணுக்களை இக்ஸி முறைமூலம் முட்டையில் செலுத்தினால், அவர்களின் சொந்த அணுக்களிலேயே குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
எவ்வளவு நாட்கள் குழைந்தைப்பேற்றை தள்ளி போடலாம்?
பெண்கள் நன்றாக கருவுறும் வயது என்றால் 25-30. 30 வயதிற்கு மேல் முட்டைகளின் எண்ணிக்கை குறைய தொடங்கும். 35, 40ஐ தாண்டும்போது மிகவும் குறைவாக இருக்கும். அதனால் எந்த வயதில் உங்களுக்கு திருமணம் நடக்கிறது என்பது மிக முக்கியம். 25 வயதில் கல்யாணம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, வேலை, படிப்பு காரணமாக குழந்தைப்பேற்றை தள்ளி போடுகிறீர்கள் என்றால், உங்களின் முட்டை எண்ணிக்கை, கருப்பை ஆரோக்கியம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குழந்தைப்பேற்றை தள்ளிப் போடுவதில் பிரச்சனை இருக்காது. ஆனால் 30, 32 வயதில்தான் கல்யாணம் செய்கிறீர்கள் என்றால் முடிந்தளவிற்கு தள்ளிப் போடாதீர்கள்.
