இந்த கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

பரபரப்பான இன்றைய நவீன உலகில் ஐ.டி துறையில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள், நாளுக்கு நாள் அதிகமாகும் வேலைப்பளுவால் அதிலிருந்து விடுபட முயற்சித்து வருகிறார்கள். இதனால் லட்சங்களில் சம்பளம் பெற்ற அவர்கள் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு தங்களுக்கு விருப்பமான ஏதோ ஒன்றை தொழிலாக தேர்ந்தெடுத்து அதில் முன்னேற சில அதிரடி முடிவுகளை எடுக்கிறார்கள். அப்படி தமிழகத்தில் இன்று ஐ.டி துறையில் பணியாற்றிய பல ஜோடிகள் இயற்கை விவசாயம், காபி ஷாப், உணவகம் என்று பல தொழில்களை ஆரம்பித்து அதில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்கள். ஐ.டி துறையில் பணியாற்றிய பல ஜோடிகள் இயற்கை விவசாயம், காபி ஷாப், உணவகம் என்று பல தொழில்களை ஆரம்பித்து அதில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்கள்.அந்த வகையில், சென்னை புழல் கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த ஐ.டி.தம்பதிகள் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு சொந்தமாக மீன் வளர்ப்பு தொழிலை தொடங்கியுள்ளனர்.

யார் அந்த தம்பதி?

“காதல் அமைத்துத் தந்த வெற்றிப்பயணம்” என்ற வரிகளுக்கு ஏற்ப ராஜேஷ் மற்றும் அபித்தா தம்பதிகள் இருந்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த இவ்விருவரும் ஐ.டி துறையில் பணியாற்றியவர்கள். இவர்கள் தாங்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலையில் இருந்து சிறிது ஓய்வு பெற்று, சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்த போது, சிறு வயதில் இருந்தே தங்களுக்கு பிடித்த மீன் வளர்ப்பு முறையை தொழிலாக செய்ய முடிவு செய்தனர். அதன்படி சிறிதாக தொடங்கப்பட்ட வளர்ப்பு மீன் பண்ணை இன்று இந்தியாவிலேயே முன்னணி வளர்ப்பு மீன் பண்ணைகளுள் ஒன்றாக மாறி இருக்கிறது. வெவ்வேறு மதத்தினராக இருந்தபோதிலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் மற்றும் அபித்தாவின் விடாமுயற்சியும், சாதித்து வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியமும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன.


ராஜேஷ் மற்றும் அபித்தா தம்பதிகள்

இந்த தம்பதிகளின் முயற்சியால் உருவான வளர்ப்பு மீன் பண்ணை குறித்தும், தொழிலை கையாளும் விதம் மற்றும் மீன்களை பராமரிக்கும் முறை குறித்தும் அவர்கள் அளித்த விளக்கம் பின்வருமாறு.

இங்கிருக்கும் மீன்கள் அனைத்தும் எந்தெந்த இடங்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது?

இந்தியாவில் உள்ள பெரியளவிலான மீன் பண்ணைகளில் நாங்கள் நடத்தி வரும் வளர்ப்பு மீன் பண்ணையும் ஒன்று. எப்போதும் எங்களிடம் 500 வகையான மீன்கள் இருக்கின்றன. தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்து, பிறகு அவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களை இந்தியா முழுவதும் உள்ள மொத்த விலை மீன் கடைகளுக்கு தொடர் வண்டிகள் மூலமாகவோ, பேருந்துகள் அல்லது விமானம் மூலமாகவோ ஏற்றுமதி செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இந்த தொழிலை பொறுத்த வரையில் ‘பிசினஸ் டு பிசினஸ்’ முறையில் தான் நாங்கள் நடத்தி வருகிறோம்.

இந்த மீன் விற்பனைத் தொழிலைத் தொடங்குவதற்கான காரணம் என்ன?

இந்த தலைமுறையினரில் பெரும்பாளானோர் கைப்பேசியில் தங்களது நேரத்தை அதிகம் செலவிடுகின்றனர். இந்த மீன்வளர்ப்பு என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல அது ஒரு தனி உலகமும் கூட. மீன் வளர்ப்பு டேங்கில் சரிவர தண்ணீர் வசதி அமைப்பதோடு அங்கு வளரும் மீன்களுக்கு தேவையான வசதிகளை அமைத்து , வளரவிடுவதால் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும். அந்த உலகமே மிகவும் அழகாக காட்சியளிக்கும். நாங்கள் இருவரும் படித்த துறை முழுவதும் வேறு. ஆனால் இந்த மீன் சார்ந்த துறையில் உள்ள வேட்கை எங்களை இந்த பாதைக்குள் வரவழைத்தது.


மீன் பராமரிப்பு மற்றும் விற்பனை கூடம்

இந்த தொழில் முதலீடுகள் சரிவர உங்களுக்கு கிடைக்கப் பெறுகிறதா?

முதலீடுகள் என்று பார்த்தால் அது முழுவதுமாக மீன்களை சார்ந்தே இருக்கிறது. குறைந்த விலையில் விற்பனை செய்யக்கூடிய கோல்ட், மாலி போன்ற மீன் வகைகள் அதிகம் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் ஐந்து ரூபாய்க்கு உரிய மீன்களை விற்கும் பொழுது அதில் கிடைக்கும் லாபம் என்று பார்த்தால் பத்து சதவிகிதம் அதாவது ரூபாய் ஐம்பது பைசா. இதைப்போலவே நாம் விற்கும் மீன்களின் வகை மற்றும் விலையைப் பொறுத்தே நமக்கு முதலீடுகள் கிடைக்கும்.

உங்களிடம் இருக்கும் மீன்களில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய மீன்கள் என்னென்ன?

அதிகம் விற்பனை ஆகக்கூடிய மீன்கள் என்று பார்த்தால் கோல்ட், மாலி போன்ற மீன் வகைகள் தான். ஏனென்றால் அது பள்ளி மாணவர்கள் எளிதில் வாங்கும் வகையில் இருக்கும். அவர்கள்தான் எங்களுடைய ஸ்ட்ரென்த் என்று கூட சொல்லலாம். இதுதவிர மீன்களை பற்றி அதிகம் அறிந்தவர்கள், அதிகளவில் ஈர்ப்பு கொண்டவர்கள் பிளவரான்ஸ், பைட்டர்ஸ் போன்ற மீன்களை அதிகமாக வாங்கிச் செல்வார்கள். எங்களுக்கு அடித்தட்டு முதல் மேல்த்தட்டு வரை உள்ள வாடிக்கையாளர்களும் இருக்கின்றனர். அதனைப் போலவே எங்களிடம் ஐந்து ரூபாய் தரத்தில் உள்ள அதே வகை மீன் ஐந்தாயிரம் ரூபாய் விலைத் தரத்திலும் எங்களிடம் கிடைக்கும்.


கோல்ட், மாலி, பிளவரான்ஸ், பைட்டர்ஸ் மீன்கள்

மீன்களுக்கான உணவு எவ்வாறு வழங்கப்படுகிறது?

வீடுகளில் நீங்கள் மீன்களுக்கான உணவை வழங்கும் பொழுது தரம் குறைந்த விலையில் கிடைக்கும் உணவுகளை வழங்குதல் கூடாது. நாம் மீனுக்கு அளிக்கும் உணவில் சரிவர புரோட்டின் இருக்கிறதா? தண்ணீரை கிலவ்டியாக மாற்றுமா? பில்ட்ரேஷன் சரிவர இருக்குமா? போன்றவற்றை சரி பார்த்த பிறகுதான் அந்த மீனுக்கு உண்டான உணவை தேர்வு செய்து வழங்க வேண்டும். அதுதான் நலல்தும் கூட. இதில் குறிப்பிட்டு மீனின் வகைகளை பொறுத்து அதன் உணவுப் பழக்கங்களும் வேறுபடலாம். அதாவது அசைவங்களை உண்டு வாழும் மீன்களும் இருக்கிறது. வணிகமயமாக்கப்பட்ட உணவுகள் மற்றும் கீரை போன்ற வகைகளை உண்ணும் மீன்களும் இருக்கிறது. மீன்களின் வாய் வடிவமே அதன் கதையை சொல்லும். சில மீன்களின் வகைகளை பார்த்தால் கீழ்நோக்கி அமைந்து கீழுள்ள உணவுகளை உண்ணும். மற்றொரு வகையான மீன்களுக்கு மேல் நோக்கி அமைந்து மேலுள்ள உணவுகளை உண்ணும்.


மீன்கள், குளிரூட்டிகள், ஃபில்டர்கள்

நீங்கள் மீன்களை எவ்வாறு பராமரிக்கிறீர்கள்?

மீன்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும். மீன்களுக்கு அதற்குரிய வகைகளுக்கு ஏற்ப குளிரூட்டிகள், ஃபில்டர்கள் பயன்படுத்துவது நல்லது. மரைனில் வாழும் மீன்களுக்கு அதிகளவிலான குளிர் வசதி தேவை. எனவே அதன் தேவைக்கேற்ப அதை அமைத்து தருதல் வேண்டும். சுற்றுச்சூழல் என்று பார்த்தால் வளர்க்கப் போகும் மீனின் வகைக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். அதாவது மீன் தொட்டியில் உள் பகுதியில் பாறைகள், செடிகளை பயன்படுத்துவது நல்லது. ஆனால் அதனால் மீனின் தோல் மிகவும் லேசாக இருக்கும் பட்சத்தில் மீனுக்கு காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.அடுத்ததாக மிக முக்கியமான ஒன்றாக இருப்பது ஃபில்ட்ரேசன். இது பராமரிப்பு முறையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதாவது குறிப்பிட்ட அளவிலான தண்ணீர் பயன்படுத்த வேண்டும் என்ற அளவில் மணிக்கணக்கில் இருக்கும். அதன்படி கையாளுதல் நல்லது.

Updated On 9 Oct 2023 6:56 PM GMT
ராணி

ராணி

Next Story